Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

புகலிட இலக்கிய ஆர்வலர்களின், 40வது இலக்கிய சந்திப்பிற்கான லண்டன் குழுவின் சார்பில், ஓவியர் கிருஷ்ணராஜாவும், “இதுவரை ” ஆசிரியர் பௌசரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு ருக்கின்றார்கள். லண்டன் 40வது இலக்கிய சந்திப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த ராகவன், இலங்கையில் 40வது இலக்கிய சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்ட குழுவில், தனது பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுவிட்டதாகவும், இலக்கிய சந்திப்பு சம்பந்தமான சர்ச்சையில், தான் எந்த பக்கச் சார்பும் எடுக்கவும் விரும்பவில்லை, எனவே இலண்டன் இலக்கிய குழு விடும் அறிக்கையில், தனது பெயரை பயன்படுத்தவேண்டமென தம்மை கேட்டுக்கொண்டுள்ளார் எனவும், கிருஷ்ணராஜா பௌசர் இருவரும் வெளியிட்ட அறிக்கை குறிப்பாக சுட்டிக்காட்டுகின்றது. கருத்துச் சொல்லவேண்டிய அல்லது நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிலையில் ராகவன் ” நடுநிலை ” (!) கடைப்பிடிப்பதாக அறிக்கை சொல்கிறது.

இந்த அறிக்கை, கிருஷ்ணராஜாவினால் எனக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் , இலக்கியச் சந்திப்பின் செயல்பாட்டாளர்களில் ஒருவன் எனும் வகையில், இலக்கியச் சந்திப்பின் இன்றைய நெருக்கடிக்கான காரணம் குறித்துச் சில அவதானங்களை முன்வைப்பது எனது பொறுப்பு என நான் கருதுகின்றேன்.

இலக்கியச் சந்திப்பின் தொடக்க கால தார்மீக அறமும் ,கடப்பாடும் குறித்து இருவரின் அறிக்கை மிகச் சரியாகவே குறிப்பிட்டிருக்கின்றது. ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என இலக்கியச் சந்திப்பில் இருந்த இரு அற அடிப்படைகளை அறிக்கை காத்திரமாகக் குறிப்பிடுகின்றது. கலைஞர்களின், படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் அடிப்படை வலிமை இந்த அறத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழலில், இலங்கையிலும், புகலிட நாடுகளிலும் அதிகாரம் செலுத்திய இலங்கை அரசு-விடுதலைப் புலிகள் என இரு அரசியல் அமைப்புக்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஏகத்துவ அதிகாரத்திற்கு எதிராகவும் பேசிய கலைஞர்களையும், படைப்பாளிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும், பெருமளவிலான இடதுசாரி மரபாளர்களையும் கொண்டுதான் புகலிட இலக்கியச் சந்திப்புகள் நடைபெற்று வந்தன. காலஞ்சென்ற தோழர்கள் கலைச்செல்வன், புஷ்பராஜா, பரா போன்றவர்களின் செயல்பாட்டு வழிநடாத்தல்களில் இலக்கிய சந்திப்புக்களின் தளம் இவ்வாறுதான் அமையப்பெற்றிருந்தது.

ஆனால் இன்றைய அன்மைக்கால இலக்கிய சந்திப்புக்களின் வெளிப்பாடுகள் என்னவாக இருந்தன?

குறிப்பாக 2012 நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் அமைப்பில் மறுபரிசீலனை அறிக்கையின்படி , ‘ 2009 மே மாத இறுதி யுத்தத்தில் இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ’ எனச் சொல்லப்படும் இன்றைய நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரின் முழுமையான தாக்குதல் நடைபெறும் சூழலில், இவ் இலக்கிய சந்திப்பு பற்றிய சமீபகால செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்வது அவசியமென கருதுகின்றேன்.

ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என இருவரது அறிக்கை குறிப்பிடுவது உண்மையானால், கடந்த சில ஆண்டுகளில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கள் இந்த அடிப்படையான தார்மீக நெறிகளைக் கைகழுவிவிட்ட ‘’ வெறும் உயிரற்ற ஜடமாகவே ’’ இருந்துவந்திருக்கிறது என்பதனை நாம் வெளிப்படையாகக் காணமுடியும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

சில தரவுகளை நாம் வரிசைப்படுத்திக் கொள்வோம். இலக்கியச் சந்திப்பின் தொடக்க காலத்திற்கும், இன்றைய நிலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க சில செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன . இலக்கியச் சந்திப்பிற்கு வெளியில் தலித் மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) , இலங்கை ஜனநாயக ஒன்றியம்- எஸ்.எல்.டி.எப் (இங்கிலாந்து) , புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான சர்வதேச அமைப்பு (ஐஎன்எஸ்டி-ஜெர்மனி) , இலங்கை தமிழ் மொழிச் சமூகங்களின் கூட்டமைப்பு (இங்கிலாந்து) போன்ற அமைப்புக்கள் அன்மைய ஆண்டுகளில் தோற்றம் பெற்றன. இவை அதிக அளவில் அரசியலை மையப்படுத்திய அமைப்புகள். இவ் அமைப்புக்களில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பாண்மையானவர்கள், இன்று வெளிப்படையாக இலங்கை அரசை ஆதரிக்கின்றவர்களாக, இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா, சிறீரெலோ குழு போன்றவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுபவர்களாக அல்லது இவர்களது அரசியலை ஏற்பவர்களாக இருந்தார்கள் . இவர்களே அன்மைய ஆண்டுகளின் இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களாக, இலக்கிய சந்திப்பினுள் அதிகாரம் செலுத்துபவர்களாக வளர்ச்சி பெற்றார்கள் . இந்த அமைப்புக்களைச் சேர்ந்த பலர் அந்தந்த புகலிட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின் இவர்களது அமைப்புக்கள் செயலிழந்தன. பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணி நபர்களின் இலங்கை அரசசார்பு பிழைப்புவாத அரசியல் அம்பலப்பட்டு போனது. இலங்கை ஜனநாயகத்திற்கான ஒன்றியம் (இங்கிலாந்து) தனது இருத்தலை இழந்தது. இவர்கள் இப்போது வெளிப்படையாக தங்களது இலங்கை அரசு ஆதரவு அரசியலைப் பேசுவதற்கு தயங்கினார்கள். எனினும் தமது ‘’ மறைத்துக்கொண்ட திட்டமாக’’ அதே அரசியலை தனிப்பட்ட வகையில் கொண்டிருந்தார்கள். முழுமையான அரசியல்வாதிகளான இவர்கள், தங்களது பிழைப்புவாத அரசியல் அம்பலப்பட்டுப்போனதினால், இப்போது தமது அரசியல் அமைப்பின் செயல்பாடுகளை பின்னிலைப்படுத்தி, முழுமையான இலக்கியவாதிகளாக “இலக்கிய முகமூடி” அணிந்து தங்களை தகமைத்துக்கொண்டார்கள்.

தங்களுடைய இலங்கை அரசுசார்பு அமைப்புக்களுக்கு பிரதியாக “இலக்கிய வாசிப்பு மனோநிலை” போன்ற சொல்லாடல்களில் இலக்கிய வியாபாரங்களை தொடங்கினார்கள். இவர்களே இன்றைய புகலிட இலக்கிய சந்திப்பிலும் அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதை சாதாரணமாகவே நாம் புரிந்து கொள்ள முடியும்.
இது எவ்வாறு நிகழ்ந்தது?

இலக்கியச் சந்திப்பின் மரபிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச் சந்திப்பு சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. 2009 மே 19 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை வேறாகியது. புலிகள் அமைப்புரீதியில் வீழ்ச்சியுற்றார்கள். அவர்களது அதிகார மேலாண்மை கட்டுறுதி குலைந்தது. அவர்களது அரசியலும் வீழ்ச்சியுற்றது. இப்போது இலக்கியச் சந்திப்பு முன்னிறுத்தி வந்த ஜனநாயகம், அதிகார எதிர்ப்பு என்பதற்கு மிக்பெரும் அச்சுறுத்தலாக இலங்கை அரசு ஆகியது.

இப்போது தமிழ்மக்களின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இலங்கை அரசுதான். இந்தப் புதிய நிலைமைகளை கவனத்தில் கொண்டு இலக்கிய சந்திப்பு தனது தார்மீக அறங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன?

இலக்கியச் சந்திப்பைக் கைப்பற்றியிருந்த முன்னாள் புலிகளும், வேறுபட்ட இயக்க அரசியல் கொண்ட விடுதலைப் புலி எதிர்ப்பாளர்களும், புதிய நிலையை அங்கீகரிப்பது தமது இருத்தலுக்கான அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதினார்கள்.
இவர்களில் இரண்டு விதமான சக்திகள் இருந்தார்கள். அரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.

இரண்டாவது பகுதியினர் முன்னாள் புலிகள். நேர்ந்த அழிவுகளில் தமது பொறுப்பை முழுக்க நிராகரித்து, தமது கடந்த காலத்தை மறுத்து, புலிகளின் தலைமையின் மீது அனைத்துத் தவறுகளையும் சுமத்தித் தப்பிக்க நினைத்தவர்கள் இவர்கள். இவர்களது இருத்தலுக்கு தொடர்ந்து புலி எதிர்ப்பைப் பேசுவது என்பது, இலங்கை அரசின் அனுசரணையுடன் இலங்கையில் இவர்கள் அரசியல் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஆகவே இவர்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், படுகொலைகள் போன்றவற்றைக் குறித்து புகலிடத்திலும் பேசவில்லை. இலங்கையினுள்ளும் பேசவில்லை.

சமகாலத்தில் இவர்களில் சிலர் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டார்கள். சிறி டெலோ , தலித் மேம்பாட்டு முன்னணி போன்றவை இந்த அமைப்புக்கள். இலக்கியச் சந்திப்பை இலங்கைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள்தான். இலக்கியச் சந்திப்பை முழுமையாக இலங்கை அரசுக்கான அமைப்பாகப் புகலிடத்திலும் புலத்திலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளையே இதன்வழி இவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளான இவர்கள், அரசியலில் நேரடியான ஈடுபாடற்ற இலங்கைக் கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும் கூட தமது அரசியலின் கீழ் திரட்டுவதற்காகவே இப்போது இவர்கள் “இலக்கிய முகம்” அணிந்திருக்கிறார்கள்.

இலக்கியச் சந்திப்பு தொடர்பாக இப்போது எழுந்திருக்கும் சர்ச்சைகளின் பின்னிருக்கும் அரசியல் என்பது இதுதான்.

புகலிட நாடுகளை மையப்படுத்தி இதுவரை நடைபெற்று வந்த புகலிட இலக்கியச் சந்திப்பினை புகலிட எல்லைக்கு வெளியில், முதன் முதலாக ஒரு நாட்டில் நடாத்த முன்வருகின்றபோது, இலக்கிய சந்திப்பு நடைபெறும் ஒரு பொது அரங்கில் இவ்விடயம் பேசப்பட்டு, பொதுச்சபையின் ஒப்புதலுடன் கொண்டு செல்வதே சிறந்த வழிமுறையாகும் என்று கிருஷ்ணராஜா , பௌசர் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

“புகலிட இலக்கியச் சந்திப்பு” என அழைக்கப்பெற்ற ஒரு இலக்கிய நிகழ்வு ஏன் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி.

இலங்கையில் இப்போதும் இலக்கிய நிகழ்வுகள் , புத்தக வெளியீடுகள் , வாசகர் சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நடக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்டு இலக்கிய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. அங்கிருந்து இலக்கியச் சஞ்சிகைகள் வருகின்றன. தமிழகத்திலும் புகலிடத்திலும் இருந்து எழுத்தாளர்கள் அங்கு சென்று வருகின்றார்கள். இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார்கள். அதுபோலவே இலங்கையிலிருந்து வரும் எழுத்தாளர்கள் புகலிட இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார்கள். இச்சூழலில் புகலிடத்துக்கென அமைந்த இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

இலங்கையில் நடைபெறும் எந்த இலக்கியச் சந்திப்பிலும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோதச் செயல்பாடுகள், பள்ளிவாசல் அகற்றம் முதல் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் மீதான ஒடுக்குமுறை வரை அதிகாரச் செயல்பாடுகள் குறித்து இலங்கையில் இலக்கியவாதிகள் பேச முடியாத சூழலில், புகலிட நாடுகளில் அதனைப் பேசுவதற்கான சூழல், புகலிட இலக்கியச் சந்திப்பினுள் இருக்கும் வரை, அதனை ஏன் இலங்கைக்குக் கொண்டு செல்ல ஒரு தரப்பினர் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார்கள்?

இதிலிருக்கும் அரசியல் என்ன?

இதற்கான பதில் மிக மிக வெளிப்படையானது. ஜனநாயகம், மனித உரிமை, அதிகாரம் தொடர்பான இலங்கை அரசின் மீறல்களைப் பேசாது, என்றென்றும் மீளமுடியாதபடி இலக்கியச் சந்திப்பை இலங்கை அரச ஆதரவு அமைப்பாக நிரந்தராக மாற்ற முயல்பவர்களே, இத்தகைய அரசியல்வாதிகளே புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்குக் கொண்டு செல்ல, அதனது தனித்தன்மையை அழித்துவிட முனைப்புக் காட்டுகின்றார்கள்.

இந்த நிலைபாட்டுக்கு எதிராக ஒரு சில சுயாதீனமான கலைஞர்களும், இயல்பாக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களும், அதனது துவக்க நாட்களின் ஆர்வலர்கள் எனும் அளவில் புகலிட இலக்கியச் சந்திப்பின் தனித்தன்மையைக் காக்க விரும்புகின்றவர்களும் , கடும்போக்கு அரச ஆதரவு அரசியல்வாதிகளிடமிருந்து ஒப்பீட்டளவில் கலைகளின் சுயாதீனத்தைக் காக்க நினைப்பவர்களும்தான் இப்போது இந்த அரசியல் எதேச்சாதிகாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள் என நாம் கருதுகின்றோம். (அவர்களது தனிப்பட்ட அரசியல் சர்ச்சைகுரியது என்றாலும்) அந்த அளவில்தான் “ஒரு சாரார் தன்னிச்சையாக இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெறும் என அறிவித்திருப்பதானது, புகலிட இலக்கிய சந்திப்பு பொது அரங்கிற்கு இந்த விடயத்தினை கொண்டு சென்று முடிவினை எடுக்கும் நிலைக்கு எம்மை தள்ளியுள்ளது“ என அறிவித்திருக்கிறார்கள் என நாம் கருதுகிறோம்.

இந்த நெருக்கடி இப்போது உருவாகியது அல்ல. இலக்கியச் சந்திப்பு படிப்படியாகத் தனது சுயாதீன நிலைபாட்டை இழந்து வந்திருப்பதன் தர்க்கபூர்வமான வளர்ச்சியே இன்றைய நிலை. இதிலிருந்து மீள இலக்கி யச் சந்திப்பின் முன் பல்வேறு பக்கப் பாதைகள் இல்லை. ஓரே ஒரு பிரதான சாலைதான் உண்டு.

அது , ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும் , அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன என்பதன் தொடர்ச்சியைப் பேணுவதனால் மட்டுமே பயணிக்கக்கூடிய சாலை. இலக்கியச் சந்திப்பு அதனது மேலே குறிப்பிட்ட தார்மீக அறங்களை மறுபடியும் மீட்டுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் , தாம் சார்ந்த இயக்கங்கள் , தனிமனிதர்களாகத் தாம் என அனைவரின் மீதுமான விமர்சனத்தின் மீதும் , சுயவிமர்சனத்தின் மீதும்தான் இந்தத் தார்மீக அறங்கள் கட்டியெழுப்பப்பட முடியும்.

இத்தகைய ஆழமான தளங்களுக்குச் செல்லாமல் ஏதோ சில தனிமனிதர்களுக்கு இடையிலான சர்ச்சையாக இதனைச் சித்தரிப்பது நெருக்கடியின் அடிப்படைகளைத் தீண்டமுடியாத வெறும் அர்த்தமற்ற சொற்குவியலாகவே இப்பிரச்சினை எஞ்சி நிற்கும். இலக்கியச் சந்திப்பின் சுயாதீனத் தன்மையையும் அதனது தார்மீக அறங்களையும் காப்பதற்கான வரலாறு அளித்திருக்கும் இறுதி வாய்ப்பு இது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் புகலிட இலக்கியச் சந்திப்பின் நிரந்தரத் தார்மீக அழிவு நிச்சயம்.

==================================================================================

இலண்டன் குழு
இதுவரையான இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டாளர்களுக்கு………

40வது இலக்கிய சந்திப்பு அறிவித்தலை இலங்கையில் நடாத்துவதாக ‘தூ’ உட்பட இன்னும் சில இணையத்தளங்களில் பிரசுரமான அறிவித்தல் தொடர்பாக லண்டனில் 40 ஆவது இலக்கிய சந்திப்பை நடத்த கோரியவர்கள் என்கிற அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துவது எமது பொறுப்பு என நம்புகிறோம்.

1988ம் ஆண்டு புரட்டாதி மாதம் 24ம் திகதி Germany யின் Herne நகரில் முதலாவது இலக்கிய சந்திப்பு தொடங்கப்பட்டு, 2012ம் ஆண்டு வைகாசி மாதம் 05ம் திகதி Toronto, Canada வரையில் இதுவரை முப்பத்தொன்பது சந்திப்புகள் நடாத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவும், அதிகாரத்திற்கெதிரான தளமாகவும் புகலிட இலக்கிய சந்திப்புகள் அமைந்து வந்திருக்கின்றன.

உங்கள் அனைவருக்கும் தெரிந்த வகையில், இலக்கிய சந்திப்பு பாரம்பரியத்திற்கு அமைவாக சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்த சந்திப்பு நடைபெறும் இடத்தினை தீர்மானிப்பதற்கான விடயம் உள்ளடக்கப்பட்டு, அடுத்த சந்திப்பினை எங்கு நிகழ்த்துவதென்ற தீர்மானம் ஜனநாயக ரீதியில் எடுக்கப்படுவதே இலக்கிய சந்திப்பின் பாரம்பரியமாக ,வழமையாக இருந்து வந்திருக்கிறது. இலக்கிய சந்திப்புக்கு கறாரான விதிமுறைகள் இல்லையெனினும் சில எழுதப்படாத அனுசரணைகள் உண்டு.

39வது இலக்கிய சந்திப்பு கனடாவில் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன், கனடாவின் “39வது இலக்கிய சந்திப்பு குழு,” அதன் பிரதான ஏற்பாட்டாளரான சுமதிக்கு , எம்மால் 40வது இலக்கிய சந்திப்பினை இலண்டனில் நடாத்த கோருபவர்கள் என்கிற அடிப்படையில் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, அந்தமடல் கிடைத்ததையும் உறுதிப்படுத்தி, எமது வேண்டுதலை 39வது இலக்கிய சந்திப்பு பங்குபற்றுனர்கள் முன்னிலைக்கு தெரியப்படுத்துமாறும் கோரி இருந்தோம்.

எமது மின்னஞ்சல் 39வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட போது, நண்பர் “கற்சுறா” 38வது இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடைபெற்ற போது இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது என்று சொன்ன நிலையில், 40வது இலக்கிய சந்திப்பினை எங்கு நடத்துவது என்கிற இறுதிமுடிவு எடுக்கப்படாத நிலையில் கனடா இலக்கிய சந்திப்பு முடிவுற்றதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் அடுத்த இலக்கிய சந்திப்பினை எங்கு நடாத்துவது தொடர்பில் முடிவு எடுக்கப்படாத நிலை இப்பிரச்சனைக்கு வழிவகுத்தது. இதன் அடுத்த கட்டமாக ,கனடா குழுவானது இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுக்குமாறு நாம் சுமதிக்கு சுட்டிக்காட்டி கேட்டிருந்தோம். 39வது இலக்கிய சந்திப்பு குழுவின் பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட சுமதி அடுத்த சந்திப்பிற்கான கோரிக்கையை எழுத்து மூலமாக கேட்டவர்கள் என்கிற அடிப்படையிலும்,39வது சந்திப்பில் அடுத்த இலக்கிய சந்திப்பினை கோரிய ஒரே தரப்பு என்கிற வகையிலும் லண்டனில்தான் அடுத்த சந்திப்பு என தெரிவித்து இருந்தார். பின்னர் எழுந்த நிலைமையின் காரணமாக , சுமதி தன்னால் இதற்குமேல் ஏதும் செய்ய முடியாது என சொல்லி இரு தரப்பாரையும் பேசி முடிவெடுக்க சொல்லி விட்டார்.

39வது இலக்கிய சந்திப்பு குழுவின் பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட சுமதி அடுத்த சந்திப்பு லண்டனில்தான் என தெரிவித்து இருந்தாலும் கூட, 40 வது இலக்கிய சந்திப்பு இலண்டனில் நடாத்தப்பட வேண்டுமென்ற அவரது தனிப்பட்ட முடிவு ,ஜனநாயக ரீதியிலும்,இலக்கிய சந்திப்பின் பாரம்பரியத்தின் வழிமுறைக்கு ஊடாகவும் எடுக்கப்படவில்லை என்பதில் நாம் தெளிவாக இருந்தோம். நாம் ஜனநாயக அடிப்படையில் முடிவெடுப்பதனையும், அதனை பேணுவதிலும் இன்றுவரை நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

40வது இலக்கிய சந்திப்பினை லண்டனில் நடத்த ஒரு தலைப்பட்சமாக எம்மால் முடிவெடுக்க முடியாது . ஆனால் ஒரு சாரார் தன்னிச்சையாக இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெறும் என அறிவித்திருப்பதானது ,புகலிட இலக்கிய சந்திப்பு பொது அரங்கிற்கு இந்த விடயத்தினை கொண்டு சென்று முடிவினை எடுக்கும் நிலைக்கு எம்மை தள்ளியுள்ளது.

*புகலிட நாடுகளை மையப்படுத்தி இதுவரை நடைபெற்று வந்த புகலிட இலக்கிய சந்திப்பினை, புகலிட எல்லைக்கு வெளியில் முதன் முதலாக ஒரு நாட்டில் நடாத்த முன்வருகின்ற போது, இலக்கிய சந்திப்பு நடைபெறும் ஒரு பொது அரங்கில், இவ்விடயம் பேசப்பட்டு பொதுச்சபையின் ஒப்புதலுடன் கொண்டு செல்வதே சிறந்த வழிமுறையாகும்.

*கனடாவில் தீர்மானிக்கப்படாத விடயத்தினை வாய்ப்பாகக் கொண்டும், லண்டனில் இலக்கிய சந்திப்பினை நடாத்தக் கோரியவர்கள் ,இலக்கிய சந்திப்பு பாரம்பரியத்தினை மதிக்கிறார்கள் என்பதனை பலவீனமாகக் கருதி தன்னிச்சையாகவும் ஏகபோகமாகவும் முடிவெடுக்க முடியாது.

*38 இலக்கிய சந்திப்பினை பிரான்சில் நடாத்திய ஒரு பிரிவினரே 40வது இலக்கிய சந்திப்பினையும் நடாத்தக் கோருவது அடிப்படையிலே நியாயம் காண முடியாத ஒரு கோரிக்கையாகும், ஏனெனில் 2006ம் ஆண்டில்தான் (33 வது இலக்கிய சந்திப்பு) லண்டனில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளின் பின்புதான் இலக்கிய சந்திப்பினை நாம் லண்டனில் நடாத்தக் கோரி இருந்தோம். முறையாக எமக்கு வாய்ப்பளிக்கப்படுவதே நியாயமானதாகும்.

*புகலிட இலக்கிய சந்திப்பினை இலங்கையில் நடாத்த வேண்டுமென அங்குள்ள படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் யாரும் எழுத்து மூலமாக கோரிக்கையை விடுத்தார்கள் என்பது இதுவரையான புகலிட இலக்கிய சந்திப்பின் பொது அரங்கு முன் முன்வைக்கப்படவில்லை.

*இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள்,கலைஞர்களை,
செயற்பாட்டாளர்களை நாம் இந்த விடயத்தில் குறைகாணவும் இல்லை, அவர்களை இந்த விவகாரத்தில் வலிந்து சம்பந்தப்படுத்தவும் முனையவில்லை.

ஆகவே இன்றைய நிலையில் ஒரு முன்மொழிவாக, இது தொடர்பாக தீர்மானிக்கும் உரிமையை

இலக்கிய சந்திப்பின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இயங்கி சந்திப்பினை நடாத்தியவர்கள் முன்வந்து எழுத்து மூலமாக தமது முடிவினை தெரிவிப்பதுதான் சிறந்த வழிமுறை எனக் கருதுகிறோம்.

பெரும்பான்மையானவர்களின் முடிவிற்கு நாம் மதிப்பளிக்கிறோம். இன்றைய திகதியிலிருந்து இரு வார காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. (18-12-2012 வரை )எனவே இக்கால எல்லைக்குள் உங்கள் பதில் எழுத்து மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு முடிவினை காண்பதற்கு உங்கள் பங்களிப்பு அவசியமானதாகும்.

உங்கள் பதிலினை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்—-
40thilakkiyachanthippu@gmail.com

நன்றி
இலண்டன் குழு

*கிருஸ்ணராஜா
*பௌசர்

0 4-12-2012

குறிப்பு- இலன்டன் இலக்கிய சந்திப்பு குழுவில் இருந்த நண்பர் ராகவன் அவர்கள் ,இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட குழுவில் தனது பெயர் தனது ஒப்புதல் இன்றி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இலக்கிய சந்திப்பு சம்பந்தமான சர்ச்சையில் தான் பக்கசார்பு எடுக்கவும் விரும்பவில்லை.
எனவே இலண்டன் இலக்கிய குழு விடும் அறிக்கையில் தனது பெயரை பயன் படுத்த வேண்டாம் என எம்மை கேட்டுக் கொண்டுள்ளார்.

===========================================================================================

இலங்கை அரச ஆதரவு நபர்கள் சந்திப்பு

40வது இலக்கியச் சந்திப்பு

புகலிட இலக்கிய ஆர்வலர்களின் கவனத்திற்கு
தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 39வது சந்திப்பானது கனடாவில் நடைபெற்றது. 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும், இலண்டனில் நடத்துவதற்கான விருப்பத்தை சிலரும் 39வது இலக்கியச்சந்திப்பில் முன்வைத்தபோது, 40வது இலக்கியச்சந்திப்பு இலண்டனில் நடைபெறும் என்பதாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தது.
பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச் சந்திப்பின் இறுதியில் 39வது சந்திப்பை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டபோது, நோர்வேயில் நடைபெற்ற 37வது சந்திப்பில் கலந்துகொண்ட சுமதி ரூபன் அவர்கள் 39வது சந்திப்பை கனடாவில் நடத்த விருப்பம் தெரிவித்த சம்பவம் நினைவுறுத்தப்பட்டு அவ்வாறே 39வது சந்திப்பு கனடாவில் நடைபெற்றது.
இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை பிரான்சில் நடைபெற்ற 38வது இலக்கியச்சந்திப்பிலேயே அனைவரும் அறிந்திருந்தார்கள். இருந்தபோதும் 40வது இலக்கியச் சந்திப்பை இலண்டனில் நடத்துவதற்கான தமது விருப்பத்தை நண்பர்கள் கோரியிருந்தார்கள். தற்போது இலண்டனில் தாம் செய்யமுடியாத சூழல் இருப்பதாக அவர்கள் தெரிவித்த பட்சத்தில் 40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடைபெற இருக்கின்றது.
இலங்கையில் நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது பெயர் விபரம் கீழே தரப்பட்டடிருக்கின்றது. புகலிடத்தில் இலங்கையில் நடத்துவதற்கு விருப்பமும், ஒத்துழைப்பும் தரும் சிலரது பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் இணைந்து செயல்படுவதற்கும், நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களும் கீழ்காணும் மின் அஞ்சல்மூலமாக தொடர்புகொள்ளவும். 2013 ஆண்டு யூலை, ஆகஸ்ட் மாதங்களே புகலிடத்தில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என அதிகமானவர்கள் கருதுகின்ற பட்சத்தில் அக்காலங்களிலேயே இலங்கையில் இலக்கியச்சந்திப்பை நடாத்த உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. திகிதி விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.
இலங்கையிலுள்ள நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
————-
1 சோதிதாசன் – (இலக்கியகுவியம்) யாழ்ப்பாணம்
2 ஆத்மா (கவிஞர்) – மட்டக்களப்பு
3 லெனின் மதிவாணன் (படைப்பாளி) – தென்இலங்கை
4 நவாஸ் – (கவிஞர்)மட்டக்களப்பு
5 கருணாகரன் (படைப்பாளி) – கிளிநொச்சி
6 யோ.கர்ணன் (படைப்பாளி) – யாழ்ப்பாணம்
7 வாசுகி (இலக்கிய, சமூக ஆர்வலர்) – யாழ்ப்பாணம்
8 தமிழ் அழகன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
9 வேல்தஞ்சன் (சமூகசெயல்பாட்டாளர்) – யாழ்ப்பாணம்
10 வசீம் அக்ரம் – (படைப்பாளி) மட்டக்களப்பு
11 திசோரா – (படைப்பாளி) மட்டக்களப்பு
————-
புகலிடத்து நிகழ்ச்சி நிகழ்வுகளுக்கான ஆலோசனைக்குழு
1தேவதாசன் – பிரான்ஸ்
2 அசுரா- பிரான்ஸ்
3 கற்சுறா – கனடா
4 ஜீவமுரளி – ஜேர்மனி
5 ராகவன்- இலண்டன்
(மேலும் ஆலோசனைக்குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவும்)
புகலிடத்திலிருந்து ஒத்துழைப்பவர்களும், இதில் கணிசமானவர்கள் இலங்கைக்கு வந்து கலந்து கொள்ளவும் ஆர்வமுள்ளவர்கள்.
1 ஸ்ராலின் – பிரான்ஸ்
2 விஜி – பிரான்ஸ்
3 சோபாசக்தி – பிரான்ஸ்
4 சுந்தரலிங்கம் – பிரான்ஸ்
5 யோகரட்ணம் – பிரான்ஸ்
6 அதீதா – கனடா
7 உமா – ஜேர்மனி
8 சந்தோஸ் – இலண்டன்
9 தமயந்தி – நோர்வே
10 பானுபாரதி – நோர்வே
11 கீரன் – இலண்டன்
12 ரெங்கன் – இலண்டன்
13 ஜோர்.இ.குருஷேவ் – கனடா
14 பாபு பரதராஜா – கனடா
15 பேராதரன் – கனடா
16 மெலிஞ்சி முத்தன் – கனடா
17 அரவிந் அப்பாத்துரை -பிரான்ஸ்
18 சபேசன் – கனடா
தொடர்புகளுக்கு : ilakkiyachchanthippu40@gmail.com

Exit mobile version