மார்க்ஸ் வாழ்ந்த காலத்தின் சமூகப் பொதுப் புத்தி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னர் கார்ல் மார்க்சைப் பயங்கரவாதியாகச் சித்தரித்த பெரும்பாலானோர் மார்க்சை மா மேதையாகப் போற்றுகின்றனர்.
இந்த நூற்றாண்டின் இரண்டாவது தசாப்ததில் கார்ல் மார்க்சை எந்தப் பொருளியல் ஆய்வாளர்களும் முற்றாக நிராகரிக்கவில்லை. மதத் தலைவர்களிலிருந்து அரசியல் தலைவர்கள் வரை அதிகார அமைப்புக்களின் அததனை கூறுகளிலிருந்தும் மார்க்சின் கூற்று உண்மையாகிவிட்டது என்று வெளிப்படையாகவே பேசுகின்ற புதிய காலப்பகுதியில் மனித குலம் கால்பதித்துள்ளது.
பழமைவாத, நிலப்பிரபுத்துவ விழுமியங்களோடு, பிணைக்கப்ப்பட்டுள்ள பின் தங்கிய சிந்தனைப் போக்கினைக் கொண்டிருக்கும், யாழ்ப்பாண மையவாத கருத்தமைவைக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் மார்க்சியத்தின் மீதான நிராகரிப்பு ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இடதுசாரியக் கருத்தினைக் கொண்டிருந்தவர்கள் சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையையே புரிந்து கொள்ல முடியாத பரிதாபகரமான நிலையிலிருந்ததும் இதன் மற்றோரு காரணமாக அமைந்திருக்கலாம்.
சுய நிர்ணய உரிமை என்பதே பிரிந்துபோவதற்கான உரிமையுடன் கூடியது என்ற கோட்பாட்டை முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மார்க்சியம் தெளிவாகக் கூறிய போதும், இலங்கையின் இடதுசாரிகள் அதனைத் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளனர்.
கார்ல் மார்க்சின் காலத்தைய அதிகார வர்க்கம் பல மாற்றங்களூடாக மிகவும் பலவீனமான, உள் முரண்பாடுகளைக் கொண்ட அழிவு நிலைக்கு வந்திருக்கிறது. அன்னிய ஆதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைக்கான யுத்த முனையில் தம்மை அணிதிரட்ட முயல்பவர்களாயினும், சுய நிர்ணய உரிமைக்காகத் போராடுபவர்களாயினும் இன்றைய சமூகத்தின் புறச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு விஞ்ஞானபூர்வமான சமூக ஆய்வுகள் அவசியமானவை.
பலவீனமடையும் அதிகாரவர்க்கம் தன்னை மீளமைப்புச் செய்வ்தற்கான முயற்சியில் உலகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்டுருக்கும் நிறுவன மயமான அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய தந்திரோபாய வழிமுறைகள் குறித்த பிரக்ஞை இன்று அவசியமானது.
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போராடுகின்ற மக்கள் கூட்டங்கள் தமது அடுத்த முன் நோக்கிய தலைமையை உருவாக்கிக் கொள்ள முனைகின்ற அதே வேளையில், பிரபாகரன் வருவாரா இல்லையா என்ற தீவிர ஆய்வு வட்டத்தினுள் நாம் குறுக்கப்பட்டிருக்கும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அமரிக்க ஏகபோகம் ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கான முதல் முன் மொழிவை முன்வைத்தது என்று விக்கிலீக்ஸ் ஆதார பூர்வமான தகவல்களைத் தந்திருக்கிறது. இனப்படுகொலையின் பின்புலமாக இந்தியா அமைந்திருக்கிறது என்பதை நேரடியாக அறிந்திருக்கிறோம். பொதுவாக ஈழ அரசியல் குறித்துப் பேசும் யாரும் இவற்றை நிராகரித்ததில்லை. ஆயினும், அமரிக்காவையும் இந்தியாவையும் நட்பு சக்திகளாகக் கருதுகின்ற கோழைத் தனத்தை போராடுகின்ற, பலம் மிக்க உலகின் எந்த மக்கள் கூட்டமும் ஏற்கத் தயாரில்லை.
