Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐயர் எழுதிய நூல் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறது : ரகுமான் ஜான்

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலின் வெளியீட்டு விழா மாசி 25,2012ல்ஸ்காபரோ சிவிக் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நூலை கணேசன் எழுதியிருந்தார். ஐயர் என்றபெயரால் அழைக்கப்படும் இவர் தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள்ஒருவர். நூல் வெளியீட்டினை தமிழர் வகை துறை வள நிலையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.சுமார் 125 பேரளவில் கலந்து கொண்ட இந் நிகழ்விற்கு ரதன் தலைமை தாங்கினார்.ஈழப் போராட்டத்தின் ஆரம்ப நிலைகளை நூலாக உருவாக்க முயன்று அதற்காகவே பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் அவர்களின் நினைவஞ்சலியோடு ஆரம்பமான நிகழ்வில்செழியன், குமரன், அருண்மொழி வர்மன், ரகுமான் ஜான் ஆகியோர் கருத்துரைகள்வழங்கினர். இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பலர் ஆர்வத்துடன் கலந்து கருத்துக்களைஷகூறினார்கள். இந் நூலை இனியொரு இணையத்தளம் வெளியிட்டிருந்தது.நூலின் முதலாவது பதிப்பில் இன்னும் சில பிரதிகளே எஞ்சியுள்ள நிலையில் கனடாவில் அதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர்         416-450-6833       என்ற அலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

கனடாவில் நிகழ்வுற்ற நூல் அறிமுத்தில் உரையாற்றிய ரகுமான் ஜான் ஐயருடைய காலப்பகுதியில் திருகோணமலைப் பகுதியில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளோடு தன்னை இணைத்துக்கொண்டவர். ரகுமான் ஜானின் உரையின் முழுமையான பகுதி இங்கே தரப்படுகிறது.

 

போராட்டத்தின் வரலாறு பற்றிய விரிவான அறிவு இல்லாதவர்களிடையே புலிகள் கட்டமைத்துள்ள ஒற்றைப்பரிமான கதையாடலை இந்த நூல் மறுப்பது மாத்திரமன்றி, போராட்டம் பற்றிய ஓரளவு விபரம் தெரிந்தவர்களுக்குக் கூட, புலிகள் அமைப்பினுள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை, அதன் ஆரம்பகால வளர்ச்சிநிலையில், எவ்வித பாசாங்குத்தனமும் இன்றி உண்மையாக, நேர்மையாக முன்வைக்கிறது. இந்த வகையில் ஐயர் இந்த வரலாற்றை நேர்மையாக பதிவு செய்வதன் மூலமாக, தன்னளவில் ஒரு முக்கியமான வரலாற்பாத்திரத்தை ஆற்றியுள்ளார். இந்த நூலானது இப்போதும், எதிர்காலத்திலும் எமது போராட்டம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் தேடல்களை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு ஒப்பற்ற ஆதாரமாக அமையும் என்பதில் சந்தேகத்திறகு இடமில்லை.

இந்த நூலானது மேலே கூறியது போன்று முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்ற போதிலுங்கூட, இன்னமும் இதன் முழுமையாக உள்ளாற்றலும் (potential) கைவரப்பெறாத நிலையில், இதிலுள்ள பலவேறு விடயங்களும், வெறும் தகவல்களாக, உணர்வுகளாக முறையாக கோட்பாட்டாக்கம் செய்யப்படாததாகவே இருக்கிறதன. ஆதலால் இந்த படைப்பின் முழுமையான potential ஐ நாம் கைவரப்பெற வேண்டுமாயின், இந்த நூலானது சரியான கோட்பாட்டு சாதனங்களின் உதவியுடன் அனுகப்பட, பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது. அந்த பாத்திரத்தை நான் எனது உரையில் மூலமாக ஆற்ற முனைகிறேன்.

வரலாற்றில் தனிநபரது பாத்திரம் குறித்து…

தலைவர் பிரபாகரன் சூரியதேவன் என்றும் முருகனின் அவதாரம் என்றும், அந்த தனிமனிதனது சாதனைகளே தமிழீழ விடுதலைப்போராட்டம் என்று துதிப்பவர்களது கருத்துக்கள் எவ்வளது அபத்தமானவையோ, அதேயளவு அபத்தமானவை தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அத்தனை இடர்பாடுகளுக்கும் பிரபாகரன் என்ற தனிமனிதனே என்ற குற்றச்சாட்டுமாகும். அதிலும் முன்னையவர்கள் மிகவும் சாதரமாணவர்கள், விரிவான அரசியல் ஞானமற்றவர்கள். இதனால் இவர்களது தவறுகள், அவை எவ்வளவுதான் பாரதூரமானவையாக இருப்பினுங்கூட மன்னிக்கத்தக்கவை. ஆனால் இரண்டாவது தரப்பினர், தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையை காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது.

