Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்

எண்பதுகளில் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். தமிழீழ விடுதலை இராணுவம் -TELA- என்ற அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கியவர். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். திருனெல்வேலியைச் சேர்ந்த தேவன் ஆரம்பகாலப் போராளிகளுள் ஒருவர். தன்னெழுச்சியாக, ரெலோ இயக்கத்தின் தலைவராகவிருந்த சிறீ சபாரத்தினம் போன்றோருடன் தனது இராணுவக் குழுவை ஆரம்பித்த தேவன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரோடு இறுதிவரை தொடர்பைப் பேணுகிறார். ஒபரோய் தேவன் கொலை செய்யப்பட்ட காலத்தில் வெளிவந்த அவரின் நாட்குறிப்பு இனியொருவில் தொடர்ச்சியாக மீள் பதிவிடப்படுகிறது. பல்வேறு தகவல்கள் போராட்டத்தின் ஆரம்பம் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது. தவறுகளும் சேர்ந்தே நிறுவனமயப்பட்டு மக்கள் எழுச்சிகள் அழிக்கப்பட்டு இராணுவக் குழுவாதமாக மாறும் ஆரம்ப காலம் எப்படி முள்ளிவாய்காலுக்கு முன்னுரை எழுதியது என்பதை தேவனின் ஒளிவு மறைவற்ற பதிவுகள் இன்று எமக்குச் சொல்கின்றன.

04.08.1982

அன்று முழுவதும் அரசை பாதிக்கக்கூடிய , நட்டமடையவைக்கக்கூடிய என்னென்ன காரியங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தோம். மாலை 7 மணி அளவில் அனுராதபுரத்திலிருந்து சிறிலங்கா ராணுவம் யாழ் நகருக்கு படையெடுத்து வந்தே மக்கள் கிளர்ச்சியை,எதிர்ப்பை அடக்கியது. டிரக் வண்டிகளில் ஏராளமான இராணுவத்தினர் ஆயுதபாணியாக தயார் நிலையில் யாழ் நகரில் ரோந்து வந்தனர். 1958 ஆம் ஆண்டுக்குப் பின் அன்று தான் இராணுவம் ஆயுதபாணியாகி யாழ் குடாநாடு முழுவதும் காவலில் ஈடுபட்டது எனது வாழ்நாளில் இராணுவமுற்றுகையைக் கண்டது அன்றே. இராணுவத்தினர் டிரக் வண்டிகளில் வெளியேறி ரோந்து வந்ததைப் பார்க்கப் பார்க்க எனது வேகம் பல மடங்காகியது. ஏதாவது ஒரு வகையில் இராணுவத்தினரைத் தாக்க வேண்டும் என்ற வெறியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

இரவு 8 மணியளவில் குலசிங்கம் வீட்டிற்கு வந்தார். அடுத்த நாள் பகல் யாழ்வளாக சிங்கள மாணவரை இராணுவபாதுகாப்போடு இ.போ.ச. வண்டிகளில் சிறிலங்காவிற்கு அனுப்ப முயற்சிகள் நடப்பதாகக் கூறினார். வளாக சிங்கள மாணவரை சிறிலங்காவிற்கு அனுப்புவதன் உள்நோக்கம் இவர்களை சிறிலங்காவிற்கு அனுப்பியதும், இராணுவமும் பொலீசாரும் சேர்ந்து தமிழீழத்திலுள்ள தமிழ் மக்களைத் தாக்குவதும், சிங்கள இனவெறியர் சிறிலங்காவில் உழைப்புக்காக வாழும் தமிழ் மக்களைத் தாக்கவுமாகும். உள்நோக்கைப்புரிந்து கொண்ட நாம் எப்படியும் வளாக சிங்கள மாணவரை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டுமென முடிவெடுத்தோம். அன்று இரவு முழுவதும் அடுத்த நாள் நாம் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென யோசித்து முடிவு செய்தோம். திட்டமிட்டபடி காலை செயற்படத் தொடங்கினோம். காலை கையில் 2 கைத்துப்பாக்கிகளோடு புறப்பட்டு அரசுக்குசொந்தமான ஜீப் வண்டியொன்றை கைப்பற்றி துப்பாக்கி வைத்திருப்போரின் வீடுகளிற்குச் சென்று 1,2 துப்பாக்கிகளைப் பலாத்காரமாகப் பெற்றோம்.

