Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகள் – 22 வருடங்களின் பின்னர்

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஏனைய தேசிய இனங்களை ஒடுக்குவதும், இனப்படுகொலைக்கு உட்படுத்துவதும், கோரமாகக் கொலைசெய்வதும் சித்திரவதை செய்வதும் தேசியம் என்றும் சுதந்திரம் என்றும் தலைப்பிட்டால் அது அவமானகரமாது. ஈழத்தில் மட்டுமல்ல உலகத்தின் எந்தப் பகுதியிலும் இதையெல்லாம் தேசியம் என்று மக்களை கோரமான இருளின் விழிம்பிற்குள் அழைத்துச் செல்லும் யாரும் இனிமேல் உருவாகக் கூடாது. கடந்த காலப் போராட்டங்களில் இவற்றை எல்லாம் சுயவிமர்சனம் செய்து கொள்ளாமல், எமது மனிதாபிமானமே போராட்டத்தின் அடிப்படை என்பதை முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வோரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் கூறாமல் ஒரு அங்குலம் கூட முன் நோக்கி நகர முடியாது.

கொல்லப்பட்ட முஸ்லீம்களின் வலியை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் போது மட்டும்தான் எமது இழப்புக்களுக்குப் பெறுமானமுண்டு,

முஸ்லீம் மக்கள் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளாத யாரும் ஏகாதிபத்தியத்திற்கு (விதேசியத்திற்கு) எதிராக தேசியம் பேச முடியாது.

ஈழத்தில் தேசியத்தின் பெயரால் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிருகத்தனமான அத்தனை வன்முறைகளும் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உட்படுத்தப்படவேண்டும். எமது அரசியலைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தில் புதிய போராட்ட அரசியலை முன்வைக்கத் தவறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சுயவிமர்சனத்திற்கு பயப்படுகின்ற பலவீனமான மனிதனாகவே கருதப்படுவான்.

அந்த வரலாறுக் கடமையிலிருந்து தவறுவோமானால், ஒடுக்கும் பெருந்தேசியவாதப் பாசிச அரசும், அதன் அடிவருடிகளும், நிலப்பிரபுத்துவ சோசலிஸ்டுக்களும், கோப்ரட் ஜனநாயகவாதிகளும், ஏகாதிபத்தியங்களும், மேலாதிக்க அரசுகளும் மன்னிக்க முடியாத அரசியல் தவறுகளை தங்கள் பலமாக்கிக் கொள்வார்கள்.

மனித உரிமை என்ற பெயரில் அதிகாரவர்க அடிவருடிகளும், முஸ்லீம்களின் காவலர்கள் என்ற தலையங்கத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் தன்னார்வக் குழுக்களும், சோசலிஸ்டுக்கள் என்ற சுலோகத்துடன் நிலப்பிரபுத்துவப் பழமை வாதிகளும், தேசிய இனங்களை மோதவிட்டு பலவீனப்படுத்த இலங்கை அரச பாசிசமும் ஒரணியில் திரண்டு மக்களை கொன்று தொலைத்துவிடுவார்கள்.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தி தனது சிங்கள் பௌத்த மேலாதிக்கத்கை நிறுவிக் கொள்வதனாலேயே இலங்கை அரச பாசிசம் தனது பலத்தை நிறுவிக் கொள்கிறது.
முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களது பள்ளி வாசல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரச ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்படுகின்றது.
நிலங்கள் சூறையாடப்படுகின்றன. இந்தியப் பெரு முதலாளிகளுக்கும், அமரிக்க பல்தேசிய நிறுவனங்களுக்கும், சீன முதலீட்டாளர்களுக்கும், பிரித்தானிய பண முதலைகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதற்காக திட்டமிட்ட நிலப்பறிப்பு நடைபெறுகிறது. வன்னியில் சாரிசாரியாகப் படுகொலை செய்த அதே நாடுகள் இன்று ராஜபக்சவின் பின்னால் ஆக்கிரமிப்பு வெறியோடு அலைகின்றன. சொந்த நாட்டை விற்றுப் பிழைப்பு நடத்தும் ராஜப்கச குடும்ப சர்வாதிகாரமோ ஆட்சி மாற்றமோ இலங்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கு குறைந்த பட்சத் தீர்வைக்கு கூட முன்வைக்கப் போவதில்லை.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர இன்றைய சூழல் அவர்கள்ளுக்கு வேறு அரசியல் வழிமுறைகளைக் அறிவிக்கவில்லை.

முஸ்லீம் மக்கள் மீதான அனைத்து வன்முறைகளைக் கண்டிப்பதும், அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிப்பதும் தமிழ்ப் பேசும் மக்களதும், ஜனநாயக முற்போக்கு சக்திகளதும் இன்றைய வரலாறுக் கடமையாகும்.

Exit mobile version