இன்று யார் பலமானவர்கள், யாரெல்லாம் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார்கள், நண்பர்கள் யார், எதிரிகள் எங்கே என்ற பல கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமாயின் சமூகம் குறித்த அடிப்படையான புரிதல் அவசியம்.
ஒவ்வொரு உற்பத்தி உறவு முறையும் குறித்த வர்க்க அமைப்பு முறையோடு (Class pattern) தொடர்புடையது. மன்னர்களின் நிலப்பிரபுத்துவக் (Feudal) காலத்திலிருந்த வர்க்க அமைப்பு முறை இன்றில்லை. ஒவ்வொரு உற்பத்தி உறவையும் அடிப்படையாகக் கொண்டு புதிய அதிகாரங்கள் (New power configuration) உருவாகின்றன. அதிகார அமைப்பு முறை ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் உற்பத்தி உரவுகளோடு நேரடிப் பிணைப்பைக்கொண்டது. அரசுகள் அதிகார அமைப்பு முறையின் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனம்.
இன்றைய பொருளாதார ஒழுங்கு பலவீனமடைந்து சரிந்து விழுந்துகொண்டிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கார்ல் மார்க்ஸ் நுற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறிய தர்க்கீகம் தான் கார்ல் மார்க்சை அவரது எதிரிகள் மத்தியிலும் மா மேதையக்கியிருக்கிறது.
சமூக இயக்கத்தின் மையப் பகுதியாகத் திகழ்வது உற்பத்தி சாதனங்களின் தனியுடமை( Ownership of means of production). நிலம், நீர், காற்று என்ற அடிப்படையானவற்றிலிருந்து, கணனி தொடர்பான நவீன தொழில் நுட்பம் வரைக்கும் தனி உடமையாக வைத்திருக்கின்ற மனிதர்களின் அதிகாரம் பொதுவாக மூன்று வகைப்படுகிறது.
1. உற்பத்தி சாதனங்களை வாங்கவும் விற்கவுமான அதிகாரமும் பலமும்.
2.மனித உழைப்பை வாங்குவதற்கான அதிகாரமும் வலிமையும்.
3. மேற்குறித்தவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கான அதிகாரம்.
இவற்றை கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்திற்கான இயக்கிகள் (Functions of functioning capitalism) என்று அழைக்கிறார்.
சமூகத்தின் இயக்கத்தை ஆராய்வதற்கான அடிப்படைகள் இவை. அமரிக்காவில் உட்கார்ந்துகொண்டு சமூகத்தின் முரண்பாடுகளைக் கையாள்வது குறித்து ஆய்வு செய்கின்ற மேற்தட்டு ஆய்வாளனோ, நேபாளத்தின் ஏழைக் குடியானவனின் குடிசையிலிருந்து போராட்டம் குறித்துச் சிந்திக்கும் புரட்சிக்காரனாயினும் இந்த அடிப்படைகளைக் கடந்து சமூக நிலைமைகளை ஆராய்வதில்லை.
இந்த மூலங்கள் இன்றைக்கு பல சிக்கலான அமைப்புக்களாக மாற்றமடைந்துள்ளன. குறிப்பாக 1890 இல் அமரிக்காவில் முதல் தடவையாக உருவான முதலாளித்துவ அமைப்பியல் நெருக்கடி(Structural Crisis) உலகம் முழுவதையும் மறு ஒழுங்கமைப்புச் செய்கின்ற நிலையை உருவாக்கிற்று.
இலாபத்தை அதிகரிப்பதென்பது (Maximising the profit) முதலாளித்துவம் நிலை பெறுவதற்கான தேவையான நிபந்தனை(Necessary condition). இலாபம் அதிகரிக்கும் செயற்பாடு வலுவிழக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் புதிய சமூகப் பொருளாதார அமைப்பு முறைகளை ஏகாதிபத்தியங்கள் முன் மொழிகின்றன. 1890 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதலாவது நெருக்கடி இவ்வாறான ஒரு சூழ் நிலையிலேயே உருவானது.
