Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்ன செய்யப் போகிறோம்……? :ச. நித்தியானந்தன் (யாழ். பல்கலைக்கழகம்)

trapped

என்ன செய்யப் போகிறோம்……?

அப்பா கிழக்கு

அம்மா வடக்கு

அம்மாவையும் அப்பாவையும் பிரித்துபல வருஷம்

அப்பனுக்கு பட்டாபிஷேகம் முடிந்தது

அம்மாவுக்கு இனித்தானாம்

வாழை தோரணத்தோடு

மேளதாளங்கள் புரோகிதர் எல்லாம் ரெடி

சேர்ந்து வாழ இடமில்லையாம்

சேடமிழுத்துக்கிடக்கிறது குடும்பம்

வடக்குக்கு வசந்தம் இனித்தானாம்

வாழ்வளிக்க வந்துள்ளனர்

யாரங்கே …..?

யாராவது

எங்கள் கையிலிருந்த வாழ்வை

எமக்குப் பெற்றுத் தாருங்கள்

காலாற நடந்த வயிறார உண்ட

ஊர்கள் எமக்கு வேண்டும்

யாரின் வாசலுக்கும் சென்று யாசிக்காத திமிரை

மீட்டுத்தாருங்கள்

கடத்தவும்

வதைக்கவும்

கொல்லவும்

புதைக்கவும்

வன்புணரவும்

தமிழச்சாதியென்ற

விதியை அழியுங்கள்

தந்ததை வாங்கி தாள் பணிந்து செல்வது

தேவானந்தர்களுக்கு தேவாமிர்தமாக இருக்கலாம்

அடங்கிப்பணிதல் அங்குசர்களின்

அரிச்சுவடுகளாயிருக்கலாம்

பிள்ளையார்களுக்கு பிரிந்துபோதல் சரியாயிருக்கலாம்

எங்களுக்க அம்மையும் அப்பனும் சேர்ந்திருத்தலே விருப்பம்

விடுதலையை விற்று விருந்துண்டவர்கள் பலரை

வேட்பாளராக்கி அழைத்து வைத்திருக்கிறீர்கள்

முளாசியெரிந்த விடுதலைத்தீயை

சங்காரம் செய்த சங்காரிகள், சதிகார சித்தர்கள் எல்லாம்

இன்று தேசியத்தின் பங்காளிகளாய் உள்ளே வந்துள்ளனர்

எந்த நோவும் அறியாத அவரெல்லாம் இன்று

அரங்கேற வந்துள்ளனர்.

விந்தை

இனி அவர்களும்

தேசியம்

சுயநிர்ணயமென்றெல்லாம் பிதற்றப்போகிறார்கள்

தாயை விற்று தின்றவர்களல்லவா

தர்மத்தை விற்பதென்ன புதுமையா என்ன அவர்களுக்கு

கப்பம் கேட்டவர் தலையாட்டிகள்

காட்டிக் கொடுத்தவர்

எல்லோருக்கும் வெற்றிபெற ஒரு கட்டமைப்பு

அதன்பெயர்தான் கூட்டமைப்பு

திருமலைச் சிங்கத்திற்கு அன்றிந்த ஞானம் வரவில்லை

வந்திருந்தால்

பிள்ளையானை இணைத்து கிழக்கையும் பிடித்திருப்பார்

கருணையம்மனைப் கலந்து கோட்டையைப் பிடித்திருப்பார்

கூட்டாட்சிக்காரரையும் கூட்டாக்கி மாநகரத்தையே வளைத்திருப்பார்

எல்லோருக்கும் கூட்டமைப்பு வாழ்வளித்திருக்கும்.

இனி

உணர்வாளர்கள்

ஒதுங்கிக் கொள்ளுங்கள்

கவிஞர்கள் கால் விரித்துப் படுத்துக் கொள்ளுங்கள்

இனி இது

ரோஷ நரம்பறுந்தவர்களின் காலம்

தாயை விற்றவர்கள்

ஊத்தையர்கள் வந்துள்ளனர்

இனி அவர்கள் தேசியம் பாடுவார்கள்

விடுதலை பேசுவார்கள்

எங்களுக்கென்ன

பார்வையாளர்கள்தானே நாங்கள்

அன்றும்தான்

இன்றும்தான் இனி என்றும்தான்

பொய்காலுடன் ஒருவன் முன்னே போகிறான்

இரண்டு கைகளுமிழந்த தோழி அதோ

பக்கத்தே பாருங்கள் நான்கு பிள்ளைகளையும்

வேள்விக்கிரையாக்கி நொய்ந்து கிடக்கும் ஒரு தாய்

வேரிழந்து விழுதுகளிழந்த ஒரு தந்தை அந்தோ கச்சான் விற்கிறார்

விடுதலைக்கு தாரை வார்த்தவர்கள் இவர்கள்

ஊன் உயிர் அனைத்தையும் விடுதலைக்கு கொடுத்த

ஒரு சமூகம் வதங்கிக் கிடக்கிறது

தாங்குவாரா….?

தளும்பு சுமந்தவர்களுக்கு தாழ்வு

கொழும்பு வாழ்ந்தவர்களுக்கு வாழ்வு

வதை பட்டவருக்கு வாய்க்கரிசி

காட்டிக்கொடுத்தவர்களுக்கு கதிரை

ஆகுதியானவர்கள் இன்னும்

அக்கினிக்காட்டினில்

என்ன நீதியோ….?

விதானையும் வந்துள்ளார்

வீடு கொளுத்தியவரும் வந்துள்ளார்

நீரையும் பாலையும் பிரித்துண்ணும்

அன்னப்பட்சியின் நிலையில்

நாம்….!

என்ன செய்யப் போகிறோம்……?

~ச. நித்தியானந்தன் யாழ். பல்கலைக்கழகம்~

Exit mobile version