புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியிலிருந்து பிளவுண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய கேந்திரம் (Ceylon Communist Unity Centre (CCUC)) என்ற கட்சியை ஆரம்பித்துள்ள தோழர் தம்பையா தனது கருத்துக்களை முன்வைக்கிறார். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தேசிய மற்றும் சர்வதேசிய அமைப்பாளருமான தோழர் தம்பையா வெகுஜனப் போராட்டங்கள் சுயநிர்ணய உரிமை போன்ற பல விடயங்கள் குறித்து உரையாடுகின்றார். இரண்டு பகுதிகளாகப் பதியப்படும் தோழர் தம்பையாவின் உரையாடலின் முதலாவது பகுதி கீழே:
பதில்: இந்த கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி எனது சுய விமர்சனமாகவும் இருக்கலாம். புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸ கட்சியில் நான் முப்பத்து நான்கு(34)_வருடங்கள் இருந்துள்ளேன். எங்கோ ஒரு மூலையில் இல்லை முன்னணியில் இருந்தேன். ஏற்கனவே அக்கட்சியிலிருந்து பல பேர் நிசப்தமாகி கள்ளத்தனமாக, உள்நோக்கங்களுக்காக, முதலாளித்துவ, திரிப்புவாத நோக்கங்களுக்காக சீரழிந்து விலகியுள்ளனர். அவர்கள் அக்கட்சிக்கு பாதிப்புகளை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
எனது விலகல் அப்படியானதொன்றல்ல. நான் உட்கட்சி போராட்டங்களை நீண்ட காலங்களாக நடத்திவிட்டு இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் பகிரங்க காரணங்களை முன்வைத்துவிட்டே வெளியேறியுள்ளேன்.
எனது விலகளுக்கான காரணம் பெரும்பாலும் ஸ்தாபன கோட்பாடு, நடைமுறை தொடர்பானவை. அக்கட்சி புரட்சிகர எழுத்துக்களை கொண்டிருந்த போதும் புரட்சிகர கட்சியாக இல்லை.
அதன் நடவடிக்கை இன்னொரு ஜனரஞ்சக செயற்பாடுகளை மட்டுமே முன்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. அதை என்னால் தனியே மாற்ற முடியவில்லை. ஒரு அசைவையும் ஏற்படுத்தாத அர்ப்பணிப்புக்கள், உழைப்பு, எளிமையான வாழ்க்கை, தியாகங்கள் போன்ற வெறும் சொல்லாடல்களில் எனக்கு உடன்பாடில்லை.
அவற்றை உச்சரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து கொண்டிருப்பதால் புரட்சிகர கட்சியை கட்ட முடியாது. மாக்ஸியம் என்பது ஒரு முன்னேறிய வாழ்க்கை முறை. அதில் ‘தியாகம்’ செய்வதாக கூறுவதற்கு எதுவுமில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை கைவிடுவதே மாக்ஸிய வாழ்க்கை முறை. அப்படி கைவிடுவது, கையுதிர்ப்பது தியாகமல்ல. முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியடையும் நிலையே அதுவாகும்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர தலைமை புரட்சிகர கட்சிக்கு அவசியமாகும். அதற்கு தொழிலாளர் வர்க்க குணாம்ச ரீதியான சிந்தனையும், விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையும் தேவை. நாளாந்த வீதிப்போராட்டங்கள் போன்றவற்றுடன் போலி புரட்சிகர கம்பீரம் அடங்கிப்போகும். புரட்சியை நோக்கி முன்னேறும் விதத்திலேயே வெகுஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தலைமை முதல் அடிமட்டம் வரை கட்சித்தோழர்களிடம் வர்க்கப்பண்பாடு கட்டி வளர்க்கப்பட வேண்டும். குறிப்பாக தனிச்சொத்து மீதான நாட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.
சிறு சிறு தவறுகள் பாரில் பண்புரீதியாக முரண்பாடுகளாக வளர்வதுண்டு. அதனை நான் பு.ஜ.மா.லெ கட்சியினுள் கண்டுள்ளேன்.
