Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

ltte_moneyJune 1, 2011 @ 1:28 அன்று இனியொரு…வில் பதிவான கட்டுரை ‘காலத்தின் தேவை’ கருதி மீள்பதிவிடப்படுகிறது.

தெருவோரத்தில் நான் நேசித்த மக்கள். மணல் மேடுகளை, முட்களையும்,புதர்களையும் தாண்டி கூப்பிடும் தொலைவை அடைந்தால் நீண்டு தெரியும் கடலின் அலைகள் ஆர்பரிக்கும் வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலிருந்த கம்பர்மலை கிராமத்தின் இன்னொரு மனிதனாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் அதன் எதிர்த்திசையில் பிரயணம் செய்து கொழும்பை பட்டும் படாமலும் சந்தித்துவிட்டு ஜேர்மனிய விமான நிலையத்தில் வந்திறங்கிய அகதிகளுள் நானும் ஒருவனானேன்.

ஒரு முகம்தெரியாத அகதியின் உயர்தர அங்கீகாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பொறுப்பாளனாக உயர்வதோ என பின்னாளில் பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

இன்றோ அகதியினதும் போராளியினதும் அர்த்தம் தெரியாமல் நெதர்லாந்துத் தெருக்களில் அங்கும் இங்குமாக சோகங்களைச் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறேன். எனது இந்தக் கட்டுரை எனது உணர்வுகளின் வடிகாலாகவும் அமையலாம்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாசிகசாலை சிங்களக் காடையர்களால் இலங்கை அரசின் ஆதரவொடு எரித்தழிக்கப்பட்ட பின்னர், வெறுமையின் விரக்தியில் ஜேர்மனிக்கு அகதியாய் வருகின்றேன். அரசிய, சமூகச் செயற்பாடு என்பதெல்லாம் எனது சிந்தனை வட்டத்திற்குள் விழாத சாதாரணத் தமிழனாகவே ஜேர்மனியில் கால்பதிக்கிறேன். சொந்த மண்ணின் வாசனையை மறந்து ஜேர்மனியில் சில காலங்களை தேசத்தின் நினைவுகளோடு கடத்திவிட்டு, 1984ல் எனது அடுத்த பயணத்தை நெதர்லாந்தை நோக்கி ஆரம்பிக்கின்றேன். அங்கே என்னை இன்னொருதடைவை அகதியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

நானும் எனது நண்பர்களும், ஊராரும் உறவினருமாக எனது வாழ்க்கை நகர்ந்துசெல்கிறது. புலிகள் இயக்கத்தில் விமர்சனம் கொண்டவனாக இருந்தாலும் அவர்கள் போராடுகிறார்கள் என்பதால் தொடர்ச்சியான ஆத்ரவை, சாதாரண தமிழ் மகன் என்ற அடிப்படையில் வழங்கிவந்தேன்.

குறிப்பாகப் புலிகளின் இராணுவ வெற்றிகள் உருவாக்கியிருந்த மாயைக்குள் புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைவருமே கட்டுண்டிருந்த 30 வருடக்காலப்பகுதியில் விமர்சங்களை ஒருபுறம் மூட்டைகட்டிவைத்துவிட்டு நானும் ஆதரவு வழங்க ஆரம்பிக்கிறேன்.

அதிலும் குறிப்பாக தமிழர்கள் “ஒரு குடையின் கீழ்” ஒற்றுமைப் பட்டால் தமிழ்ஈழத்தை வென்றெடுக்கலாம் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த வகையில் நானும் விமர்சனங்கள் இன்றிப் புலிகளின் ஆதரவாளனாகிறேன். நான் இன்றும் ஒரு தேசிய வாதிதான். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி மட்டும் தான் தமிழர்கள் உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதில் இன்றும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

1992 ஆம் ஆண்டிலிருந்து புலிகளுக்கு தொடர்ச்சியான நிதிப்பங்களிப்பை வழங்க ஆரம்பிக்கிறேன். வங்கியிலிருந்து எனது உழைப்பின் ஒரு பகுதியை வருடா வருடம் வழங்கிவருகிறேன். பின்னைய நாட்களில், இதே நிதிப் பங்களிப்பு அதிகரித்த தொகையாக மாதாமாதம் வங்கியிலிருந்து வழங்கி வருகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நெதர்லாந்துக் கிளையில் 1992ம் ஆண்டு சாதாரண அங்கத்தவராக இணைந்து கொள்கிறேன். 1995 ஆம் ஆண்டு அதன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறேன்.

