Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலாச்சார அரசியல் குறிப்பேடு:ஞாநி மற்றும் ரவிக்குமார் -யமுனா ராஜேந்திரன்

 தமிழக அறிவுஜீகளை நினைக்க வேதனையாக இருக்கிறது. இலங்கைப் பிரச்சினை பற்பலரது முகங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு நடைமுறைக்களம்.

 ‘உலக’ இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் நடைபெற்று முடிந்திருக்கிறது.  விழாவையொட்டி தமிழகத்தின் சுத்த இலக்கியம் அல்லது கலைஞனின் சுதந்திரம் என அளக்கிற மேதையும் இது பற்றிப் பேவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன்.

 ஞாநி பேசியிருக்கிறார். தமிழுணர்வாளர்கள் படைத்தவை சிங்களக் கலைஞர்கள் படைத்தவை என, கலைஞர்களின் சுதந்திரமும் படைப்புத் திறனும் பற்றிப் பேசியிருக்கிறார்.

 போர் நடந்து முடிந்த இலங்கையின் முகத்தையும் அதனது சுற்றுலாத்துறையின் எதிர்காலத்தையும் இந்த நிகழ்ச்சி மாற்றியமைக்கும் என்று அறிவித்திருந்தார் இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறையின் இணை அமைச்சரான  லக்சுமன் யாப்பா அபே வர்த்தனா.

 விழாவை நடத்திய உலக இந்தியத் திரைப்படக் கழகம் திரைப்பட விழாவுக்கு இணையாக, தனது சந்தைப்படுத்தலின் அங்கமாக உலக வியாபார சந்திப்பு ஒன்றினையும் இலங்கை வங்கித்துறை, சுற்றலாத்துறை, பொருளாதாரத் துறை போன்றவற்றுடன் இணைந்து நடத்தியது.

 இந்த விழாவுக்கு தாம் முதலீடு செய்வதைப் போன்று பனிரெண்டு மடங்கு முதலீட்டை இதற்குப் பிரதியீடாகப் பெறுவதோடு, இலங்கையின் சுற்றலாத்துறையையும், வங்கித் துறையையுயும் இது வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்லும் என அபேவர்த்தனா அறிவித்திருந்தார்.

 திரைப்பட விழாவின் நோக்கங்களில் பொருளாதார இலாபம் தவிரவும் இலங்கையில் இப்போது அமைதியும், சமாதானமும், ஸ்திரத்தன்மையம் நிலவுகிறது என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் உலகுக்குக் காண்பிக்க விரும்புகிறோம் எனவும் அறிவித்திருந்தார் லக்சுமன் யப்பா அபேவர்த்தனா.

 இந்தத் திரைப்பட விழாவை ஒட்டி இலங்கையில் குவியவிருக்கும் உலகெங்கிலுமான 300 ஊடக நிறுவனங்களின் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என்பது அபேவர்த்தனாவின் அபிலாஷையாக இருந்தது.

 திரைப்பட விழாவில் இலங்கை அரசுக்கு எந்தக் கலை நோக்கமும் இல்லை. இருந்ததெல்லாம் பொருளாதார அபிலாஷைகளும் அரசியல் நோக்கங்களும்தான்.

 உலக இந்திய திரைப்படக் கழகம் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? அதனது இலக்குகள் நோக்கங்கள் என்ன?

 இந்தத் திரைப்பட விருது வழங்கும் விழா இதுவரையிலும் அமெரிக்கா, ஸ்காட்லாந்து, துபாய் போன்ற நாடுகளில் நடந்திருக்கிறது.

 உலகெங்கிலும், தத்தமது நாடுகளிலும், தமது தலைநகர்களிலும் இத்திரைப்பட விழாவை நடத்திய நாடுகளும் அமைப்புகளும் என்ன நோக்கங்களுக்காக இந்தத் திரைப்பட விழாவை நடத்தின?

 இரு தரப்பினரது நோக்கங்களும் அடிப்படையில் பொருளாதார இலாப நோக்குதான்.

