இந்திய இராணுவத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருநாள் சிறைவாசம் அனுபவித்த அருந்ததிராய், “”இந்தியாவில், வெளியில் வாழ்வதை விட, சிறை வாழ்க்கையே மேல்” என்று கூறியது நினைவிற்கு வருகிறது.
அறிவுத் துறையின் காற்றுத்தழுவாத அதிகார வர்க்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும்.
இன்று தமிழினம் சிக்கியுள்ள முரண்பாடுகள் பற்றியதான விழிப்புணர்வு, அடிபணிவு அரசியல்வாதிகளாலும், தோல்விகளைத் தமது சுய இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளன.
கொடுமையான ஆதிக்க உணர்வு கொண்ட பேரின தேசியவாதமானது, பலமற்ற இனக் குழுமங்களை அல்லது எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய இனங்களை, இராணுவ நிர்வாகக் கட்டமைப்பினூடாகக் கையாள்வதே பொருத்தப்பாடான விடயமென முடிவு கட்டியுள்ளது.
தேசிய அளவிலான இனச்சிக்கல் தீர்வு குறித்த கருத்தொற்றுமை ஏற்படும் சாத்தியங்கள், மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
பேரினவாத கருத்தியல் ஆளுமைக்கு எதிரானவர்களைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள், “நாம் இலங்கையர்’ என்கிற அரசியல் மைய நீரோட்டத்துள், தமிழர்கள் இணைந்து செல்ல வேண்டும் என வலியுறுத்துவதை நிறுத்தவில்லை.
சிறையில் இருந்தாலும், தமிழர்கள் அதிகம் கேட்கக் கூடாதென “முன்னாள் ஜெனரல்’ சரத் பொன்சேகா வெளியிடும் கருத்துக்கள், பெரும்பான்மையின அரசியல்வாதிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்படுவதற்கான சிறிதளவு சாத்தியப்பாடுகளும் இல்லை என்பதனை எடுத்துக் காட்டுகின்றன.
கடந்த 28 ஆம் திகதியன்று அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நிகழ்த்தினார் இலங்கை ஜனாதிபதி!
திஸ்ஸ வித்தாரனவின் சர்வகட்சி ஒன்று கூடலில், பல கட்சிகள் கலந்து கொள்ளவில்லையென்பதால், கடந்த கால தவறுகளைக் களைந்து, சகலரும் ஒன்றிணைந்து தீர்வினை எட்டும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றினை அமைக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வினை எட்ட, ஒரு மாதமோ அல்லது ஆறு மாதங்கள் எடுத்தாலும் அதற்கு தான் பொறுப்பல்ல என்று பின்னடிக்கும் ஜனாதிபதி, 6 மாத காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடத்தப்படும் பேச்சுவார்த்தையை தொடரப் போவதாக அறிவித்தார்.
மாதச் சடங்கான அவசரகாலச் சட்ட நீடிப்பையும் 18 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் முக்கியமான வரவு செலவுத் திட்டங்களை, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பின் மத்தியிலும் நிறைவேற்றும் ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு மட்டும் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதல் தேவையென சாட்டுக் கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது.
ஆகவே பிரச்சினைக்கான தீர்வினை தாமதப்படுத்தவா இந்த தெரிவுக் குழு அமைக்கப்படுகிறது என்கிற கேள்வி நியாயமானது.
அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, கால நீட்சி தந்திரங்களை ஆளும் வர்க்கத்தினர் பிரயோகிப்பார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்ல என்கிற பரப்புரையை முன்னெடுத்தவாறே, 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவினை அமைக்கப் போவதாக தனது நியாயப்பாடுகளை அரசு முன்வைக்கிறது.
அவ்வாறாயின், எதனடிப்படையில் கூட்டமைப்போடு அரசு பேசுகிறது என்பதனை புரிந்து கொள்வது கடினமானதல்ல.
ஆகவே, சமாந்தரமாக உருவாக்கப்படும் தெரிவுக் குழுவின் செயற்பாடுகள் இயங்க ஆரம்பித்தவுடன், கூட்டமைப்போடு பேசுவது நிறுத்தப்படும் வாய்ப்புண்டு.
தீர்வுத் திருவிழா இவ்வாறு இருக்கையில், பொருளாதாரத் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிப்பது என்கிற விவகாரத்தில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது அரசு.
