அதன் பின்னணி அவ்வளவு இலகுவானதல்ல. சிக்கல்கள் நிறைந்த வரலாற்றுக் கட்டத்தில் சிரிசாவின் வெற்றி ஆபத்தான பின்விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எங்கும் சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் அரச செலவீனங்கள் குறைக்கப்பட்டன. இதன் மறுபுறத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. மிகத் தீவிரமான அளவில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கிரேக்கமும் ஒன்றாகும்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் போத்துக்கல், இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளை பிக்ஸ்(P.I.G.S -பன்றிகள்) எனப் பெயரிட்டு ஏளனப்படுத்தின.
ஏனைய நாடுகளை விட இந்த நாடுகள் அதிகமாகச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தங்களை வழங்கின. ஐரோப்பியப் பாராளுமன்றம் இதற்கான திட்டங்களை வகுத்து
சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கட்சிகளை ஆட்சியிலமர்த்தின. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலையற்றோருக்கான மானியம், ஓய்வூதியம், குழந்தைகளுக்கான மானியம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகிய அனைத்து ‘மக்கள் நலத் திட்டங்களை’யும் இந்த நாடுகளின் அரசுகள் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தன. பொதுவாக அறுபதுகளின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டங்களால் ஐரோப்பிய அரசுகள் சமூகநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகாரத்திலிருந்த கம்யூனிச அரசுகளின் பாதிப்பில் ஐரோப்பாவில் மக்கள் அரசுகளுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர்.
இப்போராட்டங்களை கண்டு அஞ்சிய ஐரோப்பிய நாடுகள் தமது மக்களுக்கு சமூக நலத் திட்டங்களையும் மானியங்களையும் அறிமுகப்படுத்தின. ‘கம்யூனிச அபாயம்’ என்று அதிகாரவர்க்கதால் அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை திட்டமிட்டு அழித்த ஐரோப்பிய நாடுகள் கம்யூனிசத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்ற நிலை தோன்றியதும் மானியங்களை அழிக்க ஆரம்பித்தன.
பதிலாக பல்தேசிய வியாபார நிறுவனங்களின் தொடர்ச்சியான சுரண்டலுக்கு வழிசெய்தன. அவற்றிற்கு வரிசசலுகைகளை வழங்கின.
2007 ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாரதார நெருக்கடி என்று அழைக்கப்பட்ட அரசியல் நெருக்கடி தோன்றிற்று. உலகின் வழங்களையும், மனித உழைப்பையும் சுரண்டிக் கொழுத்த பல்தேசிய வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் மக்களை ஒட்டாண்டிகள் ஆக்கியமையையே உலகப் பொருளாதார நெருக்கடி என்று அழைத்தனர்.
2007 ஆம் ஆண்டுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணிக் கட்சியான சிரிசா 5.04 வீதமான வாக்குகளைப் பெற்றதை உலகம் வியப்புடன் நோக்கியது. ஏனைய ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் கிரேக்கத்தில் கம்யூனிச ஆபத்து ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தனர்.
2007 ஆம் ஆண்டில் சிரிசா பெற்ற வாக்குகளைத் தொடர்ந்து ஜேர்மனிய அரசு கிரேக்க அரசியலில் நேரடியாகவே தலையிட ஆரம்பித்தது. ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு திட்டங்களை அவசர அவசரமாக அறிவித்தது.
கிரேக்க நிறவாதக் கட்சியான தங்க விடியல் கட்சி மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. கடந்த தேர்தல் வரைக்கும் சிரிசா கட்சிக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரவர்க்கம் நேரடியான பிரச்சாரத்தில் இறங்கியது. கடும்போக்கு இடது சாரிகளின் எழுச்சி, கம்யூனிச அபாயம், பயங்கரவாத்த்திற்கு ஆதரவான கட்சி என்றெல்லாம் சிரிசா தொடர்பாக ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் ஊடகங்களும் பிரச்சாரம் மேற்கொண்டன.
சிரிசா கட்சியின் வெற்றி தொடர்பாக கூறிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் கிரேக்கத்தில் ஆபத்து ஆரம்பித்துவிட்டது என்றார். ஐரோப்பியப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்தார்.
இதற்கு மாறாக பிரித்தானியாவின் ஜனநாயகவாதிகளும் இடது சாரி அரசியல்வாதிகள் எனத் தம்மை அறிவித்துக்கொள்பவர்களும் கிரேக்கத்தில் ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் மறுமலர்ச்சி ஆரம்பித்துவிட்டது என்றனர்.
சிரிசா தேர்தலில் வெற்றிபெற்றதும் உழைக்கும் மக்களும் வேலையற்றோரும் ஒடுக்கப்பட்டவர்களும் குதுகலித்தனர். நவீன கிரேக்கத்தின் சிற்பிகளான உழைக்கும் மக்களை தெருவோரங்களில் பிச்சைக்காரர்களாக மாற்றிய நவ தாராளவாத முதலாளித்துவ அரசிற்கு எதிராக கிரேக்க நகரச் சுவர்கள் முழுவதும் எழுதப்பட்ட சுலோகங்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் ஒளிவீசியதாக மக்கள் உணர்ந்தனர்.
