Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (5) -தனி நபர் படுகொலைகளின் ஆரம்பம்

‘ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து’ ஐந்தாவது பகுதி பதியப்படுகிறது. 10 ஆண்டு கால ஆயுதப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலம் மக்களை அணிதிரட்டுவதிலிருந்தோ, ஆயுதப் போராட்டத்திற்கு புரட்சிகர மக்கள் பிரிவுகளை ஆதார சக்திகளாக இணைத்துக் கொள்வதிலிருந்தோ ஆரம்பிக்கவில்லை. தனி நபர் படுகொலைகள், இலங்கை அரச பெரும்பான்மைக் கட்சிகளை அழித்தல் போன்ற தனி நபர் இராணுவ வன்முறைகளிலிருந்தே ஆரம்பமானது. ஒரு புறத்தில் பலமான மக்கள் அணிகளைக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கங்கள் தேசிய விடுதலைப் போராட்டம், தேசிய இன முரண்பாடு குறித்து கோட்பாட்டுரீதியான தவறான முடிவுகளை முன்வைத்து போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தன. உணர்ச்சிவயப்பட்ட சாகசவாத இளைஞர் குழாமின் தன்னிச்சையான தாக்குதல்கள் மக்களைப் பார்வையாளர்களாக்கியது. போராடப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய மக்கள் வேடிக்கை பார்க்கப் பழக்க்கப்படுத்தப்பட்டனர். மக்கள் பலத்தில் தங்கியிருக்க வேண்டிய இயக்கங்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலம் இது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு ஒளிவு மறைவற்ற வரலாற்று ஆவணம்.

09.08.1982

1977 அக்டோபர் மாதம் யாழ் வந்து பரந்தன் ராஜனோடு தொடர்பு கொண்டேன். அவர் அப்போதுவேறு இளைஞர்களோடு பண்னைகள் நடத்திக் கொண்டிருந்தார். நானும் அவர்களோடு சேர்ந்து பண்னையில் தங்கி விவசாயப் புத்தகங்கள் படித்து கலந்துரையாடல் ஆகிய பணிகளில் ஈடுபட்டேன். அப்போ சிறி(சிறீ சபாரத்தினம் -TELO), குட்டிமணி, தங்கண்ணாக்களோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். ராஜன் நாட்டுவிடுதலையில் மிகவும் பற்றுடையவராயிருந்தாலும் கிளிநொச்சி தொகுதியில் சில்லறை விடையங்களுக்கெல்லாம் பிரச்சனைப்பட்டு பலரைப் பகைத்துக் கொண்டார்.

சக உறுப்பினர்களோடு பழகும்போது தன்னை எப்போதும் எல்லோரையும்விட வல்லவர் போலவும் தான் உயர்ந்தவர் என்ற போக்கில் நடந்து கொள்வார். இதனாலேயே சிறி அவர் தொடர்பை அறுத்தார். சிறி தான் ஏன் ராஜனோடு சேர்ந்து இயங்கவிரும்பவில்லை என இறுதிவரைக் எனக்குக் கூறவில்லை. அதே குறைபாடுகளை நானும் ராஜனிடம் கண்டே விலகினேன்.

தங்கத்துரை

விலகிய காலம் தொட்டு சிறி, தங்கண்ணாவோடேயே (தங்கத்துரை) சேர்ந்து இயங்கி வந்தேன். எமது இயக்கத்திற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். அந்நாட்களில் நான்சார்ந்த இயக்கத்தால் துப்பறியும் இலாகா பொலீஸ் அதிபர்(யாழ்ப்பாணம்) பத்மநாதன். பொலீஸ் அதிபர் குமார், துப்பறியும் பொலிசார் சம்பந்தன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். திரு. அருளம்பலம் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்) திரு. வினோதன்( சிறிலங்கா சு.க.அமைச்சர்) திரு.கணேசலிங்கம் யாழ் ஜக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஆகியோரை கொலை செய்ய முற்சிகள் நடந்தன. வல்வெட்டித்துறையில் ஓர் ஆணும் பெண்ணும் ( கணவன் மனைவி) இயக்க உறுப்பினர்களைக் காட்டிக் கொடுத்தற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எமது இயக்க உறுப்பினர் இருவரை இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்து அழைத்துச் செல்கையில் தொண்டமானாறு இராணுவ முகாமருகிலேயே சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவ்விருவரும் மீட்கப்பட்டனர். துப்பாக்கி முனையில் நாம் இயக்க உறுப்பினரை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் ” என்ர அம்மா, நான் செத்தேன்” எனக்கத்திய வண்ணம் புறமுதுகு காட்டி ஓட்டமெடுத்தனர்.

