Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

மக்கள் தேர்தல்களில் தாம் விரும்பிய அரசியல்’வியாதிகளை’ தேர்ந்தெடுத்தாலும் உலகில் அனேகமான நாடுகள் பல்தேசிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகின்றன; இயங்கும். பல்தேசிய நிறுவனங்கள் தமது நலன்களை அடைவதற்காக தேர்தல்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டிற்கும் நிதிகளை வழங்கும். நன்றிகடனாக தேர்தலில் வெற்றியீட்டும் கட்சிகள் பல்தேசிய நிறுவனங்கள் சார்பாக இயற்கை அழிவதையும் மாசு படுத்தப்படுவதையும் பொருட்படுத்தாது, [அவற்றைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை நினைத்துக்கூடப் பார்கமுடியாது.] அரசுகள் பல்தேசிய நிறுவனங்களின் ஏவலாளிகள் போன்றே செயற்படுகின்றன. மக்களை அடக்கி ஒடுக்கி ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு வளங்களை கொள்ளையடிக்க அனுமதி வழங்கும். இதுவே ஜனநாயகம் என அழைக்கப்படுகிறது.

பல்தேசிய நிறுவனங்களின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அரசாங்கங்கள் எப்படி இருக்கும், இயங்கும் என்பதற்கு லைக்காவும் இலங்கை அரசாங்க முக்கியஸ்தர்களும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பண்ணிய அட்டகாசத்தை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு பொது இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணிய இவர்கள் திரைமறைவில் என்ன என்ன அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து ஊகித்து கொள்ளுங்கள்.

லைக்கா தன் குடும்ப சகிதம் கத்தி குழுவினருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தை ஒரு கறிக்கடையாகவே மாற்றி தனது பணத்திமிரை காட்டியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் பல்தேசிய நிறுவனங்கள் இதையே செய்கின்றபோதும் அவை பொது மக்களின் பார்வைக்கு வராமல் அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் ஊடகங்கள் பார்த்துகொள்கின்றன.
இவர்கள் வரி விலக்கு பெறுவதற்காக உதவி செய்கின்றோம் என்ற பெயரில் நூறுக்கும் மேற்பட்ட பல்தேசிய நிறுவனங்களுடன் அங்கு சென்று இலங்கை அரசின் இராணுவ பலம் மூலம் மக்களை அடக்கி அவர்களின் வளங்களை கொள்ளையடிக்கின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வறுமையை ஆயுதமாக பாவித்து அவர்களை வியாபார பண்டமாக்கி தமது சகாக்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர்.

பணவெறியர்களும், வியாபாரப் பேய்களும், ஆள்பவர்களும் இணைந்து தோற்றுவிக்கும் அதிகாரவர்க்கம் உலகம் முழுவதையும் மயானமாக்குகின்றன. அழிவின் சாம்பல் மேடுகளிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் போல ஊடக சுந்தந்திரத்திற்காக உயிரைக்கூடத் துறந்த ஊடகவியலாளர்களைக் காண்கிறோம். எமது சமூகம் நாற்பதயிரம் முழுநேரப் போராளிகளை விடுதலைக்காக வழங்கியிருக்கிறது. இச்சமூகத்திலிருந்து பல்தேசிய வர்த்தகப் பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களை மட்டுமே உலாவ விடுவது எமது போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் அவமதிப்பதாகும்.

மக்களை வியாபார பண்டமாகவே பாவிக்கும் பார்க்கும் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல்தேசியநிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்றுகொண்டு உண்மைகளை மறைத்து அவர்களின் இந்த மனித விரோத செயல்களுக்கு துணைபோகின்றன. லைக்கா பற்றிய இந்த செய்தியை தாயகத்தில் உள்ள தமிழ் பத்திரிகைகள் உதயன், வீரகேசரி, சுடர் ஒளி, மற்றும் தமிழ் தேசிய துதி பாடி மக்களை முட்டாள்களாக்கும் முன்னணி இணைய ஊடகங்கள் குளோபல் தமிழ் செய்தி, தமிழ்வின், அதிர்வு, மற்றும் பல மறைக்க முற்பட்டதுடன் திரித்து பொய் செய்தியை பரப்ப முற்பட்டது குறிப்பிட தக்கது.

இவற்றில் இருந்து மக்கள் தம்மை காத்து கொள்வதாயின் முதலில் விழித்துகொள்ளவேண்டும். மக்கள் நலன் சார்ந்த ஒரு பொது ஊடகத்தை கட்டியெழுப்ப வேண்டும். பல்தேசிய நிறுவனங்கள் தேர்தல்களின் போது கட்சிகளிற்கு நிதி வழங்குதல், ஊடகங்களிற்கு நிதி வழங்குதல், ஊடகத்துறைக்குள் கால் பதித்தல் போன்றவற்றை முற்றாக தடை செய்ய கோரி போராட வேண்டும். அல்லது இந்த அழிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது.

http://sundaytimes.lk/141102/columns/captain-fantastic-drunken-uk-rajahs-brought-down-to-earth-125667.html

Exit mobile version