Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்….. ஒரு கைது……-ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! : அஜித்

<font color=red>பொலிசாரால்  அழைத்துச் செல்லப்படும்  சங்கர்</red>
பொலிசாரால் அழைத்துச் செல்லப்படும் சங்கர்

அதிகாரத்தின் வெறித்தனத்திற்கு எதிராரான ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் அழிக்கப்படுகின்ற மனிதாபிமானம் மரணித்துப்போன சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இன்று காலை அதிகார வர்க்கத்தின் அநீதிகளைக் கண்டு கோபம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரை வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கடைந்தெடுத்த   பொய்க் குற்றச்சாட்டுகளோடு  கருணாநிதி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவர் அரசியல் கைதி கூட இல்லை. கிரிமினல். கொள்ளைக்காரர்களோடு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஊடக சுந்திரத்திற்கு ராஜபக்ச இழைக்கும்  கொடூரங்களை விட இது எந்த வகையிலும் குறைந்தது அல்ல. காலை ஒன்பது மணி! சென்னை ஆரவரப்பட்ட ஆரம்பித்த நேரம்!! 34 வயதான சங்கரை 341.29(b)3235062(2) I.P.S என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட மதுரவாயல் என்ற பொலீஸ் சார்ஜண்ட் கைது செய்துள்ளார்!!!

உடனடியாகவே அவர் மீது பொய்வழக்க்குத் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சங்கரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த வருடம் தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யபப்ட்டவர் இந்த சங்கர்.

ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர் அதிகார பீடங்களின் ஊழல் மயப்பட்ட குணத்தை போட்டுடைத்தவர். இப்போது அவர் கைது செய்யப்பட்ட என்னகாரணம். சவுக்கு என்னும் இணையதளத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை அம்பலப்படுத்தி எழுதியதாகவும், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டுக்கு எதிராக எழுதியதாகவும், நக்கீரன் இதழின் ஆசிரியர் காமராஜ் அவர்களுக்கு எதிராக எழுதியதற்காகவும் இந்த மூன்று அதிகாரப் பிசாசுகளால் சங்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது ஊடகத்துறைக்கு கருணாநிதி அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை. நமது மௌனம்,  அரசின் செயலுக்கு வழங்கும் அங்கீகாரம். சங்கரை வழிப்பறி வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்படுகிற குற்றவாளிகள் உள்ளூர் ரௌடிகள் அடைக்கப்படும் செல்லில்தான் அடைக்கப்படுவார்கள். அப்படி சங்கரை சிறையில் அடைத்து சிறைக்குள்ளேயே ரௌடிகளை வைத்து தீர்த்துக் கட்டி விட்டு ரௌடிகளுக்கிடையே மோதல் ஒருவர் கொலை என்றூ கதையை முடிக்க இக்கும்பல் திட்டமிடுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

அன்பார்ந்த வழக்கறிஞர்களே! ஈழத் தமிழ் ஆதரவாளர்களே! புலம்பெயர் தமிழர்களே! இந்தப் பிரச்சனைகள் எல்லாமே ஈழத்தில் போர் நிறுத்தம் கோரிப் போராடிய தமிழக சக்திகளை ஊடகங்கள் மூலமாகவும் போலீஸ் துணையோடும் யார் எல்லாம் ஒடுக்கினார்களோ அவர்களே இப்போது சங்கரை கைது செய்திருக்கிறார்கள். நமது அரசியல் வேறு பாடுகளைக் களைந்து சங்கருக்காக குரல் கொடுப்போம். ……..சரி

சங்கர் எழுதியதாகச் சொல்லப்பட்ட அந்தக் கட்டுரையில் அப்படி என்னதான் இருக்கிறது…… எதற்காக ஜாபர்சேட்டும், நக்கீரன் காமராஜும் கருணாநிதியும் கொதிக்க வேண்டும். இதோ நீங்களே படியுங்கள் அந்தக் கட்டுரை.

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..

ஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது ? அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

முதலில் சோகத்தை பகிர்ந்து கொள்வோம். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த, காவல்துறை ஐஜிக்கள் ஜாபர் சேட் மற்றும் சங்கர் ஜிவால் பிரியப் போகிறார்கள் என்ற செய்தியை சவுக்கு வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறது.