நாம் இந் நடவடிக்கையிலீடுபடும் போது உரும்பராய் ஆனந்தன் ஓட்டுமடச்சந்தி உட்பட இன்னும்சில இளைஞர்கள் சில துப்பாக்கிகளை பொலிஸ்காரர்களிடம் ப் பாறித்து அரசாங்க அதிபரின் ஜீப் வண்டியையும் பலாத்காரமாகப் பறித்து கூட்டுறவுச் சங்கங்களிலும்,வங்கிகளிலும் கொள்ளைஅடிக்கத் தொடங்கினார்கள்.
கூட்டுறவுக் கடைகளில் அரிசி,புளி மூட்டைகளை கொள்ளை அடித்து தமக்குவேண்டிய ஒருவரின் வீட்டில் இறக்குவதை நான் நேரில் கண்டேன்.மாலை 3 மணியளவில் கம் ஜீப்பை எரித்துவிட்டு குலசிங்கத்தோடு பேசி எமது ஜீப்புக்குள் வந்து ஏறினர். எமது முயற்சிக்குத் துணைபோவதாகக் கூறிவந்தார்கள் படிப்படியாக தம் வேலையைத் தொடங்கினர். எந்தெந்த வங்கிகள் எல்லாம் திறந்திருக்கிறதோ அந்தந்த வங்கிகளுக்குள் எல்லாம் சென்று கொள்ளை அடிக்க முற்பட்டனர்.வண்டியை நாம் பயன் படுத்தும் செய்தி கடற்படைக்கு எட்டியது. குளப்பிட்டி(கொக்குவில்) சந்தியில் வைத்து கடற்படையால் மறிக்கப்பட்டு, ஜீப்பில் இருந்த அத்தனை இளைஞர்களும் துப்பாக்கிப்பிடியால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள். மூவர் மட்டும் கடற்படையினர் கண்ணில் மண்ணைத்தூவி தப்பியோடினர்.

சிறிது தூரம் சென்றதும். கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர் . (எஸ்.எம்.ஜி) அன்று நான் உயிருடன் தப்பியது புதினமே. அன்றைய தினத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. ஏதோ செய்ய முற்பட்டு பிழையானவர்களின் தொடர்பால் திசை மாற்றப்பட்டு இறுதியில் பிடிபட்ட இளைஞர்களால் எம் பெயர், முகவரி போலீசாருக்குக் கிடைத்து நாம் போலீசாரின் தேடுதலுக்குள்ளானதே மிச்சம்.

முன்பே பொலீசார் எந்நேரமும் வீட்டுக்கு வரலாமென எதிர்பார்த்து வேறு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்ததால் அவர்கள் பிடியிலிருந்து தப்பினேன் .தலைமறைவாக வாழும் அனுபவம் எனக்குப் புதியதே. மிகவும் அன்பாகப் பழகிய உறவினர் பாதுகாப்புத் தருவரென நம்பி அவர்களை நாடினேன். 90% மானவர் தாம் பயப்படுவதாக சொல்லாமல் சொல்லிக் காட்டினர் இறுதியில் என் நண்பர் சிங்களப் பகுதியில் வேலை செய்தாலும் அது மிகமிக ஒதுக்குப் புறமான இடமாக இருந்தாலும் அவருடனேயே தங்கினேன். பல நாட்கள் எந்த இயக்க வேலையையோ நடவடிக்கையிலேயோ ஈடுபடவில்லை. ஆகஸ்ட் 77 முதல் ஒக்டோபர் 77வரை,

