Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடாபி கொல்லப்பட்டது எப்போது ? : சபா நாவலன்

லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இது வரைக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர் மேற்கின் சூழ்ச்சியால் அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார்.  ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.

யார் கடாபி?

 1969 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் கைப்பொம்மை போன்று செயற்பட்ட லிபிய அரசை சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில் வட ஆபிரிக்காவில் மிகப் பெரும் அமரிக்க இராணுவத் தளம் அமைந்திருந்த நாடு லிபியா.

லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கு சார்பு அரசிற்கும் அமரிக்காவிற்கும் கைச்சாத்தானது.

ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும் அழிவு ஆயுதங்களை வட ஆபிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்கும் இப் பயிற்சித் தளம் அமரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.

1970 இல் கடாபி அரசால் அமரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

1960 இல் லிபியாவில் பெற்றோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள் போல வட்டமிட ஆரம்பித்துவிட்டன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்நாடு நிறுவனங்கள் லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை. அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக் காரர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும் கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்றது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்குநெருங்கியவர்கள் உட்பட அனைவருக்கும்  கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது. இது மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள் லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.

தேசிய மயமாகலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள்  கடாபிக்கு மேற்குலகம்  மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி அமரிக்காவினதும்  ஐரோப்பவினதும்  மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.

சௌதி அரரேபியா பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள் தமது மில்லியன்களை அமைரிக்க ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக் கொண்டு அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் தேவைப்படுகின்ற போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். கடாபி இஸ்லாமிய அடிப்படை வாதத்தை லிபியாவிலோ ஆபிரிக்க நாடுகளிலோ விரும்பியதில்லை. மேற்கின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு இது மிகப்பெரிய தடையாக அமைந்தது.

கடாபி எழுதிய  “பச்சை நூல்”  இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.

அண்மையில் அமரிக்க நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 80 வீதமான அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.

எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும் கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து அவரை ஆபிரிக்காவினதும் அரபுநாடுகளதும்  கதாநாயகனாக்கியிருந்தது.

லிபியா

லிபியா என்ற சிறிய நாடு தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால் அவை லிபியாவினதும் ஆபிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.

லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக் கூடிய நிலையே காணப்பட்டது.

இதனால் லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத் தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.

இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே மேற்கின் உதவியின்றி மக்கள் எதிர்ப்பின்றி ஆட்சி நடத்தக் கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள் மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்று வரைக்கும் கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆதரவின் காரணமாகவே சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும் கடாபியைக் கொலை செய்யவும் மேற்கிற்கு மிக நீண்ட காலை எல்லை தேவைப்பட்டது.

கடாபி ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைத் விட ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அரபுலகிலும், ஆபிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும் அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதும், இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது என்பதுமே உண்மை.

கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம் சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகள் தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும் அதன் அடியாள் அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்துக்கொண்டன.

மேற்குலக ஊடகங்களில் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும் கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடாபி – அழிவின் ஆரம்பம்

இவை அனைத்திற்கும் மேலாக கடாபியின் அழிவு 200ம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டதெனலாம். நாட்டில் உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது என்ற தலையங்கத்தில் கடாபி உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள் லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார். இதன் மறுபக்கமாக ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்தது போன்றே லிபியாவை மேற்கு நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கும் உட்படுத்துகின்றது. சுரண்டல் சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்று நோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது. உலகமயமாதல் செயற்படுத்தப்படும் போதெலாம் இரண்டு பிரதான சமூகக் கூறுகள் உருவாவது வழமை.

முதலாவதாக வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும், இரண்டாவதாக மிகச்சிறிய விரல் விட்டெண்ணக் கூடிய நபர்களைக் கொண்ட மேல்தட்டு வர்க்கம் அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்.

ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள், அவர்களின் மிகச் சிறிய பகுதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால்  இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமரிக்காவும் ஐரோப்பவும் சவுதி அரேபிய அடிமைகளின் உதவியோடு லிபியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தைக் கடாபிக்கு எதிராகத் தூண்டின.கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு கடந்து போன முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.

தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றன எல்லாம் தனியார் மயமாகின. பன்நாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு உள்ளாகின்ன. ஏகாதிபத்தியங்கள் அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004ம் ஆண்டின் பின்னர் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, சுற்றுலாத் துறை போன்றன முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின. இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.

உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும் மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழமை. அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(NGO) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக அமரிக்கன் எயிட்ஸ், கிரிஸ்டியன் எயிட்ஸ், உபந்து fபோர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே முதலில் லிபியாவிற்குள் 2004ம் ஆண்டளவில் உதவி என்ற பெயரில் உள் நுளைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத் தன்னார்வ நிறுவனங்களைத் தொடர்ந்து வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன. இவை இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல் மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமரிக்க – ஐரோப்பிய சார்பானதாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.

உலகமயமாதல் உருவாக்கிய மேல் தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடுகடந்ததது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட மேற்கை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்று உருவானது.

இந்த வர்க்கத்தினரையும் வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. கடாபியின் மரணப் பொறியை அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள்.

இதே வேளை மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னைநாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில் ஒபாமா வரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்கின் இன்னொரு பிரச்சாரமே. இது நாள்வரை மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் விம்பம் இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியா பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப் போட்டது.

முன்பிருந்த கடாபி 2005ம் ஆண்டின் பின்னர் மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோளை மனிதனாக மதிப்ப்ழந்து போனார்.

அப்போதே கடாபியின் முடிபு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

2005 இன் பின்னான கடாபி அரசியல் ரீதியாகக் கொலைசெய்யப்பட்ட நடைப்பிணமாகவே வலம்வந்தார்.

உலகமயமாதல் அரசியல் கொலை செய்த 40 ஆண்டு சர்வாதிகாரியின் உடல் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.

இவை அனைத்தையும் மீறி கடாபியை மேற்கு பலியெடுத்ததன் பின்னணி என்ன?

மிகுதி விரைவில்..

Exit mobile version