இரட்டையர்களாக இருந்து, தங்களின் இரண்டு ஜோடி காதுகளை, தமிழகத்தில் செல்போனில் பேசும் அத்தனை பேர் வாயிலும் வைத்து, ஒட்டு கேட்டு, மனித சமுதாயத்திற்கு, அரும்பெரும் பணியை ஆற்றி வந்த, இந்த இரட்டையர்கள் பிரியப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வருத்தமான செய்தி ? ஆம் நண்பர்களே.

சங்கர் ஜிவால், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Research and Analysis Wing பிரிவுக்கு மாறுதலில் செல்ல இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான உத்தரவு வரப் போகிறது.

ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது, இந்தியாவின் வெளிநாட்டு, உளவு நிறுவனம். அமெரிக்காவின் சிஐஏ போல. இவர்கள் வேலை. அதாவது, வெளிநாட்டில் போய் ஒட்டுக் கேட்பது. அதுலதான் நம்ப ஆள் கில்லாடியாச்சே. இவரு, இவங்க அம்மா வயித்துல இருந்தப்பவே, மகாபாரத அர்ஜுனன் மகன் மாதிரி, ஒட்டுக் கேட்டவர் போலருக்கு.

சரி, இந்த சங்கர் ஜிவால் நெஜமாவே நல்லவரா ? கெட்டவரா ? இவரோட பின் புலத்தை சொல்லி விடுகிறேன். சவுக்கு வாசகர்களே முடிவு செய்யட்டும்.

சங்கர் ஜிவால் 1990ம் ஆண்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. இவர் பிஇ மெக்கானிக்கல் படித்த பொறியாளர். உத்தராகாண்டில் உள்ள அல்மோரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி பெயர் மம்தா சர்மா.

இவரது மனைவி மம்தா ஷர்மா பெயரில், “டி3டி டெக்னாலஜிஸ்“ என்ற ஒரு தொலைபேசி ஒட்டுக் கேட்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் ஆவணங்களின் படி, மம்தா சர்மா தொடங்கிய சில காலத்திலேயே, அவர் அந்நிறுவனத்திலிருந்து விலகி விட்டதாக கூறப் படுகிறது.

யாராவது, ஒரு நிறுவனம் தொடங்கும் போது இயக்குநராக சேர்ந்து விட்டு, தேவையான முதலீட்டை செய்து விட்டு, விலகுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

காவல்துறை வட்டாரங்களில் விசாரித்ததில், இந்த நிறுவனமே, சங்கர் ஜிவாலின் நிறுவனம் தான் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நிறுவனம் எதற்கு தொடங்கப் பட்டது தெரியுமா ?
சங்கர் ஜிவால், ஐந்து ஆண்டுகள், தெற்கு மண்டல, போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் மண்டல இயக்குநராக பணி புரிந்தார். Narcotics Control Bureau என்று அழைக்கப் படும் இந்த நிறுவனத்தின் வேலையே, போதைப் பொருள் கடத்துபவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களை பிடிப்பதுதான்.

சட்ட பூர்வமாக ஒட்டுக் கேட்பது என்பது, மத்திய உள்துறைச் செயலாளரின் அனுமதியோடுதான் செய்யப் பட வேண்டும் என்பதற்காக NCB ல் உள்ள ரகசிய நிதியை பயன்படுத்தி, சட்ட விரோத ஒட்டுக் கேட்பு தொடங்கப் பட்டது.

சரி சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கலாம்.

அதை யார் செய்வது ? அப்போது, வெளிநாட்டிலிருந்து, இவ்வாறு சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவிகள் வாங்கலாம் என்று திட்மிட்டார் சங்கர் ஜிவால்.

கருவிகளை ரகசிய நிதியிலிருந்து வாங்கி NCB அலுவலகத்தில் வைத்துக் கொள்ள முடியோதே ? அப்படி வைத்தால், சங்கர் ஜிவால், தோழர் தியாகுவைப் போல, “கம்பிக்குள் வெளிச்சங்கள்“ புத்தகத்தை இந்தியில் அல்லவா எழுத வேண்டியிருக்கும் ?

