ரெலா (TELA) இயக்கத்தின் தலைவராகவிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட் குறிப்பிலிருந்து மூன்றாவது பகுதி இது. ஒபரோய் தேவனின் அப்பாவித்தனமான பதிவுகள் பல்வேறு உண்மைகளையும், ஈழப் போராட்டத்தின் அரசியலையும் உணர்த்துகிறது. தமிழரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி யூ,என்.பி அரச ஆதரவுப் போக்கைத் தொட்டுச் செல்லும் தேவனின் குறிப்புக்கள், பேரினவாத ஒடுக்குமுறை இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டியதற்கான ஆரம்பப் புள்ளிகளை கண்முன்னே கொண்டுவருகிறது. முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்லப்பட்டப்பட்ட போது மௌனமாகப் பார்த்துகொண்டிருந்த யாழ்ப்பாணச் சமூகம், போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சியை ஒபரோய் தேவன் தனது அரசியல் மொழியில் விபரிக்கிறார்.
ஒரு வேளை இந்திய அரசு இயக்கங்களை ஆயுதங்களால் வீங்கவைத்து மோதல்களால் போராளிகளை அழித்து போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்திருக்காவிட்டால் மக்கள் போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக பரிணாமம் பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்பதை ஒபரோய் தேவனின் பதிவுகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களைப் பார்வையாளர்களாக்கி எல்லாவற்றையும் ‘இயக்கம் பார்த்துக்கொள்ளும்’ என்ற சமூகப் பொதுப்புத்தி உருவாக்கப்பட்ட பின்னர் தான் இயக்கங்கள் மக்களிலும் அதிகமாகப் பலம்பெற்றன. இறுதியில் மக்கள் மீது இயக்கங்கள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு சிதைந்த்து சீரழிந்து போனது.
நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் தொடர்பாக மட்டுமன்றி தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய சார்பு அரசியலிலில் ஆரம்பித்து முழுமையான விமர்சனம் – சுய விமர்சனம் இன்றி புதிய போராட்டம் முளைவிட முடியாது என்பது தேவனின் தொடர் பதிவுகள் உணர்த்துகின்றன.
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982
இந் நாட்களில் சிறி(சிறீ சபாரத்தினம்),பரந்தன் ராயன், நான் வேறு பல இளைஞர்கள் ஒரு குழுவாக இயங்கிவந்தோம். பரந்தன், கிளிநொச்சியைச்சேர்ந்த பல இளைஞர்களும் சேர்ந்து இயங்கினர்.இந்நாட்களில் யாழ் பகுதியில் பல பள்ளி மாணவரகள், வேறும் சன சமூக நிலையங்கள் மூலமாக வேறு பல இளைஞர்களோடு தொடர்பு கொண்டு 25க்கும் மேற்பட்ட வகுப்புக்கள் நடத்தினோம்.
ஆர்வமாக முன்வந்தவர்க்ளை இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்தோம்.இதில் குறிப்பிட்டமிக ஆர்வமானவர்களை தேர்வுசெய்து இராணுவ ரீதியிலான ஆயுதப் பயிற்சியும் அளித்தோம். இந்நாட்களிலேயே நானும் முதன் முதலாக ஆயுதங்களை இயக்கக் கற்றுக் கொண்டேன். (நாட்டின் எப்பகுதியில் இப்பயிற்சி அளீக்கப்பட்டதென்பதை குறிப்பிட விரும்பவில்லை.)தேர்தலி அமோக வெற்றி மீட்டிய த.வி.கூ. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை மறந்து அரசு ஆதரவு நடவடிக்கைகளில் இறங்கியது. தமது வர்க்க நண்பர்கள் அரசுக் கட்டிலிலமர்ந்ததல்தான் அவர்கள் அரசுக்கெதிராக போராடமுன்வரவில்லையென அப்போது நம் உணரவில்லை. எம்மை தம்மில் நம்பிக்கை கொள்ள வைக்க, இடைக்கிடையே மிக உணர்ச்சிகரமாக பாராளுமன்றத்திலும், தமிழீழக் கூட்டங்களிலும் பேசிவந்தனர்.
சுதந்திரக் கட்சி ஆட்சியில் தலைவர் செல்வநாயகம் தலைமையில் த.வி.கூ. எத்தனையோஅகிம்சைப் போராட்டங்களை சாதாரண பிரச்சனைக்கெல்லாம் நடத்தியது. ஜ.தே .க. பல ஒடுக்குமுறை நடவடிகைகளில் ஈடுபடும்போதுகூட பேசாமல் அல்லது சாதாரண கண்டனக்குரலோடு மட்டும் நிறுத்தினர். தேர்தலில் வென்றவுடன் தமிழீழ தேசிய மன்றம் அமைப்போம் என்றவர்கள் அப்பேச்சை அப்படியே மாற்றி தக்க சமயம் வரும்போது மன்றம் அமைப்போம் என்றனர்.