வரலாற்றில் தனிநபர்களது பாத்திரம் குறித்த விடயமானது மிக நீண்டகாலமாக கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய ஒரு விடயமாகும். வரலாற்றை தீர்மானிப்பதில் சமுதாயத்தின் கட்டுமானங்களாக பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மற்றும் அந்த சமூக்தின் குறிப்பான வரலாற்று நிலைமைகள் எவ்விதமான பாத்திரம் வகிக்கின்றன என்பதில் பல்வேறு தத்துவஞானிகளும் பலவிதமாக நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறே அந்த வரலாற்று இயக்கங்களில் முதன்மையான பாத்திரம் வகிக்கும் தனிநபர்களது பாத்திரம் பற்றியும் பலவிதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. மார்க்சியமானது வரலாற்றில் பொருள்வகை அம்சங்களது பாத்திரத்தை வலியுறுத்துகின்ற போதிலுங்கூட, அது தனிநபர்களது பாத்திரங்களை முற்றாக நிராகரித்துவிடுவதில்லை. இந்த பொருள்வகை காரணிகள் ஏற்படுத்தும் வரையறுத்த எல்லைக்குள் இந்த தனிநபர்களது தனிச்சிறப்பம்சங்களான அவரது வர்க்க-சமூக பின்னணி, அவரது பிரக்ஞை மட்டம், அறிவாற்றல், அவர் தேர்ந்தெடுக்கும் அரசியல் மற்றும் அவரது உளவியல் குணநன்கள் கணிசமான பாத்திரம் ஆற்றவே செய்கிறது. இந்த வகையில் சமூக கட்டமைப்புகளுக்கும், தனிநபர்களது பாத்திரத்திற்கும் இடையிலான இயங்கியல் உறவை சரிவர கருத்திற்கொள்ளாத எந்தவிதமான ஆய்வுகளுமே விஞ்ஞானபூர்வமானாக அமையமாட்டாது.

இந்தவகையில் பார்த்தால் தமிழ் சமுதாயமானது மிகவும் ஒரு பிற்போக்கான சமூகமாகும். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகும். இதனைவிட விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும். அரசாங்க உத்தியோகம், சிறு அளவிலான விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூர் சில்லறை வர்த்தகம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ள ஒரு பொருளாதார வளர்ச்சியற்ற ஒரு சமுதாயம். எமது சமுதாயத்தில் உயர்கல்வியை நாடுபவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமே என்றபோதிலும் அந்த கற்றலானது வெறுமனே நிபுணத்துவம் சார்ந்த கற்றல் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டதாக அமையவில்லை என்பது வெளிப்படையானது.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் சாதியரீதியில் உயர்நிலையில் இல்லாத ஒரு சமூகப்பிரிவிலிருந்து, உயர்கல்வியையோ, விரிவான அரசியல் போதமோ ஊட்டப்படா, வெறும் பதினேழு வயதான இளைஞனாக பிரபாகரன் போராட்டத்திற்கு வருகிறார். அவர் இந்த சமூகத்தையும், போராட்டத்தையும் முகம் கொடுத்த விதமே இந்த நூலின் முக்கிய கருப்பொருளாகிறது. அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவது, இந்த அரசினதும், ஏனைய போராட்டத்திற்று ஊறு விளைவிக்கும் சக்திகளது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பிழைப்பது என்பதே இந்த நூலின் பொருளாகிவிடுகிறது.

இந்த இடத்தில் முக்கியமான இன்னொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். புலிகளது அரசியல் வறுமை பற்றி விமர்சிப்பவர்கள் எவருமே மாற்றாக ஒரு விரிவான திட்டத்தை வகுத்து முன்வைத்து, ஒரு பலமான அமைப்பை ஒழுங்கமைக்க முடியாதவர்களாகவே உள்ளோம் என்பது ஒரு வேதனையான உடன்நிகழ்வாகும். இந்த குறைபாட்டிற்கு வெறுமனே புலிகளது தடை நடவடிக்கைகளை மாத்திரம் காரணமாக கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. புரட்சிகர இயக்கங்கள் எதுவுமே எதிரியினதும், எதிர்ப்புரட்சிகர சக்திகளதும் அனுமதியுடன் போராட்டத்தை திட்டமிடுவதோ, முன்னெடுப்பதோ கிடையாது. எதிர்ப்புரட்சிகர சக்திகள் அரங்கிற்கு வருகையில் அவற்றை எவ்வாறு முகம் கொடுப்பது என்பதும் புரட்சிகர திட்டமிடலில் அமைந்திருக்க வேண்டும். தீப்பொறி, என்எல்எப்ரி போன்ற அமைப்புகளின் சிதைவில், அந்த அமைப்புக்களது அகக் கூறுகளே, உள்முரண்பாடுகளே பிரதான பாத்திரம் வகித்தன என்பது மிகவும் முக்கியமான உண்மையாகும். இந்திய – இலங்கை அரசுகளின் கால்களில் சரணடைந்துவிட்டவர்கள், ஜனநாயகத்தை பற்றிப் பேசுவதற்கு இலாயக்கற்றவர்களாவர். இது இன்றுவரையிலான இவர்களது நடவடிக்கைகள் மூலமாகவே தெளிவாகிறது.