வருகிற செப்டம்பர் மாதமளவில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான அரச டொலர் முறிகனை [SOVEREIGN DOLLAR BOND] விற்பதற்கு அரசு தயாராகி வருகிறது.
அதிலிருந்து பெறப்படும் நிதி, அதிக சுமையுடைய கடன்களை தீர்ப்பதற்கும், உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பயன்படுத்தப் போவதாக மத்திய வங்கியின் உதவி ஆளுனர் தர்ம தீரசிங்க கூறுகின்றார்.
அதிக வட்டியோடு கூடிய கடனை அடைப்பதற்கு, சொந்த நாட்டை அடைவு வைக்கும், “முறிகனை விற்றல்’ என்ற தற்காலிக தந்திரோபாயங்களை அரசு முன்னெடுப்பது போல் தெரிகிறது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரப்படி, ஏப்ரலில் 8.6 சதவீதமாகவிருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) ,மே மாதத்தில் 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடாந்த சராசரிப் பண வீக்கம் 6.6 சதவீதமாக உயர்ந்ததற்கு, சர்வதேச அளவில், பண்டங்களின் விலையேற்றமும் எண்ணெய் விலை அதிகரிப்பும் காரணமெனக் கூறும் அறிக்கை, இந்த வருட வர்த்தக பற்றாக்குறை [TRADE DEFICIT]விரிவடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றது.
உலக மயமாகிய முதலாளித்துவம், 14.3 ரில்லியன் டொலர் கடன் எல்லையைத் தொட்டிருக்கும் அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது, 50 பில்லியன் மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்ட இலங்கையை நிச்சயம் பாதிக்குமென்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆகவே, பொருண்மிய ஜாம்பவான்கள் சிக்கித் திணறும் இக்கால கட்டத்தில், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியினை 2018 ஆண்டளவில் அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசு முனைப்புக் காட்டுகிறது.
சர்வதேச அளவில் எழும் போர்க் குற்றச்சாட்டுகளால் நிலை குலைந்து போயுள்ள அரசு, நற்பெயரை உருவாக்குவதற்கும், அம்பாந்தோட்டை அபிவிருத்திக்கு வெளிநாட்டின் நேரடி முதலீடுகளை வரவழைப்பதற்கும், இவ்விளையாட்டு விழாவை பரப்புரைச்சாதனமாகப் பயன்படுத்த முயல்வது போல் தெரிகிறது.
இந்த நகர்வினை நோக்கும்போது, 2004 இல் கிரேக்க தேசம் ஏதென்ஸில் நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நினைவிற்கு வருகிறது.
2001 இல் யூரோ வலயத்துள் இணைந்த கிரேக்கம், 2002 இல் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்டது.
உல்லாசப் பயணத் துறையில் பெரிதும் தங்கியுள்ள கிரேக்க தேசம் அதனை வளர்க்க, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வட்டி கூடிய கடன்களைப் பெற்றது.
அதில் சுவிஸ், ஜேர்மன், பிரெஞ்சு வங்கிகள் பெரும் பங்கினை வகித்தன.
வரி அறவீட்டில் ஏற்பட்ட சிக்கல்களும், அதிகரித்த உபகாரக் கொடுப்பனவுகளும், வரி ஏய்ப்புச் செய்த அரச உயர் குலாம்களும், நாட்டினை மீள முடியாத கடனாளியாக மாற்றியிருந்தன.
கிரேக்க நாட்டின் மொத்தக் கடன் 340 பில்லியன் யூரோக்களாகும். அதில் தலைக்குரிய கடன் 31,000 யூரோக்கள்.
அந்நாடு வங்குரோத்து நிலையை (DEFAULT) அடையாமல் இருப்பதற்கு, 2014 ஆம் ஆண்டிற்கு முன்பாக, 50 பில்லியன் யூரோ பெறுமதியான மக்கள் சொத்துகளை விற்க வேண்டுமெனவும்,
பொதுத் துறைக்கான கொடுப்பனவுகளை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிடுகிறது.
ஆனாலும் சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய வங்கியும், கடந்த வருடம் வழங்கிய 110 பில்லியன் யூரோ நிதியத்தால் கிரேக்கத்தின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை.
