உலக வரலாற்றில் கனிம வளங்களை மனிதன் போராடி தான் கண்டறிந்திருக்கிறான். இயற்கை அதன் வளத்தை சிலருக்கு மட்டுமே கையளிக்கிறது. இதற்காகவே வரலாற்றில் பல போர்கள் நடந்திருக்கின்றன. காலம் கடக்கும் போது கனிம வளங்களும் மனிதனின் மற்றொரு இருப்பாக மாறுகின்றன. இருப்பும் காலமும் (Being and Time)ஒன்றை ஒன்று சார்பானவை. இவை பெட்ரோல் விஷயத்தில் சரியாகவே பொருந்துகின்றன.சராசரி மனிதனின் வாழ்க்கை தரம் உயரும் போது பெட்ரோலிய பயன்பாடும் அதிகரிக்கிறது. இவை தனிநபர் வருமான வரம்பிற்கு நேர்விகிதத்தில் இருக்கின்றன. தனிநபரின் வருமானம் அதிகரிக்கும் போது அதன் ஒத்திசைவாக பெட்ரோலிய செலவு அதிகரிக்கிறது. இங்கு பெட்ரோல் அளவு மாற்றத்திற்கு உட்படுகிறது.
உலகின் தற்போதைய சராசரி பெட்ரோலிய நுகர்வு என்பது தனிநபருக்கு வருடத்திற்கு 4.4 பீப்பாய்கள். இவற்றின் சராசரியை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதிகப்படுத்துகின்றன. ஆனால் வளரும் நாடுகளான மூன்றாம் உலக நாடுகள் இன்னும் உலக சராசரிக்கு கீழே இருக்கின்றன. இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நுகர்வு விகிதங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு ஆகியவை அதிக அளவில் பெட்ரோலை உறிஞ்சு கொள்ளும் நாடுகள். அமெரிக்காவின் வருடாந்திர சராசரி தனி நபர் பெட்ரோலிய நுகர்வு 24 பீப்பாய்கள். இதில் அங்குள்ள பெரும் முதலாளிகளே எல்லாவற்றையும் உறிஞ்சி சராசரியை அதிகரிக்க செய்கிறார்கள். பெட்ரோலின் இந்த முரண் ஓட்டம் நாடுகளுக்கிடையேயான உராய்வுகளுக்கு வழி வகுக்கிறது. ஓர் அர்த்தத்தில் போருக்கான துணைக்கோளாகவும் பெட்ரோல் இருக்கிறது. இதனடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நான்கு போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை பற்றி தாரிக் அலி தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundementalism)நூலில் விரிவாக ஆராய்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலனிய தகர்ப்பிற்கான புதிய செயல்முறையை தொடங்கி வைத்தது. பழைய பேரரசுகள் எல்லாம் அவற்றின் சொந்த முரண்பாடு காரணமாக பலவீனம் அடைந்தன. ஜெர்மன் ஏகாதிபத்தியம் தோல்வியடைந்தது. அமெரிக்கா பொருளாதார மற்றும் இராணுவ அடிப்படையிலான பெரும் வல்லரசாக உலகளாவிய நிலையில் துளிர் விட தொடங்கியது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு எகிப்தின் உட்கட்டமைப்பு, சூழல் தகவமைப்பு, கனிம வளங்கள், புராதன சின்னங்கள் இவை குறித்த ஆர்வம் மேற்கத்திய அரசுகளுக்கு ஏற்பட்டது. பிரிட்டன் நாசர் சோவியத் யூனியனின் அனுதாபியாக மாறிய போது அவரை கொலை செய்ய குறி வைத்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. நாசர் தொடர்ந்து எகிப்து நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். இந்நிலையில் இந்திய பிரதமரான நேரு எகிப்துக்கு சென்று நாசரை சந்தித்தார். ஆப்ரிக்கா நாடு என்ற வகையில் எகிப்து தனித்து இயங்க வேண்டும் என்றும், அணிசேரா அமைப்பில் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 1955 ல் நடந்த அதன் மாநாட்டில் நாசர் இந்தியா, சீனா ஆகியவற்றின் ஆதரவால் அதிகம் தாக்கமுற்றார். அவரிடம் நேரு எகிப்து எப்பொழுதும் பனிப்போர் காலகட்டத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் யூகோஸ்லோவியா அதிபரான டிட்டோவை நாசர் சந்தித்தார். டிட்டோவும் நேருவின் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பனிப்போர் அணிகளிலிருந்து விலகி இருக்கும் படி நாசரை வலியுறுத்தினார். அதே நேரத்தில் எகிப்திலிருந்து நிரந்தரமாக விலகி கொள்ளும் படி பிரிட்டனை வலியுறுத்தலாம் என்றார்.
