மத்திய காஷ்மீரில் அமைந்திருக்கும் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் – 02.11.2014 – மாலை ஐந்து மணி அளவில் மாருதி கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை நோக்கி இந்திய ராணுவம் சுட்டதில் இருவர் பலியானார்கள். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனது கொலை முகத்தை மறைத்து கொல்லப்பட்டவர்கள் முதலில் ராணுவத்தினர் என்று கதையளந்தது ராணுவம். கொல்லப்பட்டவர்கள் பட்கம் மாவட்டத்தின் நவ்கம் கிராமத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் என்ற செய்தி விரைவிலே வெளியானது. அவர்கள் பெயர்கள் ஃபைஸல் மற்றும் மேஹ்ராஜுதீன். ஃபைஸல் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். காயமடைந்திருப்பவர்கள் ஜாகித் மற்றும் ஷகீல்.
ஞாயிறன்று வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவுக்கு திரைச்சீலைகள் வாங்க தந்தையின் காரில் நண்பர்களுடன் சென்றவன் தான் ஃபைஸல். சட்டர்கம் கிராமத்தில் நடந்த மொஹரம் விழா ஏற்பாடுகளையும் பார்க்க விரும்பியுள்ளனர். காரை சட்டர்கமுக்கு செலுத்திய போது கார் டிப்பர் லாரியில் மோதியது. லாரி டிரைவர் தம்மை பிடித்து அடித்து விடுவார் என்று பயந்து போனவர்கள் காரை வேகமாக ஓட்டியுள்ளனர். அப்போது ராணுவத்தின் சிக்னலை கவனிக்கத் தவறியவர்களை தான் கொன்றிருக்கிறது ராணுவம்.
தனது முதல் புளுகு நிலைக்காததை உணர்ந்த ராணுவம் இன்னொரு பொய்யை கண்டுபிடித்தது. காருக்குள் இருந்தவர்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தது. ஆனால், போலீஸ் விசாரணையில் காருக்குள் இருந்து எந்த துப்பாக்கியும் கைப்பற்றப்படவில்லை. பிறகு இன்னொரு காரணத்துக்கு தாவியது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை இருந்த நிலையில் இரண்டு சோதனை நிலையங்களில் காரை நிறுத்த சொல்லியும் கேட்காமல் மூன்றாவதாக அமைக்கப்பட்ட ஒரு தடுப்பையும் மீறி சென்றதால் கொல்ல நேர்ந்ததாக சொல்கிறது, ராணுவம். ஃபைஸலின் ஒன்பது வயதான சகோதரன் ஃபைஸான் ஏன் போலீஸ் வண்டியின் சக்கரத்தில் சுடாமல் கதவில் சுட்டது என்று கேள்வி எழுப்புகிறார்.
காருக்குள் இருந்தவர்கள் எந்தவிதமான எதிர் தாக்குதலலிலும் ஈடுபடாத நிலையில் ஏன் அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றவில்லை போன்ற கேள்விகளுக்கு ராணுவத்திடம் பதிலில்லை. காரில் சென்றவர்கள் பயங்கரவாதிகள் என்ற துப்பு உண்மையென்றால் அவர்களை உயிருடன் பிடித்து அவர்களின் தாக்குதல் இலக்கு, நோக்கம், அமைப்பு ஆகியவை பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் ராணுவம் செயல்பட்டிருக்குமா?
மக்களின் விடாப்பிடியான போராட்டத்தை அடுத்து போலீஸ், இராணுவப் பிரிவான ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படை மீது வழக்கு பதிந்துள்ளது. வழக்கம் போல் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுகிறது போலீஸ். அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து மக்களின் நடமாட்டத்தை முடக்குகிறது. தேசிய ஊடகங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் என்று முந்திக் கொண்டு செய்தியை அளித்தன.
‘இந்த வருடம் தீபாவளி காஷ்மீர் மக்களுடன் தான்’ என்று ட்விட்டரில் அறிவித்து விட்டு சென்ற மோடி தீபாவளியை ராணுவத்துடன் கொண்டாடி விட்டு திரும்பினார். மொஹரம் திருநாளில் காஷ்மீர் மக்கள் சோகத்துடன் தங்களின் மனதை கடக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுதான் மோடியின் தீபாவளி பண்டிகைக்கான உற்சாகமாகயிருக்கும். காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை திரிக்கப்பட்டு ராணுவத்தின் பாதுகாப்பு பற்றியே சமீப காலங்களில் ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதற்கு உதாரணமாக, கொல்லப்பட்ட மக்களின் தகவலை மறைத்து ராணுவத்தினர் கொலையுண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலை கொள்ளலாம். காஷ்மீர் முதல் ராமநாதபுரம் வரை இந்திய முஸ்லிம்களின் உயிர்கள் விலை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
நன்றி : வினவு