இச்சங்கங்கள் முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் கடைச்சங்கத்தில் ஆக்கப்பெற்ற நூல்கள்தான் என்று நம்பப்படுகிறது. முதல் இரு சங்கங்களில் ஆக்கப்பட்டவை அனைத்தும் கடல் நிரப்பரப்பை ஆக்கிரமித்தபோது அழிந்து போயின என்றும் கூறப்படுகிறது.
சங்ககாலத்திலேயே பெண் புலவர்களும் காணப்பட்டிருக்கின்றனர். காதல், வீரம், போர், ஆட்சி, புகழ் ஆகியன புலவர்களது பாடுபொருளாக இருந்திருக்கிறது. 18;ஆம் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அந்நிய ஆட்சியினாலும், மேற்கத்தேய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் மற்றும் இன்றும் எம் சமூகத்திடையே காணப்படும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தாலும் தமிழ்மொழி நலிவடைந்த காலத்தைக் கடந்து சங்க இலக்கியங்கள் மீள அச்சேறின. 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உரைநடையும் அறிமுகமாக்கப்பட்டதுடன் அதைத்தொடர்ந்து புதுக்கவிதையும் தோற்றம் கொண்டது.
சங்ககால எதிர்ப்பிலக்கியத்தின் வரலாற்றிற்கு முற்பட்ட வரலாறு தமிழ் இலக்க்கித்தின் பெருமையை உணர்த்தி நிற்கிறது.
சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை நினைக்கும் போது தவிர்க்க இயலாமல் ஒரு பயமும் மனதில் பிறந்துவிடுகிறது. இந்தப்பயம் என்பது கவிதைகளின் தொகையை பற்றியது. போர்க்களத்தில் வாள்களையும் கேடயங்களையும் உயர்த்தி அணிவகுத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களைப்போல எழுத்தாணிகளையும் கவிதைகளையும் ஏந்திக் கொண்டு தொகுப்புகள் மூலமும் இணையத்தளங்களிலும் கவிஞர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற தோன்றத்தைதான் சொன்னேன்.
கவிஞர்களின் எண்ணிக்கையையே எண்ணிவிட முடியாத ஒரு களத்தில் நின்றுகொண்டு அவர்கள் விட்டெறியும் கவிதைத்தாள்களை கோர்த்தெடுக்க முயல்வது என்பது முடியாத காரியம் தான். கையில் கிடைத்தவற்றில் சிலவற்றையாவது பார்ப்போம்.
எம் மண்ணில் விடுத்தலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன. இப்படி தளர்ந்துபோன விழுதொன்றின் கவிதைகளில் சில கண்டு வருவோம்.
அவள் ஈழத்துப் பெண் கவி. மிகக்குறுகிய காலத்திலேயே தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தியவள். சின்ன வயதிலே புகழ் பூக்க வளர்ந்து செடி மலர்களின் வாசத்தை முழுமையாய் உணருமுதல் தன்னைத்தானே வேரோடு பிடுங்கிக்கொண்ட ஒரு கவிதைச் செடியின் விதை ஒன்று பேசுகிறது…
“எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களைக் கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை”
……
“ நான்
நாளைக்குத் தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது”
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் முக்கியமானது”
இன்று தமிழ்ப்பெண் கவிஞர்களிடம் ஆழமான உணர்வுச் செறிவையும், திண்ணமான தேடுதலையும், தரமான மொழியாள்கையையும் காணக்கூடியதாக இருந்தும் தந்தைவழிச் சமுதாய அமைப்பின் இலக்கியம் படைக்கும் உலகில் பெண்கவிஞர்களின் நிலையும், சித்தரிப்புகளும், கருத்துக்களும் மறுபால்நிலைப்பட்டதாக அமைந்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
மேற்கூறிய இந்தக்கவிதை தனது 23வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக்கவிஞர் சிவரமணியுடையது. தனது கவிதைகள் யாரிடம் இருந்தாலும் அதை அழித்துவிடுமாறும், “எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்” என்ற குறிப்போடும் தன்னிடம் இருந்த கவிதைகளை முற்றிலும் அழித்துவி;ட்டு வைசாசி மாதம் 19ஆம் நாள் 1991ஆம் ஆண்டு யாழப்;பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டர்.
இக்கவிக்குயிலின் கரத்தில் இருந்து தப்பிய இன்னொரு கவிதை சொல்கிறது…
“ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்கள்
மறந்தே விடுவோம்.
…..
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த
வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்தே விடுவோம்.
