Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காடுகளில் அநாதரவாக்கப்பட்ட புலிப்போராளிகள் – புதிய இணைவுகளின் அவசியம்! : கேசவன்

forgottenஎண்பதுகளின் பின்னான தமிழ் பேசும் மக்க்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான தற்காப்பு யுத்தம் என்பதும் எதிர்ப்பரசியல் என்பதும், புலிகள் என்ற எல்லலைக்குள் குறுக்கப்பட்டிருந்தது. இந்தக் குறுகிய எல்லைக்குள் புலிகளின் பாசிசக் கூறுகள் வளர்ந்து செல்ல இதன் மறுபுறத்தில், சிங்கள மக்கள் மத்தியிலிருந்த சிங்கள பௌத்த பாசிசத்தின் எதிர்ப்பு சக்திகளும், இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்த முற்போக்கு அரசியலுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் மனிதாபிமான சக்திகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பரசியலிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டனர்.

அரசியற் பின்னடைவு..

ஈராக் மக்கள் மீதான அமரிக்க அழிப்புயுத்தத்திற்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானில் ஐரோப்பிய அமரிக்கக் கூட்டுக்கள் நடத்தும் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும், பலஸ்தீனிய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராகவும் தெருவில் இறங்கிக் குரலெழுப்பும் எந்த ஐரோப்பிய முற்போக்கு சக்திகளும் இலங்கைப் பிரச்சனை குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. புலிகளின் அரசியற் தவறு என்பது சிங்கள பௌத்தப் பேரின வாதம் நிகழ்திக் கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான பாரிய அரசியற் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ புலிகளோடு தங்களை இணைத்துக் கொண்ட ஆரம்ப நிலைப் போராளிகளில் பலர், அதன் பின்புலத்திலிருந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், சிறீலங்கா அரசின் மூர்க்கத் தனமான அடக்குமுறைக்கு எதிரான ஒரே எதிர்ப்பியக்கம் என்ற அடிப்படையிலேயே இணைந்திருந்தனர்.

போராட்டத்தின் இன்றைய தேவை..

புலிகளின் அழிவிற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதி அன்னிய நாடுகளுக்ளை நோக்கி இடம் பெயர்ந்திருந்தனர் என்பது தவிர, ஒரு குறித்த சிறு பகுதியினர் இலங்கையின் காடுகளுக்குள் மறைந்திருக்கின்றனர். சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் இனவழிப்பிற்கு எதிராக  தற்காப்பு யுத்தம் என்பது இன்றைய அரசியற் சூழலில் அவசியமானதும் அவசரமானதுமாகும். 80 களில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைகெதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் அவசியத்திலும் அதிகமாக இன்று அதன் தேவை அதிகமாகவே உணரப்படுகிறது. இந்த யுத்தம் புலிகளின் சிந்தனை முறையின் அடிப்படையில் புலிகளின் பழைய தலைமை முன்னெடுக்கப்படுமாயின் மறுபடி இன்னொரு பாசிசமே வளர்த்தெடுக்கப்படும்.

இலங்கைக்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கும் ஏன் மொத்த மனிதகுலத்திற்குமே அபாயகரமான அடக்கு முறையின் சின்னமாக அமைந்திருக்கும் சிறீலங்கா அரசிற்கெதிரான தற்காப்பு யுத்தம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களையும், மலையக மக்களையும், ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படும் பெரும்பாலான சிங்கள மக்களையும், மனிதகுலத்தின் மீது பற்றுள்ள உலக மக்களையுமே இணைக்கவல்லது.

சிந்தித்தால் கூட சிறையிலடைத்துச் சித்திரவதைக்குட்படுத்தும் சிறீலங்கா அரச பாசிசத்திற்கு எதிரான எதிரான எதிர்ப்பரசியல் என்பது இலங்கையின் எல்லைக்கு வெளியில் அன்னிய தேசங்களில் கூட சாத்தியமற்றது என்றாகிவிட்ட விரக்தி மிக்க சூழலில் காடுகளிலிருக்கும் எஞ்சிய, புலிகளின் அரசியல் சிந்தனை முறைக்குட்படாத போராளிகளின் அரசியல் நகர்வுகள்  உடனடியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. ஆரம்ப நிலைப் போராளிகளாக இருந்த புலிகளின் பாசிச சிந்தனைகளுக்கு உட்படாத சில குழுக்கள் கூட வன்னிப் பகுதிக்காடுகளில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் கசிகிறது. இவர்கள் நடத்தவல்ல தற்காப்பு யுத்தம் மட்டுமே உடனடியான இடைவெளியை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

 தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுமே அரச அடக்குமுறைகெதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெளியை ஏற்படுத்த வல்லது.

