Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிரியின் அரசியல் : சபா நாவலன்

மூன்று தசாப்தகால அரசுக்கெதிரான புலிகளின் யுத்தம் அழிவுகளை மட்டுமே எச்சங்களாக விட்டுச்சென்றிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு கோலோச்சியதற்கான அடையாளங்கள் எல்லாம் அழிவுகளாகவும், சிதைவுகளாகவுமே காணப்படுகின்றது. புலிகள் விடாப்பிடியாக முன்வைத்த ஏகப்பிரதிநிதித்துவ உரிமையிலிருந்து தமிழ் மக்களின் அனைத்து தார்மீக உரிமைகளையும் இனப்படுகொலை ராஜபக்ச அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கிலும் கிழக்கிலும், அங்கும் இங்குமாகப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியும் ஆயுதக் குழுக்களும் காணப்படுவதை யாரும் மறுக்கமுடியாது. புலிகள் தலைமையின் எஞ்சிய ஒரு பகுதி ராஜபக்ச அரசோடு கைகோர்த்துக்கொண்டுள்ளது. இன்னொரு சிறிய பகுதி காடுகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இலங்கையின் அதி உச்ச ஊடக அடக்குமுறை என்பது, எல்லாத் தகவல்களையும் உருமாற்றிவிடுகின்றது. ஆக, எல்லாமே அனுமானங்கள் மட்டும் தான்.

ராஜபக்ச அரசின் அங்கமாக இணைந்துள்ள விடுதலைப் புலிகள் தம்மை வெளிப்படையாக இனம்காட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது அவர்களிடம் மிகவும் உறுதிமிக்க அரசியல் இருக்கின்றது. அதற்கான தந்திரோபாயமும் நடைமுறையையும் கூட முன்வைக்கிறார்கள். போரில் வெற்றியடைந்த மறு நாளே ராஜபக்ச அரசு முன்வைத்த அரசியலையே அவர்கள் இன்று முன்வைக்கிறார்கள். முதலில் தமிழப் பேசும் மக்கள் என்ற அடையாளத்தைத் துடைத்தெறிவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் முழக்கத்தின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.

1. தன்னுரிமைக்கு எதிராக மறுவாழ்வையும் மறுசீரமைப்பையும் முன்வைத்தல்.

2. இந்திய இலங்கை அரச அதிகாரங்களைக் கடந்து நாம் இங்கு எதையும் சாதித்துவிட முடியாது என்ற கருத்தை உருவாக்குதல்.

3. அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் தமிழ் தேசியம் என்ற அடையாளத்தைச் சீர்குலைத்தல்.

கடந்த வருடம் கிளிநொச்சி அரசின் பிடிக்குள் வீழந்த பின்னர், சில சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த வேளையில் இருபத்தி நான்கு புலியெதிர்ப்புக் “கனவான்கள்” இலங்கை சென்றிருந்தனர். பின்னதாக ஐம்பாதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்ட வேளைகளிலெல்லாம் கூட மௌனம் சாதித்த இந்த “மனிதாபிமானிகள்” முன்வைத்த கருத்துக்களும் இப்போது கே.பி குழு முன்வைக்கும் கருத்துக்களும் எந்த முரணும் அற்றவை. சொற்களுக்கிடையே கூட வேற்றுமை காணமுடியாத ஒத்த கருத்துக்கள். இலங்கை அரசும் இந்திய அரசும் முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலின் காவு கருவிகள் தான் இந்த விஷக் கிருமிகள்.

மனித அவலம் என்பது நாளாந்த வாழ்க்கையாகிவிட்ட ஈழப் பிரதேசத்தை இந்த நிலைக்குத் நகர்த்திவந்த பேரினவாத பாசிச அரசு தனக்கு உருவாகக் கூடிய எல்லா அழுத்தங்களையும் நிர்மூலமாக்க எத்தனை படுகொலைகளை நடத்திமுடித்திருக்கிறது! இப்போது தொலைவிலிருந்து உருவாகக் கூடிய அழுத்தங்களை அழித்துவிடுவதற்காக புலமபெயர் அரசியல் வியாபாரிகளைப் பயன்படுத்துகிறது. கொலைகாரர்களோடு சல்லாபம் செய்துகொண்டிருக்கும் கே.பி போன்ற கடைந்தெடுத்த கிரிமினல்களோடு இணக்கப்பாட்டிற்கு வரச்சொல்கிறார்கள் இந்த புலம்பெயர் வியாபாரிகள்.

பதினைந்தாயிரம் பேர் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துவைக்கப்படு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இன்னும் பலர் காணாமற் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
கூலி அடிமைகளாக ஒரு தொகைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். முகாம்களில் என்ன நடக்கிறது என்பது இன்றுவரைக்கும் அரச ஆதரவு கைக்கூலிகளைத் தவிர யாரும் சொன்னது கிடையாது. கே.பி போன்றவர்கள் மறுசீரமைப்பையும், மறுவாழ்வையும், அபிவிருத்தையையும் குறித்துப் பேசுவதற்கு முன்பதாக இவர்கள் பற்றிய விபரங்களையாவது வெளியிடத் திரணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

அரசோடு இணைந்து அபிவிருத்தி செய்வதாகக் கூறும் கே.பியும் அதன் புலம்பெயர் முன்னை நாள் புலி வியாபாரிகளும் மக்களிடம் செல்வதற்கு முன்னால் குறைந்தபட்சம் இந்த மனித அவலத்தைப் பற்றிப் பேசக் கற்றுக்கொள்ளட்டும்.

இதுவரை இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட பணம் ஒரு புறம் தமிழர்களை அழிக்கவும் மறுபுறம் ராஜபக்ச குடும்பத்தை வளப்படுத்தவும் தான் பயன்பட்டிருக்கிறது.

புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரியவர்கள் என்ற ஒரு பகுதியினரையும் புலிகளை அழிப்பதற்காக அரசுடன் கைகோர்த்துக்கொண்ட இன்னொரு பகுதியினரையும் வெறுமனே புலியெதிர்ப்பாளர்கள் என்ற அரசியல் வரைமுறைக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால் புலிகளாயிருந்தாலும், புலியெதிர்ப்பாளர்களாயிருந்தாலும் இன்று இலங்கை இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடங்கிப் போகின்ற அனைவருக்குமே ஒரே அரசியல் தான். அது எதிரியின் அரசியல்.

Exit mobile version