கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது என்ற தலையங்கத்தில் அமரிக்க நலனுக்காக ஐக்கிய நாடுகள் ஈராக்கில் விதித்த பொருளாதாரத் தடை ஒரு மில்லியன் ஈராக்கியக் குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளது.
சதாம் ஹுசைனிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக அமரிக்கா ஈராக்கில் நிகழ்த்திய மனிதப் படுகொலை இன்னும் சில மில்லியன் பிணங்களைக் குவித்துள்ளது.
இப்போது லெபனானில் கடாபியிடமிருந்து ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் அவசர அவசரமாக மீட்டெடுக்கப்பதாக கூறிய மேற்கின் நலன்கள் லிபியாவில் காட்டுத் தர்பார் நடத்தியிருக்கின்றது.
மேற்கின் நலன்கள் ஜனநாயகம் என்றால் என்ன என்ற உலகப் பொதுப்புத்தியை உருவாக்கியுள்ளது. மனிதாபிமானம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்ற அனைத்துமே மேற்கின் நலன்களுக்கான உள்ளடக்கத்தையே கொண்டிருக்கிறது.
மேற்கின் சந்தையாக ஏனைய நாடுகளை மாற்றுவதற்கு, சுதந்திரம், ஜனநாயகம், கருத்துரிமை, வன்முறை என்பதற்குரிய உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது.
மேற்கின் பொருளாதார நலன்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே வன்முறை என வரையறை செய்யப்பட்டது. இவ்வாறு வரையறை செய்யப்பட்ட வன்முறையைக் கையாள்வதற்கு அவர்களின் “ஜனநாயக வழிமுறையாக” தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒடுக்கு முறைக்கு எதிராக மக்கள் போராட எத்தனிக்கும் ஒவ்வொரு சூழலிலும் தன்னார்வ நிறுவனங்கள் அவர்களைச் சமாதானப்படுத்தும். இந்த நிறுவனங்களின் பிரதான பணி என்பது அவற்றிற்கு கொடுப்பனவுகளை வழங்கும் ஏக போக முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ற வியாபாரப் புறச் சூழலை உருவாக்க்குவது என்பதே.
ஆக, ஒடுக்கப்பட்ட நாடுகளில் முதலிடுவதற்கும் சுரண்டுவதற்குமான ஜனநாயகமும் சுதந்திரமும் மட்டுமே மேற்குலகின் ஒரே நோக்கம். உலகத்தின் ஜனநாயகம், சுதந்திரம் குறித்த சிந்தனை முறையும் இதன் அடிப்படையிலேயே புனையப்பட்டுள்ளது. இவற்றிற்கு அப்பால் புதிய வகையான ஜனநாயகம் குறித்த கருத்துப் பொது வெளியை உருவாக்குவதிலிருந்தே “நிபந்தனையற்ற” கருத்துரிமை குறித்த முடிபிற்கு நாம் வந்தாக முடியும்.
“ஒரு தனிமனிதன் தனது கருத்தை மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் வெளியிடும் சுதந்திரம்” என்பதே கருத்துச் சுதந்திரமாகக் கருதப்பட்டது. மேற்கு நாடுகளதும் அவற்றின் மூன்றாமுலக முகாமைத்துவ ஏஜண்டுகளதும் வசதிக்காக உருவாக்கப்பட்ட இவ்வகையான கருத்துச் சுதந்திரம் ஒரு வகையான வன்முறையை அதிலும் அதிகார வர்க்கத்தின் வன்முறையை உள்ளடக்கியிருந்தது.
இப்போது மகிந்த ராஜபக்சவின் பேரினவாதக் கருத்தியலைப் பாதிக்காமல் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை எதிர்பார்த்தால் அது இனப்படுகொலையை ஊக்குவிக்கும் வன்முறையாக மாற்றமடைகிறது.
உலகின் பெரும்பான்மை மக்கள் ஏகாதிபத்தியங்கள் அறிமுகப்படுத்திய ஜனநாயக முறைமைக்குள்ளும் சுதந்திரத்தினுள்ளும் சிக்கவைக்கப்படுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இன்னொரு ஜனநாயக முறைமை அதுவும் அவர்களின் நலன்களுக்கான ஜனநாயக் முறைமையும் சுதந்திரமும் இருப்பதாகத் தெரியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.