தன்னியல்புவாதம்

புலிகளது ஆரம்பகால சிந்தனைகளை பரிசீலிக்கும் எவருக்கும் சில உண்மைகள் தெளிவாக தெரியும். புலிகளிடம் தெளிவான, திட்டவட்டமான அரசியல் கருத்துக்கள் இருக்கவில்லை. இவர்கள் தம்மை தமிழர் விடுதலை கூட்டணியின் இராணுவ வடிவமாகவே கண்டார்கள். இது தவிகூ உடன் நேரடியான தொடர்புகள் இல்லாத காலத்திலும் சரி, பின்னர் நேரடியான தொடர்புகள் உருவாகிவிட்ட பின்னருங்கூட இப்படிப்பட்டதொரு கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

புலிகளைப் பொருத்தவரையில் விடயங்கள் மிகவும் இலகுவானவையாகவும், தெளிவானவையாகவும் இருக்கின்றன. தமிழ் மக்களை சிறிலங்கா அரசு ஒடுக்கிறது. இந்த அரசுக்கு எதிராக போராடுவதற்காக ஒரு படையை அமைப்பது: எதிரியை தாக்குவது: அதற்குத் தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவும், போராளிகளை பராமரிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால் வங்கிகளில் கொள்ளையிடுவது: தம்மைத் தேடிவரும் எதிரிகளையும், எதிரிக்கு துணைபோகும் துரோகிகளையும் வேட்டையாடுவது: இந்த நடவடிக்கைகளினூடாக ஒரு பலமான படையை கட்டியமைத்தால் எமது தாயகத்தை எதிரியிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். ஒரு தனியரசை நிறுவுவதன் பின்பு அமைப்பை கலைத்துவிடுவதாக முடிவு செய்கிறார்கள்.

இங்கே நாம் தன்னியல்புவாதத்தின் அசலான வகைமாதிரியை (classical example) காண்கிறோம். இங்கே சமூகமானது அதன் அத்தனை சிக்கலான பிரச்சனைகளுடனும் கோட்பாட்டு மட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமல், வெறுமனே அனுபவவாத மட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் விரிவான கோட்பாட்டு மட்டத்திலான ஆய்வுகள், எதிரிகள் – நண்பர்களை சரிவர வரையறுத்துக் கொள்வது: அரசியல் திட்டம், மூலோபாயம் – தந்திரோபாயம் போன்றவற்றை வரைந்து கொள்வது: அமைப்பு விதிகள்: இராணுவ மூலோபாயம் – தந்திரோபயம் பற்றிய அறிதல் எதுவுமின்றி போராட்டம் தொடங்கிவிடுகிறது. தமது கண்ணுக்கு எதிரே தெரியும், தொட்டுணரத்தக்க இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்துவதும், அந்த தாக்குதல்களுக்கு வரும் எதிர்தாக்குதல்களைமுகம் கொடுத்து முறியடிப்பதும் என்று போராட்டம் தீவிரமாக முன்னேறுவதான ஒரு தோற்றப்பாட்டை அதில் ஈடுபடுபவர்களுக்கும், மக்களுக்கும் உருவாக்குகிறது. ஆனால் இந்த தேனிலவு நீடிக்கவில்லை. நெருக்கடிகள் அமைப்பினுள், அதுவும் அமைப்புத்துறை மற்றும் போராட்ட வழிமுறை தொடர்பாக உருவாகி, கடைசியில் பிரபாகரன் தனிமனிதனாக விடப்படுகிறார். தன்னை ரெலோ இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்.

தன்னியல்பு அல்லது தன்னெழுச்சி என்பது தானாக, இயல்பாக குறிப்பிட்ட சமூகப்பிரிவினருக்கு கைவரப்பெறும் நடைமுறைகள் என்று அர்த்தம்பெறும். மாணவர்கள் பாடசலையை பகிஸ்கரிப்பதும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதும், இளைஞர்-யுவதிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வதும், இந்த ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு, அவை அரசின் சொத்துக்கள் என்ற எண்ணத்தில் சேதமிழைப்பதும், சில ஆயுத தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் அரசுக்கு ஆதரவானவர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்துவதும் இந்த சமூகப்பிரிவினருக்கு மிகவும் இயல்பாக ஏற்படும் தன்னியல்பின், தன்னெழுச்சியின் வெளிப்பாடாகும்.

தன்னியல்பு மற்றும் பிரக்ஞை ஆகியவற்றிற்கு இடையிலான உறவென்பது இயங்கியல்ரீதியானது. பிரக்ஞை என்பது தாம் பற்றியும், தமது சூழல் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனையுடன், திட்டவட்டமான இலக்குகளை வகுத்து, அவற்றை அடைவதற்கான மூலோபாயம் – தந்திரோபயம் அடிப்படையில், சரியான சக்திகளை அணிதிரட்டி அவர்களது போராட்டத்திற்க தலைமை தாங்குவதைக் குறிக்கிறது. இதற்கு மாறாக, தன்னியல்பு என்பது இந்த வகையான ஆளமான பார்வை, திட்டமிடல், மற்றும் தயாரிப்பு போன்றவை இன்றி, தமக்கு கண்முன்னே தெரிகின்ற இலக்குகளுக்கு எதிராக, தொட்டுணரத்தக்க விளைவுகளை நோக்கி, இங்கேயே, இப்போதே, இப்படியே என்றவகையில் செயட்படுகிறது. முறையான தயாரிப்புக்களோ, அல்லது சரியான திட்டமிடலோ இன்மையானல் தன்னியல்பான போராட்டங்கள் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகின்றன. போராட்டத்தில் ஏற்படும் தவறுகளை மதிப்பிடுவதற்கும், பரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. சுக்கான் இல்லாத, திசையறி கருவியல்லாத படகுபோல எப்போதும் முன்னோக்கிச் செல்வதான ஒரு தோற்றப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது தான் சொல்லிக் கொண்ட இலக்கை அடைவது மிகவும் அறிதானது. முப்பது வருட போராட்டத்தில் புலிகளது முடிவு அதனை தெளிவாக காட்டுகிறது.