1995 இலிருந்து 2002 வரைக்குமான ஏழு வருடங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டேன். புனர் வாழ்வுக்கழகம் புலி சார்பு நிலையில் இயங்கி வந்தமை அனைவரும் அறிந்ததே. புலிகளும் புலி சார் அமைப்புக்களும் பணம் சேர்பதையே பிரதான வேலையாகக் கொண்டிருந்தன. ஆக, எனது பணியும் தமிழர்களிடம் பணம் சேகரிப்பதும் அதனை ஒங்குபடுத்துவதுமாகவே அமைந்திருந்தது.

புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்த போது மகேஸ்வரன், திலகர் போன்ற முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட காலத்தில் விபுலேந்திரன் என்பவர் தான் பொருளாளராகச் செயற்பட்ர்.

சேர்க்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வந்தார். பணம் புலிகளிடமே முதலில் சென்றடைந்தது.

இது குறித்து எனக்கும் இளவரசனுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகின்றன. நாம் ஒரு சட்டரீதியான அமைப்பு புலிகள் அவ்வறில்லை என்பதால் சட்டப்பிரச்சனைகள் உருவாகும் எனக் கூறினேன் .

தவிர, சட்ட ரீதியாகப் பணத்தின் செலவீனங்களைக் காட்டுவதற்கு எமக்கு எந்த வழிமுறையும் இருக்கவில்லை. இதற்கு பொருளாரிடமிருந்தோ அன்றி புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையிடமிருந்தோ குறிப்பான எந்தப் பதிலும் கிடைக்காமையினால் 1997 ஆம் ஆண்டு புனர்வாழ்வுக் கழகத்திலிருந்து நான் வெளியேறிக் கொள்கிறேன்.

அதன் பின்னர் இப்போது 136 மில்லியன் யூரோ பரிமற்ர ௧ண கில் பிடிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரன் மற்றும் நோர்வேயிலிருந்து சர்வே ஆகியோர் என்னை வந்து சந்திக்கின்றனர். இதற்கிடையில் ஒரு குறிப்பு: எனது தனிப்பட்ட கருத்துப்படி ராமச்சந்திரன் மிக நேர்னையானவர். கண்மூடித்தனமான புலி ஆதரவாளர். அவர் தனது சொந்தத்தேவைக்காக நிதியைக் கையாடியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்.

இவர்கள் காலப்போக்கில் புனர்வாழ்வுக் கழகத்தை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வருவோம் என்றும் மீண்டும் இணைந்து செயற்படுமாறும் கேட்கின்றனர். ராமச்சந்திரனை எனக்குத் தனிப்ப்ட்ட வகையில் தெரிவும் என்பதாலும் அவர்கள் வற்புறுத்தியதாலும் நான் மீண்டும் பொறுப்பாளராக செயலாற்ற ஒத்துக்கொள்கிறேன்.

ராமச்சந்திரன் புலிகளின் சட்ட ரீதியான அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நெதர்லாந்து அமைபின் பொறுப்பாளராகச் செயற்பட்டவர். எனக்கு நெதர்லாந்து முழுவதும் பரவலான தொடர்புகள் இருந்ததால், நாம் தீவிரமான நிதி சேகரிப்பில் ஈடுபட்டோம். அதன் விளைவாக நெதர்லாந்துக் கிளை உற்சாகத்துடன் செயற்பட்டது.

என்னுடைய தொடர்புகளூடாக நிதி சேகரித்தாலும் எம்மத்தியிலிருந்த பல இளைஞர்கள் தீவிர மாக இயங்கி உற்சாகமக தொழிற்பட்டனர். 2002ம் ஆண்டு மிகவும் தீவிரமாகவும் நேர்மையோடும் செயற்பட்ட புலேந்திரன் என்பவரை பொறுப்பாக நியமிக்குமாறு நானே முன்மொழிகிறேன். எனது தொடர்புகள், நம்பிக்கைக்கு உரியவர்கள் அனைவரும் இப்போது பணம் கொடுக்க ஆரம்பித்திருந்ததால் புலேந்திரன் தலைமைவகிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்ற அடிப்படையில் நான் அதிலிருந்து விலகிக் கொள்கி டேன். புலேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

அதற்கு பின்னரும் நான் மாதம் தோறும் புலிகளிற்குப் பணம் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் புலிகளுக்கும் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்திற்கும் ஆதரவு நிலையிலிருந்து வேலை செய்கி தேன். இந்த ஆதரவு நிலை 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தங்கள் நிகழும் வரை தொடர்கிறது.