கருத்துச் சுதந்திரமும் அதனை வெளியிடுவதற்கான ஜனநாயகமும் இந்த அடிப்படைகளை முன்வைத்தே கட்டமைக்கப்படுகின்றது. ஆக, கருத்துச் சுதந்திரம் கூட நிபந்தனைக்களுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்க வேண்டும்.
அதுவே மக்களின் ஜனநாயகத்தைக் கோரி நிற்கிறது. ஆக, மக்களின் ஜனநாயகம் என்றால் என்ன?
உலகில் பெரும்பான்மையான மக்கள் அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கபடுகின்றனர். அவ்வாறு ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படும் போதெல்லாம் அவர்கள் அதற்கு எதிராகப் போராடுதலும் தவிர்க்க முடியாத நிபந்தனையாகி விடுகிறது. ஒடுக்கு முறையின் வடிவங்கள் வேறுபடினும் அவை அதிகாரத்திலுள்ள வர்க்கத்தின் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒடுக்கு முறையின் பண்பிற்கு ஏற்ற வகையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் தன்மையும் மாறுபடுகிறது.
ஆக, போராட நிர்பந்திக்கப்படும் மக்கள் முதலில் தமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கான ஜனநாயக் உரிமைகளை கோருகின்றனர். அவர்களின் போராட்டத்தின் குறித்த வளர்ச்சி நிலையில் பெரும்பான்மை மக்களின் அதிகாரம் சிறுபான்மையினரின் அதிகாரத்திற்கு எதிராக நிறுவப்படும்.
பொதுவாக மூன்றாமுலக் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் என்பது அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கூடக் கடைப்பிடிப்பதில்லை. அதற்கான அரசியல் அழுதங்களும் சமூகத் தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. வெளிப்படையான வன்முறையே அவர்கள் ஆட்சியளர்கள் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போதுமானதாக அமைந்திருந்தது.
இலங்கை போன்ற நாடுகளில் இதே வன்முறை பாசிசமாக வளர்ச்சியடைய இடைவெளியின்றிய ஒடுக்குமுறை உருவாகியது மட்டுமன்றி இலங்கை அப்பாவி மக்களின் கொலைக் களமாக மாற்றமடைந்துள்ளது.
* இலங்கை அரசின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடும் ஜனநாயகம் அங்கே முற்றாக மறுக்கப்பட்டுகிறது. இதனை நியாயப்படுத்த புலிகளின் தொடர்ச்சியான இருப்பு, காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதனால் தான் இலங்கை அரசுடனான இணக்க அரசியல் என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்முறையாகவே கருதப்ப்படும்.
* மக்கள் போராட முற்படும் போதெல்லாம் அதற்கு உறுதுணையாக அமைவதும் சாத்தியமான சூழ்நிலைகளில் போராட்டங்களில் பங்களிப்பதும், குறினப்பான சூழலில் அவ்ற்றை ஊக்குவிப்பதும் சமூகப்பற்றுள்ள மனிதர்களின் கடமையாகும். மேற்கு நாடுகளின் நிதிக் கொடுப்பனவுகளில் இயங்கும் தன்னார்வ உதவி நிறுவனங்களோ மக்கள் போராடும் போது அவற்றைத் தற்காலிகமாக சமரசம் செய்வதற்கான திட்டமிடல்களை மேற்கொள்கின்றன. இவை மனிதாபிமான உதவிகள் என்ற தலையங்கத்தில் மூன்றாமுலக நாட்டு மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் தலையீடு செய்கின்றன. மக்களின் போராடும் உரிமைக்கு எதிரான “மனிதாபிமான” வன்முறையை இவ்வாறான தன்னார்வ நிறுவனங்கள் கட்டவிழுத்துவிட்டுள்ளன.
* மக்கள் போராடும் முற்படும் போது அவர்களைப் பார்வையாளர்களாக மாற்றி போராட்டத்தைச் சில குழுக்களின் அல்லது தனி மனிதர்களின் உரிமையாக மாற்றும் ஜனநாயக மறுப்பிலிருந்து மற்றொடு வகையான வன்முறை உருவாகிறது. இதுவும் மக்களின் போராடும் சுதந்திரத்தை மறுக்கும் வன்முறையாக மாற்றமடைகிறது. ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களின் வன்முறையின் ஊற்றுமூலமும் அவற்றின் மக்கள் விரோதக் கூறுகளும் கூட இதனை அடிபடையாகக் கொண்டவையே.