நாம் முன்னரே பார்த்தவாறு தன்னியல்பிற்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவானது இயங்கியல்ரீதியானது என்றான பின்னர், தன்னில்பையும், பிரக்ஞையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக காட்டுவது அபத்தமானது. மக்கள் மிகப்பெரும்பாலன சந்தர்ப்பங்களில் தன்னியல்பாகத்தான் செயற்படுகிறார்கள். சாதாரண மக்களது அன்றாட வாழ்வியல் சுமைகளும், அவர்கள் மீது ஆதிக்க சித்தாந்தங்கள் செலுத்தும் ஆதிக்கமும் இந்த நிலைமையைக் கடந்து முன்னேற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் தலைமை என்பது வழிகாட்டுதல் என்று அர்த்தப்படும். இது கட்டாயமாக பிரக்ஞைபூர்வமானதாக அமைந்திருப்பது அவசியமானது. தான் எங்கே செல்கிறேன் என்பதை சரிவர தெரிந்தவரினால் எடுத்தவருக்க வழிகாட்டுதல் சாத்தியமாகும்.

இங்கு காணப்படும் ஒரு முக்கியமான முரண்உண்மை (paradox) யாதெனில், தலைமையானது, தனது குறிப்பான வர்க்க நிலைமை மற்றும் புரட்சியின் நெருக்கடியான நிலைமைகள் காரணமாக, தவிர்க்க முடியாதவாறு யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படுகிறது. மாறாக, மக்கள், தமது அன்றாடமான, மிகவும் அற்பமான சாதாரண விடயங்களில் மூழ்கிப் போகும் சமயங்களில் கூட சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு, அதனை அதன் அத்தனை அன்றாட சின்னத்தனங்களுடனும் முகம் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் தலையைவிட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரக்ஞைபூர்வமான தலைமையானது சில சமயங்களில் கண்டறியத் தவறும் பல விடயங்கள் இந்த சாமாண்யர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. இதன் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுங்கூட, இந்த மக்களிடம் இருந்து தன்னியல்பாக வெளிப்படுகிறது.

உதாரணமாக, பிரெஞ்சுப் புரட்சியின்போது அதன் தலைவர்களது அக்கறையானது ஆரம்பத்தில் ஒரு வரம்பிற்குட்பட்ட முடியாட்சியை அமைப்பது என்பதைத் தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் பாரிஸ் மக்களது தன்னியல்பான செயற்பாடுகள் நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டது. உதாரணமாக, பாஸ்டீல் சிறையுடைப்பு, பிரெஞ்சு மன்னன் லூயியை வெர்சேயிலிருந்து பாரிசிற்கு அழைத்து வந்தது, கிராமப்புறங்களில் நடைபெற்ற பிரபுக்களுக்கு எதிரான போராட்டம் என்பன தவிர்க்கமுடியாதவாறு புரட்சியின் தலைவர்களை குடியரசை பிரகடனப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தது. அவ்வாறே ரஷ்ய புரட்சியிலும் தொழிலார் மற்றும் படைவீரர்களது சோவியத் அமைப்பும் இவ்வாறு தன்னியல்பாக தோன்றியதே. போல்சேவிக் கட்சியானது இந்த தன்னியல்பான எழுச்சியை பற்றிக்கொண்டு அதற்கு வழிகாட்டி தலைமை தாங்கினார்கள். இப்படியாக தன்னியல்பான மக்களது போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்வதும், அவற்றில் கலந்து கொள்வதன் மூலமாக படிப்படியாக அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு போதமூட்டி, வழிகாட்டுவதன் மூலமாக மக்களது பிரக்ஞை மட்டத்தை உயர்த்துவதுமே புரட்சியாளர்களது கடமையாகும். உண்மையில் மக்களது மாபெரும் சக்தியை தட்டியெழுப்பி, அதற்கு தலைமை தாங்குவதன் மூலமாகவே புரட்சியாளர்கள் தம்முன்னுள்ள மாபெரும் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

மாறாக எமது போராட்டத்தில் புலிகள் அமைப்பானது மக்களை அணிதிரட்ட முயலாதது மட்டுமல்ல, மாறாக மக்களது தன்னியல்பான போராட்டங்களை முற்றாக நசுக்கினார்கள். ஒரு கட்டத்தில் மக்களது பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று அதன் தலைவர்கள் பகிரங்கமாகவே குறிப்பிட்டனர். உண்மையில் அதுவேதான் இறுதியில் நடந்து முடிந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மாபெரும் தற்கொலைதான்.