சந்ததியார்

இந் நாட்களில் சந்ததியார் பரந்தன் ஞானசேகரன் போன்றோர் கலவரத்தால் பாதிப்புற்று வந்த அகதிகளுக்கு தமிழீழப் பகுதிகளி பண்ணைகள் அமைத்து. புது வாழ்வு வாழ வசதி செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந் நாட்களில் குலசிங்கத்தோடு முழுத்தொடர்பும் அறுந்தது. மூன்று மாதத்திற்குப் பின் யாழ்ப்பாணம் திரும்பியதும் குலசிங்கம்,ஆனந்தன், சந்திரன் ஆகியோரோடும் கொள்ளையடித்த பணத்தோடும் பொலிசாரிடமிருந்து தப்பி மட்டுநகர் சென்று அங்கு வாழைச்சேனைப் பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், குலசிங்கம் கொள்ளையடித்த பணத்தை தமக்கு நம்பிக்கையான த.இ.பே. தலைமை உறுப்பினரிடம் கொடுத்து விட்டு தாம் தப்பி இந்தியாவிற்கும் போவோமெனக் கூறினாராம்.
அதற்கு ஆனந்தன், சந்திரன் ஆகியோர் அப்படி முடியாது.கொள்ளை அடித்த பணம் தமதே, நாம் அவற்றைப் பங்குபோட்டுகொள்வோம் என்று கூறினர்.

அப்போதுதான் அவர்களின் உண்மைரூபத்தை அறிந்த மிக மிக மனவருத்ததுடன் 2,3 நாட்கள் சாப்பிடாமல் கொள்ளமல் இரவு வேளைகளில் அவர்களுடன் தங்காது வாழைச்சேனை பஸ் நிலையத்தில் சென்று படுத்ததாகவும் அறிந்தேன். குலசிங்கம் பணவிடையத்தில் தம்மோடு ஒத்துவராததால் அதிர்ப்தி அடைந்த ஆனந்தன், ஒரு நாள் குலசிங்கம் தான் தங்கும் பண்ணைக்குச் சென்று துவாயை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த குளத்தில் குளிக்கச் செல்ல, பின்னால் துப்பாக்கியுடன் சென்று குறிவைத்தவண்ணம்(குலத்தை நோக்கி) குலசிங்கத்தைக் கூப்பிட்டுள்ளான். குலசிங்கம் திரும்பிப்பார்க்கும் போது சரியாக அவன் மார்பை நோக்கிச் சுட்டுள்ளான். குலசிங்கம் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தாராம். பின்னர் அவரைக் குளத்தருகே புதைத்து, அது அந்த ஊர்மக்களுக்குத் தெரிய வந்ததும், ஆனந்த அப்போ வாழைச்சேனையில் வேலைசெய்த பொலிஸ் அதிகாரிக்கு 25000 ரூபா கொடுத்து அவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாவல் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறி அவர்களைச் சமாளித்தனர்.

இச்செய்தி யாழ் பொலிசாருக்குத் தெரிய வந்ததும், அவர்கள் அப்பிணத்தைத் திரும்பக் கைப்பற்றி, குலசிங்கத்தின் மச்சானை(இராணுவ அதிகாரி) கொண்டு அவரை அடையாளப்படுத்தினர்.

குலசிங்கத்தின் மறைவு என்னை மனவேதனைக்கு உள்ளாக்கியது, என்னைப் பல வழிகளிலும் சிந்திக்க வைத்தது. சரியான கொள்கையின்றி, விடுதலையில் உறுதியானவர்களின்றி, வெறும் கொள்ளையை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்களை நம்பி, அவர்களோடு சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கியதால் ஏற்பட்ட விளைவு இது. குலசிங்கத்தின் மறைவை அறிந்து அவரோடு பழகிய விடுதலை விரும்பிகள் த.இ.பேரவை உறுப்பினர்கள், விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் மனவேதனை அடைந்ததனர்.

இன்று வரை அவர் விடுதலையில் கொண்டிருந்த ஆர்வத்தையோ, மன உறுதியையோ, ஆயுதப் போராட்டத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையோ, அந்த வழியில் அவர் வேகமாகச் செயற்பட்டதையோ யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பிழையான சேர்க்கைக்குப் பதில் நல்ல இளைஞர்களோடு விடுதலையில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களோடு, தொடர்புகொண்டு நிதானமாகப் போராடியிருந்தால் இன்றி தம்மைத்தாமே தலைவர்கள் என்று கூறுபவர்கள் திகைக்கும் வண்ணம் ஒரு சிறந்த ஆற்றல் உள்ள போராட்ட வீரனாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பார்.

தொடரும்…

முன்னையவைL

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982 – யாழ் நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சி

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (2)

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

Exit mobile version