தலைமையிடம் கோட்பாட்டு மத்தியத்துவம் ஏற்படுத்தப்பட்டு கூட்டுத்தலைமை கட்டப்பட வேண்டும். கூட்டுத் தலைமையும், கூட்டுப்பொறுப்பும், ஜனநாயக மத்தியத்துவமும் ஒரு புரட்சிகர கட்சியின் ஜீவன்கள்.
தனிநபர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் கூட்டுத்தலைமையின் லட்சணமன்றி சுயநலமும், நிலப்பிரபுத்துவ லட்சணமுமாகும். சுருக்கமாக சொன்னால் புரட்சிகர தத்துவம், கொள்கை, கோட்பாடு என்பது ஒரு கட்சியின் வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலும் கொள்கைகளுமாகா. மாறாக கட்சியின் மத்திய தலைமை வளர்க்கப்பட்டு கூட்டிணைக்கப்படுகின்ற விஞ்ஞானம் உட்பட வாழ்க்கையின் பல அம்சங்களையும் பற்றிய அறிவின் பல கூறுகளினதும் புரிதலையும், பட்டறிவையும் கட்சியின் மத்திய தலைமையால் இயங்கியல் ரீதியாக கூட்டிணைக்கப்படுகின்ற அறிவின் தோற்றம், அதன் பரப்பெல்லை பற்றிய ஆய்வின் அடிப்படையிலான வகைசார் ஆய்வாகும்.
அதே போன்று புரட்சிகர கட்சி என்பது முதலாளித்துவ, சிறுமுதலாளித்துவ கட்சிகளில் போன்று வெறும் தனிநபர்களின் ஒன்று கூடல் அல்ல. லெனின் கம்யூனிஸ்ட் கட்சியை உயிர் வாழும் அவயமொன்றுடன் ஒப்பிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி என்பது முழுமையான யந்திரமல்ல, ஆனால் அது மனித உடல் போன்ற ஒரு உறுப்பு. நரம்பு மண்டலத்தின் மையம் அல்லது மூளை போன்ற ஒற்றையான ஏக உறுப்பு.
இந்த இரண்டு அம்சங்சளை நோக்கி பு.ஜ.மா.லெ கடந்த 35 வருடங்களாக நகர முடியவில்லை. முன்னேறிய வர்க்கமான புரட்சிக்கு அடிப்படையான தொழிலாளர்களை அணிதிரட்ட முடியவில்லை. விவசாயிகளையோ, அடக்கப்பட்ட தேசிய இனங்களையோ, மக்களையோ அணிதிரட்ட முடியவில்லை. தமிழ் பேசுபவர்களுக்கு வெளியே சிங்களம் பேசுபவர்களை அணிதிரட்ட முடியவில்லை.
தொழிலாளர் வர்க்க கட்சி என்பது முன்னேறிய பொறிமுறை கொண்ட படை. அது வளமற்றதாக இருக்க முடியாது. இதை தவிர ‘இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் எதற்கு? ‘ ‘இலங்கையில் புரட்சி’ ஆகிய சுருக்கமான எமது அடிப்படை அறிக்கைகளை பார்ப்பதன் மூலம் எனது விலகளுக்கான அடிப்படைக் காரணங்களை விளங்கிக் கொள்ளலாம்.
கேள்வி: உங்கள் கட்சி பு.ஜ.மா.லெ கட்சியுடன் நட்பு அடிப்படையில் செயற்படுமா? ஏற்கனவே உடன்பாட்டை எட்டி இருக்கிறீர்களா?
பதில்: இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் மாக்ஸிஸ லெனினிச அடிப்படையில் மனிதகுல விடுதலைக்காக செயற்படும் கட்சிகள், குழுக்கள், தனிநபர்களின் கூட்டிணைப்பாகும். நீண்ட காலத்தில் இலங்கையில் ஒரேயொரு தொழிலாளர் வர்க்க புரட்சிகர கட்சியை கட்டும் பணியின் தொடக்கமாகும். வித்தியாசங்களுடன் கூட்டிணைந்து செயற்பட்டு ஜனநாயக மத்தியத்துவத்துடன் செயற்பட்டு விஞ்ஞானபூர்வமாக வித்தியாசங்களை களைந்து, கொள்கை ரீதியான, செயற்பாட்டு ரீதியான மத்தியத்துவத்தை அடைவதற்கான போராட்டமாகும்.