அதனால், ஒரு புதிய திட்டத்தை தீட்டினார் சங்கர் ஜிவால். அதுதான், இவரே பினாமி பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது. இவ்வாறு நிறுவனத்தை தொடங்கும் பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைத்து அந்த நபர் போட்டுக் கொடுத்து விட்டால்… … ?

அதனால் யாரையும் நம்பாமல், தன் மனைவியையே அந்நிறுவனத்தின் இயக்குநராக்குகிறார். ராப்ரி தேவி முதலமைச்சரானது ஞாபகம் இருக்கிறதா ? அதே ஸ்டைல் தான்.

சரி. சொந்த நிறுவனம் தொடங்குவதென்று முடிவாகி விட்டது. இதற்கு முதலீடு. அந்த சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவி, 3 கோடிக்கும் மேல். இது 2005ல். இப்போது அதை விட லேட்டஸ்ட் வெர்ஷன் 8 கோடி ரூபாய்க்கு இஸ்ரேல் தயாரிப்பில் கிடைக்கிறது.

சரி நிறுவனம் மனைவி பெயரில் தொடங்கப் பட்டாகி விட்டது. இதற்கு முதலீடு எப்படி வந்தது ?. நிச்சயமாக, இவர் வாங்கும் சம்பளத்தில் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. இது பற்றித் தோண்டினால், இதை விட பெரிய பூதம் வருகிறது.

சங்கர் ஜிவால், NCB யின் மண்டல இயக்குநராக ஐந்து ஆண்டுகள் இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இவர் தென் மண்டல இயக்குநராக இருந்த போதுதான் மிக மிக அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. பல போடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டு பல்வேறு வழக்குகள் பதியப் பட்டன.

ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம். இந்த ஹெராயின் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது. தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 3
தரம் 1, சர்வதேச சந்தையில் ஒரு கோடி. தரம் 2, சர்வதேச சந்தையில் 60 முதல் 70 லட்சம். தரம் 3, சர்வதேச சந்தையில் 40 முதல் 50 லட்சம் விலை போகும்.

போதைப் பொருள் சோதனையின் போது, கைப்பற்றப் படும் போதைப் பொருட்கள், வழக்கு பரிசோதனைக்காக, 10 முதல் 20 கிராம்கள் எடுக்கப் பட்டு சோதனைச் சாலைக்கு அனுப்பப் படும். அதற்குப் பிறகு கைப்பற்றப் பட்ட பொருட்கள், NCBன் கோடவுன்களின் வைக்கப் பட்டிருக்கும்.

கோடவுன்களில் வைக்கப் பட்டிருக்கும் இது போன்ற பொருட்கள், வழக்கு முடியும் வரை அழிக்கப் பட மாட்டாது. வழக்கு முடிந்ததும், தீயிட்டு அழிக்கப் படும்.

இவ்வாறு கோடவுன்களில் இருந்த தரம் 1, ஹெராயினை, மூன்றாந்தர ஹெராயினை வைத்து மாற்றி விட்டு, முதல் தர ஹெராயினை, சர்வதேச மார்க்கெட்டில் சங்கர் ஜிவால் விற்று விட்டார் என்று ரகசியத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு மாற்றப் பட்டால், அந்த சரக்குகள் ஒரிஜினலா ட்யூப்ளிகேட்டா என்று சரிபார்க்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த வழக்குகள் முடியும் வரை கோடவுனில் இருக்கும். வழக்கு முடிந்தவுடன் தீயிட்டுக் கொளுத்தப் படும். இதை சரி பார்க்க வழியே இல்லை.
மத்திய அரசுப் பணி முடிந்து, சங்கர் ஜிவால் மாநில பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்ததும், சங்கர் ஜிவாலுக்கு, லேசாக கிலி பிடிக்கிறது.

ஒரு வேளை யாராவது கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று. ஆனால், வழக்கு முடியும் முன், வழக்கு ஆவணங்களை அழிக்க நீதிமன்ற உத்தரவு வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு, வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளி சம்மதம் தெரிவிக்க வேண்டும். சங்கர் ஜிவால், 2006-2007 வாக்கில், புழல் சிறையில் போதைப் பொருள் வழக்கில் அடைக்கப் பட்டிருந்த, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங், சாம்சன், மற்றும் இவர்கள் வழக்கில் சம்பந்தப் பட்ட மேலும் இருவரிடம், இவர்கள் வழக்கின் சொத்துக்களை அழிக்க, சம்மதம் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஒரு அபிடவிட்டில் கையெழுத்துப் பெற முயற்சி செய்கிறார்.