புதிய இணைவுகளின் அவசியம்

புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவு வியாபாரிகள் இப்போராளிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டத் தயாரில்லை. இப்போராளிகளின் அன்றாட வாழ் நிலை என்பதே கேள்விகுள்ளாகப் பட்டுள்ள சூழலில், இவர்களில் அழிவையே எதிர்பார்க்கும் புலி சார் புலம் பெயர் வியாபாரிகள், இலங்கை அரச பாசிச சார்புநிலை நோக்கியே தம்மைக் கட்டமைத்துக்கொள்கின்றனர். “பிரபாகரன் வாழ்கின்றார்” என்று அரசியல் வியாபாரம் நடத்த்திக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இவர்களின் இன்னொரு எதிரிகள்.

இலங்கை அரசு வனப்பகுதிகளைச் சார்ந்த கிராமங்களில் இராணுவக் குவிப்பை நிகழ்த்தி வருகிறது. இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு நடவடிக்கைகள் காடுகளை நோக்கி மறுபடி மேற்கொள்ளப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

இடதுசாரிகளின் வரலாற்றுக்கடமை..

இந்த நிலையில் ஒரு புறத்தில் இப்போராளிகளின் முற்போக்கு அரசியற் சக்திகளுடனான இணைவும், மறு புறத்தில் அவ்வாறான அரசியற் சக்திகள் போராளிகளின் இருப்பை உறுத்திப் படுத்துவதும், அவர்களின் அரசியல் நகர்வு சிறிலாங்கா அரச பாசிசத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காப்பு யுத்தமாக பரிணாமமடைய உதவுவதும், இன்றைய வரலாற்றுக் கடமை.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களில் போராட்டத்தை சர்வதேசிய அரசியலின் ஒரு பகுதியாகக் கருதும், இந்தியாவெங்கும் பரந்திருக்கும் முற்போக்கு சக்திகளும், முற்போகு இயக்கங்களும் அபாயகரமான இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரகப் போராடவல்ல இந்த சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாவோயிஸ்டுக்கள் மீதான இந்திய அரச பயங்கரவாதம் நத்திகிராமிலும், லால்காரிலும், இன்னும் பல கிராமங்களிலும் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இந்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டம் என்ற தளத்தில் இலங்கைப் போராளிகளுடன் ஏற்படுத்தப்படுகின்ற இணைவு என்பது புலம் பெயர் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்ற அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்கும் வலிமைபெற்றது. தென்னாசியாவின் மக்களின் விடுதலைக்கு ஆரம்பப் புள்ளியாக அமையவல்லது. வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழ் நாட்டிலே கருணாநிதி அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில், விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்களை நடத்திய இடதுசாரி முற்போக்கு சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் மறு கோடியில் இந்திய மேலாதிக்கவாததை எதிர்த்த நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டம் குறித்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்திய மாவோயிஸ்டுக்களிடம் தோற்றுப் போய்விட்டதாக இந்தியப்பிரதமர் கண்ணீர் வடிக்கிறார். ஆக, போராட்டங்களும் எதிர்பியக்கங்களும் தோற்றுப்போய்விடவில்லை. புதிய அரசியலும், புதிய இணைவுகளும், புதிய தந்திரோபாயமும் தான் இன்றைய தேவை என்பதை இலங்கையிலிருக்கும் போராளிகள் உணர்ந்துகொள்வார்கள். அதிகாரத்தின் பின்னணியில் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளுடனன்றி, மக்கள் மீது பற்றுள்ள போராட்ட சக்திகளுடனான இணைவு என்பதே அனாதரவாகக் காடுகளில் வாழ்கின்ற ஆரம்ப நிலைப்  போராளிகளைப் புதிய தென்னாசிய அரசியல் சக்திகளாக மாற்றியமைக்க வல்லது.

புலிகளின் அரசியல் என்பதும் அதன் சிந்தனை முறை என்பதும் அபாயகரமான பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும். இதன் தலைமட்ட உறுப்பினர்கள் அந்த சிந்தனை முறையில் உறியவர்கள். இச்சிந்தனை முறை தகர்த்தெறியப்படவேண்டும். இதன் சரியான தலைமை என்பது இந்திய இடதுசாரி அணியின்டமிருந்தே எதிர்பார்க்கப்படலாம்.

Exit mobile version