இப்படி இருக்கையில் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பற்றிக்ஸ் மைதானத்தில் இறுதி நாளாக நடந்த காணிவெல் விழாவிற்கு என் சக மாணவரோடு சென்றிருந்தேன். விழா முடிவுறும் நேரத்தில் இரவு 12 மணியளவில் நுளைவுச் சீட்டுப் பெறாமல் விழாவிற்குக் குடிபோதையில் நுளைந்த 10 இற்கு மேற்பட்ட சாவகச்சேரிப் போலிசார் சாதாரண பொது மக்களோடும் இளம் பெண்களோடும் தகாத முறையில் நடந்தனர். புது மணப் பெண்ணிண் மேனியில் கணவன் பக்கத்திலிருக்கும் போதே கை போட்டனர். இதைக்கண்டு கோபமடைந்த கணவன் அவர்களைப் பேச கோபம் கொண்ட போலிசார் அவரைத் தாக்கினர். அப்போ நாம் பிளாசா கடையில் இரவு உணவு உட்கொண்டுகொண்டிருந்தோம். நாம் சாப்பிடுகையில் போலிசார் பிளாசா கடை காசாளரிடம் தமக்கு உடனடியாக உணவு வேண்டும் எனக் கேட்டனர். கடையில் கூட்டம் அதிகமாகையால் மற்றவர்களுடன் நிரையில் வருமாறு காசாளர் கூற அவரைப் போலிசார் தாக்கினர்.
நாம் உணவகத்தை விட்டு வெளியே ஓடி வந்தோம். அங்கே மற்றப் போலிசார் நின்று கொண்டிருந்தனர். அப்போதான் அவர்கள் சிங்களப் போலிசார் என எமக்குத் தெரியும். கிட்டத்தட்ட பத்து பேர்வரை நின்றிருந்தார்கள். நான் எனது சக மாணவனைத் தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறி மற்றவர்களைச் சிதறி ஓட வேண்டாம் என்று தடுத்தேன். போலிசார் எதிர்பாராத வகையில் கற்களாலும் பொல்லுகளாலும் பயங்கரமாகத் தாக்கினோம். எதிர்பார்த்தபடி போலிசார் பின்வாங்கினர். யாரையும் தப்பி ஓடவிடாது மயங்கி விழும்வரை தாக்கினோம். பின்பு மக்களை உடனடியாக மைதானத்தை விட்டுப் புறப்பட்டச் சொல்லிவிட்டு நாமும் புறப்பட்டோம்.
காலை 9 மணியளவில் வங்கிக்குக் கடமை செய்ய போலிஸ் நிலையத்திலிருந்து ஆயுத பாணிகளாகச் சென்ற இரண்டு போலிசாரை மக்க்கள் தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்து உடைத்தெறிந்தனர்.ன் சந்தைக்கு ஜீப் வண்டியில் வந்த போலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார்.
அவர் வந்த வண்டி தீக்கிரையாக்கப்பட்டது.
இம் மக்கள் எழுச்சியால் போலிசார் பின்வாங்கினர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போலிசார் காவல் நிலையத்திலிருந்து வெளியேவரப் பயந்து உள்ளேயே அடங்கியிருந்தனர். இந் நேரத்தில் நாம் மிக மிக உணர்ச்சி வசப்பட்டிருந்தோம். போலிசாரைத் தாக்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் கையில் தக்க ஆயுதங்கள் கிடைத்திருக்கவில்லை. இப்படியிருக்க ஏனைய மக்களோடு சேர்ந்து டயர்களை முக்கிய சந்திகளில் போட்டு எரித்து போலிசாரை நிலையத்தை விட்டு வெளியே வராமல் தடுத்தோம். பல மணிநேரம் களித்து ஜிப்பில் வெளியே வந்த போலிசார் வண்டியை மேலும் செலுத்த முடியாதவாறு தடுமாறினர்.
இதனைத் தொடர்ந்து போலிஸ் அதிகாரி மக்களைத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைந்து போகுமாறு ஆணையிட போலிசார் மக்களை நோக்கி சிறிதும் கூசாமல் துப்பாக்கிப் பிரையோகம் செய்தனர். இதனால் நால்வர் அந்த இடத்திலேயே உயிர் துறக்க பலர் காயமடைந்தனர்.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் சிங்கள வியாபார நிலையங்களையும் அரச வியாபார நிலையங்களையும் நாசப்படுத்தினோம். இதனால் பி.எம்.சி கட்டடம், லக்சலா, சலூ சலா, குணசேனா, சிற்றி பேக்கரி, வேறும் சில சிங்கள சிங்களவர் கடைகள் சேதமாக்கப்பட்டன. நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது சாதாரண மக்கள் பா பொருட்களை எடுத்துச்சென்றனர். நாம் பல பெறுமதிவாய்ந்த பொருட்களை(தையல் இயந்திரம் உட்பட) சேதப்ப்படுத்தினோம். கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் இருந்து மட்டும் எமக்குத் தேவைப்பட்ட வாள்கள் கத்திகள் உட்பட வேறு ஆயுதங்களை எடுத்தோம். இச் செயல்களில் சிறீ (டெலோ சிறீ சபாரத்தினம்) முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நேரத்தில் வேறு சில இளைஞர்கள் டைனமைட் தவடிகளக் கொழுத்தி போலிசார் இருந்த பக்கம் வீசினர். போலிசாருக்கு எவ்வகையான வெடி மருந்து தம்மை நோக்கி வீசப்பட்டது எனத் தெரியாததால் பயந்து பின்வாங்கினர். இன்னொரு சந்தர்ப்பத்தில் போலிசாரை நோக்கி வீசப்பட்ட வெடுகுண்டு வெடித்ததில் தற்செயலாக அவ்வழியாக வந்த என் சக மாணவர் ஒருவரின் கை முறிவடைந்தது.
இதே வேளை குலசிங்கம் பல வீடுகளுக்குச் சென்று மக்களுக்குச் சொந்தமான துப்பாகிகளஒ பெற்று அவற்றைச் சாதாரணமாகத் தோளில் தொங்கப்போட்டபடி பலாலி வீதியால் வந்து வளாகத்தினுள் புகுந்து அங்கு பாதுகாப்பறையிலிருந்த துப்பாகிகளையும் பலவந்தமாகப் பறித்தார்.