தமிழர் விடுதலை இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலத்தில் இந்தியாவின் மீதான நம்பிக்கை தீவிரமாக இருந்து வந்து, குறுகிய காலத்தினுள்ளேயே ஒரு பேரழிவிற் போய் முடிந்தது. ஆனாலும் எந்தவிதமான பயனுள்ள பாடங்களும் கற்கப்படவில்லை.
1987முதல் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப் புலிகளுக்கு இருந்தது. தமிழ் மக்களின் உரிபை போராட்டத்தைத் தனது மேலாதிக்கத் தேவைகட்காகப் பயன்படுத்துவதுடன் தன் எடுபிடிகளைத் தவிர வேறெவரையும் மேலெழ இந்தியா அனுமதிக்காது என்பதை விளங்கிக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு இந்தியா மட்டுமல்லாம் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை வேண்டி நிற்கும் எந்த வல்லரசுமே அதே விதமாகவே நடந்து கொள்ளும் என்பது விளங்காமல் இருந்திருக்க முடியாது.
இந்தியாவைப் பகைத்துக் கொண்ட சூழ்நிலையில் இன்னொரு வல்லரசின் ஆதரவைத் தேடுவதற்கான நிர்ப்பந்தம் விடுதலைப் புலிகட்கு இருந்ததாகக் கூற முடியாது. அப்படி இருந்திருந்தாலும், தமிழ் ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்குமளவுக்கு இலங்கை அரசாங்கத்துடன் முரண்படக்கூடிய ஒரு வல்லரசும் இருக்கவில்லை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பு அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.
அமெரிக்க நிலைப்பாடு என்றுமே விடுதலைப் புலிகட்கு ஆதரவு என்பதாக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தைக் கூட அமெரிக்கா நிராகரித்து வந்துள்ளது. எனவே விடுதலைப் புலிகளும் அவர்கட்கு ஆதரவாளர்களும் 2006 முதல் போர் தீவிரப்படுத்தப்பட்ட சூழலில் அமெரிக்கத் தரப்பிலிருந்து எதிர்பார்க்கக் கூடியதெல்லாம் போர் நிறுத்தத்தையும் பேச்சு வார்த்தைகளையும் வற்புறுத்தி அமெரிக்காவும் மேற்குலகும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குவாரங்களைக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால் அமெரிக்கா இவ் விடயத்தில் ஒரு உறுதியான தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிற விதமாகத் தொடர்ச்சியான நெருக்குவாரம் போரின் அகோரமான இறுதிக் கட்டத்திற் கூட வழங்கப்படவில்லை. இந்தியாவுடனான மேலாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாகவே போர் நிறுத்தத்தைக் கோருவதும் பேசாமலிருப்பதும் அமைந்திருந்தது.
பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டதற்கான நியாயங்களைப் பற்றிய அக்கறை எதுவுமின்றி, அந்த நிகழ்வின் பின் அமெரிக்காவிற்கு விடுதலைப் புலிகள் மீதான அதிருப்தியே ஒங்கியிருந்தது. அதை, அமெரிக்காவின் இலங்கைத் தூதர்கள் முதல் தென்னாசிய அலுவலங்கட்குப் பொறுப்பான பிரமுகர்கள் வரை, ஒவ்வொருவருமே வேறு படும் அளவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். போர் 2006ம் ஆண்டு முனைப்புற்ற பிறகு அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைப் பற்றிப் பேசிய ஒவ்வொரு தருணத்திலும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது என்பதை யாரும் மறக்கலாகாது.
எனவே, அமெரிக்கா தனித் தமிழீழம் என்ற தமிழ்த் தேசியவாதக் கனவுக்கு எந்த வகையிலும் உடன்பாடானதல்ல என்பது சில புலம் பெயர்ந்த மேட்டுக்குடி மரமண்டைகளைத் தவிர வேறு எவருக்கும் எளிதாகவே விளங்கியிருக்க வேண்டும். எப்படி இந்தியா பங்களாதேஷ் உருவாக்கத்துக்கு ஒரு கருவியானதை வைத்து அது தமிழீழத்தை உருவாக்கவும் உதவும் என்று சிலர் கனாக் கண்டார்களோ, அது போலவே வேறு சிலர் கொசொவோவைக் காட்டி அமெரிக்கா தமிழீழத்தின் தோற்றத்துக்கு உதவும் என்றும், கிழக்கு திமோரின் தோற்றத்தில் ஐ.நா. படைகள் வகித்ததாகச் சொல்லப்படும் பங்கை வைத்து இலங்கையிலும் அவ்வாறான ஒரு வாய்ப்பு உண்டு என்றும் கனவு கண்டார்கள். இன்னுஞ் சரியாகச் சொல்வதானால் கனவுகளைப் புனைந்து மக்கள் மத்தியில் உலாவ விட்டார்கள்.