பு.ஜ.மா.லெ கட்சியில் தொழிலாளர் வர்க்கம் குணாம்சரீதியான மாற்றமடையலாம் என்ற நம்பிக்கையில் சிறிது காலம் ஒதுங்கி இருக்கவே எண்ணினேன். ஆனால் பு.ஜ.மா.லெ கட்சிக்கு வெளியில் இருக்கும் தோழர்கள் எல்லா மாக்ஸிஸ லெனினிஸ்ட்டுகளையும் அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்தி இயங்குவதற்கான செயற்பாட்டுத்தளம், ஸ்தாபனம் பற்றி கவனம் செலுத்த வேண்டியவை பற்றி கலந்துரையாடினர். அதன் விளைவே இ.க.ஐ கேந்திரமும் அது முன்வைத்திருக்கும் கலந்துரையாடலுக்கான சுருக்கமான அடிப்படை அறிக்கையுமாகும். அந்த அறிக்கை மாக்ஸிஸ லெனினிஸத்தையும் மாக்ஸ், ஏங்கல்ஸ, லெனின், ஸ்டாலின், மாவோ மற்றும் அதே கோட்பாட்டு ரீதியாக தலைவர்களை ஏற்றுக்கொள்கின்ற தனிநபர்கள், குழுக்கள், கட்சிகளுக்கு அனுப்பப்பட்டன. புதிய ஜ.மா.லெ.கட்சிக்கும் அனுப்பப்பட்டது. எங்களது அறிக்கை கிடைத்ததாகவும் வெகு விரைவில் கலந்துரையாடலாம் என்றும் பு.ஜ.மா.லெ கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வெ.மகேந்திரன் என்னிடம் சொன்னார்.
அத்துடன் அக்கட்சியின் தோழர்களில் பலரும் தெரிவித்தனர். ஆனால் அக்கட்சி இதுவரை கலந்துரையாடலுக்கான எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை.
அக்கட்சியின் அங்கத்தவரல்லாத ஆனால் அக்கட்சியுடன் தொடர்புடைய மெத்த படித்தவர் ஒருவர் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என்னுடைய காரியாலயத்துக்கு வந்து எனது பெயரில் வெளி வந்த ‘புதிய பூமி’, “New – Democracy” ஆகிய பிரசுரங்களின் பிரசுர உரிமையை பு.ஜ.மா.லெ கட்சிக்கு கொடுத்து விடும்படி கேட்டு வழமையான அவர் எழுதியும், பேசியும் வரும்; அநாகரீகமான அடைமொழிகளை பிரயோகித்து எனக்கு வெறுப்பூட்டினார்.
அவரின் சந்திப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளர்; சி.கா.செந்தில்வேலுக்கு தெரியாமல் இருக்க முடியாது. அந்த படித்தவர் அவருக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் பற்றி கதைக்க வந்ததையோ, என்னிடம் கதைத்ததையோ அக்கட்சியின் தோழர்கள் நான் சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. இம்மாதிரியான அணுகுமுறைகள் நட்புரீதியானவை அல்ல.
அது மட்டுமல்ல அந்த மெத்த படித்தவரும், கட்சியின் உறுப்பினரல்லாத இன்னொரு இளம் படித்தவரும் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட (கட்சி மத்திய குழுவிற்கு தெரியாத பயணமது) ஐரோப்பிய பயணமொன்றின் போது என் நிலைப்பாட்டிற்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களும், நட்புக்கான ஆரோக்கியமான கருத்துக்களல்ல.
எனது விலகல் பு.ஜ.மா.லெ கட்சியின் உடைவல்ல என்பதையும், எனது தற்போதைய அரசியல் இயக்கமும் செயற்பாடும் பு.ஜ.மா.லெ கட்சியினர் உட்பட இலங்கையின் மாக்ஸிஸ்ட்டு லெனினிஸ்ட்டுக்களை ஐக்கியப்படுத்துவதற்கான சினேகபூர்வமான ஐக்கியமும், போராட்டமுமாகும்.