இலக்கும் வழிமுறையும்

போராட்டம் தொடர்பான ஒரு முழுமையான பார்வையின்றி முன்னெடுக்கப்படும் புலிகளது போராட்டமானது ஒரு கட்ட்தில் தனது இலக்கிற்கும், அதனை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் வேறுபாடுகளை காணத்தவறிவிடுகிறது. தமிழ் மக்கள் தமது தேசிய ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்துக்கொள்வது என்பதே போராட்ட்தின் இலக்காக அமைகிறது. அந்த இலக்குதான் தமிழீழ அரசை அமைப்பதாக வரையறுக்கப்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றே ஆயுத போராட்டமாகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே புலிகள் அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஆனால் படிப்படியாக அமைப்பு, அதன் பாதுகாப்பு என்பன முக்கியப்படுத்தப்படத் தொடங்குகிறது. இறுதியில் இது மக்களை பலிகொடுத்தாவது அமைப்பையும், அதன் தலைமையையும் பாதுகாப்பது என்பதாக மாறிவிடுகிறது. இதன் போக்குகள் ஆரம்பத்திலேயே தென்படத் தொடங்குகின்றன. சகபோராளிகளது ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரங்கள் அமைப்பை பாதுகாப்பது என்ற பெயரால் மறுக்கப்படுகின்றன. இந்த போக்கின் மிகவும் வளர்ந்த போக்குத்தான் மக்களை பலிகொடுத்து அமைப்பை பாதுகாக்க முனைந்தததை முள்ளிவாய்காலில் காண்கிறோம்.

உட்கட்சிப் போராட்டமும், அதில் வெளிப்பட்ட போக்குகளும்

இயக்கத்தினுள் தலைமையினது தன்னிச்சையான போக்குகளுக்கு எதிராக தொடங்கிய சாதாரண முனுமுனுப்புகள், பின்னர் மார்க்சியத்தின் அறிமுகத்துடன் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்சிப் போராட்டமாக உருப்பெருகிறது என்பதை ஐயர் சிறப்பாக விளக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பெரும்பான்மையானது இயக்கத்தின் போராட்ட வழிமுறைகள் தொடர்பான பிரச்சனைகளில் தீவிரமாக கவனத்தைக் குவிக்கும்போது, சில தனிநபர்கள் அதனை வெறுமனே தலைமை பற்றிய பிரச்சனையாக குறுக்குவதும், இந்த பார்வை உண்மையான போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுந்தரம், மாறன், மனோ மாஸ்டர் போன்றோர் தத்தமது வீரப் பிரதாபங்களை பிரகடனப்படுத்த முயற்சிப்பது எவ்வாறு ஆரம்ப அணிசேர்க்கைகளை மாற்றியமைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் புதியபாதை குழுவினருடன் செயற்பட்ட சுந்தரம், கண்ணன் ஆகியோர் உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்கியதில் காட்டும் அவசரம், தன்னிச்சை போக்கும், பின்னர் கழகத்தின் மத்திய குழுவானது, போராட்டம் தொடர்பாக அரசியலையும், இராணுவ செயற்பாடுகளையும் ஒருங்கே முன்னெடுப்பது என்ற முடிவும், கழகத்தின் மத்திய குழுவிற்கு தெரியாமலேயே இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காட்டும் தீவிரமும், புதிய அமைப்பினுள் புலிகள் அமைப்பில் நேர்மையாக போராடிய முற்போக்கு சக்திகளது நோக்கங்கள் அடிபட்டுப் போவதைக் காட்டுகிறது. கழகத்தின் பிற்கால வளர்ச்சியானது அதனை அப்படியே வெளிப்படுத்தியது.

உண்மையில் புதியபாதை குழுவினர் தம்முன்னிருந்த கோட்பாட்டு, அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு கோட்பாட்டு மட்டத்தில் இயன்றவரையில் தீர்வுகாண முயன்றிருக்க வேண்டும். இதுவொரு மாபெரும் பணியாகும். இதனை எடுத்த எடுப்பிலேயே முழுமையாகவும், திருப்தியாகவும் தீர்த்திருக்க முடியாது என்பது உண்மையே என்றபோதிலும், இவற்றை தீர்வு காண்பது தொடர்பான அக்கறைகளும், அதற்கு அமைப்பு வழங்கும் முக்கியத்துவமும் சற்று காலம் கடந்தாவது இந்த நோக்த்தை நிறைவு செய்ய உதவியிருக்கும். ஆனால் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் முதன்மை பெறுவது, மற்றும் சுந்தரம் தன்னிச்சையாக உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்குவதில் காட்டும் அவசரம் போன்றவை இந்த வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகிறது. இதனால் புலிகள் அமைப்பினுள் உட்கட்சிப் போராட்டத்தை உளசுத்தியுடன் முனனெடுபித்தவர்கள் கழகத்தில் இருந்து ஒதுங்கி வெளியேறுகிறார்கள். இவர்களது முடிவு சரியானதே என்பதை பின்னர் வரலாறு நிரூபித்ததை நாம் காண்கிறோம்.