பன்னாட்டு நிறுவனங்கள் மக்கள் மீதான வன்முறையை ஏனைய வடிவங்களிலும் பிரயோகித்தாலும் இன்றைய இலங்கைச் சூழலில் மேற்குறித்த மூன்று அடிப்படைக் கூறுகள் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துக்கின்றன.
புலிகளின் வன்முறையும் கருத்துச் சுதந்திரமும்.
மக்களிலும் அதிகாமக அரசியல் கட்சி பலமையும் போது, மக்களின் கண்காணிபிலிருந்து அவை விலகிச்செல்லும் போது அது மக்கள் விரோத நிலையை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாத அரசியல் செயற்பாடாக மாற்றமடையும். இவ்வாறு அன்னியபடுத்தும் செயற்பாடுக உலக விடுதலை இயக்க்ங்கள் மத்டியில் ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக ஈழப் போராட்டத்தில் இந்திய அரசின் தலையீடு இதனைச் சிறப்பாகவே செய்து முடித்திருக்கின்றது. மக்களின் போராட்டத்தை சில இராணுவக் குழுக்கள் தமது சொத்தாக உருமாற்றிய விடுதலை இயக்கங்கள் தமது குழுவாத நலன்களுக்காக மோதிக்கொண்டன. இந்த மோதல்களைத் திட்டமிட்ட இராணுவ ஒடுக்குமுறையாக மேற்கொண்ட புலிகள் இயக்கம் தனிப்பெரும் அமைப்பாக உருவானது.
இவ்வாறு உருவாக்கப்பட விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு புறத்தி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தைத் தலைமை தாங்கிய அதே வேளை மறுபுறத்தில் மக்கள் மீதான ஒடுக்கு முறையையும் பிரயோகித்தது.இதற்கு எதிராக போராட முனைந்த மக்களை புலிகளின் மையத் தலைமையை நோக்கித் இசைவாக்கம் அடையச் செய்வதற்கக குறியீடுகளின் புனிதம் முன்வைக்கப்ப்பட்டது. குறிபாக தேசியத் தலைமை, புலிகளின் சின்னங்கள் என்பன குறிப்பிடப்படலாம். இங்கு இச்சின்னங்கள் விமர்சனக்களுக்கு அப்பாற்பட்ட புனிதத்தைக் கொண்டவையாகப் கருத்தமைக்கப்பட்டது.
புலிகள் இன்று இல்லை. புலிகளின் இருப்பு என்பது அதன் இராணுவ பலத்திலும் இராணுவ வெற்றிகளிலும் மட்டுமே தங்கியிருந்தது. இராணுவ வெற்றிகளை அரசியல் சாதனையாகவும் புனிதமானதாகவும் புனைவதற்கு இன்று சாத்தியமற்ற சூழலில் புலிகளின் இருப்பு கருத்தியல் அளவில் கூட சாத்தியமற்றதாகிவிட்டது. எது எவ்வாறாயினும் புலம் பெயர் நாடுகளில் புலிகளின் புனிதம் குறித்த கருத்தும் சிந்தனையும் இன்னும் ஆளுமை செலுத்தும் போக்கையே காணலாம். இதற்கு மூன்று பிரதான காரணங்களை முன்வைக்கலாம்.
1. இலங்கை அரசின் தொடரும் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.
2. புலிகள் இன்னமும் வாழ்வதான இலங்கை அரசின் பிரசாரம்.
3. புலிகள் இன்னமும் நமது எதிரிகள் எனப் பிரச்சாரம் மேற்கொள்ளும் இலங்கை அரச ஆதரவாளர்களின் பரப்புரைகள்.
இவை அனைத்தும் புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் புலிகள் சார்ந்த சிந்தனை முறையினை மேலும் உரமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக புலி சார் சிந்தனை வட்டத்துள் இயங்கும் புலம் பெயர் அமைப்புக்களும் அதே வேளை புலி எதிர்ப்புக் குழுக்களும் தமது வன்முறை சார்ந்த, மக்கள் விரோத , ஜனநாயக மறுப்பு அரசியலை முன்வைப்பதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது.
(புலியெதிர்ப்புக் குழுக்கள் எவ்வாறு வன்முறை சார் அவதூறுப் பிரச்சாரங்களை குறுக்கு வழிகளில் மேற்கொள்கின்றனர் என்பது வரை நாளை மிகுதிப்பகுதி பதியப்படும்…)