எனவே மாக்ஸிஸ லெனினிஸவாதிகளுடன் நட்பாக செயற்படவே நாம் விரும்புகிறோம். தங்களை தாங்களே மாக்ஸிஸ்ட்டு லெனினிஸ்ட்டு மாவோ சிந்தனைப்படி நடப்பதாக கூறிக்கொண்டு; தமிழ் தேசியவாத அடிப்படைவாதிகளுடன் பிக்கட் லயினில் ஒன்றாக நிற்க முடியுமெனின், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஆனால் இடதுசாரிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்பவர்களுடன் கட்சி உறவை பேண முடியுமெனின் ,.க.ஐ கேந்திரத்துடன் கலந்துரையாடுவது ‘தீண்டத்தகாததல்ல’.
தற்போது எம்முடன்; மாவோ சேதுங் சிந்தனைவரை ஏற்றுக்கொள்பவர்களும், மாவோயிசத்தை ஏற்றுக்கொள்ளுபவர்களும் இணைந்துள்ளனர். ஆனால் பரந்தளவில் மாக்ஸிஸ்ட்டுகள் லெனினிஸ்ட்டுகளை இணைப்பதற்காக எமது கலந்துரையாடலுக்கான அறிக்கையில் மாசேதுங் சிந்தனை, மாவோயிசம் போன்றவற்றை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை மாக்ஸிஸ லெனினிஸம், மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ உட்பட ஏனைய மாக்ஸிய மூலவர்களை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டணியாக (ரொஸ்கியவாதிகள் இல்லை) இ.க.ஐ கேந்திரம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளோம்.
எனவே, இ.க.ஐ கேந்திரம் பு.ஜ.மா.லெ கட்சியுடன் நட்புக்கான அவாவுடனே செயற்படுகிறது. அது பு.ஜ.மா.லெ கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி: இடதுசாரிகள் மீது தொடர்ச்சியாக அவதூறுகளை மேற்கொண்டு வரும் றயாகரன் குழுவினருக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே, இந்த உடன்பாடு பற்றி அக்கட்சியினருடன் பேசியுள்ளீர்களா?
பதில்: எந்தக் கட்சி யாருடன் உறவு வைக்க வேண்டும் என்பதற்கு எனது அனுமதி தேவையில்லை. ஆனால் பு.ஜ.மா.லெ கட்சியின் மீதும், அதன் ஆதரவாளர்கள் மீதும் றயாகரன் மேற்கொண்டு வந்த அவதூறுகளை அவ்வளவு இலகுவாக மறக்க இயலாது. அவர் அவரது மாக்ஸியம் பற்றி பேசவும், எழுதவும், புரட்சிகர கட்சிகளை மிகவும் மட்டகரமாக வசைபாடுவதிலும் ஏகபோக உரிமை கொண்டிருந்தார். அவர் அவரைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் அவர் மீது விமர்சனம் செய்யாமலும் அவருக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டால் அது சந்தர்ப்பவாத உடன்பாடாகவன்றி வேறேதாகவும் இருக்க முடியாது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற காணாமல் போனோரின் சர்வதேச குழுவின் மாநாட்டில் நான் கலந்து கொண்டது பற்றி மிகவும் அநாகரீகமாக றயாகரகரனுடன் தொடர்புடைய சீலன் என்பவர் அவரது இணையத்தளத்தில் எழுதி இருந்தார்.
நான் பணம் பண்ணுவதற்கோ, உல்லாசம் புரியவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. அந்தப் பயணத்தால் இலங்கையில் காணாமல் போனோர் பற்றிய பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.