 உலக இந்திய திரைப்படக் கழகத்தின் நோக்கம் ‘இந்தித் திரைப்படங்களை’ – இந்தியத் திரைப்படங்களை அல்ல – உலகெங்கிலும் சந்தைப்படுத்துவதுதான். விழா நடத்தும் நாடுகளின் நோக்கங்கள் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் திரைப்பட மூலதனத்தைத் தமது பிரதேசங்களுக்குக் கொண்டு வருவதும்தான்.

 உலக இந்தியத் திரைப்படக் கழகத்தின் நோக்கை எய்துவதற்காக ஹாலிவுட் ஆஸ்கர் விருது விழா போன்று பிரம்மாண்டமான காட்சிவடிவமாக உருவாக்கப்பட்டதுதான் ‘உலக’ இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா.

 வட இந்தியர்களால், இந்திப் படத்தின் சந்தைப்படுத்தலுக்கான கேளிக்கை விழாவாகவே இந்த விருது விழா உருவாக்கப்பட்டது.

 இதனது வட இந்தியத் தன்மையையும், தென் இந்தியக் கலைஞர்களை ஒதுக்கும் இதனது ஆதிக்க மனோபாவத்தினையும் துபாயில் நடந்த திரைப்பட விழாவின்போது கடுமையாக விமர்சித்தார் தென்னிந்திய சினிமாவின் சிறந்த கலைஞனான நடிகர் மம்முட்டி.

 இந்தத் திரைப்பட விழாவுக்கு என எந்தவிதமான கலை சார்ந்த நோக்கங்களும் கிடையாது. இந்தி நடிகர் நடிகையர் கூடும் ஒரு கேளிக்கை விழாவாகவே இந்தத் திரைப்பட விழா இருந்து வருகிறது.

 உலக அளவில் நடைபெறும் கலை நோக்கம் கொண்ட சுயாதீனத் திரைப்பட விழாக்களுடனோ அல்லது அந்தந்த நாடுகளின் திரைப்படக் கலை நிறுவனங்கள் நடத்தும் திரைப்பட விழாக்களுடனோ இந்தத் திரைப்பட விழாவை ஒப்பிடுவது முற்றிலும் அபத்தமாகவே இருக்கும்.

 இந்த விழாவை நடத்துகிறவர்களிடம் கலை சார்ந்த நோக்கங்கள் மட்டுமல்ல எந்த விதமான அரசியல் அல்லது அறம் சார்ந்த நோக்கங்களும் கிடையாது.

 இந்தத் திரைப்பட விழாவை கலைஞனது சுதந்திரம் படைப்புத்திறன் என்றெல்லாம் முடிச்சுப் போட்டு எவராவது பேசினால் அந்த நபருக்கு சினிமாக் கலை குறித்த எந்த அறிவும் இல்லை என்றுதான் அர்த்தப்படும்.

 தமது நாடு குறித்த ஒரு தூய அரசியல் சித்திரத்தைத் தந்து, தமது நாட்டுக்கு மூலதனத்தை வரவழைப்பது இலங்கை அரசின் நோக்கம் என்பதனை அவர்கள் அதிகாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

 இந்தியத் திரைப்பட விழாவின் நோக்கம் ‘இந்தி’ சினிமாவின் மூலதனப் பரப்பை உலக அளவில் அதிகரித்துக் கொள்வது என்பதனையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சதா உச்சரித்த டாலர் கணக்குகள் இதனை மெய்ப்பிக்கும்.

இதில் எங்கே கலை நோக்கம் வந்தது? ஞாநிக்கு எத்தனை சிங்களத் திரைப்படக் கலைஞர்களைத் தெரியும்?

 சிங்கள ராணுவத்தினாலும் சிங்கள அரசின் குண்டர்களாலும் சிங்களத் திரைப்பட இயக்குனர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஞாநிக்குத் தெரியுமா?

 ‘பிரபாகரன்’ பட இயக்குனர் துஸரா பிரீஸை சென்னை பிரசாhத் ஸ்டூடியோவிவ் வைத்து  முன்னர் சீமான் குழுவினர் தாக்கியது போன்றதல்ல இந்தப் பிரச்சினை. சீமான் இந்தப் பிரச்சினையில் ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை அமிதாப்பச்சன் மற்றும் வட இந்தியச் சினிமாக் கலைஞர்கள் மீது செலுத்தியிருக்கிறார்.