அமெரிக்கா நெருக்குவாரம் ஐரோப்பிய ஒன்றியத் தடையில் முக்கியமான பங்கு வகித்தது என்பது உண்மை. அதே வேளை ஒவ்வொரு நாட்டிலும் விடுதலைப் புலிகள் மீதான கண்காணிப்பும் கடுமையாக்கப் பட்டது. எனவே முழு உலகினதும் நோக்கில் பொதுவாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே எல்லா நாடுகளும் இருந்தன என்பது விளங்கும் விலக்காகத் தென்னாபிரிக்கா போன்ற ஓரிரு நாடுகளில் ஆதரவுமில்லாத எதிர்ப்புமில்லாத, ஆக மிஞ்சித் தமிழ் மக்களுக்கு அனுதாபமான, ஒரு நிலைப்பாடு இருந்ததாகக் கூறலாம்.
2003 முதலாக விருத்தி பெற்ற இந்தப் போக்கு, 2006க்குப் பின்பும் எவ்விதமான நெகிழ்வையும் காட்டவில்லை. 2006ம் ஆண்டு தொடங்கிய கிழக்கு மாகாண மோதல் விடுதலைப் புலிகட்குப் பிரதேச அடிப்படையில் ஒரு பாரிய பின்னிடைவாக அமைந்தது. 2007ம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகள் தமது போராட்ட அணுகுமுறையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 2009ம் ஆண்டு துரிதமான சரிவை எதிர் நோக்கிய நிலையில் விடுதலைப் புலிகளிடையே மக்கள் விரோதப் போக்கு வளர்ந்ததே ஒழிய மக்களை நம்பும் தேவை உணரப்படவில்லை இறுதி மாதங்களில் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்பதும் உண்மை.
போராலான அழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி ஐ.நா.அடக்கி வாசித்து வந்தது என்பது பகிரங்கமாகவே ஐ.நா. மீதும் அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டாகும். மனிதப் பேரழிவுகள் பற்றி ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழுக்களுக்கு கிடைத்த தகவல்கள் கூட மறைத்து மழுப்பப்பட்ட விடயங்கள் போரின்; முடிவிற்கு முன்பே வெளியாகின.
ஐ.நா. பொதுச் செயலாளரின் மனிக் ஃபாம் அகதி முகாம் விஜயம் போலக் கேவலமான கண் துடைப்புக்கள், ஐ.நாவின் வெட்கக் கேடான வரலாற்றிற் கூட அதிகம் இருக்க முடியாது.
அப்படியானால் அமெரிக்காவையும் ஐ.நாவையும் பற்றியுமான எதிர்பார்ப்புக்கள் ஏன் கட்டியெழுப்பப்பட்டன? குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நிச்சயமாகவே தோல்வியை நோக்கி நகருகிறது என்பதை அறிந்து கொண்டும் ஏன் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வளர்க்கப்பட்டன?
அமெரிக்காவோ ஐ.நாவோ இலங்கைத் தமிழர் சார்பாகக் குறுக்கிவிடுவதற்கான அரசியற் தேவை இல்லை என்பது ஏகாதிபத்தியம் பற்றிச் சிறிதாவது விளங்குகிற எவருக்கும் விளங்கக் கூடிய உண்மை. மேற்குலகின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் வேர்கள் தமிழ்த் தேசியவாதத்தின் வர்க்க இயல்பின் ஆழப் பதிந்துள்ளன.