இதனால் எனக்கு பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அப்பயண முடிவில் லண்டன் ஹூத்துறு விமான நிலையத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கக்கூட பணமில்லாமல் தாகத்துடன் 7 மணித்தியாலங்கள் இலங்கை திரும்பும் விமானத்தில் ஏறும் வரை இருந்துள்ளேன் என்பது தெரிய வேண்டும். அப்படி எனது வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்தவர்கள் பு.ஜ.மா.லெ கட்சியுடன் நெருக்கமான கட்சி உறுப்பினரல்லாத ‘இரண்டு படித்தவர்களை’ ஐரோப்பாவுக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கான பயண செலவுகளையும் கொடுத்துள்ளனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.
அவர்கள் பு.ஜ.மா.லெ கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளனர். அக்கட்சி தலைமையிலிருந்து எவரையும் அனுப்பாது கட்சி சார்பில் ‘அந்த படித்தவர்கள்’ (மேற் குறித்த மெத்தப் படித்தவரும,; இன்னுமொரு இளம் படித்தவரும்) அனுப்பப்பட்டுள்ளனர்.
இப்பயணம் கட்சியின் தலைமைத் தோழர்களுக்கும் தெரியாது. அவ்விடயம் வெளியானதும் றயாகரன் கட்சியின் ஆதரவாளர்களை அனுப்பும்படி கேட்டதாகவும், அதன்படியே அந்தப் படித்தவர்கள் அனுப்பப்பட்டதாகவும் பதிலிறுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் இருக்கின்றன. பு.ஜ.மா.லெ கட்சியினர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களை கொச்சைப்படுத்திய றயாகரன் குழுவினர் எவ்வாறு பு.ஜ.மா.லெ கட்சிக்கு அழைப்பை விடுத்தனர், பயணச் செலவுகளை செய்ய முன்வந்தனர்? அவ்வாறான அழைப்பை கட்சியின் தலைமைத் தோழர்களுக்கன்றி ஆதரவாளர்களுக்கு விடுத்ததன் நோக்கம் என்ன?
அவ்வாறான ஆதரவாளர்களின் – இரண்டு படித்தவர்களின் பயணத்திற்;கான முடிவு கட்சியின் தலைமைத் தோழர்களுடன் கலந்துரையாடாமல் எடுத்தது சரியா? அந்த இருவரும் பயணம் செய்த நாடுகளில் பு.ஜ.மா.லெ கட்சியின் பிரதிநிதி;களாகவே பேசியுள்ளனர். அதனால் கட்சியின் வெளிவிவகாரம் கட்சியல்லாதவர்களிடம் கட்சி தலைமைத் தோழர்களுக்கும் தெரியாமல் கட்சி ஒழுங்கு விதிகளுக்கு மாறாக ஒப்படைக்கப்பட்டு விட்டதா? போன்றன சிலவாகும்.
பொதுவாக ‘புரட்சிகர கட்சியொன்றுக்கு’ கிடைக்கும் ஆதரவுகள், உதவிகள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. அவ்வாறெனின் பு.ஜ.மா.லெ கட்சிக்கு பெரும் நிதியுதவிகளை கொடுத்து வருவதாக றயாகரன் குழுவினர் பகிரங்கமாக கூறி வருவதன் மர்மம் என்ன.
நான் கட்சியில் இருக்கும் வரை றயாகரன் குழுவினருடனான உடன்பாடு பு.ஜ.மா.லெ கட்சியின் மத்திய குழுவினது அல்லது அரசியல் குழுவின் முடிவு உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நான் விலகிய பிறகும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனது ஐந்தாம் படை எந்தவொரு கட்சியின் மத்திய குழுவில் இல்லாவிட்டாலும், நான் மெத்தப் படித்தவனாக இல்லாவிட்டாலும் கடந்த 35 வருடங்களாக புரட்சிகர அரசியலில் இருந்துவருபவன்; என்ற ரீதியில் சிறியளவாவது அரசியல் அறிவு இருக்கத்தானே செய்யும்.
அத்துடன் றயாகரனும் பு.ஜ.மா.லெ கட்சியும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை கைவிட்டுவிடவில்லை என்று நம்புகிறேன். அவ்வாறெனின் அக்கோட்பாட்டை ஏற்காத ஒரு சராசரி கட்சியான முன்னிலை சோஷலிஸ கட்சிக்கும் பு.ஜ.மா.லெ கட்சிக்கும் உடன்பாட்டை ஏற்படுத்த றயாகரன் இடைத்தரகராக இருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றது.