விடுபட்ட சில விடயங்கள்

இந்த நூலில் விடுபட்டுப் போன ஒரு விடயமாக நான் பார்த்த அம்சத்தை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். சந்ததியாருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரபாகரன் முன்மொழியும் கட்டத்தை ஐயர் குறிப்பிடும் போது அந்த முன்மொழிவுக்கும், அதுவரையில் சொல்லப்பட்டு வந்த கதையோட்டத்திற்கும் இடையில் ஒரு இடைவெளியிருப்பதை வாசிப்பவர்கள் கவனித்திருக்க முடியும். சந்ததியார் வெறுமனே உமா மகேஸ்வரனின் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக பிரபாகரன் அவருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என முன்மொழிவதான ஒரு தோற்றப்பாடு இங்கு உருவாகிறது. ஆனால் சந்ததியாருக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. ஐயர் இதனை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அறிந்திருந்தார். ஆனால் எவ்வாறோ அது தவறி விட்டுள்ளது. ஆதலால் அதனை இங்கு குறிப்பிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன்.

இளைஞர் பேரவை சார்பாக புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்ததியார் இந்தியாவுக்கு சென்று சிலகாலம் அங்கு புலிகளது வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அப்போது இந்தியாவில் தங்கியிருந்த புலிகளது அங்கத்தவர்களில் பலர் போதியளவு அரசியல் விழிப்புணர்வு இன்றி இருப்பதைப் பார்த்துவிட்டு, புலிகளது அங்கத்தவர்களுக்கு சந்ததியார் ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து முன்வைக்கிறார். இதில் இருந்த கேள்விகள் எல்லாம் சாதரணமான அரசியல் விவகாரங்கள் பற்றியவையே. உதாரணமாக நாம் ஏன் போராடுகிறோம்? எமது இலக்குகள் என்ன? அதனை எவ்வாறு அடையப்போகிறோம்? அடையப்போகும் ஈழத்தில் நாம் தமிழர் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் எவ்வாறு தீர்வு காணப்போகிறோம்? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளாகவே

இந்த கேள்விகளும் இது தொடர்பான கருத்தாடல்களும் புலிகளது வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. பிரபாகரன் இந்திய சென்றபோது இந்த சலசலப்பை பார்த்து, அமைப்பினுள் தேவையில்லாத குழப்பங்களை சந்ததியார் ஏற்படுத்துவதாக கடிந்து கொள்கிறார். இந்த பிரச்சனையுடன் கூடவே உமா மகேஸ்வரனது பிரச்சனையும் சேர்ந்துவிடவே அது அவர் மீதான மரண தண்டனை முன்மொழிவாக மாறுகிறது.

அடுத்த ஒரு பிரச்சனை புலிகள் அமைப்பினுள் தோன்றிய உட்கட்சிப் போராட்டத்தில் எமது பாத்திரம் குறித்த ஒரு விடயமாகும். 1978 இன் பிற்பகுதியில் திருகோணமலையில் இருந்த பயஸ் மாஸ்டர் என்பவரின் மாணாக்கராக இருந்த இளைஞர்கள் சிலர் ஒரு சிறு குழுவாக செயற்பட்டு வந்தார்கள். பயஸ் மாஸ்டர் மூலமாக இவர்களுக்கு மார்க்சியம் பரிச்சயமானது. அத்தோடு இவர்களது சுயமான தேடல்களுமாக இவர்கள் ஒரு தீவிரமான அரசியல் அக்கறையுள்ள ஒரு குழுவாக உருப்பெற்றார்கள். பிற்காலத்தில் இந்த குழுவானது புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் புலிகள் அமைப்பிலிருந்து திருகோணமலைக்கான தொடர்பாளராக குமணன் என்பவரே விளங்கினார். இந்த குமணன் திருகோணமலைக்கு வரும் சமயங்களில் எல்லாம் இந்த குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்துவார். பிற்காலத்தில் மனோ மாஸ்டர் இந்த பாத்திரத்தை ஆற்றினார். மனோ மாஸ்டருக்கும் இந்த குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உருவாகத் தொடங்குகின்றன. குறிப்பாக மனோ மாஸ்டர் தனக்கான விசுவாசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்குவதாக இந்த குழுவினர் கருதியதால் அவருடன் கருத்து மோதல்கள் உருவாகின. பின்னர் இந்த குழுவில் இருந்த பெரும்பான்மையானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட, சார்ல்ஸ் அன்ரனியும், புலேந்திரனும் மாத்திரமே மனோ மாஸ்டருடன் இணைந்து கொண்டார்கள்.