சுனாமிக் காலகட்டத்தில் மிகப் பெருந்தொகையான பணம் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் சேகரிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் திரட்டப்பட்ட பணத்தோடு ஒப்பு நோக்கும் போது மொத்தப் பணமும் மக்களுக்குச் சென்றடைந்திருந்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் குறைந்தது பத்து வருடங்களுக்கு அடிப்படை வசதிகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், நடந்ததோ வேறு. முதலில் தொலைக் காட்சிகளில் மக்களிடம் பணம் கோரப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்குக் கணக்கு இலக்கங்கள் தான் கொடுக்கப்பட்டன. அந்த வங்கிக்கணக்கிற்கே பணம் வழங்குமாறு மக்கள் கோரப்பட்டனர். பின்னதாக அவை மாற்றப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பின் வங்கி இலக்கம் கொடுக்கப்பட்டது. பணம் அதிகமாக வழங்கப்படுகிறது என்று தெரிந்ததும் வங்கி இலக்கம் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் புலிகளுக்காக பணம் சேர்க்கப்பட்டது.

அவ்வேளையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாக நான் இல்லை. புலேந்திரன் தான் பொறுப்பாக இருந்தார். அவர் கூட புலிகளுடன் தீவிரமாக முரண்படுகிறார். மக்களுக்காகத் திரட்டப்படும் பணம் மக்களுக்கே சென்றடடைய வேண்டும் என்று புலிகளுடனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமையுடனும் பேசுகிறார். குறிப்பாக அச்சந்தர்ப்பதில் புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையிலிருந்தவரும் இப்போது சர்ச்சைக்குரியவருமான ரெஜியுடன் புலேந்திரன் முரண்பட்டுப் பேசிய போதும் தீர்க்கமான எந்தப்பதிலும் வழங்கப்படவில்லை.இருப்பினும் அவர் தொடர்ந்தும் புனர்வாழ்வுக் கழகத்துடன் செயற்படுகிறார்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து செல்லும் பணம் தொடர்பாகப் புலிகளிடன் தெளிவான வரையறைகள் இல்லாமையினாலும் உறுதியான் பதில் கிடைக்காமையினாலும் புலேந்திரன் சில காலங்களின் பின்னர் புனர் வாழ்வுக் கழகப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்கிறார்.

எனக்குத் தீவிரமான முரண்பாடு ஏற்படுகிறது. செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்கிறேன். ஆதரவு நிலைப்பாட்டையும் குறைத்துக் கொள்கிறேன்.

2005ம் ஆண்டளவில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குப் பொறுப்பாகவிருந்த இளவரசன் எனது வீட்டிற்கு வருகிறார். சில மாதங்களின் முன்பதாக அவர் நெதர்லாந்து பாதுகாப்புத்துறையினரால கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரோரு இன்னும் நான்கு பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவருமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.அது 2005ம் ஆண்டின் மத்திய பகுதி. அவர்கள் நான் இனிமேல் வங்கியிலிருந்து பணம் அனுப்பத் தேவையில்லை ஆனால் இறுதி நிதி ஒன்றை மக்களிடமிருந்து திரட்டுகிறோம். இனிமேல் மேலதிகமாகப் பணம் கோரமாட்டோம் அதற்கு உதவிபுரியுமாறு கோருகின்றனர். அவர்கள் நான்காயிரம் யூரோக்களை என்னிடம் கோரினர். என்னிடம் இதுவரை அவ்வளவு பணம் இருந்ததில்லை. போராட்டத்திற்கான பணம் என்பதால் வங்கிகளிடம் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தின் மத்தியில் பணத்தை வழங்குகிறேன்.