கேள்வி: முன்னிலை சோஷலிஸ கட்சி இன ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான போராட்டங்களை நிராகரிக்கும் அதேவேளை இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கூறுகிறதே, அக்கட்சியுடன் இணைந்த அரசியல் செயற்பாடுகள் குறித்து உங்கள் கட்சி சிந்திக்கவில்லையா?
பதில்: முன்னிலை சோஷலிஸ கட்சிக்கும், எமது இ.க.ஐ கேந்திரத்துக்குமிடையில் இதுவரை எவ்விதமான கலந்துரையாடலும் நடைபெறவில்லை. ஆனால் அவர்களின் கட்சி ஆவணங்களின் மூலம் அவர்களது நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியும். அக்கட்சி பாட்டாளி வர்க்க புரட்சிகர கட்சியல்ல. ஏனெனில் அக்கட்சியிடம் இலங்கையின் புரட்சியின் மார்க்கம் பற்றி தெளிவில்லை. அக்கட்சி வீதிப்போராட்டங்கள் (வெகுஜனப்போராட்டமல்ல), பொப்பியூலிசம், பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டது.
பாட்டாளி வர்க்க புரட்சி சாத்தியமில்லை என்கிறது. அதற்கு ஆதாரமாக நேபாள மாவோஸ்ட்டுக்களும் தோல்வியடைந்துவிட்டனர் என்கிறது. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கின்றது. மாக்ஸ் முதல் மாவோ உட்பட பல மாக்ஸிய மூலவர்களின் பங்களிப்பு பற்றி வெளிப்படையான தன்மை இல்லை. இவை போன்ற அடிப்படையான விடயங்கள் இல்லாததால் அது இலங்கையின் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர கட்சியில்லை. அதனால் அதனுடன் ஐக்கியப்பட்ட புரட்சிகர முன்னணி என்பது சாத்தியமில்லை.
ஆனால் அக்கட்சி இன்னும் ஒரு சராசரி இடதுசாரி கட்சியாக இல்லாமல் முற்போக்கானதாக இருக்க வேண்டுமானால் பாசிசத்துக்கு, ஏகாதிபத்தியத்துக்கு, இனவாதத்திற்கு எதிராக போராடியே ஆக வேண்டும். தன்னுடைய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஏனைய இடதுசாரி, புரட்சிகர தனிநபர்களையும் கட்சிகளையும் ‘பாவிக்கும்’ தந்திரோபாயத்தை உள்நோக்கத்துடன் முன்னெடுக்காமல், மிகவும் வெளிப்படையாக ஜனநாயக, இடதுசாரி வேலைத்திட்டத்தை முன்வைத்து இலங்கையின் பாசிச அரசுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும், இனவாதத்திற்கு எதிராக போராட பரந்துபட்ட ஐக்கிய முன்னணி வேலைத்திட்டத்துடன் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் சூழ்நிலையில், அந்த மட்டத்தில் ஜனநாயக, இடதுசாரி (புரட்சிகரமல்ல) வேலைத்திட்டத்துடன் உடன்பட்டு வேலை செய்ய இடமில்லாது போகாது. (அதில் முதலாளித்துவ லிபரல்வாதிகளும், மனிதாபிமானிகளும் கூட ஏற்றுக்கொள்ளும் தேசிய இனங்களுக்கான அதிகாரப்பங்கீட்டைக் கூட நிராகரித்து சமத்துவ உரிமை என்ற பழைய ஜே.வி.பி யின் நிலைப்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் ஆரோக்கியமாக இராது)
கேள்வி: தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் பயங்கரவாத இயக்கங்ககளாக முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. சில தேசிய விடுதலைப் போராட்டங்களை ஏகாதிபத்தியமே வழி நடத்துகிறது. இவ்வாறான சழ்நிலையில் தேசிய இனங்களின் விடுதலைக்கான சாத்தியப்பாட்டினை கண்டடைவது எப்படி?
