ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஐ.நா செயலர் நாயகம் உரையாற்றியபோது, சிறீலங்கா அரசாங்கம் புரிந்த இனவழிப்பு பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தனது உதவியாளர்களுடன் அங்கு வழங்கல் செய்த அக்ட் நவ் (Act now) அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ரிம் மார்டின் (Tim Martin) அதன் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது பான் கி-மூனிம் இலங்கை பற்றிய வினாவைத் தொடுத்திருந்தார்.
ஈராக்கில் பொருளாதாரத் தடையை ஏற்டுத்தி மருத்துவ உதவிகளைக் கூடத் தடை செய்து மில்லியன் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகவிருந்த ஐக்கிய நாடுகள் இலங்கையில் மக்கள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட போது மௌனம் சாதித்து வந்தது.
உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பல பாகங்களிலுமிருந்து வன்னிப் போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்படலாம் என எச்சரித்த வேளையில் எந்த முன் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள் எழுச்சிகளைத் தடுப்பதும், அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை முன்வைத்தலுமே ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் வழியேயான தன்னார்வ நிறுவனங்களின் அடிப்படை நோக்கங்களாக அமைந்திருக்கின்றன. இதற்காக மக்கள் மத்தியில் போலியான நம்பிக்கையை உருவாக்குதலும் அதனூடாக உணர்வுபூர்வமான எழுச்சிகளைத் தடுத்தலுமே ஐக்கிய நாடுகள் போன்ற அதிகாரம் சார்ந்த நிறுவனங்களின் இறுதி நோக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வன்னிப் படுகொலைகளுக்குச் சற்று முன்னதான காலப்பகுதியில்ருந்தே இவ்வாறான போலியான கண்டனங்களையும் எதிர்பையும் இலங்கை அரசிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் விடுத்திருந்தது. உலகின் அனைத்துப் பலம் பொருந்திய நாடுகளையும் பின் புலத்தில் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் சுயாதினமனதல்ல.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற ஏனைய உலகளாவிய அமைப்புக்கள், பல நாடுகளின் மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசும் போது மனித உரிமையின் பெயராலும் அடையாள அரசியலின் பெயராலும் நியாயப்படுதின.
அரபு நாடுகளின் நம்பிக்கை தரும் மக்கள் எழுச்சிகள், தியாகங்கள் அனைத்தும் உலக வல்லரசுகளின் செல்வாகிற்கு உட்பட்டு நடைபெறவில்லை. ஒருங்கிணைந்த போராட்டங்கள் ஐக்கிய நாடுகளையும் அதன் பின்னணியில் இயங்கும் வல்லரசுகளையும் நம்பி நடைபெறவில்லை. கோழைத்தனமாக வல்லரசுகளின் ஆதரவை நம்பியிருக்கவில்லை. மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்படு மக்களுக்கு எதிரானதாக மாறவில்லை. வல்லரசுகளை அடிபணியவைக்கின்ற அளவிற்கு மக்களின் எழுச்சிகள் அமைந்திருக்கின்றன.
அறுபது வருடங்கள் இலங்கைத் தீவில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிறுகச் சிறுக அழிக்கப்படு இன்று அங்கீகரிக்கப்பட்ட இனப்படுகொலை என்ற எல்லைவரை நகர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் எழுச்சியை நிராகரித்த அதிகாரம் சார் தலைமைகள் தூய இராணுவப் போராட்டமாக, மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தனி நபர் யுத்தமாக தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைத்து சிதைத்துவிட்டன.
உலகம் முழுவதும் மாற்றங்கள் ஏற்படுக்கொண்டிருக்கின்றன. மக்களின் சிந்தனையில், வாழ் நிலையில், உற்பத்தியில், உறவு முறைகளில் என்று அனைத்துத் தளங்களிலும் இந்த மாற்றங்கள் விரவிக்கொண்டிருக்கின்றன. அமரிக்காவும் அதன் நேச அணிகளும் ஆதிக்கம் செலுத்திய ஐக்கிய நாடுகள் இன்று புதிய வல்லரசுகளின் நலன்களையும் இணைத்துக் கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும்பகுதி இருளின் விழிம்பிற்குள்ளிருந்து வெளியுலகத்தைப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். சுதந்திரத்தின் உள்ளர்த்ததைப் புரிந்து கொள்ள முனைகிறார்கள். அதிகார அமைப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடு தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.
இலங்கை சோவனிச ஆட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய சிந்தனை விதைக்கப்படுகிறது.
புதிய மாற்ரங்களை மக்கள் எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். போராட்டம் என்பது இரண்டு ஆயுதக் குழுக்களுக்கான போட்டி யுத்தம் என்பதிலிருந்து பல பரிணாமங்களைக் கொண்ட மக்கள் சார்ந்த எழுச்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள 30 வருடகால இழப்புக்களும், எரிப்புக்களும் போதிய சான்றுகளை விட்டுச் சென்றுள்ளன. நண்பர்கள் யார் எதிரிகள் யார் என இனம்காட்டியுள்ளது.
கஷ்மீரிலே சிந்தப்படுகின்ற குருதி, தண்டக்காரண்யாவின் வலி, ஆப்கானில் கொத்துக்குண்டுகளில் செத்துப் போகிறவர்களின் அவலம், அரபு நாடுகளின் தெருக்களில் போர் செய்கின்ரவர்கள் வீரம், இது போன்ற உலகம் முழுவதும் நிகழ்கின்றவற்ற நாமும் உண்ர்கின்ற புதிய சகாப்தத்திற்குள் நாம் நுளைந்திருக்கிறோம்.
இந்தியாவும் சீனாவும் இலங்கையின் இனப்படுகொலைக்குத் நிபந்தனையின்றிய ஆதரவை வழங்கியது என்பது கற்பனையல்ல. அமரிக்காவும் ஐரோப்பாவும் இலங்கை அரசை வாழ்த்துவது மறுதலையானதல்ல. ஐக்கிய நாடுகள் தனது நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து போரட்டங்களைப் தடுக்கின்றது என்பது புதியதல்ல. உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் எம்மை நேசக்கரம் நீட்டி வரவேற்கத் தயாராகவுள்ளனர். ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் பறிக்கப்படும் எமது தன்னுரிமைக்காகப் போராடத் தயங்கமாட்டார்கள். இலங்கையின் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணையத் தயாராவார்கள்.