இதில் ஒருவர் கையெழுத்துப் போட்டு விடுகிறார். மற்ற மூவரும், இந்த சொத்தை அழிக்க சம்மதம் தெரிவித்தால், ஏறக்குறைய குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும் என்பதால், மறுத்து விடுகின்றனர்.

இவ்வாறு, திருடனிடமே திருடி சங்கர் ஜிவால், டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கான முதலீட்டை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பதிவை படிக்கும் சிபிஐ அதிகாரிகள், தேவையான நடவடிக்கையை எடுப்பார்களா ?
இந்த டி3டி டெக்னாலஜிஸ் தனது வெப்சைட்டில், தாங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பில் நிபுணர்கள் என்று போட்டிருந்தார்கள்.

மேலும், தமிழக உளவுத்துறை தங்கள் க்ளையன்ட்டுகள் என்றும் போட்டிருந்தனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் தொடுக்கப் பட்டிருந்தது.
இப்போது,க்ளையன்ட்டுகள் என்ற லிங்க்கில், This page is under construction என்று வருகிறது. இந்த மாதிரியெல்லாம் நீங்க பண்ணுவீங்கன்னுதானே, நாங்க 20 இடத்துல அந்த பழைய வெப் பேஜ்ஜை சேவ் பண்ணி வைத்திருக்கிறோம். இப்போ என்ன பண்ணுவீங்க ? வெவ்வெவ்வே….

இதுதான் சங்கர் ஜிவாலின் பின்னணி. இப்போ இவரு நல்லவரா கெட்டவரான்னு நீங்கதான் முடிவு பண்ணணும்.

அடுத்ததா, அந்த மகிழ்ச்சியான செய்தி. அது என்ன தெரியுமா ?

எதிரியாக இருந்தாலும் ஒருவன் வீடு கட்டி, தொழில் விருத்தியடைந்து பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தால் சவுக்குக்கு மகிழ்ச்சியே. பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு சவுக்குக்கு உண்டு.

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், அரசின் விருப்புரிமை கோட்டாவில் வழங்கப் பட்ட வீட்டு மனையில், முதல்வரின் செயலாளராக இருக்கும் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரோடும், ஆளுநர் மாளிகையில் ப்ரோக்கராக இருக்கும் நஜிமுத்தீனோடும் நம்ப கர்ம வீரரோடும் இணைந்து, LandMark Constructions என்ற நிறுவனத்தோடு இணைந்து Flat கட்டி விற்கப் போகிறார் என்ற தகவலை சவுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.

இதற்கான தொடக்க விழா அழைப்பிதழை இன்று சென்னையின் மிக மிக முக்கிய புள்ளிகளுக்கு வழங்கிய நஜிமுத்தீன், இவ்வாறு அழைப்பிதழ் வழங்கிய ஒரு நபர் “என்ன சார் இவ்வளவு நாளா இல்லாம திடீர்னு, கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்சுல இறங்கிட்டீங்க“ என்று கேட்டதற்கு, “எனக்காக இல்ல சார். ஜாபர் சேட்டுக்காகத்தான்.

ரெண்டு பேரும் சேந்துதான் பண்றோம். போற போக்கப் பாத்தா, அடுத்த வாட்டி டிஎம்கே வருமான்னு சந்தேகமா இருக்கு, சீக்கிரமா செட்டில் ஆயிடனும்னு சொன்னான். அவனுக்காகத்தான் இப்பவே ஆரம்பிக்கறோம்.

உங்களுக்கு Flat வேணும்னா சொல்லுங்க சார். “ என்று விட்டு, கவர்ண்மென்ட் மாறி விட்டால் மத்திய அரசுப் பணிக்கு போவதற்கு ஜாபர் சேட், இப்போதே தயாராகி விட்டதாகவும், இப்போது விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால், ஒரு ஆண்டு வரை ஜாயினிங் டைம் இருக்கும் Narcotics Intelligence Bureau வின் Regional Director General என்ற பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் தகவலையும் கூடுதலாக சொல்லியிருக்கிறார் நஜிமுத்தீன்.