பதில்: தேசிய விடுதலை இயக்கங்களை மட்டுமன்றி வர்க்கப் போராட்ட இயக்கங்களையும், ஜனநாயகத்திற்காக போராடும் அமைப்புகளையும்; கூட ஏகாதிபத்தியம் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புக்களாகவே பிரகடனம் செய்கிறது.
இன்றைய உலக ஒழுங்கில் அடக்குமுறை அரசுகள் ஏகாதிபத்தியத்தை பாவித்து விடுதலை இயக்கங்களை அழிப்பதை அவதானிக்க முடியும். உண்மையான தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்தை அடக்குமுறை அரசுக்கு எதிராக பாவித்து வென்றதில்லை, வெல்லுவது சாத்தியமுமில்லை. அடக்குமுறை அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாடுகளை சரியாக கையாண்டு விடுதலைப் போராட்டங்களை முன்னகர்த்துவதற்கும், ஏகாதிபத்தியத்தை பயன்படுத்தி அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடி விடுதலை அடைவது என்ற நம்பிக்கைக்குமிடையில் அடிப்படையில் பாரிய வேறுபாடுண்டு. அடக்கு முறையின் சுரண்டலின் உயர்ந்த வடிவமான ஏகாதிபத்திய அடக்குமுறையிலிருந்து உண்மையான விடுதலையை அடைய, அதன் ஒழுங்கின் கீழ் இயங்கும் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடுவது அவசியம்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரட்டை வேஷத்தை இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட மையில் இருந்து ஏகாதிபத்தியம் இரட்டைவேஷத்தை கூட கற்றுக்கொள்ள முடியும்.
சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களையும், ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும் ஏகாதிபத்தியம் பாவித்து அதன் ஏகாதிகத்திய நிகழ்ச்சி நிரலை நாடுகள் மீதும், உலக மக்கள் மீதும் திணித்து வலுப்படுத்திவருகிறது. அதனால் எல்லா சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களும் ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் பிற்போக்கானவையோ. ஏகாதிபத்திய நலன் சார்ந்தவையோ, நிராகரிக்கப்பட வேண்டியவையோ அல்ல.
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உயர்ந்த வடிவமென்பதால் அது அடக்கு முறையின் உயர்ந்த வடிவமுமாகும். அதன் உலக ஒழுங்கின் வாடிக்கையாளர்களாகவே தேசிய அடக்குமுறை அரசுகள் இயங்குகின்றன. ஆகவே, தேசிய அடக்குமுறை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிச்சயமாக ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாக இருக்க முடியாது. அடிப்படையில் அப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையே. அதேபோன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் தேசிய அடக்குமுறை அரசுகளின் நலன் சார்ந்தவையல்ல. உதாரணமாக இலங்கையின் அடக்கப்படும் தேசிய இனங்களின் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதாக இருக்க முடியாது. அதேபோன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டங்கள் இலங்கை அடக்குமுறை அரசை பாதுபாப்பதற்கானவையல்ல என்பதில் தெளிவு வேண்டும். இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டச் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நவகாலனித்துவ காலகட்டமாகும். நவகாலனித்துவ – பூகோளமயமாதல் – ஏகாதிபத்தியத்துடன் முட்டி மோதாமல் விடுதலை இயக்கங்கள் முன்னேற முடியாது. இன்றைய ஏகாதிhத்திய உலக ஒழுங்கு விடுதலை இயக்கங்களின் பாதையை மேலும் கரடுமுரடாக்கியுள்ளது, சாத்தியமற்றதாக்கிவிடவில்லை. புதிய தந்திரோபாயங்கள், நெளிவு சுளிவுகள் பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டிற்குள்ளும் வெளியிலும் போராட்ட இயக்கங்களின் ஐக்கிய முன்னணி, ஒத்துழைப்பு இயக்கங்களின் நடவடிக்கைகளினதும் போராட்ட நடவடிக்கைகளினதும் நாடளாவிய ஒருங்கிணைப்பும், சர்வதேச ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது.
இன்னும்வரும்…