Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது.
இந்தியாவில் முதலீட்டுச் சூழல் மோசமாகிவருகிறதென்று அமெரிக்க முதலீட்டாளர்கள் தன்னிடம் பெரிதும் கவலை வெளியிட்டார்களென்றும், பல துறைகளில், எடுத்துக்காட்டாக சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒபாமா அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிறகு, “தன்னுடைய பொருளாதார எதிர்காலத்தை இந்தியா எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வழிகாட்டுவது எங்கள் வேலை அல்ல, அதைத் தீர்மானிக்க வேண்டியது இந்தியர்கள்தான்” என்று யோக்கியர் போலக் கூறிவிட்டு, அடுத்த வாக்கியத்திலேயே, “பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம் என்ற கருத்து உங்கள் நாட்டில் வளர்ந்து வருவதாகத் தெரிகிறது” என்று ஒரு கொக்கியைப் போட்டு, “அப்படி பிரச்சினைக்குரிய சீர்திருத்தங்களை இந்தியா அமல்படுத்தத் தொடங்குமானால், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும்” என்றும் கூறியிருக்கிறார். “சில்லறை வணிகம், பென்சன் நிதி, காப்பீடு மற்றும் கல்வித்துறையை திறந்துவிடு. ஒத்துவராதவர்கள் இருந்தால் நான் அவர்களைச் சரிக்கட்டுகிறேன்” என்பதுதான் ஒபாமாவுடைய கூற்றின் பொருள்.
ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவித்த சூரர்கள் என்ன கூறினார்கள்? ஐ.நா. (UNCTAD) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி அந்நிய முதலீட்டாளர் களை ஈர்ப்பதில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இது தெரியாமல் இந்தியாவைப் பற்றி யாரோ ஒபாமாவுக்குத் தவறான தகவல் கொடுத்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகமும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் அறிக்கை வெளியிட்டனர். “அமெரிக்கா சொன்னதற்காக நாம் சில்லறை வணிகத்தைத் திறந்து விட முடியுமா?” என்றார் பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா. சி.ஐ.ஐ. எனும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமோ, “நம்முடைய அரசுக்கு யாரும் உத்தரவிட முடியாது” என்று தலைப்பு போட்டு தொடங்கி, சில்லறை வணிகம், காப்பீடு, இராணுவத் தளவாடங்கள் ஆகிய துறைகளைத் திறந்துவிட்டால், அந்நிய முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியும் என்று அறிக்கையை முடித்திருக்கிறது.
இவையெல்லாம் நாட்டுப்பற்று, இறையாண்மை, தன்மானம் கொண்ட இந்தியர்கள் தெரிவித்திருக்கும் கண்டனங்களாம்! ஒபாமாவின் கருத்துக்களை ஒபாமாவைவிடத் தீவிரமாக முன்வைத்து விட்டு, தங்களது அடிமைத் தனத்தையே அமெரிக்காவின் மீதான கண்டனமாகவும் காட்டி, கைதட்டலும் வாங்க முடிகிறது என்றால், நமது மக்களின் பாமரத்தனத்தை என்னவென்று சொல்வது?

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

Exit mobile version