உருவான இந்த நெருக்கடியைச் சுதாகரித்துக் கொள்ள முதலாளித்துவம் பெரு நிறுவனன்களை உருவாக்கிற்று. அவ்வாறான நிறுவனங்களுக்கு அரசுகளின் முழுமையான ஊக்கமும் ஆதரவும் வழங்கப்பட்டது. இதனை பெருளியலாளர்கள் Cooperate Revolution என்று அழைக்கின்றனர்.
பெரு நிறுவனங்களுக்கு எதிரான தொழிலாளர்கள் மட்டுமன்றி, மத்திய தர வர்க்கத்தின் பெரும்பகுதியும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்த வேளையில் அவ்வொழுங்கு மீண்டும் நெருக்குதலுக்கு உள்ளாகின்றது.
இந்த நிலையில் மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதியை முதளித்துவப் பொருளாதார அமைப்பின் இயக்க முறைகளுக்குள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலிருந்து முகாமையாளர்கள், நெறியாளர்கள், லிகிதர்கள் போன்ற உற்பத்தித் திறனற்ற (Non productive) வர்க்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். மூலதனத்தின் உடமையாளன் நேரடியான நிர்வாகியாகவன்றி இடைநிலையில் உருவாக்கப்பட்ட முகாமையாளர்களூடாக ஏற்படுத்தப்பட்ட புதிய ஒழுங்கமைப்பை முகாமைத்துவப் புரட்சி (Managerial Revolution) என அழைக்கின்றனர்.
முகாமைத்துவப் புரட்சி மூன்றாமுலக நாடுகள் வரை விரிவாக்கப்படுகின்றது. அங்கெல்லாம் தரகர்கள் உருவாக்கப்படுகின்றனர். மேற்கு நாடுகளில் வாழும் மூலதன உடமையாளர்களுக்குத் தரகர்களாகத் தொழிற்படும் முகாமையாளர்கள் அவர்களை நெறிப்படுத்தும் ஆட்சி அமைப்பு என்பன உருவாக்கப்படுகிறன.
அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் ஏகபோக அதிகாரத்தின் கீழ் அனைத்து முகாமையாளர்களும் செயற்படும் நிலை உருவாக்கப்படுகின்றது.
இதன் இன்னொரு வளர்ச்சி நிலையில், நிதி நிறுவனனங்கள் உருவாக்கப்படுகின்றன. வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என்பன உருவாக்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களின் பணச் சுழற்சிக்கு இவை ஊக்கு சக்திகளாகத் தொழிற்படுகின்றன. 1940 களின் பின்னர், கடன் பொறிமுறை (Credit mechanism) என்பது குடிமக்களிடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை நிதிப் புரட்சிக் காலகட்டம் (Financial revolution) என அழைகின்றனர்.
கார்ல் மார்க்ஸ் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி முழுவதுமே உற்பத்தியின் சமூகமயமாக்கலுக்கான (Socialisation of production) காலப்பகுதியாக அமைந்திருந்தது.
முதளாளித்துவம் 70 களின் மீண்டும் அமைப்பியல் நெருக்கடிக்கு உளாகின்றது. இக்காலப்பகுதியில் உலகின் மற்றொரு ஒழுங்கமைப்பான நவ தாராளவாதக் (Neo- Liberalism) கொள்கை உருவாக்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியான உலகமயமாதல் என்பது நாம் கொலைகளையும் அழிவுகளையும் சந்திக்கின்ற 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் அதன் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. ஏகாதிபத்தியங்களும், அதிகாரவர்க்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனமடைந்துள்ள இன்றைய சமூகத்தின் புறச் சூழலையும் அதன் விளைவான அதிகார ஒழுன்கமைப்ப்பையும் (Power Configuration) புரிந்துகொள்வது நண்பர்களையும் எதிரிகளையும் வகைபடுத்திக்கொள்வதற்கான ஆரம்பம் மட்டுமல்ல எதிரிகளின் உள் முரண்பாடுகளை பகுத்தாராய்வதற்கான அடிப்படையுமாகும்.
(இரண்டாம் பகுதி அடுத்த வாரத்தில் …)