என்னைப் பொருத்தவரையில் இது என்றே நடந்து முடிந்த ஒரு விடயமாகவே கருதியிருந்தேன். ஆனால் ஐயர் இந்த வரலாற்றை எழுதும்போது புலிகள் அமைப்பினுள் மார்க்சிய நூல்களை வாசிப்பதற்கான ஆர்வம் எவ்வாறு குமணன் ஊடாக வந்தது என்பதை விபரிக்கிறார். இந்த பகுதியை படித்தபோது நான் மிகவும் humbled (இதனை தமிழ் அகராதியானது கர்வநீக்கம் பெருவதாக மொழிபெயர்க்கிறது.) ஆகிப்போனேன். இதனை இப்போது குறிப்பிடுவதுகூட நான் ஏதோ பகட்டாரவாரம் செய்வதற்காக அல்ல. மாறாக, வரலாறு எவ்வாறு எங்களை மதிப்பிடப்போகிறது என்பதை நினைவு படுத்துவதற்காகவேயாகும். நாம் அன்றாடம் செய்யும் காரியங்களின் உண்மையான பெருமதிகளை நாம் அவற்றை செய்யும்போது அறிந்து கொள்வதில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் அவற்றை நாம் இன்னமும் சிறப்பாகவும், அந்த வரலாற்று பொறுப்புணர்வுடனம் செய்திருக்கலாம் என்று நாம் பிற்காலத்தில் நினைத்துப்பார்க்க நேரும் அல்லவா? அதனால் ஏற்படும் கர்வநீக்கம்தான் இதுவாகும்.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஐயருக்கும எனக்குமான தொடர்பானது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் வாய்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு நிலைமைகளில் ஒருவரையொருவர் எதிர்கொண்டுள்ளோம். நான் புலிகள் அமைப்புடன் இணைந்தபோது அவர் பொரறுப்பில் இருந்தார் நான் சாதாரண அங்கத்தவனாக இணைந்து கொண்டேன். பின்னர் நாம் கழகத்தில் இணைந்தபோது அவர் ஏற்கனவே வெளியேறியிருந்தார். பின்னர் சென்னையில் அவரை சந்தித்தபோது நான் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தேன். அவர் சாதாரணமாக ஒரு சிவிலியனாக இருந்தார். பின்னர் கழகத்தில் இருந்து வெளியேறியபோது அவர் NLFT யில் இருந்தார். எமக்கு அடைக்கலம் தந்து பாதுகாத்தார். இன்னும் நான்கு வருடத்தின் பின்னர் அவர் எம்மைத் தேடிவந்தபோது நாம் தலைமறைவு அமைப்பாக இருந்தோம். அவர் NLFT யை விட்டு வெளியேறியிருந்தார். எம்மை சந்தித்தபோது எம்மோடு இணைந்துகொண்டார். பின்னர் தீப்பொறி அமைப்பில் சில வருடங்கள் நெருக்கமாக பணியாற்றினோம். இப்போது கடந்த பதினான்கு வருடங்களாக அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. பரஸ்பரம் செய்திகள் பரிமாறப்படுகின்றன. ஏனோ பேசிக்கொள்ளவில்லை. இப்போது அவரது நூலுக்கு நான் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறேன். இதனை இவ்வளவு விபரமாக நான் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பான காரணம் இருக்கிறது. அதாவது எமது தேசம், அதிலும் உள்ள முற்போக்கு வட்டாரம் என்பது மிகவும் சிறியது. நாம் எவ்வளவுதான் தவிர்க்க விரும்பினாலுங்கூட, முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஒருவரை ஒருவர் தவிர்க்கமுடியாமல் சந்தித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆகவே அன்று ஒருவர் இருக்கும் பலமான அல்லது பலவீனமான நிலைமைகளை நிலையானதான நினைத்துக்கொண்டு அடுத்தவரை ஏறி உழக்காமல் நிதானமாக நடந்துகொள்வது நல்லது. ஏனென்றால் நாளை யார் யாரை, எப்படிப்பட்ட நிலையில் நாம் முகம்கொடுக்க நேரும் என்பதை யாருமே முன்னனுமானிப்பது என்பது முடியாத காரியமாகும். ஆகவே எப்போதும் செருக்கில்லாமல் இருப்து நல்லது.

உதிரிக்கூறுகளின் பாத்திரம் குறித்து…

இந்த நூலில் அடிக்கடி கள்ளக்கடத்தல் பற்றிய பிரச்சனைகள் வந்து போகின்றன. அதனை ஒருதடவை தொட்டுச் செல்வது அவசியமானது என்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தத்தில் புரட்சியில் உதிரிப்பாட்டாளிகளின் பாத்திரம் குறித்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டிதொன்றாகவே நான் கருதுகிறேன். எமது போரட்டத்தில் உரும்பிராயும், வல்வெட்டித்துறையும் வகித்த பாத்திரம் கவனிக்கத்தக்கது. தேசிய அலையானது இந்த பகுதிகளை எட்டியபோது வன்முறை வடிவத்தை எடுத்தது. சமூகத்தில் விழிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் பிரிவினர், நடப்பில் உள்ள சமூக ஒழுங்கமைவிற்கு வெளியில், அதன் அதிகாரத்தை எதிர்த்து செயற்பட நேர்கிறது. அதிகாரத்திற்கு எதிராக நேரடியான மோதல்களில் ஈடுபடும் இவர்களிடம் உள்ள போர்க்குணாம்சமும், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தலைமறைவு வாழ்க்கை போன்றவற்றடனான தொடர்புகளும் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் மிகவும் அவசியமான அம்சங்களை அதற்கு வழங்குகிறது. ஆனால் எமது சமூகத்தில் உள்ள மத்தியதர வர்க்க மனோபாவம் காரணமாக நாம் இந்த சக்திகள் பற்றி பேசும்போது ஒருவித “சட்டவாதம்” பேசுகிறோம். இந்த விதத்தில் நாம் அதிகாரத்தில் இருப்பவர்களை விட சட்டவாதத்திற்கு மிகவும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்கிறோம் அல்லவா? “கள்ளக் கடத்தல்” “கசிப்பு காய்ச்சுவது” என்பவை உண்மையில் அரசாங்கத்தின் வரிவிதிக்கும் ஏகபோக உரிமையை மீறுவதுதானே? இதில் இத்தனை தூய்மைவாதம் பேசுவது எமது வர்க்க மிச்ச சொச்சங்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே நான் கருதுகிறேன்.

