இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.
இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.
அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.
“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர்.
எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.
இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.
இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.
அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.
சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.
நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.
இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.
ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.
என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.
மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.
நன்றி : வினவு