 இதனை எவரும் வரவேற்க வேண்டும். 

அவர் கொழுத்திய பொறி ஓரு இயக்கமாகச் சுயாதீனமாக எழுந்திருக்கிறது. சிவில் சமூக அலகுகளில் பொருளாதார பலம் வாய்ந்த ஒரு அமைப்பின் எதிர்ப்பு இது.

 தென்னிந்தியாவின் முழு சினிமாப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீதும் தனது பலத்தைக் கொண்டிருக்கிற தமிழக சினிமா, அரசியல்தன்மை வாய்ந்த ஓரு மனித உரிமை நடவடிக்கைக்குத் தனது முழுபலத்தையும் அளித்திருக்கிறது.

 இது வடஇந்திய சினிமாவின் ஆதிக்கத்தின் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்தும் நடவடிக்கை.

 இந்தப் பிரச்சினையை இலங்கையை இனக்கொலை விசாரணைக்கு அழுத்தும் நடவடிக்கை நோக்கி தமிழ் அமைப்புகள் விவேகமாகக் கையாள வேண்டும்.

 தமிழ்வெறியாக, பிற மொழியினர் மீதான விலக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துச் சென்றுவிடக் கூடாது. தென்னிந்திய திரைப்பட சம்மேளன முடிவை மீறியவர்களின் மீதுதான் திரைத்தடை அமைய வேண்டுமெயொழிய, முழு இந்திப் படங்களின் மீதான வெறுப்பாக இதனை எடுத்துச் செல்லக் கூடாது.

 தமிழ்வெறியாக, பிறர் விலக்க நெறியாக இது எடுத்துச் செல்லப்படுமானால் அமிதாப்பச்சன் உள்ளிட்ட வட இந்தியக் கலைஞர்கள் மற்றும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்த தென்னிந்தியக் கலைஞர்களின் ஆதரவுக்கு எந்த அர்த்தமும் இல்லாது போய்விடும்.

 நாமும் பண்பாடற்ற ஒரு கூட்டம் எனும் அவப்பெயருக்கே ஆளாவோம்.

 தமிழகத்தின் எந்தவிதமான அரசியல் கட்சியினதும் தலையீடும் ஊடுறுவலும் இல்லாமல், அரசுசாரா சிவில் சமூகநிறுவனமொன்றின் சுயாதீனமான எழுச்சியால்தான் இந்த எதிர்ப்பு சாத்தியமானது.

 தமிழகத்தின் இவ்வாறான எழுச்சிகளை முன்னோடியாகக் கொண்டு இனக்கொலை புரியும் இலங்கை அரசுக்கெதிரான செயல்பாடுகள், மக்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்.

 தென்ஆப்ரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக எவ்வாறு உலகெங்கிலும் எதிர்ப்பைத் திரட்ட முடிந்ததோ அத்தகையதொரு எதிர்ப்பை உலக அளவில் திரட்டுவதற்கான ஒரு வெற்றிகரமான உதாரணமாக, தமிழக எதிர்ப்பு என்பது தென்னிந்திய எதிர்ப்பாகவும், வட இந்தியாவுக்கும் அழுத்தம் வழங்கும் ஒரு எதிர்ப்பாகவும் ஆகியிருப்பதை நாம் பார்க்கிறோம்.

 இந்த எதிர்ப்பை தமிழ்வெறியாக அல்ல சிங்கள இனவெறிக்கு எதிரான மனிதஉரிமை இயக்கமாக மேலெடுத்துச் செல்வதில்தான் இதனது வெற்றி தங்கியிருக்கிறது.

 தென்னிந்திய சினிமாக் கலைஞர்களின் இந்த நடவடிக்கையில் எந்தவிதமான கலை சார்ந்த அடிப்படைகளையும் பார்ப்பதை விட்டுவிட்டு, மனித உரிமை எனும் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பாரத்தால் மட்டுமே இதனது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 ஞாநிதான் குறுக்குசால் ஓட்டுகிறார் என்று பார்த்தால், ‘மார்க்சியம் கடத்தல்’ என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசிய பின்நவீனத்துவ தலித்தியரான ரவிக்குமாருக்கத்தான் எத்தனை முகங்கள்!

