Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரேக்கத்தில் புதிய கம்யூனிச எழுச்சி : ஐரோப்பிய அதிகாரம் அழிவை நோக்கி..

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் மிகப் பிரதானமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும் கிரேக்கத் தேர்தல் கடந்த ஞாயிறு – 17.06.2012- அன்று நடந்து முடிந்திருக்கிறது. கிரேக்கத்தில் அந்த நாட்டின் அரசும், அரசின் இயக்கமும் தொடர முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. வரலாறு காணாத பஞ்சமும் பட்டினியும், ஏழ்மையும் தலைவிரித்தாடுகின்றது. இவை அனைத்தும் இனிமேலும் நிலைக்க முடியாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முடிவை அறிவிக்கின்றது.

கிரேக்க அரசு தனது தனியார் கடன் வழங்குனர்களின் கடனை நிவர்த்தி செய்வதற்காக மே மாதம் 2010 இல் 110 பில்லியன் யூரோக்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியமும், சரவதேச நாணய நிதியமும்(European Union and IMF) இணைந்து இந்தக் கடன் தொகையை வழங்கியிருந்தன. பெரு முதலாளிகள் சூறையாடிய பணத்தை அவர்களே கடனாக வழங்கும் வேடிக்கையான ‘பிணையெடுப்பு’ (Bailout) நடவடிக்கை அரங்கேறி சில மாதங்களுக்கு உள்ளாக மீண்டும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது.

மறுபுறத்தில் கிரேக்கத்தில் நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச சமூக நலத் திட்டங்கள், இலவச மருத்துவம், ஓய்வூதியம் போன்றவற்றின் மீது அரசு கைவைத்தது. மக்கள் சாரி சாரியாக வேலையிழந்தனர். இளைஞர்கள் வேலைச் சந்தையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் ஒரு பிணையெடுப்பை சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்க முன்வந்தன. ஏற்கனவே வறுமையின் விழிம்பிற்குள் தள்ளப்பட்ட பெருந்திரளான வறிய மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதரத்தைக் கொள்ளையிட்டு இந்தக் கடனை நிவர்த்தி செய்யுமாறு சரவ்தேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்தன.

இந்த நிலையிலேயே 17ம் திகதி ஜூன் மாதம் கிரேக்கத்தில் தேர்த்தல் நடத்தப்பட்டது.

சிக்கனம் (Austerity)அல்லது அரச செலவீனக் குறைப்பு என்ற தலையங்கத்தில் மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரப் பழுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் இரண்டு முகாம்களாக கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன.

கிரேக்கத்தின் முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (New Democracy-ND) 29.6 வீத வாக்குக்களையும், சிரைசா(SYRIZA) 26.9 வீத வாக்குக்களையும், நிறவாதக் கட்சி(Golden Dawn (neo-nazi, racist party) 6.9 வீத வாக்குக்களையும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Greece -KKE) 4.5 வீத வாக்குக்களையும், சமூக ஜனநாயகக் கட்சி(PASOK (social-democrats)) 12.3 வீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. இந்த நிலையில் 29.6 வீத வாக்குக்களைப் பெற்றுக்கொண்ட சிறுபானமைக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கின்றது.

ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கட்சிகளின் வீதம் 56.

ஆக, பெரும்பான்மையான மக்கள் ஐ.எம்.எப், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொள்ளையான ‘பிணையெடுப்பு’ நடவடிக்கைக்கும் அரசின் சிக்கன நடவடிக்கு எதிராகவும் வாக்களித்த போதிலும் மக்களின் உனர்வுகளுக்கு எதிரான சிறுபான்மை அரசே ஆட்சியைக் கையகப்படுத்தியுள்ளது.

தவிர, கொள்ளைக் காரர்களின் பிடியிலுள்ள கிரேக்க ஊடகங்கள், ஜேர்மனிய அதிபர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உட்பட அனைவரும் கிரேக்க மக்கள் மீது ஒழுங்கமைக்கபட்ட உளவியல் யுத்ததையே நடத்தியிருந்தனர். புதிய ஜனநாயக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கிரேக்க மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்று ஜேர்மனிய அதிபர் சட்டவிரோத மிரட்டல் விடுத்ததை கிரேக்க ஊடகங்கள் நாளாந்த தலையங்கங்களாகப் பிரசுரித்தன.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், நாளேடுகள், தொலைக் காட்சிகள் என்ற அனைத்து தரப்பிலிருந்தும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான பிரச்சாரங்கள் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்டன.

இவை அனைத்தையும் மீறி 5 அல்லது 6 வீதமான வாக்குகளை மட்டுமே வழமையாகப் பெற்றுக்கொள்ளும் சிரைசா 26.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்ட்டாவது பலம்பொருந்திய கூட்டணியாக மாற்றமடைந்தது. புதிய ஜனநாயகக் கட்சிக்கும் சிரைசாவிற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2.7 வீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மற்றொரு பிரதான விடையம் கிரேக்கக் கம்யூனிச அமைப்பின் வெற்றியாகும். சிரைசா என்ற கட்சிகளின் கூட்டமைப்பில் இரண்டாவது பலம்பொருந்திய கட்சியான கிரேக்கக் கம்யூனிச அமைப்பு மாவோயிச சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும்.
கம்யூனிச இயக்கத்தின் தோழர்களில் ஒருவரான நியோமா பிரித்தானியாவிலிருந்து கூறிய போது, கிரேக்க மக்கள் பாராளுமன்ற வழிமுறைகளில் நம்பிகை இழந்து போய்விட்டனர். அதற்கு இந்தத் தேர்தல் பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார்.

சிரைசா கூட்டமைப்பை தேசிய ஜனநாயக ஐக்கிய முன்னணியாகவே கருதும் கம்யூனிச அமைப்பானது, கூட்டமைப்பில் கோட்பாட்டு ஆளுமையைச் செலுத்துகிறது.

ஐக்கிய முன்னணியை நிராகரிக்கும் பாரம்பரிய கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலின் பின்னர் புதிய ஐக்கியம் குறித்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது.
இதே வேளை பல குற்றச் செயல்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிறவாதக் கட்சி 6.9 வீத வாக்குக்களைப் பெற்றுள்ளமை அச்சம் தரும் நிகழ்வு என அனைத்து ஜனநாயக முற்போக்கு வாதிகளும் தெரிவிக்கின்றனர்.

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத இடதுசாரிகளின் எழுச்சி ஐரோப்பா முழுவதும் பரந்து வாழும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு புதிய இரத்தம் செலுத்துவது போல அமைந்துள்ளது என பிரித்தானிய மாவோயிச சார்புக் கட்சியச் சேர்ந்த தோழர் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.நேர்காணலின் முழுமையான மொழியாக்கம் வார இறுதியில் பதியப்படும்.

Exit mobile version