ஏகாதிபத்தியத்தைப் பகைத்துத் தமிழீழத்தை வென்றெடுக்க இயலாது என்ற எண்ணம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்தது. எப்போதுமே ஏகாதிபத்தியத்தை அண்டி நின்று (அல்லது ஒரு குறுகிய காலத்தில் மட்டும் இந்தியாவை அண்டி நின்று) விடுதலையை வெல்லாம் என்ற சிந்தனையால் சிறைப்பட்டோராகவே விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை பற்றிப் பேசிய பிற அமைப்புக்களும் இருந்து வந்தன.
2009 மே மாதத்துடன் முடிந்த போரின் பின்பும் அதன் பின்பும் தொடருகிற அவலங்களின் நடுவிலும் ஐ.நா. பற்றியும் அமெரிக்கா பற்றியுமான எதிர்பார்ப்புக்களுக்கு முட்டுக் கொடுத்துத் தூக்கிவிடுகிற போக்கே தொடருகிறது.
இப்போது, இலங்கை அரசாங்கம் முட்கம்பி வேலிகட்டுப் பின்னாலிருப்போரை விடுவித்து மீளக் குடியமர்த்த வேண்டும் என்ற கருத்து ஐ.நா. மூலமும் மேற்குலகு பல திசைகளிலுமிருந்து வருகின்றன. திருமதி கிளின்ற்றன் கூட வன்புணர்ச்சி ஒரு ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது பற்றிப் பேசியுள்ளார்.
இவற்றின் கருத்தென்ன? தமிழ் மக்களை மீட்டெடுக்க அமெரிக்காவும் ஐ.நா. நிறுவனமும் ஆயத்தமாகின்றனவா? அமெரிக்காவின் மனித உரிமை நிறுவனம் எதுவுமோ ஐ.நா. மனித உரிமை ஆணையமோ எதைச் சொன்னாலும் அதன் பின்னால் ஒரு அரசியல் உண்டு. அதைவிட, அவை சொல்கிற விடயங்கட்கும் அமெரிக்க அரசாங்கமோ ஐ.நா. நிறுவனமோ எடுக்கப் போகிற நடவடிக்கைகட்கும் எவ்விதமான உறவும் இல்லை. அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் பயனளிக்காத போது அவை கிடப்பிற் போடப்படும். ஆக்கிரமிப்பு ஒன்று தேவைப்படுகிற போது அவை ஆதாரங்களாக்கப்படும்.
இப்போது அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இலங்கையை வழிக்குக் கொண்டு வருகிற ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதே வேளை இலங்கையில் நேரடியான குறுக்கீட்டுக்கான வாய்ப்பு இல்லை. எனவே பொருளாதார நெருக்குவாரங்கள் ஒரு புறமும் மனித உரிமை மீறல் நெருக்குவாரங்கள் இன்னொரு புறமாகவும் நடைபெறுகின்றன.
இந்த நாடகம் மேற்குலகுக்கு விளங்காததல்ல. அதுவும் தனது பங்கிற்கு நாடகத்தில் தனது வேடத்தைப் போட்டு ஆடுகிறது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்குப் போனால் அவர் அங்கு வழக்கு விசாரணைக்கு உட்படுவார் என்று புலம்பெயர்ந்த பிரமுகர்களாலற் சொல்லப்பட்டது. அவர்; போய் வந்தும் விட்டார். அமெரிக்க அதிகாரிகளுடன் பேசிவிட்டும் வந்திருக்கிறார்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கை ஒன்று செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் சொன்னார்கள். அது ஒரு மாதம் பிற்போடப்பட்டள்ளது. ஏன்?
இலங்கையைத் தன் ஆதிக்கத்திற்குட் கொண்ட வருவதற்குத் தமிழ் மக்களின் அவலம் அமெரிக்காவுக்குப் பயன்படுகிறது. அதற்கு ஐ.நாவும் ஒத்துழைக்கிறது. இதை இலங்கை; தமிழர்கள் விளங்கிக்க கொள்ள வேண்டும். அமெரிக்காவினதும் ஐ.நாவினதும் புதிய அக்கறைகளை வைத்துப் புலம்பெயர்ந்த மேட்டுக்குடிகள் தமிழ் மக்களை அமெரிக்காவிற்குக் கொத்தடிமைகளாக்குகிற முயற்சி பற்றிப் புலம்பெயர்ந்த தமிழர் விழிப்புடன் இருக்க வேண்டும்.