Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தைச் சிதைக்கும் தென்னிந்திய சினிமா: நிவேதா

விஜய் கட்டவுட்டிற்குப் பாலூற்றும் தமிழர்கள்
விஜய் கட்டவுட்டிற்குப் பாலூற்றும் தமிழர்கள்

உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கவும் தமது வசதிக்கு ஏற்ப மாற்றவும் எமது சமூகத்க்தில் கலையையும் கலாச்சாரத்தையும் ஒடுக்குமுறையாளர்களும் எதிரிகளும் மட்டுமல்ல பிழைப்புவாதிகளும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கலை-கலாச்சாரம் என்றால் என்ன? மக்கள் சார்ந்த சமூகக் கடமைக்கும் கலைக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது என்ற விவாதங்கள் சமூகத்தில் முகிழ்த்தெழ வேண்டும். இலங்கையிலிருந்து பேரினவாத ஒடுக்குமுறையால் துரத்தப்பட்டு புலம்பெயர் நாடுகளில் புகுந்துள்ள மக்களின் ஒரு பகுதியினருக்கு கலை-கலாச்சார முனையில் எதிரிகளையும் பிழைப்புவாதிகளையும் எதிர்கொள்வதற்கான வலுவைக் கொண்டுள்ளனர்.

பல்தேசிய வியாபாரப் பணக்கொள்ளையால் தொலைக்காட்சி, தொழில் நுட்பம் போன்ற சாதனங்களை உடமையாக்கிக் கொண்டுள்ள கூட்டம் கலை-கலாச்சாரம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்களையும், வன்முறைகளையும் மக்கள் மத்தியில் விதைத்து ஒரு சந்ததியையே சீரழித்து வருகிறது.

இந்தச் சூழலில் தேசிய கலை இலக்கியப் புரட்சி இயக்கம் எமக்கு மத்தியில் அவசியமானது. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கலைக் கொள்ளைக்கு எதிரான இவ்வாறான இயக்கம் அழிக்கப்படும் கலையைப் புதிய கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வழி சமைக்கும்.

ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளோடும் அவர்களின் நண்பர்களோடும் வியாபாரம் செய்துகொள்ளத் தயார் நிலையிலுள்ள பல்தேசியப் பணக் கொள்ளைக்கார்கள் கலை என வியாபாரம் செய்யும் இத்தியாதிகள் மக்களுக்கானதா? அவர்கள் அவமானகரமான பிற்போக்குவாதிகள். இலாபம் ஒன்றே அவர்களின் இறுதி நோக்கம்.

இந்தப் பிழைப்புவாதிகளுக்கு எதிரான போராட்டமும் புதிய புரட்சிகர தேசியக் கலையின் உருவாக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.

எண்பதுகளில் ஈழத்தின் கலை இலக்கியம் புதிய வளர்ச்சியை அடைந்திருந்தது. ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய கலை இலக்கிய எழுச்சி தென்னிந்தியாவின் சினிமாக் குப்பைகளால் நிரப்பப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.

மண்சுமந்த மேனியர், சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள், மாயமான் போன்ற நாடகங்களும் வீதி நாடகங்களும் தென்னிந்திய சினிமாக் குப்பைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மேலெழுந்தன. விடுதலை இயக்கங்களின் பாடல்கள் ஒவ்வொருவரும் வீடுகளிலும் சாதாரணமாகவே ஒலித்தன. அலை, மாற்று, தளிர் போன்ற நூற்றுக்கணக்கான சஞ்சிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு சமூகத்தில் முன்னணிக்கு வந்தன. ஆனத்தவிகடன், குமுதம் போன்ற தென்னிந்திய சினிமாச் சஞ்சிகைகள் பிரபலமிழந்து போயின.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. உலகின் பல்வேறு போராட்டங்களில் இதனைக் காணலாம்.

சே குவேரா என்ற புரட்சியாளனை அமெரிக்க அரசின் சீ.ஐ.ஏ அழிக்கும் காலம் வரைக்கும் லத்தீன் அமரிக்க நாடுகளில் மஜிக்கல் ரியலிசம் என்ற பெயரில் சினிமா மற்றும் நாடகங்களை அமெரிக்க அரசின் உளவுத்துறையே திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டது. மக்களின் போராட்ட உணர்வை அதனூடாகச் சீர்குலைத்தது.

ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த ரியாலிட்டி ஷோ நிகழ்சிகள் என்ற உணர்ச்சி வியாபாரத்தை தென்னிந்தயத் தொலைக்காட்சிகள் உள்வாங்கி அவை இன்று அவலத்துள் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விற்பனை செய்கின்றன.

சினிமாவைப் போன்றே ரியாலிட்டி சோ மற்றும் தொலைக்காட்சித் தொடர் போன்ற நிகழ்சிகளும் மக்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி சமூகம் தொடர்பான அறிவை மழுங்கடித்து போராட்ட உணர்வைச் சிதைக்கின்றன.

முள்ளிவாய்க்கால் அழிப்பிற்குச் சற்றும் முற்பட்ட காலப்பகுதியிலேயே மிகப்பெருமளவில் புலம்பெயர் நாடுகளில் ஊடுருவ ஆரம்பித்த தென்னிந்தியத் தமிழ் சினிமாவின் ஆக்கிரமிப்பு புலம்பெயர் நாடுகளில் மக்களின் உணர்வைச் சிதைப்பதில் முக்கிய பாத்திரத்தை வகித்க்திருக்கின்றன.

வடக்குக் கிழக்கில் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்துவதில் கூட தொலைக்காட்சித் தொடர்களும் சினிமாவின் பாலியல் வக்கிரங்களும் வன்முறைகளும் முக்கிய பங்கை வகித்திருக்கின்றன. சுடிதார் போன்ற தமிழகத்தின் உடைகளை அறிமுகப்படுத்துவதில் கூட தொலைக்காட்சித் தொடர்கள் என்ற பிற்போக்கான நிகழ்ச்சிகள் காரணமாயின.

புலம்பெயர் நாட்டு மக்களின் உழைப்பிலிருந்து மில்லியன்களை அள்ளிச் செல்லும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஊடுருவியமை அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே கருத இடமுண்டு. புலம்பெயர் நாடுகளில் மக்களின் சிந்தனையைத் திசைதிருப்பி போராட்ட உணர்வை அழிக்கும் தமிழ் நாட்டின் சினிமாக் கூத்தாட்ட நிகழ்வுகள் ஆபத்தானவை.

இலங்கை இந்திய அதிகாரவர்க்கங்களின் அனுசரணையுடன் செயற்படும் லைக்கா போன்ற நிறுவனங்களும் இந்திய உளவுத்துறையின் அடியாட்களான அரசியல்வாதிகளும் இக் கலாச்சாரச் சீரழிப்பின் பின்புலத்தில் செயற்படுவது வெளிப்படையானது.

அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் வெற்று உணர்ச்சியைத் திணித்து சினிமா நஞ்சையும் கலந்து முழுச் சமூகத்தையும் அழிக்கின்றனர். மக்களோ சினிமாக் கூத்தாடிகளின் உருவப்படங்களுக்குப் பாலூட்டும் நிலைக்கு தேய்ந்துவிட்டனர்.

தென்னிந்தியாவிலிருந்து திட்டமிட்டுப் புகுத்தப்படும் கலாச்சாரச் கலை கலாச்சாரச் சிதைப்பிற்கு எதிராகப் போராடுவதும் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதும் சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமை.

Exit mobile version