புதிய நிதிச் சிக்கன நடவடிக்கையை (AUSTERITY MEASURES) நாடாளுமன்றில் நிறைவேற்றும்வரை, கடந்த வருடம் உறுதியளித்த நிதித் தொகையின் 12 பில்லியன் யூரோவை வழங்க மாட்டோமென அடம் பிடித்தது ஐரோப்பிய ஒன்றியம்.
இவை தவிர, அடிப்படையில் இந்நெருக்கடியானது கிரேக்கம் பற்றியதல்ல என்பதே பொருளியல் ஆய்வாளர்களின்
கருத்து.
ஐரோப்பிய வலய நாடுகளின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.5 சதவீதத்தையே கிரேக்க தேசம் கொண்டுள்ளது.
இருப்பினும் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடொன்றின் திறைசேரி திவாலாகினால், அந்நாணயம் குறித்தான நம்பகத் தன்மையில் சிதைவுகள் ஏற்பட்டு விடுமென்பதுதான் ஒன்றியத்தின் கவலை.
ஏற்கனவே பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கி தம்மைக் காப்பாற்ற எவரும் முன்வரமாட்டார்களா என்று ஏங்கும் நாடுகளின் வரிசையில், ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து போன்றவை இருப்பதால், ஐரோப்பாவானது பொருண்மிய சிக்கலிற்குள் முழுவதுமாக அமிழ்ந்து விடும் அபாயம் தோன்றியுள்ளதாக பலர் எச்சரிக்கின்றார்கள்.
ஆகவே 2001 இலிருந்து 2011 வரையான காலத்தில், கிரேக்க தேசத்தில் நிகழ்ந்த நெருக்கடிகளை கூர்ந்து அவதானித்தால், இலங்கையின் தற்போதைய நிலைவரங்களோடு ஒப்பீட்டாய்வு செய்யக் கூடிய பல சம்பவங்கள் சமாந்தரமாக இருப்பதைக் காணலாம்.
உல்லாசப் பயணத் துறையும், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் ஈட்டித் தரும் அந்நிய செலாவணியும், இலங்கையின் வருமானத்தின் பெரும்பங்கினை வகிக்கின்றன.
அதேவேளை, வருவாயிலிருந்தும் பெறப்படும் பெருமளவிலான பணம், வாங்கிய கடனிற்கான வருடாந்த கடன் தவணைப் பணத்தினை கட்டுவதற்கு உபயோகிக்கப்படுகிறது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதிர்பார்த்தளவிற்கு வராத நிலையில், அரச முறிகளை விற்பனை செய்வதும், தமிழர் தாயக நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதும், கடலடி எண்ணெய் வளங்களை துண்டுத் துண்டாக பிரித்துக்
கொடுப்பதும், “அம்பாந்தோட்டை” வெள்ளை யானைக்காக பணத்தை வாரியிறைப்பதும், கிரேக்க தேசத்தின் தோல்வியுற்ற நிலையினை நினைவூட்டுவது போலுள்ளது. இவை தவிர வெளிநாட்டு நாணய மாற்று பரிவர்த்தனையில் சீனாவின் “யூவான்’ (YUAN) நாணயத்தை இணைத்துக் கொண்டாலும், அதனால் பயனடையப் போவது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “பிரிக்ஸ்’ எனப்படும் மேற்குலகின் எதிரணிக் கூட்டுத்தான்.
இலங்கை அரசு பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் சீனாவிலும் இந்தியாவிலும் கூட புதிய நெருக்கடிகள் உருவாகின்றன.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்விருநாடுகளும் தவிக்கின்றன.
2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்டது போன்று சொத்துகளின் மதிப்பு உயர்வடைந்து, வங்கிகள் நெருக்கடியை எதிர்நோக்கலாமெனக் கணிப்பிடப்படுகிறது.
திறைசேரியில் 3 ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை வைத்திருக்கும் சீன அரசு, வங்கிகளினூடாக மக்களுக்கு வழங்கப்படும் கடன்களை மட்டுப்படுத்துகிறது. நீண்ட கால அமெரிக்க திறைசேரி முறிகனை வாங்குவதனையும் சீனா தவிர்க்கிறது.
இந்நிலையில் இலங்கை அரசு விற்கப் போகும் 10 வருட முறிகளை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் முன் வந்தாலும், கிரேக்கத்தில் ஜேர்மனிய, பிரெஞ்சு வங்கிகள் படும் பாட்டினை கருத்தில் கொள்வார்களென நம்பலாம்.