தவிர, அந்ததப் பணம் குறித்த வட்டியுடன் 2008ம் ஆண்டு திருப்பித் தரப்படும் என்று அப்போது கூறியதுடன் அதற்குரிய பற்றுச்சீட்டும் வழங்கியிருந்தார்கள். அவர்கள் திருப்பித் தருவது தொடர்பாகக் கூறியவை தெளிவற்றவையாக இருந்தன. எது எவ்வாறாயினும் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரமுடியும் எனக் கேட்ட போது, சேகரிக்கப்படும் பணத்தை பரவால முதலீடு செய்து அந்த முதலீட்டில் கிடைக்கும் பணத்திலிருந்து திருப்பிக் கொடுப்பதான திட்டம் இருப்பதாகக் கூறினர்.

2007ம் ஆண்டில் பெயர் குறிப்பிட விரும்பாத புலிகளின் பொறுப்பாளர் ஒருவரை விருந்து வைபவம் ஒன்றில் சந்திக்கிறேன். நெதர்லாந்தில் புலிகள் அமைப்பை உருவக்குவதில் முதன்மையான பங்கு அவரது தான். பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமையைப் பல தடவை அவர் சந்தித்திருக்கிறார். என்னோடு நம்பிக்கை கொண்ட அவர் சில தகவல்களைக் கூறுகிறார். பிரபாகரன் உள்ளவரை தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வோ அன்றி தமிழீழமோ கிடைக்கப்போவதில்லை என்கிறார். அதற்கான இரண்டு முக்கிய காரணங்களை அவர் கூறுகிறார்.

இவ்வாறான சம்பவங்களை வெளிப்படையாகச் சொன்னால் தமிழ்ச் சமூகம் தங்களைத் துரோகிகளாக முத்திரையிட்டுவிடும் என பய உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதால் இவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

நான் மதிப்பு வைத்திருந்த புலிகள் இயக்கத்திலிருந்து இந்தத் தகவல் வெளியாவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கிறேன். கே.பி போன்ற காட்டிக்கொடுப்பாளர்களை உருவாக்கியது இவ்வாறான விமர்சனமற்ற ஒத்துப் போகும் சிந்தனைகள் தான்.

இது தவிர, நெதர்லாந்தில் வசிக்கும் எனது நண்பரும் புலி ஆதரவாளருமான மனித உரிமைச் செயற்பாட்டளர் ஒருவர் புலிகளை வன்னியில் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புகிறார். நெதர்லாந்து திரும்பியதும் இவர் என்னைச் சந்திக்கிறார். புலிகளை வன்னியில் சென்று சந்தித்த அவர் வன்னி சென்றதும் மனித உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு கிளிநொச்சிப் பாடசாலை ஒன்றிற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் சென்று நீண்ட கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அங்கு “நீங்கள் அனைவரையும் கேள்வி கேட்க வேண்டும். உங்களது மனித உரிமைக்காக நீங்களே போராட வேண்டும்” எனத் தனது உரையில் மக்களை நோக்கிக் கூறியிருக்கிறார்.

அவர் வெளியே வந்ததும் புலிகள் இயக்கத்தினர் இப்படியெல்லாம் இங்கு பேச வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு பேசினால் மக்கள் எமக்கு எதிராகவும் திரும்பக் கூடும் என புலிகள் சொலியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது.

இதற்கு எதிராக அவர் கேள்வியெழுப்ப முற்பட்ட போது, புலிகளின் பொறுப்பாளர்கள் , குறித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் அங்கிருந்தால் தமக்குப் பிரச்சனை ஏற்படும் எனவும் அவரைத் திருப்பி அனுப்பி விடுமாறும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஏராளமான சமபவங்களை அவர் எனக்குக் கூறினார். இவை அனைத்தும் புலிகளின் தலைமை உண்மையாகவே விடுதலைக்காகப் போராடவில்லை என்பதை உணர்த்தின.

இதன் காரணமாக நான் வழங்கிய பணத்தினூடாகப் போர்க்குரல் எழுப்புவதாகத் தீர்மானித்தேன். அதே வேளை வன்னிப் போரில் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின. 2006 இலிருந்து புலிகளுக்கு வேலை செய்வதை முற்றாக நிறுத்தியிருந்த நான், அவர்களின் எந்தச் செயற்பாட்டிலும் பங்கேற்கவில்லை.

