Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது.

வவுனியாவில் மத்திய கடைத் தொகுதிகளுக்குள் நீண்டகாலமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நிலையம் இயங்கிவந்தது. அதேநேரம் தனியார் பேருந்து நிலையங்கள் வீதியோரத்திலேயே இயங்கி வந்தன.

இந்நிலையில், வவுனியா நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பேருந்து நிலையமொன்று அவசியம் என பலதரப்பட்டவர்களாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 195 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையினால் இப்பேருந்து மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

இது கடந்த வருடம் திறக்கப்பட்டாலும், இப்பேருந்து நிலையத்துக்குள் வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சங்கத்தினர் செல்வதற்கு மறுத்து வருவதுடன், பல பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளைக்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து முதலமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அனைத்து பேருந்து சேவைகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்குமாநு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

முதலமைச்சரின் இந்த உத்தரவையடுத்து, நேற்று பழைய பேருந்து நிலையத்திற்கு வாயிற் தடை போடப்பட்டது. இதனால், வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து நிலைய கடை உரிமையாளர்களும் தமது வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பேருந்துகளும் தரிப்பதற்கென மக்களால்தான் ஒரு பொதுவான மத்திய நிலையம் கோரப்பட்டது. இந்நிலையில் புதிய மத்திய நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? இதனால் தமது போக்குவரத்தின்மூலம் பெறப்படும் வருமானம் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கமே, இவர்களைத் தூண்டி விடுகின்றதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

Exit mobile version