Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி : ப்ரியந்த லியனகே

சூரியன் உதிக்கும் கிழக்கில் தனது வாழ்வின் சூரியன் பறித்தெடுக்கப்பட்டமையால் இளமையிலேயே வாழ்க்கை முழுதும் இருண்டு போயுள்ள இன்னுமொரு இளம் தாயை கடந்த சில தினங்களுக்கு முன்னரான திருகோணமலைப் பயணத்தின்போது எமக்கு சந்திக்கக் கிடைத்தது. இது எம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அவரது நீண்ட கதையின் சுருக்கம்.

அவரது பெயர் ஆரியரத்னம் ரமணி. இருபத்தெட்டு வயதாகும் அவர் இரு பிள்ளைகளின் தாய். இளையவர் நிலுக்ஷன் முன்பள்ளி செல்லும் வயதில் இருக்கிறார். மூத்தவர் தனுஷ் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கிறார். ரமணியினதும், தனுஷினதும், நிலுக்ஷனதும் சூரியனாக இருந்தவர் மாணிக்கராசா சசிதரன். ரமணியின் நேசத்துக்குரிய கணவன். இரு பிள்ளைகளதும் அன்புக்குரிய தந்தை.

“எந்நாளும் பிள்ளைகள் இருவரும் அந்தி சாயும் வேளைகளில் அப்பாவைப் பற்றிக் கேட்பார்கள். ‘ஏன் அம்மா, அப்பா வீட்டுக்கு வருவதில்லை? யார் அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள்? அந்த மாமாக்களுக்கும் எம்மைப் போல சிறு பிள்ளைகள் இருப்பார்கள்தானே? ஏன் அவர்களுக்கு அது விளங்குவதில்லை?.’ பிள்ளைகள் இருவரும் இணைந்து கேட்கும் இவ்வாறான கேள்விகளுக்கு நான் எப்படிப் பதில் அளிப்பது அண்ணா? சசி இப் பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருந்தார். அப்பா இன்று வருவார், நாளை வருவார் எனச் சொல்லிச் சொல்லி இன்னும் எத்தனை நாட்கள்தான் இப் பிள்ளையை ஏமாற்றுவது? “

ரமணி கண்ணீரோடு எம்மிடம் கேட்கும் இக் கேள்விக்கு எம்மிடம் பதிலேதும் இல்லை. எனினும் அக் கதையை நாட்டுக்குச் சொல்வது எமது கடமையாகும்.

மாணிக்கராசா சசிதரன் 2010.03.01 ஆம் திகதியன்று காணாமல் போயுள்ளார். அதாவது கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதியன்று. மாணிக்கராசா சசிதரன் எவ்விதத்திலேனும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தாரா என்பதை நாமறியோம். எனினும் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாக அறிவோம். அதாவது, இவர்களை இந் நிலைமைக்கு இழுத்துச் சென்ற இருவருமே தற்போதைய அரசின் அமைச்சர்கள். ஒருவர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கிழக்குக்கான அமைச்சர். மற்றவர் விநாயமூர்த்தி முரளிதரன். கிழக்குப் பிரதேசத்துக்கான விடுதலைப் புலிகளின் தலைவராகவும் முன்னாள் போராளியாகவும் இருந்தவர்.

அவர் தற்போது அரசாங்கத்தின் மீள் குடியேற்ற அமைச்சர். அவர்களிருவரையும் பாதிக்காத தீவிரவாதச் சட்டமானது, இப் பிள்ளைகளை வாழ வைக்கவென மட்டக்களப்பு சந்தையில் தேங்காய் விற்றுவந்த சசிதரனை மட்டும் எவ்வாறு பாதித்தது?

அம்மா அழுவதைக் கண்டு சிறுவன் தனுஷினது விழிகளிலும் கண்ணீர் நிறைந்தது. அதற்கிடையில் எமது மொழிபெயர்ப்பாளரான நண்பர் குமாருடன் நெருக்கமாகி விட்டிருந்த சிறுவன் தனுஷ் அவனுக்குத் தெரிந்த மொழியில் குமாரிடம் இவ்வாறு சொல்லியிருந்தான்.

” மாமா, தம்பியும் நானும் இரவுகளில் அப்பாவைப் பற்றிக் கேட்கும்போது அம்மா எங்களிருவரையும் கட்டிப்பிடித்து அழுவார். தம்பிக்கு புரியாததால் அவன் இன்னும் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். எனினும் நான், அம்மா அழுவார் என்பதனால் அப்பாவைப் பற்றிக் கேட்காமலிருந்த போதும், சில வேளைகளில் அப்பாவின் ஞாபகம் வரும்போது என்னையறியாமலேயே கேட்டு விடுகிறேன். “

“சசிதரன் எங்கே வைத்து காணாமல் போனார்?”

எமது நண்பரொருவர் கேட்ட கேள்விக்கு ஆரியரத்னம் ரமணி – சசியின் மனைவி சொன்னதுதான் இது.