இதனால் 2008ம் ஆண்டு எனக்குத் திருப்பித் தருவதாக வாக்களிக்கப்பட்ட பணத்தை நெதர்லாந்து பொறுப்பளரிடம் சென்று திருப்பித் தருமாறு கேட்டேன். அது குறித்து எந்த தீர்க்கமான முடிவையும் அவர்கள் கூறவில்லை. வன்னியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்ததால் நான் மேலதிகமாக எதுவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது கருதவில்லை.
2009 மே மாதம் புலிகள் அழிக்கப்பட்டனர். அப்போது மறுபடி இளவரரசனைத் தொடர்புகொண்டு பணத்தைத் தருமாறு கேட்கிறேன். உடனே அவர் எனது வீட்டிற்கு வந்து என்னோடு பேசுகிறார். பணம் சேகரிக்க வந்த ஏனையோரையும் தொடர்புகொள்கிறேன். நான் பணம் எங்கே என்று கேட்ட போது, அவர் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் திருப்பித் தரவில்லை என்கிறார்.

என்னைப் பொறுத்த வரை அவரிடம் பணம் இல்லை என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்..

நீண்ட விவாதங்களின் பின்னதாக நான் ஒன்றை முன்மொழிகிறேன்.

“நானும் இளவரசனும் ஒரு அறிக்கை தயாரித்து பொது மக்களுக்கு வெளியிடுவதாகவும், அந்த அறிக்கையில் நெதர்லாந்திலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட சிலர் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்ற உண்மையைச் கூறுவோம் என்றும் சொல்கிறேன்.”
அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் எனக்குப் பணம் அவசியமில்லை. மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறேன்.

உடனடியாக எனது முன்மொழிவுகள் தொடர்பாக ஏதும் கூறாத அவர். சில காலங்களின் பின்னர் அப்படி ஒரு அறிக்கையை நாங்கள் வெளியிட முடியாது என்று என்னிடம் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக , 2010இல் பணத்தைத் திருப்பித் தருவதர்கான வேலைகளைச் செய்வதாக கூறினார். அதற்குச் சம்மதம் தெரிவித்த நான், அவரையும் அவரது மனைவியையும் கையொப்பமிட்டு பணம் தருவதாக உறுதிப்பத்திரம் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு கேட்டேன். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.

இவை எனக்கு பணம் குறித்த பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்தது. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

2010 ஆரம்பத்தில் நான் நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறேன். வழக்கு முடிவு இரண்டு நாட்களுக்கு முன்னர் (30.05.2010) தான் எனக்குக் கிடத்தது. இளவரசன் எனக்குப் பணம் வழங்கவேண்டும் என்றே முடிவாகியிருக்கிறது. அவர் பணத்தைத் திருப்பித் தருவார், பணம் தான் பிரதானமானது என்பதை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் பணம் மக்களுக்கே சேர வேண்டும் என்பது குறித்து நான் தொடுத்த போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்பதே முக்கியமானது.

என் போன்ற பலரின் முயற்சி இளவரசன் போன்ற இடை நிலை செயற்பாட்டளர்களையும் தாண்டி இதன் சூத்திரதாரிகளான நெடியவன் போன்றோர் வரை சென்றடைந்திருக்கிறது.

இலங்கை அரசும், கே.பி போன்ற அதன் அடிவருடிகளும் என் போன்றவர்களின் உணர்வுகளை தமக்குச் சாதகமாகப் பாவித்துவிடுவார்கள் என்ற பய உணர்வு என்னை உறுத்திகொண்டே இருந்தது. எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சிறீ லங்கா அரசே காரணம் என்பதிலும், அவர்களுக்கு எதிரான போராட்டம் நேர்மையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நான் மிக உறுதியாக இருக்கிறேன். எனது எஞ்சிய வாழ்காலத்தை அதற்காகப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளேன்.

இவை அனைத்திற்கும் அப்பால் போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

மக்கள் பணத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரும், அது எந்த வடிவத்தில் திரட்டப்பட்டதாயினும் அதனை மக்களுக்குக் கூற வேண்டிய காலம் இது. வெளிப்படைத் தன்மை குற்ரவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமன்றி போராட்டத்தையும் செழுமை செய்யும்.

இன்னும் சிலரின் சாட்சியங்கள் இனிவரும் காலங்களில் இனியொருவில் பதிவாகும்..

Exit mobile version