2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். ஆரம்பத்தில் ஊடக ஆதரவு ஓரளவு கணிசமான கூட்டம் என தன் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு மூன்று சதவிகிதத்திற்கு மேல் வாக்கும் பெற்றார். சில தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றார்.
அதனையொட்டி இந்த தேர்தலில் மக்கள் நீதிமன்றம் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கி களம் கண்டது. பெரும்பலான தொகுதிகளில் தோல்வியும் அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் கமல் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து இன்று கமல் தலைமையில் சென்னையில் உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. பெரும்பாலனவர்கள் மகேந்திரன் மீதே குற்றம் சுமத்த அவைகளை பரிசீலித்த கமல் மகேந்திரனை சில கேள்விகள் எழுப்பியுள்ளார்.
இது மோதலாக வெடித்துள்ளது. இதனிடையே அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே ஆலோசனைக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வெளியேறிய மகேந்திரன் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.கமல் இனி மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை.கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும்.தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது.அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்றார்.
ஆனால் அதற்கு காட்டமாக பதிலளித்துள்ள கமல் முதன் முதலாக களையெடுக்கப்பட வேண்டிய களையே மகேந்திரன் தான் என்று கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர் என்றும் துரோகிகளைக் களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேரந்தரன் என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்படச் செயல்பட்டோம்.களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம்.
‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர் தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும். தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.
இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.ன்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை, தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை” என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சிக்குள் முரண்பாடுகள் உருவாகும் போது இத்தனை காட்டமாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் நடந்த வெளிப்படையான மோதலின் விளைவாகவே இப்படியான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன