Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஓரினச் சேர்க்கைதான் இந்தியாவின் பிரச்சனையா?:தொம்பன்

 ஓரினச் சேர்க்கை தொடர்பான விவாதங்கள் நடந்ததைத் தொடர்ந்து டில்லியில் கருத்துத் தெரிவித்த கிறிஸ்தவ மத குரு. இது இந்தியக் கூட்டுக் குடும்ப வாழ்வை சிதைப்பதோடு இந்திய மரபை குலைத்து விடும் என்றார். இந்துச் சாமியார் பாபா ராம்தேவும், இந்து முன்னணி ராமகோபாலனும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் இதே கருத்தை பிரதிபலித்தார்கள். தங்கள் மதங்கள் வழங்கியிருக்கும் புனிதக் கடமைகளை இந்த ஓரினச் சேர்க்கை குலைப்பதாக இவர்கள் கருத்துத் தெரிவித்த அதே நேரம். இந்திய அரசு ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவே இருந்தது. வலுவான எதிர்ப்பு ஒன்று உள்துறை அமைச்சகத்தால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சாதகமில்லாமல் போயிருக்கும். டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டிருக்கும்.முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருந்த போதே ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து கருத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும் அது இம்முறை மௌனமாகவே இருந்தது. மிக எச்சரிக்கையாக இவ்விஷயத்தை கையாண்டது. ஏனென்றால் ஓரினச் சேர்க்கை கலாசாரத்தை பிரதான மூன்று மதங்களுமே எதிர்க்கின்றன. கொஞ்சம் பிசகிநடந்தாலும் மத்திய அரசை கவிழ்த்து விடும் ஆபத்து இதற்கு உண்டு என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள்.

 

ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் இந்த நீதிமன்ற அங்கீகாரத்தை நுணுக்கமாகப் பார்த்தால் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிற நாடு, மேற்குலகை முன்மாதிரியாகக் கொண்டு ஆசியாவில் ஒரு புதிய ஒழுங்கை கட்டமைத்துக் கொண்டிருக்கும் நாடு. இப்போது அதற்கு சுற்றுலா தொடர்பாகவும், இறுக்கமான சாதீய, குடும்ப அமைப்பிலிருந்தும் நாங்கள் மேற்குலகிலிருந்தும் வித்தியாசப்படவில்லை என்பதை உலகுக்குக் காட்டியாக வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது. பொதுவாக முற்போக்கு அறிவு ஜீவிகளால் ஆதரிக்கப்படுகிற ஹோமோ செக்ஸ், மரணதண்டனை கூடாது, மனித உரிமை மீறல்கள், போலி என்கவுண்டர்கள், போன்ற கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படாத நிலையில் ஓரினச் சேர்க்கையை மட்டும் ஏன் இந்தியாவில் அங்கீகாரத்திற்கு வருகிறது என்பதை யோசித்தால் நடந்திருக்கும் நல்ல விஷயத்திற்குப் பின்  காலனீய சிந்தனை மரபு ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக இருபதாண்டுகளுக்கு முன்னர் வரை திருநங்ககைகள் குறித்த உறையாடல்கள் தமிழகத்தில் பொதுவெளியில் இல்லை. அப்போது தீவீரமாக பேசியவர்கள் சிறு குழுவினராக இருந்தனர். அவர்களின் கோரிக்கைகளை கவனிக்கவோ அது குறித்து ஒரு விவாதத்தை முன்னெடுக்கவோ  அக்கறையை ஆட்சியாளர்கள் யாரும் கொண்டிருக்க வில்லை. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் சிக்கியிருக்கும் இந்தியா 2004&ல் சுனாமி அலைகளால் தாக்கப்பட்ட போது மீனவ மக்களை குறிவைத்து ஏராளமான தன்னார்வக் குழுக்கள் களத்தில் இறங்கின. இந்தியாவில் முதலீடு செய்த போர்ட், பி.எம். டபிள்யூ, ஹூண்டாய், இன்னபிற பன்னாட்டு நிறுவனங்கள் சுனாமிக்கா கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களுக்காக செலவு செய்தன. அரசு செய்ய வேண்டிய வேலைகளை அரைகுறையாக தன்னார்வக்குழுக்கள் செய்தன. நிதி தீர்ந்ததும் அப்படியே போட்டு விட்டு இன்று அவர்கள் அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். ( தன்னார்வக் குழுக்களின் மிக பிரதானமாக குறியாக வன்னி மக்களும் இப்போது உருவாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது) சுனாமி மட்டுமல்லாது கலாசாரத் தளத்தில் பல் வேறு குழுக்களை உருவாக்கி  களமிறக்கி விட்டன தனியார் நிறுவனங்கள். அவர்கள் ஹெச்.ஐ.வி கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளார்கள், திருநங்கைகள் என இவர்களின் உரிமைக்காகக் குரல் எழுப்புவதாக நிதிகளைக் கோரி அவர்களை ஒருங்கிணைத்து இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இதற்கு பெரும் ஆதரவும் கிடைத்தது. அந்த வகையிலேயே இது தன்னார்வக்குழுக்களுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் தோன்றுகிறது.

 

பாலினச் சிறுபான்மையோர் விஷயத்தில் நடந்திருக்கும் இவ்விஷம் மிகவும் நல்ல விஷயம்தான் அதை இந்தியா மாதிரியான ஒரு அரை நிலபிரபுத்துவ நாட்டிலிருந்து வரவேற்பது நல்ல விஷயமும் கூட, ஆனால் ஆண் வாரிசு சொத்துரிமை தொடர்பாகவும், இந்து மதம், சாதி, அதன் இன்னொரு அடுக்கான குடும்பம் என இவைகள் குறித்தெல்லாம் தன்னார்வக்குழுக்களுக்கு அபிப்பிராயங்கள் இல்லை. காரணம் அவர்ளுக்கு எல்லாமே நிவாரணம்தான். அரசியல் அல்ல ஓரினச் சேர்க்கை உரிமையை வென்று விட்ட ஒரு நாட்டில் மரணதண்டனைக்கு எதிராக குரலை உயர்த்த முடியாத சூழல். எந்த தன்னார்வக் குழுக்களும் இந்த மரண தண்டனை விஷயத்தை கையில் எடுக்கவில்லை. காரணம் இன்றைய காலனீய ஒழுங்கிற்கு அது தேவைப்படுகிறது. இந்தியாவில் அப்சல் குருவும் , பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங்கும் இருக்கும் வரை தூக்குக் கயிற்றின் கீழ் ஆடும் வரையிலேயே இந்தப் பதட்டத்தை அதிகரித்துச் செல்ல முடியும். இந்தப் பதட்டம் இப்பிராந்தியத்தில் நீடிக்கும் வரையே இந்திய, அமெரிக்க உறவுகள் நியாங்களைத் தேடி ஒன்றாகவே பயணிக்கும்.

 

ஓரினச் சேர்க்கையாளர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதமாக நீதிமன்றத்தில் முன் வைத்தது. ஓரினச் சேர்க்கை உறவு இயர்க்கைக்கு புறம்பானது என்று தண்டிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377&வது சட்டப் பிரிவு என்பது. 148 ஆண்டுகாலப் பழமையானது வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இயல்பிலேயே இயர்க்கைக்கு முரணாகவே இருக்கிறது என்று வாதிட்டார்கள். உண்மையிலேயே அப்படித்தான் தங்களை திருநங்கையாக உணரும் ஒருவர் இன்னொரு ஆணுடன் மனம் விரும்பி உறவு கொள்ளும் போது அது எப்படி இயர்க்கைக்கு விரோதமானது ஆகும். ஆனால் இந்த இடத்தில் திருநங்கைகள் ஒரு சிக்கலை எதிர் கொள்கிறார்கள். ஆணாகப் பிறந்து தன்னை பெண்ணாக உணரும் ஒரு திருநங்கை தன் உணர்வுக்கு எதிரான ஒன்றாகவே ஆண் குறியை உணறுகிறார். இது இயல்பாகவே அவரது மனதில் நிகழ்கிறது. அப்போது அவர் தன் ஆண்குறியை அகற்றி விட நினைகிறார். முன்னர் சேலம் போன்ற பகுதிகளில் கூர்மையான கற்களால் ஆண்குறியைச் சிதைத்து அகற்றுவார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் ஆண்குறியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யபப்படுகிறது இலவசமாக. ஆனால் அமெரிக்கா, பாங்காங் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, மும்பை, புனே, டில்லி போன்ற நகரங்களிலும் ஆண் குறியை அகற்றி பெண் உறுப்பைப் பொறுத்த ஒரு இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறதாம்.  சாதாரண மருத்துவ மனைகளில் ஆண் குறியை அகற்ற மட்டும் இருபதாயிரம் ரூபாய் வரை ஆகிறதாம். ஆனால் எந்த தன்னார்வக்குழுக்களும் திருநங்கைகளுக்கு ஆண்குறிகளை அகற்ற பணம் கொடுப்பதில்லை. ,மாறாக அவர்களைக் காட்டி பணம் கறக்கவே தனார்வக்குழுக்கள் ஆர்வம் காட்டுகின்றன என திருநங்கைகளே குற்றம் சுமத்துகிறார்கள். ஆணாகப் பிறந்து தன்னை பெண்ணாக உணரும் ஒரு திருநங்கைகளில் 90% பேர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அல்லது அடித்துத் துரத்தப்படுகிறார்கள். தற்கொலை, கொலை, என பலவாராகவும் குடும்ப மேன்மை கருதி குடும்பத்தினரே திருநங்கைகளைக் கொன்றும் விடுகிறார்கள். வீட்டிலிருந்து வெளியேறிய நங்கைகளின்  வேட்கை முழுக்க ஆண்குறியை அகற்றுவதிலேயே இருக்கிறது. அது எப்போது தன் உடலில் இருந்து அகற்றப்படுகிறதோ அப்போதே அவள் விடுதலையாகிறாள். மூன்றாம் பாலினமாக மாற்றம் பெறுகிறார். அதற்கான உழைத்து சேமித்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து 60% திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் மனதளவில் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். காரணம் அவர்களிடம் பணம் இல்லை. இருபதாயிரம் இருந்தால் மட்டுமே இன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். அரசு மருத்துவ மனைகளுக்குச் சென்று இலவசமாக ஆணுறுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை என்கிற வசதி எல்லா மாவட்ட தலைநகர மருத்துவமனைகளிலும் இல்லை.

 

பதினைந்தாயிரத்தில் தொடங்கி ஐம்பதாயிரம் ரூபாய் வரை அறுவை சிகிச்சைக்கு செலவு செய்ய ஒரு திருநங்கை தயாராக இருந்தால் அவர் தன் விருப்பத்தைக் குலைக்கும் அடையாளத்தை அறுத்து எரிந்து விடலாம். ஆனால் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை இன்னொரு ஆணோடு உறவு கொள்வது என்பது இப்போதிருக்கிற சட்டத்தின் படி குற்றமே. இங்கே உணர்வு நிலை என்பது சட்டத்திற்கு முக்கியமல்ல அடையாளமே?ஆண் குறியுள்ள எவரும் ஆணே என்பதுதான் சட்டத்தின் அணுகுமுறை. ஆனால் இயர்க்கைக்கு முரணானான என்னும் தண்டனைப் பிரிவின் கீழ் சிக்கும் ஒரு ஓரினச் சேர்க்கை விருப்பத்தைக் கொண்ட ஆண் ஜோடிகளையும், பெண் ஜோடிகளையும்,  திருநங்கைகளோடு ஒன்று படுத்தி பார்த்து விட முடியாது.நார்மல் ஓரினச் சேர்க்கையாளர்களோடும், லெஸ்பியன்ஸ்சோடும், திருநங்கைகள்தான் தங்களை ஒன்றாக அடையாளப்படுத்திப் பார்க்கிறார்களே தவிர பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்கள் மனதில் திருநங்கைகள் குறித்த பிம்பம் என்பது பொதுப்புத்தியில் என்ன பதிந்திருக்கிறதோ அதுதான். ஆக இங்கே விட்டுக் கொடுக்கும் நிலையில் இருப்பதும் அவர்கள்தான்.

 

 ஓரினச் சேர்க்கை என்பது பழக்க வழக்கங்களால் வருவது. பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்கள் மேட்டுக்குடிகளாக இருப்பதும் பெரும்பாலான திருநங்கைகள் ஏழைகளாக இருப்பதும் இதில் ஆழமாக நோக்கப்பட வேண்டிய அதே நேரம் 148 பழமையான இயர்க்கைமுராணான என்கிற வரையறையின் கீழ் வரும் 377&வது பிரிவு மட்டும்தானா? இன்றைய இந்தியாவின் தண்டனை முறையில் இருக்கும் பல் வேறு சட்டங்களும், விவாகரத்துச் சட்டங்களும், பாலியல் வன்முறைச் சட்டங்களும், அரதப்பழையச் சட்டங்கள்தான். இந்திய அரசியல் சட்டத்தைக் காட்டிலும் நமது நீதிபதிகளும் ஆட்சியாளர்களும் இன்னும் மனுவின் நீதியையே வழக்கின் தீர்ப்பாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வர்க்க நிலையை கணக்கில் எடுக்காமல் வழங்கப்படும் தண்டனை முறை குறித்து எவ்விதமான கேள்விகளும் இங்கு இல்லை.

 

நீண்டகாலமாக இந்திய குழந்தைகளுக்கு மறுக்கப்படும் சமச்சீர் கல்விமுறை இன்றைய இந்திய காலனீய ஒழுங்கிற்கு எதிரான கொள்கையாக இருக்கிறது. வெள்ளை ருசியை நம் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் மெக்காலே கல்வி முறைதான் இன்னும் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே சமயம் மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக ஓய்.ஜீ.பி குடும்பம், லதா ரஜினிகாந்த் குடும்பம், சோ ராமசாமி போன்றோர் குருகுலக் கல்வி எனப்படும் பார்ப்பனக் கல்விமுறையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் இந்துத்துவச் சாயலோடு இந்தப் பள்ளிகள் நடத்தப்படுவதால் இந்துச் சமூகத்தின் மேட்டுக்குடிகள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்ப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆரம்பக் கல்விக்கூடங்கள், நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகள் என கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பள்ளிகளைக் கொண்டு இயங்குவதுதான் தமிழக அரசின் கல்வித்துறை. இன்னமும் பெரும்பாலான ஏழைத் தமிழர்கள் அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயெ தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறர்கள்.விவசாயக் கூலிகள், தினக்கூலிகள், ரிக்ஷா தொழிலாளிகள்,கிராமப்புற ஏழைகள் என இவர்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்களின் குழந்தைகள் கூட பக்கத்தில் உள்ள நகரத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பப் பட்ட போது அந்த பள்ளிகளை தாங்கிப் பிடித்தது இந்த ஏழை மாணவர்கள்தான்.பாரபட்சமான கல்வித் திட்டத்தால் இந்த மாணவர்களின் கல்வித் திறன் குறைக்கப்படுகிறது. தமிழ் மட்டுமே தெரிந்து வளரும் இந்தக் குழந்தைகள் மீது சமூகம் ஒரு விதமான மெட்ரிக் மனோபாவ தீண்டாமையை கட்டவிழ்த்து விடுகிறது. படித்த பணக்கார வர்க்கமே இந்த தீண்டாமையை ஏழைக் குழந்தைகள் மீது தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

 

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்விக்கும் வேலைக்குமான வேறு பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.கல்வி என்பது சமூக அடிமைத் தளைகளை அறுத்தெரிந்து ஒரு மனிதன் சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டுவதும் அதன் படியே நடக்க அறிவால் தூண்டுவதும்தான் கல்வியின் பணி என்றும்.வேலை என்பது இந்த சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு உத்திரவாதம் அவளவுதான் என்று வேலையையும் கல்வியையும் பிரித்துப் பார்த்தார்.ஆனால் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் மெக்காலே கல்வி முறையைத்தான் நமது கல்வித் திட்டமாக நாம் வைத்திருக்கிறோம்.மெக்காலே கல்வித் திட்டத்தில் படிக்கும் ஒரு இந்தியக் குழந்தை உடலால் இந்தியராக இருந்தாலும் உணர்வாலும் ருசியாலும் வெள்ளையராக  வளர்வதுதான் மெக்காலேயின் கல்வித்திட்டம்.வழி வழிவாய மெக்காலே கல்வித்திட்டத்தை மனனம் செய்கிற நமது குழந்தைகள் பள்ளியில் அணியும் யூனிபார்மில் தொடங்கி அலுமினியத் தட்டேந்தி சத்துணவிற்காக நிற்கும் வரை தொடருகிறது இந்த தீண்டாமை. எல்லோருக்கும் ஆரம்பக்கல்வி, எல்லோருக்கும் சமச்சீர் கல்வி என்ற கோரிக்கை இன்றைய காலனீயவாதிகளால் ஏளனம் செய்யப்படுகிறது.

 

 

இது போல உறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு சட்டம் மனிதர் கழிவை மனிதர்களே அகற்றும் நடைமுறை தொடர்பானது. 1993&லேயே மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து தடை செய்யப்பட்ட விஷயம்தான் இந்த மனிதக் கழிவை மனிதனே அகற்றும் மிக இழிவான கேவலமான பணி. ஒரு மனிதனை மனிதக் கழிவுகளை அகற்றச் சொல்லி யார் உத்தரவிடுகிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் ஆறு மாதம் சிறைத்தண்டனை என்கிறது சட்டம். 1993&ல் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் சட்டத்தை முதலில் 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டது. 2006&ல் ஜெயலலிதா ஆட்சியின் முடிவில் அந்தச் சட்டத்தை தமிழகமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுத் துறையின் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் கைகளால்தான் மனிதக் கழிவுகளை இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறார்கள்.பல முறை ரயிவே துறையில் இந்த முறையை ஒழிக்க முயர்ச்சிகள் எடுத்தாலும் அது எவ்வித பலனையும் அழிக்க வில்லை. இப்போது மீண்டும் மத்திய அரசு நாடு முழுக்க உள்ள நாற்பது லட்சம் கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.பார்ப்பன மரபில் இதெல்லாம் மனித இழிவாகவோ அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டதாகவோ தெரியும் போது இந்திய மனச்சாட்சி ஏன் ஓரினச் சேர்க்கையை மட்டும் அங்கீகரிக்கிறது என்பது காலனீய நோக்கில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம். தவிர ஓரினச் சேர்க்கை அங்கீகாரத்தை நானும் ஆதரிக்கிறேன்.

 

உணவுக்காகவும், கூலிக்காகவும் போராடும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் போராடுகிறார்கள். வசிப்பிடங்களுக்காக,உணவுக்காக, உழைப்புக்காக ஆனால் அரசோ உழைப்புக்கான ஊதியம் குறித்துப் பேசாமல் ‘‘வேலைக்கு உணவு’’ என்று பேசுகிறது. அப்படியானால் ஏழைகள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தானா? ஓரினச் சேர்க்கை மட்டுமேதான் இந்தியாவின் பிரச்சனையா? அதைத் தாண்டி இந்தியா வாழ்கிறதா?

Exit mobile version