“கல்முனை, பெரிய நீலாவணையில் வைத்து அவர் காணாமல் போயிருந்தார். சசிதரன் முதலில் மீன் வியாபாரியாக இருந்தார். பிறகு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட போது மீன்களை வாங்க இடமற்ற காரணத்தால் அவர் தேங்காய்களைச் சேர்த்து விற்கத் தொடங்கினார். அன்று ஒரு ஞாயிறு தினம். காலை ஒன்பது மணியளவில் கல்முனை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் ஜீப்பொன்று வந்து சந்தையிலிருந்த அவரையும் தேங்காய்ச் சாக்கோடு கொண்டு சென்றிருந்தது. பிறகு நாங்கள் கல்முனை பொலிஸுக்குச் சென்று விசாரித்தபோது ‘நாங்கள் கொண்டு வரவில்லை’ என அவர்கள் சொன்னார்கள்.

முறைப்பாடு செய்தபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. திருகோணமலை மாவட்டம் என்பதால் மூதூர் பொலிஸில் சென்று முறையிடச் சொன்னார்கள். மூதூர் பொலிஸில் ஒரு வருடம் கடந்தும் எமது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் கொஞ்ச காலம் தேடிப் பார்க்கச் சொன்னார்கள். பொலிஸுக்கு அலைந்து அலைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு ஒருவாறாக 2011.02.28 ஆம் திகதியன்று முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். இதுவரையில் கல்முனை, திருக்கோவில், மட்டக்களப்பு என இருக்கும் எல்லா பொலிஸ் மற்றும் இராணுவ முகாம்களுக்கும் இன்னும் பார்க்கக் கூடிய எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தோம்.

செஞ்சிலுவைக்கு அறிவித்தோம். எனினும் கணவரைத் தேடிக் கண்டுபிடிக்க எவரிடமிருந்தும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. கல்முனை சந்தையில் வைத்து, காலை 9 மணியளவில் மக்கள் பார்த்திருக்கையிலேயே கைது செய்து, தேங்காய்ச் சாக்கோடு கல்முனை பொலிஸ் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட சசிதரனைக் கைது செய்யவில்லையென அவர்கள் எவ்வாறு சொல்ல முடியும்? அரசைத் தவிர்த்து பொலிஸ் ஜீப் வேறெவர்க்கு இருக்கிறது?”

அவரது இக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நாங்களல்ல. ‘இலங்கை ஜனநாயக சமூகவாத அரசாங்கமே’.

முப்பது வயதேயான மாணிக்கராசா சசிதரன் எனும் இரு பிள்ளைகளின் தந்தை காணாமல் போய் இன்றோடு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து போயுள்ளது. மூதூர் காவல்துறையின் முறைப்பாட்டுப் புத்தகத்தில் C.I.B. I தொகுப்பின் பக்க இலக்கங்கள் 310 – 317 இடையே 2011.02.28 அன்று பிற்பகல் 1.30க்கு எழுதப்பட்ட முறைப்பாடு மட்டுமே சாட்சியாக உள்ளது.

எனினும் இன்னும் மாணிக்கராசா சசிதரன் வீடு வந்து சேரவில்லை. யாரென்று அறியாத எம்மிடையே அழுதழுது தமது துயரத்தைச் சொல்லும் ஆரியரத்தினம் ரமணியினதும் சிறு பிள்ளைகள் இருவரினதும் கண்களிலிருந்து பொங்கி வழியும் அக் கண்ணீரானது காய வேண்டுமெனில் ரமணியின் கணவரும், இரு பிள்ளைகளினதும் தந்தையுமாகிய சசிதரன் வீடு வந்து சேர வேண்டும். அதை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும்.

இன்னும் இன்னும் விபரங்களைக் கேட்டு அவர்களது மனதை நோகடிக்க எங்களது மனம் இடம் தரவில்லை. எனவே நாங்கள் அவர்களிடமிருந்து விடைபெற நினைத்தோம்.

” நான் தமிழச்சியானாலும் எனது தாத்தாவான ஆதிஹெட்டி ஆரியரத்ன ஒரு சிங்களவர். அவர் மிகவும் அன்பானவர். முன்பு சிங்களவர் – தமிழரிடையே இருந்த ஒற்றுமை குறித்து தாத்தா எங்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனது கணவரிடமும் தாத்தா, மிகவும் அன்பாக இருந்தார். இது சிங்கள – தமிழ் பிரச்சினையல்ல என்பதை நான் அறிவேன். இது தீவிரவாதப் பிரச்சினையாகவும் இருக்க முடியாது. ஏனெனில் அவ்வாறிருந்தால், கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்காதே. எங்களது துயரத்தை அறிய வந்த இந்த ஐயாக்களுக்கு மிகவும் நன்றி. நான் எப்படியாவது எனது மனதைச் சரிப்படுத்திக் கொண்டேன் என வைப்போம். எனினும் இச் சிறுபிள்ளைகளுக்கு ஒரு தந்தை வேண்டுமல்லவா? எனக்கு அதற்கு உதவுங்கள். குறைந்தபட்சம் அவர்களை மட்டுமாவது இப் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க எமக்கு உதவுங்கள்.”

அவர் எமது அவதானத்தை வேறு திசைக்கு மாற்றினார். சிறுவர்கள் நிலுக்ஷனும் தனுஷும் எந்நாளும் சிறுவர்களாகவே இருக்க மாட்டார்கள். நாளைய உலகமானது இவ்வாறாக வளரும் குழந்தைகளுக்கே உரித்தானது.

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Published on: Aug 28, 2011 @ 9:53

Exit mobile version