ஆமாம் Flat constructionல் இறங்குவதற்கு அவருக்கு ஏது பணம் ? எப்படி முடியும் என்று கேட்பீர்கள். சவுக்குக்கும் அதுதான் ஆச்சர்யம்.

ஆனால் ஆதாரம் இருக்கிறதய்யா … இருக்கிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 06.06.2008 நாளிட்ட அரசாணை 2டி எண் 439ன் படி, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் ஜாபர் சேட்டின் மகள் ஜெ.ஜெனிபர் என்பவருக்கு, திருவான்மியூர் புறநகர் திட்டத்தின் கீழ், காமராஜர் நகர் (இங்கேயும் காமராஜா ?) என்ற இடத்தில் 4756 சதுர அடி மனை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஜெனிபர் அக்கா, நீங்க அப்படி என்னக்கா சமூக சேவை பண்ணீங்க ? சொன்னா, நாங்களும் அதே மாதிரி சமூக சேவை பண்ணி இவ்ளோ பெருசா இல்லைன்னாலும், ஒரு 1000 சதுர அடியில ஒரு ப்ளார் வாங்கிக்கிறோம். கொஞ்சம் சொல்லிக் குடுங்கக்கா ….

வீட்டு வசதி வாரியம், இந்த வீட்டு மனையின் விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று இருபது ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதற்கான மொத்த தொகையையும் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர் கட்டி விட்டதாக வீட்டு வசதி வாரிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவ்ளோ பணம் ஏது சார் உங்களுக்கு ?

உங்க எதிரி ஏ.கே.விஸ்வநாதன், வருமானத்திற்கு அதிகமா சொத்து சேத்துட்டதா அவர அரெஸ்ட் பண்றதுக்கெல்லாம் ப்ளான் போட்டீங்க… இதுக்கு உங்களுக்கு ஏது சார் வருமானம் ? எனக்கு தெரிஞ்சு, கவர்மெண்டுல நேர்மையா உழைச்சா இவ்வளவு சம்பளமெல்லாம் கொடுக்கறதில்ல.

ஒட்டு கேட்கறதுக்கு இவ்ளோ பணமா கொடுக்கறாங்க. நான் கூட எங்க பக்கத்து வீட்ல ஒட்டு கேட்டுப் பாத்தேன். எவனும் பத்து பைசா தர மாட்டேங்குறான்.
இதோடு இந்தக் கதை முடியவில்லை. இவ்வாறு தன் செல்ல மகளுக்கு அரசின் விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற ஜாபர் சேட், மகளின் பெயரில் உள்ள இந்த மனையை தன் மனைவி பர்வீன் பெயரில் மாற்றுகிறார்.

சின்ன பொண்ணுன்னு பிசினஸ் பண்ணும் போது தன் பெண்ணை ஏமாற்றி விடுவாங்கன்னு நெனச்சிருப்பாரோ ?

இன்னொரு தமாஷ் சொல்றேன் கேளுங்க. இவரு பொண்ணுக்கு வீடு கொடுத்த அரசாணையில் இவர் கொடுத்திருக்கும் முகவரி, எண் 23, ராஜா தெரு, கல்யாணி நகர் (மங்களகரமான பெயர்), திருவான்மியூர், சென்னை. (சார் உங்களுக்கு திருவான்மியூருலயே இன்னும் எத்தனை வீடு வேணும் ? வேற ஏரியா வாங்கியிருக்கக் கூடாது ?)

இவர் மனைவி, பர்வீன் கொடுத்திருக்கும் முகவரி, பழைய எண் 61, புதிய எண் 6, ஆர் ப்ளாக், 14வது தெரு, அண்ணா நகர், சென்னை 40. (சார் எப்படியாவது ட்ரை பண்ணி, புதிய தலைமைச் செயலகம் மாறியவுடன், அந்த பழைய ஜார்ஜ் கோட்டைய அரசு விருப்புரிமை கோட்டாவில் வாங்கிடுங்க. சூப்பர் பில்டிங். உங்க இமேஜுக்கு நீங்க இந்த வெள்ளை மாளிகையில இருந்தாத்தான் ஜம்முனு இருக்கும்)

இவுரு ஒருத்தரு ஆச்சா ? அடுத்தது கருணாநிதியோட செக்ரட்டரியா இருக்க ராஜமாணிக்கம். இந்த ஆள் ரிட்டையர் ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சு. காட்டுக்கு போற வயசுல, இந்த ஆள், செக்ரட்டேரியட்டுல உக்காந்துக்கிட்டு என்னா கூத்து பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா ?