இப்போதுங்கூட சிலர் கேபியை பற்றி குறிப்பிடும்போது அவர் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டவர் என்று குற்றஞ்சாட்டும் தொனியில் குறிப்பிடுவதை காண்கையில் சிரிப்புத்தான் ஏற்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் ‘துப்பாக்கிக் குழலில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்பது வாசகம் உண்மையானால், அந்த துப்பாக்கிகளை ஏதாவது ஐநா அமைப்பில் சட்டரீதியாக அல்லது இலவசமாக பெறலாமா என்று சம்பந்தப்பட்டவர்கள் விசாரித்துக் கூறினால் எதிர்காலத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா?

கோழைத்தனம் பற்றிய பிரச்சனை குறித்து…

ஐயர் இந்த நூலில் ஒரு இடத்தில் “கருத்துக்களைக் கண்டு பயப்படும் கோழைகளாக இருப்பதாக” பிரபாகரனை விமர்சிக்கின்றார். இது தொடர்பாக பார்வையாளர்கள் எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். சாதாரணமாக புலிகளின் அரசியலுடன் அறவே உடன்பாடு இல்லாதவர்கள் கூட புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒரு வீரனாகமே மதிப்பார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதாக கூறப்படும் சரணடைவு பற்றிய விடயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் புலிகள் வன்முறையைக் கண்டு பயந்தது கிடையாது. எவ்வளவு பெரிய சக்தியானாலும் அதனுடன் மோதித்தான் வாழ்ந்தார்களேயொழிய சரணடைந்து பாதம்தாங்கி வாழவில்லை. இதனை வைத்து மாத்திரம் இவர்களை வீரர்கள் என்று கூறிவிட முடியுமா? அப்படியானால் இவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தது ஏன்? அவர்களது கருத்துக்களைக் கண்டு பயந்ததனால்தானே? என்றும் நாம் வாதிடலாம். பாம்பு கடிப்பது பயத்தினால்தான் என்பது எமது பழமொழி அல்லவா? இங்கே ஐயர் சொல்லும் கோழை என்ற கருத்து சரியாகத்தான் அமைகிறது. மாறாக, கருத்துப் போராட்டங்களைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலர் யுத்த களதில் முதலாவ வெடி தீர்க்கு முன்னரே பயந்தோடிய கதையும் எமக்குத் தெரியும்தானே?

அப்படியானால் வீரம், கோழை போன்ற பதங்களை நாம் ஒற்றைப் பரிமாணத்தில் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
முடிவாக…

ஐயரது முயற்சி மிகவும் சிரப்பானது. இதனை ஒரு தொடராக அவர் எழுதியபோது தவிர்க்க முடியாதவாறு வரும் கூறியது கூறல்களை, இதனை நூலாக்கம் செய்யும் போது கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டும். இது வலிந்து திணிக்கப்பட்டது போல நூலில் துருத்திக் கொண்டு நிற்கிறது. இதனை அடுத்த பதிப்புக்களிலாவது கட்டாயம் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். இதனை தொடராக வெளியிட்டதிலும், நூலாக்கம் செய்வதிலும் ‘இனியொரு” வலைத்தளம் வகித்த பாத்திரம் பாராட்டுக்குரியது. அவர்கள் மேலும் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் இன்னும் பல போராளிகளும் தமது அனுபவங்களை வெளிக்கொணர்வதன் மூலமாக இந்த முயற்சியை தொடர்வது அவசியமானது என்று கேட்டு எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

 

லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு : 10.03.12 சனி 4 மணிக்கு

வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்:

 

– தினேஷ் – ஊடகவியலாளர் – ஜீ.ரி.வி.
– சத்தியசீலன் – தலைவர் தமிழ் மாணவர் பேரவை.

– பிரசாத் – அரசியல் விமர்சகர்

– தயானந்தா – ஊடகவியலாளர்

– இந்திரன் சின்னையா -மனித உரிமைச் செயற்பாட்டாளர்(நெதர்லாந்து)

– பாலன் -புதிய திசைகள்.

– சபா நாவலன் -பதிப்பாளர்கள் சார்பில்

– சஷீவன் – நூலகம்

– பி.ஏ.காதர் – சமூக அரசியல் ஆய்வாளர்.

 

நூலாசிரியர் ஐயர் ஸ்கைப் இன் ஊடாகக் கலந்துகொள்வார்.

காலம்: 10:03:2012 (சனி)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை

இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)

(உரையாடலிலும் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்வோர் முன்கூட்டியே அறியத்தந்தால் இரவு உணவு ஒழுங்குபடுத்தலுக்கு வசதியானதாக அமையும்.)
தொடர்புகள் : inioru@gmail.com
அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்

தொடர்புடைய பதிவுகள் :

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்) : ஜூனியர் விகடன்

Exit mobile version