ஐரோப்பிய நாடு ஒன்றில் முதல் தடவையாக முதலாளித்துவப் பொருளாதரத்தின் அழிவுகளுக்கு எதிராக் ஏக குரலில் பெருந்திரளான மக்கள் பேச ஆரம்பித்திருந்தனர்.
சிக்கன நடவடிக்கைக்கும், நவ தாரளவாதப் பொருளாதாரத்திற்கும் எதிராக கிரேக்கத்தை மீட்டெடுப்பதாகவே சிரிசா கூட்டமைப்பு பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிற்று.
முதலாளித்துவத்திற்கும், நவதாரளவாதப் பொருளாதர அமைப்பிற்கும் எதிரான மக்களின் உணர்வுகளை சிரிசா உள்வாங்கிக்கொண்டு அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.
சிரிசா சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறவில்லை. இப்போது நிலவும் தேர்தல் முறைமையையும் அரசு இயந்திரத்தையும் அழிப்பதாகக் கூறவில்லை. பெரும்பான்மை உழைக்கும் மக்களை அணிதிரட்டிக் கட்சியின் அடிப்படைப் பலமாகக் கொண்டிருக்கவில்லை. முன்னைய அதே அரச இயந்திரத்தின் நிர்வாகத்தை சிரிசா ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நிர்வாகத்தை தொடந்து நடத்திச் செல்வதாக சிரிசா ஒப்புக்கொண்டிருக்கிறது. சில சீர்திருத்தங்களைத் தவிர ,சமூகத்தின் ஏனைய பகுதிகளை முன்னைப் போலவே பாதுகாக்க முற்படும் சிரிசா இடதுசாரிக் கட்சி அல்ல.
21ம் நூற்றாண்டின் தேசிய வாத அரசாக சிரிசாவின் அரசு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முற்படுகிறது. அதனை ஒட்டிய வேலைத்திட்டங்களை முன்வைக்கிறது. தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது. வெட்டப்பட்ட மானியங்களை மீள வழங்குவது, இலவச மருத்துவத்தை வழங்குவது, தேசிய உற்பத்திகளையும் பொருளாதார்த்ய்தையும் ஊக்குவிப்பது போன்ற அறிவிப்புக்களை சிரிசா மேற்கொண்டுள்ளது.
தேசியவாதத்தின் அடிப்படைக் கூறுகளைத் தனது கோட்ப்படுகளாக கொண்டுள்ள சிரிசா கம்யூனிசக் கட்சியோ அன்றி இடதுசாரிக் கட்சியோ அல்ல. தன்னைத் தீவிர இடதுசாரிக் கட்சி என சிரிசா அழைத்துக்கொண்டாலும் அதன் தேசியவாதக் கட்சியாகவே கருதப்படலாம். சோவியத் புரட்சிக் காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சிகள் என அழைக்கப்பட்ட கட்சிகளுக்கும் சிரிசாவிற்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. சிரிசா என்பது தேசியவாதக் கட்சி என்பதைத் தவிர வேறில்லை. சிரிசா தேசிய முதலாளித்துவக் கட்சி போன்ற தோற்றப்பாட்டையே தருகின்றது.
எது எவ்வாறாயினும் தேசிய முதலாளித்துவம் என்பது இன்றைய உலகில் சாத்தியமற்றது. முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது பல்வேறு உருமாற்றங்களுக்கு உள்ளாகிறது. அதன் உச்சகட்டமாகவே நவ தாராளவாதம் காணப்பட்டது. அதனைச் சீர்திருத்தவோ மீட்டெடுக்கவோ முடியாது.மறுபுறத்தில் நவதாராளவாத பல்தேசிய மாபியக் கும்பல்கள் தேசிய முதலாளித்துவத்தின் மீது தொடுக்கும் தாக்குதலால் தேசிய முதலாளித்துவக் கட்சிகள் இடதுசாரிக் கட்சிகளாக மாற்றம் பெறாது.
கிரேக்கத்தில் ஏற்பட்ட முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி மக்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்துன் ஊடாகவே அரச யந்திரத்தை அழித்து புதிய சமூகத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தைக்கொண்ட குழுக்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இந்த வகையில் ஏகாதிபத்திய நாடுகள் சிரிசாவின் எழுச்சியை எதிர்ப்பதாக வெளிக்காட்டிக்கொண்டாலும் அதன் அழிவை விரும்பவில்லை. தவிர்க்க முடியாமல் தோல்வியடையப் போகும் சிரிசாவின் அரசியலை இடதுசாரி அரசியலதும், கம்யூனிசத்தினதும் தோல்வியாகக் காட்டுவதற்கு ஐரோப்பிய முதாளித்துவ வர்க்கம் தயார் நிலையிலுள்ளது.