இவரு பையன் பேரு துர்கா சங்கர். இவரும் சமூக சேவகராம். இவருக்கு நம்ம பிரபல சமூக சேவகரும், ஜாபர் சேட்டின் மகளும் ஆன ஜெனிபருக்கு வழங்கப் பட்ட வீட்டு மனைக்கு அடுத்த மனைக்கு அடுத்த மனை. இந்த மனை எண் என்ன தெரியுமா ? 538. இதன் மொத்த சதுர அடி 44668 சதுர அடி.

சரி இது ரெண்டுக்கும் நடுவுல 539 இருக்கே அது யாருதுன்னு நீங்க கேக்கறது தெரியுது. கொஞ்சம் இருங்க வர்றேன். இவரின் மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பன்னிரண்டு லட்சத்து தொண்ணுறாயிரத்து ஐநூற்று அறுபது ரூபாய். இவரும் மொத்த தொகையையும் செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவக்கின்றன.

இந்தத் தொகையை ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் செலுத்தினாரா, ராஜமாணிக்கமே செலுத்தினாரா என்பதை கடிதநிதி ச்சீ கருணாநிதிதான் சொல்ல வேண்டும்.
இப்போ அந்த 539 ப்ளாட் நம்பருக்கு வருவோம்.

இது யார் தெரியுமா ? நம்ப டர்ட்டீ பாய்ஸ் டீமுல இருக்கற கர்ம வீரர் தான். வேற யாரு. சும்மா சொல்லக் கூடாது சார். பேமிலியோட போட்டோவுல சூப்பரா இருக்கறாரு. நல்லா சிரிச்சுகிட்டு வேற இருக்கறாரு. நல்லா சிரிக்கட்டும். இப்போ கோபால் சிறை அனுபவங்களையும், நீதிமன்ற அனுபவங்களையும் எழுதுவது போல, இவரும் எழுதத்தானே போகிறார்.

இவருக்கு தன்னுடைய மனைவி ஜெயசுதா பெயரில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஜெயசுதா யார் ? வேற யாரு. அவரும் சமூக சேவகர் தான். (இவ்ளோ சமூக சேவகர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் ஏன் இவ்வளவு அவலம் ? என்ன கொடுமை சார் ?) இவருடைய 539வது ப்ளாட் மொத்தம் 4764 சதுர அடி.

இவுரு படா கில்லாடி சார். இவரு பேர்ல இருக்கற காமராஜ் நகர்லே வாங்கிட்டாரு பாருங்களேன் ? இவரது மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து, இருபத்தி எட்டாயிரத்து எண்ணுற்று எண்பது ரூபாய். இவரும் மொத்த தொகையையும், வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்தி விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

(கோபால் சார். நக்கீரன்ல இவ்வளவு சம்பளமா கொடுக்குறீங்க ? அப்புறம் ஏன் உங்க நிருபர்கள், போற எடத்துலயெல்லாம் கவர் வாங்குறாங்க ? என்னமோ போங்க சார்.)
இவர்கள் அனைவரும் சேர்ந்து Land Mark construction என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்து கட்டுமானப் பணியை துவங்க இருக்கிறார்கள்.

Flat வேண்டுபவர்கள், ஜானி ஜான் கான் ரோட்டில் உள்ள பங்குதாரரையோ, உளவுத்துறையில் உள்ள பங்குதாரரையோ, தலைமைச் செயலகத்தில் உள்ள பங்குதாரரையோ, ப்ரோக்கர் நஜிமுத்தீனையோ அணுகவும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

இப்போ புரியுதா சவுக்கின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. எதிரியை வாழ்த்தும் பக்குவம் வேண்டுமையா, வேண்டும்.

http://www.savukku.net/2010/07/blog-post_19.html

Exit mobile version