 ரவிக்குமார் சேரனிடம் கவிதை வாங்கி தான் நடத்துகிற ‘மணற்கேணி’ இலக்கியப் பத்திரிக்கையில் போடுவார். ராஜபக்சேவின் பாசிசம் பற்றி மிக நீண்டதாக மனித உரிமை அறிக்கையின் மேற்கோள்களுடன் உயிர்மையில் ஆய்வுக் கட்டுரை எழுதுவார்.

 ஈழத்தமிழர்கள் தொடர்பாக ராஜபக்சேவிடம் நிறுவன உத்திரவாதம் கேட்பதற்கு, திமுகவின் பொருளாதார நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு, எதற்காக இவர்கள் ழான் போத்ரிலாரை எல்லாம் படித்துத் தொலைக்க வேண்டும் என்றே தெரியவில்லை!

 ரவிக்குமார் அவர்களே, இந்த வேலைகளைப் பார்க்க வேறு ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். திமுக அறிவுஜீயான பன்னீர்செல்வம் மாதிரியானவர்கள் இதனைப் பார்க்கட்டும். நீங்கள் ஜெகத் கஸ்பாருடனும் பன்னீர் செல்வனுடனும் கார்த்தி சிதம்பரத்துடன் சேர்ந்து செய்கிற  அறிவுஜீவி வேலை இல்லை இது.

 அதுவும் நீங்கள் கொட்டி முழுக்குகிற மாதிரி ‘மார்க்சியம் கடந்த’ அறிவுஜீவி செய்கிற வேலை இல்லை இது.

 என்ன நடக்கிறது இலங்கையில்? இன்று அறிவுஜீகளின் பாத்திரம் என்ன?

 ராஜன்குறை மாதிரி பூக்கோ சொன்ன ‘கவர்ன்மென்டாலிடி’ பற்றி வகுப்பெடுக்க இது நேரமில்லை. அருந்ததி ராய் செய்கிற உலகமனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை.

 தோண்டுகிற இடங்களிலெங்கும் பெண்களது பிணங்கள் பற்றிச் செய்திகள் வருகின்றன. ஒரு மக்கள் கூட்டம் தன்மானமற்ற வகையில் மிருகங்கள் போல நடக்க நிரப்பந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடி நிறுவனம், டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், மனித உரிமைக் கண்காணிப்பகம் என, உலகின் மனசாட்சியான சுயாதீன நிறுவனங்கள் இனக்கொலை விசாரணையை ராஜபக்சேவின் குடும்பத்தின் மீது கோரிக் கொண்டிருக்கின்றன.

 இலங்கையில் நிதிமூலதனம் போடுகிறவர்களின் வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்துகொண்டிருப்பது அவமானகரமான காரியம். இந்தக் காரியத்தை அரசு அதிகாரிகள் செய்தாலோ அல்லது அறிவுஜீவி போர்வையில் திமுக அனுதாபிகளான பன்னீர் செல்வம் போன்றவர்கள் செய்தாலோ இங்கு எவரும் ஒரு பொருட்டாகக் கருதப்போவதில்லை.

 தெரிதா, போத்ரிலார், காட்சி நகல், குறியாகிப் போன உழைப்பு, மனித உரிமை, இனக்கொலை என்றெல்லாம் ஒரு பக்கம் எழுதிவிட்டு, இன்னொரு பக்கம் இப்படிச் செயல்படுவது நிச்சயமாக மனசாட்சியுள்ள, சிந்திக்கிற ஒருவர் செய்கிற காரியம் போலத் தெரியவில்லை.

 உங்களது இந்த நடிவடிக்கை நீங்கள் இதுவரை பேசிய அனைத்தையும்; அர்த்தமிழக்கச் செய்கிறது என்பதனை தோழர். ரவிக்குமார் அவர்களே, நீங்கள் புரிந்து கொண்டால் போதுமானது..

Exit mobile version