1979 பங்குனி மாதம் எனக்கு கொழும்பில் சப்பாத்து தொழிற்சாலையில் கணித லிகிதர் பதவி கிடைத்தது. சக உறுப்பினர் கொழும்பில் நான் இருப்பது இயக்கத்திற்கு பல விதத்திலும் நன்மையே எனக் கருதி என்னை வேலைக்கு செல்லச் சொல்லி வற்புறுத்தினர். நான் சென்று 5 மாதம் வேலை செய்தேன். இயக்க நடவடிக்கைகளீலிருந்து போராட்டத்திலிருந்து நான் விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டு தினமும் என்னை வாட்டியது. சேர்ந்து ஜந்தாம் மாதமே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் யாழ் வந்து சேர்ந்தேன். வீட்டாரின் திட்டுதலுக்காளானேன்.

1979 ஆனி மாதம் இயக்க உறுப்பினரோடு சேர்ந்து பண்ணைக்குப் புறப்பட தயாராகும் போது (புறப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:30 மணியளவில்) கொழும்பில் பிரபல 5 நட்சத்திர கோட்டலிற்கு வேலைக்குப் போகும்படி வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டேன். சிறியிடம் என்னை எப்படியும் அனுப்பும்படி வற்புறுத்தினர். ஒன்றும் செய்ய முடியாத கட்டத்தில் வேலைக்குச் சென்றேன். வேலைக்குச் சேர்ந்த அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த தொடர்வன்முறைப் போராட்டத்தினால் கிலி கொண்ட அரசு, யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாக( போராளிகளை கைது செய்ய அல்லது கொன்று குவிக்க) பிரிகேடியர் திஸ்ச வீரதுங்காவையும் அவருக்கு துணையாக பல இராணுவவீரர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அணூப்பி வைத்தது.

திஸ்ச வீரதுங்க

பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற போர்வையில் காவல் துறையினருக்கும், இராணுவ வீரருக்கும் யாழ் குடாநாட்டில் வாழும் தமிழ் மக்களை வேண்டியதெல்லாம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. பிரிகேடியர் புரட்சியாளர்களைக் கைது செய்ய அல்லது அழிக்க பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்ததால் நம் இயக்க முக்கிய உறுப்பினர் அனைவரும் தன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். இதனால் எனக்கும் இயக்கத்திற்கு மிடையேயான தொடர்பு அறுந்தது. சில காலம் அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது தவித்தேன். இடக்க உறுப்பினரை ஏறக்குறைய 6 மாதம் வரை காணாததால் தனியாக என்னால் முடிந்ததை நாட்டிற்கு செய்வோமென்ற முடிவுக்கு வந்தேன். எம் இயக்கத்திற்கு அப்போ பெயர் ஏதும் வைக்காததால் “தமிழ் ஈழ விடுதலை இராணுவம்” என்ற பெயரில் இயக்க வேலைகளைத் தொடர்வது என முடிவெடுத்தேன்.

அந்த அடிப்படையில் முதலில் கொழும்பில் படிக்கும் இளைஞ்ர்களோடு, தொழிலில் (அரசு,தனியாரிடம்) ஈடுபட்டிருப்பவரோடும் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலையை அடைய இயக்க ரீதியாக கட்டுப்பாடோடு ஒன்றுபட்டுப்போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். பலர் நழுவினர்.சிலர் சேர்ந்து போராட முன்வந்தனர். இப்படி கொழும்பில் ஏறக்குறைய 40 நம்பிக்கையான உறுப்பினர்களையும் யாழ் ,திருமலையில் பல இளைஞர்களையும் சேர்த்தேன்.

நான் தனியாக இயங்குவதைக் கேள்விப்பட்ட EROS மற்றும் லண்டனிலிருந்து வந்த TLO ஆகியோர் என்னைத் தம்மோடு சேர்ந்து இயங்குமாறு அழைத்தனர். நான் வேண்டிய உதவிகளைச் செய்வதாகக் கூறினேன். சேர மறுத்தேன். காரணம் தங்கண்ணா, சிறியில் வைத்திருந்த நம்பிக்கையே. இவர்களது மன உறுதியோடு, செயற்படும் வேகத்தோடு அவர்களை ஒப்பிடவே முடியாது. TLO உதவிகளை என்னிடம் கேட்டனர். தயங்காது செய்து கொடுத்தேன். அவர்கள் என்னோடு மிக அன்பாகப் பழகினர். மகேஸ்வரன் என்னும் இளைஞர் 1972 இல் இங்கிலாந்து சென்று பிரபல்ய வளாகத்தில் பொறியியலாளராக 2 வருடத் தேர்ச்சி பெற்று இறுதியில் நாட்டு விடுதலையே எனப் போராட நாட்டிற்கு வந்தார். பனாகொடை, மட்டக்களப்பு ஆகிய சிறைகளிலிருந்து தைரியமாகத் தப்பி வரலாறு படைத்தார்.

தொடரும்…

முன்னையவை:

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982 – யாழ் நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சி

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (2)

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

 

Exit mobile version