…
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்…
என்று தனது விடுதலைக் கனவையும் தனது போர் குணத்தையும் மட்டுமல்ல இச்சிந்தனைக்குத் தடையாக விளங்கும் பெண் அழகுச் சாதனங்களையும் ஆசைகளையும் கூட விசிறி எறிந்த போர்குணத்தாளின் வரிகள் இவை. பெண் இப்படித்தான் இருந்தாள். பெண் இப்படித்தான் இருப்பாள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்டே எம் மனித சமூக அமைப்பு வேரூன்றியிருக்கிறது. இதிகாசம், புராணம், இலக்கியம் தொட்டு இன்றுவரை புறஅழகே முக்கியம் பெற்றிருக்கிறது.
தமிழ் ஈழப் போர்க்களத்தில் பால் அடையாளங்களை துறந்தும், வளர்ந்தும் வரும் நிலையாக, பெண் விடுதலையெல்லாம் பேசுவதற்கு முதலில் நாம் உயிர் வாழவேண்டும் என்று தெரியும் தோற்றமாக இருந்தாலும். அவை வெறும் கானல் நீர்போலதான் போய்விட்டிருக்கின்றது.
சிவரமணி இலங்கையில் பெண்ணிய இயக்கங்களோடும் தன்னை இணைத்துக்கொண்டு வீரியமாய் செற்பட்ட பெண். பல கவியரங்குகள் கண்டவள். மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவினால் தொகுக்கப்பட்டு “சொல்லப்படாத சேதிகள்” என்ற ஈழத்துப்பெண் கவிஞர்களின் கவிதை நூல் மூலம் எம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சிவரமணியின் கவிதைகள் மிகவும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டதே. தானே அழித்தவையும், அழிக்கச்சொன்னவையும் போக, சிவரமணி தொகுக்கவும், வாசிக்கவும் கொடுத்துப் போனவைகளில் சில மோசடி செய்யப்பட்டதென சர்ச்சைக்குள்ளானவையும் போக எம் கையில் எஞ்சிக் கிடக்கும் இந்த ஈழத்துக்குயிலின் கவிதைகள் இவை மட்டும்தான்.
அவள் அழிக்கவென்று முனைந்த தன் கவிதைகளில் உயிர்தப்பிய இன்னொரு கவிதையின் சில வரிகள்…
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக்கொள்ள முடியாது
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரமாய் நான்.
எனது இருத்தல் உறுதி பெற்றது
நிராகரிக்க முடியாதவள் நான்
இனியும் என்ன?
தூக்கியெறிப்பட முடியாத கேள்வியாய்
நான்.
என்று நிரத்தரமாக தோழர்கள்; மனதில் இடம் பிடித்துக்கொண்ட இவ்விளம் கவிதாயினியின் வரலாறு சங்ககாலமாயிருந்தால் காவியமாகியிருக்கலாம். ஐம்பெரும் காப்பியங்கள் எண்ணிக்கையில் கூடியிருக்கும்.
அவள் தீயிலிட்டு எரித்துவிட்டுப் போன கவிதைகள் கண்முன்னே எழுந்து கதறி அழும் வரலாற்று உண்மைகளை விட்டுச்சென்ற சிறுதுளி கவிதைகளினூடே தரிசிக்க முடிகிறது. எம் சமூகத்தில் பெண்களின் உரிமை, கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படைகளிலும் பெரிதும் வேறுபடுகிறது. முப்பது வருடங்களாய் போருக்கு முகம் கொடுத்து, முகம் இழந்து போன பெண் குவியல்களுக்குள் தொட்டெடுத்த ஒருத்தியாகத்தான் சிவரமணி இருக்க முடியும். போர்க்களச் சூழலில் தன்னை இணைத்துக்கொண்டு மரணத்தையும் வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பையும் அருகே வைத்து எழுத்தப்பட்ட கவிதைகளாகவே சிவரமணியி;ன் கவிதை பார்க்;கப்படுகின்றன.
எப்படி முடிந்தது அவளால் தன்னுடன் உடன்கட்டையென உயிர் முளைத்த கவிதைகளையும் தீயில் தள்ள? எம் சமூக அமைப்பின் கோரப்பிடி தவிர்ந்து எவைகளைச் சொல்ல முடியும் இதற்கு பதிலென?
இறுதியாய் சமூதாயச் சிலுவைகளைச் சுமந்து பெண்கள் வாழ்ந்தார்கள், இன்றும் அப்படியே வாழ்கின்றனர் என்று சுட்டும் சிவரமணியின் இன்னுமொரு கவிதையிலிருந்து இந்நொடிக்கு விடைபெறுவோம்…
“….
ஆனால்…
நான் வாழ்ந்தேன்
வாழ் நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.”
…. தொடரும்…