கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். ஆரம்பத்தில் தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார். புலிகளை வளர்த்த அன்டன் பாலசிங்கம் ஒபரோய் தேவனை வளர்ப்பதற்காக முயற்சித்த காலமும் 80 களைக் கடந்து சென்றிருக்கிறது.
தனது வேலையைத் துறந்து முழு நேர அரசியல் போராளியான ஒபரோய் தேவன் பறுவா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். திருனெல்வேலியில் மத்தியதர வர்க்கத்தின் உயர் அணியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒபரோய் தேவன் தனது குடும்பம் முழுவதையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ஆரம்ப காலத்திலிருந்தே இவரது வீடு போராளிகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றது.
ஒபரோய் தேவன் தனக்குத் தெரிந்தவற்றை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். நேர்மையான போராளியாக அறியப்பட்ட தேவன் இலங்கை அரசின் பொருளாதார நிலைகளைத் தகர்க்க வேண்டும் என்று கூறி அதற்கான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
14ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட்குறிப்பை கொலையின் பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டனர். ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளிமாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது.
அச்சு வடிவில் சிறிய நூலாக வெளிவந்த ஓபரோய் தேவனின் நாட்குறிப்பு பல்வேறு தவறுகள் நிறுவனமயமாகி வளர்ச்சி பெற்றதை தகவல்களாகத் தருகின்றது. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… என்ற நூல் இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவருகிறது.
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)
22.07.1982:
மாத்தளையில் எட்டம் வகுப்புப் படிக்கும் போதே(1968 இல்) தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாத்தியார், இஸாமிய ஆசிரியர்களோடு தமிழரசுக் கட்சியை ஆதரித்து வாக்குவதப்படுவேன், 1974 ஆம் ஆண்டு தை 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறினேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் சென்று அவர்களது பேச்சால் கவரப்பட்டேன். 1974 ஆம் ஆண்டு தை 10 இரவு யாழ் நகரில் நடந்த சிறீலங்கா அரசின் வெறியாட்டத்தில் நானும் அகப்பட்டேன்.
தமிழ்ப் பெண்கள் துப்பாக்கி ஏந்திய படையினரால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை நேரில் கண்டேன். அதனைத் தொடர்ந்து 74 ஆனி எட்டம் நாள் சிவகுமாரனின் வீர மரணத்தால் உணர்ச்சியேற்றப்பட்டேன்.
தொடரும்…