கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கில் பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பிற்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத நோக்கங்களுக்குத் துணை போகும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சரத் தெரிவு செய்துள்ளது.
சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் பிரிவினரதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் ஒடுக்கும் தேசம் ஒன்றில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் செயற்பட்டுவருகின்றது. குறிப்பாக, கொழும்பை மையமாகக் கொண்ட தரகு முதலாளித்துவ வியாபாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் தலைமைகள் சாமானிய முஸ்லீம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது.
ராஜபக்ச ஆட்சியின் கீழ் பொதுபல சேனா என்ற பௌத்த பாசிசக் கட்சி இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களை நடத்திய வேளையில் ராஜபக்சவுடன் ஒட்டிக்கொண்டிருந்த ரவுப் ஹக்கீமின் வரலாறு முழுவதிலும் இரத்தக் கறைகளைக் காணலாம்.
அரசியல் கொலைக் கலாச்சாரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய முன்னோடி அரசியல் வாதியாக ரவுப் ஹக்கீம் கருதப்படுகின்றார். 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொலைசெய்யப்பட்ட அஷ்ரப் அலி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கொழும்பு சார் முஸ்லீம் தலைமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரவூப் ஹக்கீம் அஷ்ரப் அலியின் கொலைக்கு பின்னணியில் செயற்பட்டார் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்பட்டது. கொலையாளிகளை அதிகாரத்தில் வைத்துக்கொண்டு அடிப்படை ஜனநாயகத்தைக் கூட உறுதிப்படுத்த இயலாது என்பதற்கு ரவுப் ஹக்கீம் ஒரு முன்னுதாரணம்.
தமிழ் – முஸ்லீம் மக்களிடையே நீண்ட கால வரலாற்றுத் தவறுகளின் ஊடான முரண்பாடுகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தணிய ஆரம்பித்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் உட்பட இயக்கங்கள் ஆகியவற்றின் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களும், முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களின் எழுச்சியும் முரண்பாடுகளை ஆழப்படுத்த, ரவுப் ஹக்கீம் போன்ற கொடூரமான அரசியல் தலைகள் அந்த முரண்பாடுகளைப் பேரினவாதிகளின் நோக்கங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
திட்டமிட்ட பௌத்த சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப்பேசும் மக்களைக் கிழக்கில் சிறுபான்மையாக்கின. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் 40 வீதமானவர்கள் முஸ்லீம் அல்லாத தமிழர்கள், 37 வீதமானவர்கள் முஸ்லீம் தமிழர்கள், மிகுதி 23 வீதமானவர்கள் சிங்களவர்கள். கல்லோயாத் திட்டத்தில் ஆரம்பித்த சிங்களக் கு டியேற்றங்கள் இன்று மொத்த கிழக்கு மக்கள் தொகையில் 27 வீதமாக அதிகரித்துள்ளது.
பெருந்தேசிய வாதிகளின் நோக்கங்களுக்குத் துணை சென்ற தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளை ஆழப்படுத்தும் தமிழ்த் தரகுமுதலாளித்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்கொள்ள தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை அஷ்ரப் அலி வலுப்படுத்த முனைந்த போதே கொழும்பு முஸ்லீம் தலைமைகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இன்று அந்த ஒற்றுமை முன்னெப்போதும் இல்லாத அளவில் இறுக்கமடைந்து வரும் நிலையில் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ரவூப் ஹக்கீம் முரண்பாட்டை ஆழப்படுத்த விரும்புகிறார்.
அதன் மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்கிற்கு முரண்பாட்டை ஆழப்படுத்திவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரகு முதலாளித்துவத் தலைமைகள் இந்திய இந்து அடிப்படைவாத மதவாதக் குழுக்களான ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றுடன் கூடத் தொடர்புவைத்துக்கொள்கின்றன. இவர்களின் நோக்கம் மக்கள் சார்ந்ததல்ல. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளை நிராகரித்து ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய தலைமைகளின் தோற்றம் இன்று அவசியமானதும் அவசரமானதுமாகும்.
இச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் தன்னார்வக் குழுக்கள், வடக்கைப் போன்று கிழக்கிலும் சிவில் சமூகங்களை உருவாக்க முயல்கின்றன. மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் தன்னார்வ நிறுவனங்கள் சிவில் சமூகங்கள் உருவாக்கி நீண்டகால நோக்கில் மக்களை அடிமையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. மக்களை அணிதிரளவிடாமல் தடுக்கின்றன.
மக்கள் அணிதிரட்டப்பட்டால் மட்டுமே சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும் போராட முடியும். வட கிழக்குத் தமிழர்களின் தன்னாட்சி எவ்வளவு முக்கியமானதோ, முஸ்லிம் மக்களும் தமது தன்னாட்சி உரிமைக்காக பொது எதிரியான பேரினவாத அரசிற்கு எதிராகப் போராட வேண்டியதும், அதற்கான அரசியலை முன்வைப்பதுமே இன்றைய தேவை.