அதேகாலகட்டத்தில் எகிப்தில் இஸ்லாம் மற்றும் அதற்கு வெளியில் கருத்தியல் அடிப்படையிலான ஏராளமான குழுக்கள் இருந்தன. அவர்கள் இஸ்லாமிய உலகம் பிளவுப்பட்டது இருப்பதை கண்டறிந்தார்கள்.மேலும் சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, ஜோர்டான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாஷிங்டன் மற்றும் பிரிட்டனின் ஊதுகுழல்களாக இருந்தன. அதில் சிரியா சின்ன ஊதுகுழலாக இருந்தது. இரு வல்லாதிக்க அரசுகளும் தங்களின் நீண்டகால நகர்விற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தை தங்களுக்கு சார்பானவையாக திருப்பின. இதில் இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகியவை மட்டுமே சுதந்திரமாக இயங்கின. வல்லாதிக்கங்களின் கட்டுப்பாட்டு தந்திரங்கள் எவற்றுக்கும் இவை அடிபணியவில்லை. அதற்கான தண்டனையை அவர்களுக்கு மிக அருகில் காத்துக்கொண்டிருந்தது. எகிப்து நைல் நதியின் குறுக்கே அணைக்கட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியிடம் நிதி உதவி கோரியிருந்தது. இது அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் திடீரென இது ரத்துசெய்யப்பட்டது.
எகிப்து உலக அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள விரும்புவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இதன் பின்னரசியல் பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகியவற்றின் இடையீடு தான் என்பது பின்னர் தெரியவந்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஜாண் போஸ்டர் டல்லஸ் நிதி உதவி மறுப்பை பற்றி 1956 ஜுலை 19 ல் எகிப்துக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தினார். அதன் பின்னர் சில நாட்களில் அதிபரான நாசர் அலெக்சாண்டிரியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் இதைப் பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதில் ஏகாதிபத்தியத்தின் கோபத்தை அடக்க வேண்டும் என்றும், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் மிரட்டல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தனியாரிடம் இருக்கும் சூயஸ் கால்வாய் பகுதியை தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் அணை கட்ட வருமானம் வரும் என்றார். இதை கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வல்லாதிக்கங்களை குறிப்பாக பிரிட்டனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.காரணம் சூயஸ் கால்வாயின் நிழல் கட்டுப்பாட்டாளராக பிரிட்டன் இருந்து வந்ததுடன் அதன் வருமானத்தின் ஒருபகுதி அதற்கு சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய் என்பது உலகிலேயே அதிக அளவில் நீர்வழி போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். இது 101 மைல்கள் தூரம் கொண்டது. முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களை சரியாக பிரிக்க கூடியதாகவும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருப்பதால் ஐரோப்பாவுடன் நீர்வழியாக இணைப்பளிக்கும் கால்வாயாக இருக்கிறது.
ஆகவே எகிப்தின் இந்த முடிவு அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பழிவாங்கும் சந்தர்ப்பத்தை அவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தன. நாசரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர் அரபுலகின் ஹீரோவாகவும், காலனிய எதிர்ப்பாளராகவும் மாறினார். இதனை தொடர்ந்து எகிப்திய அரசியல் தலைவர்களும், மேற்கத்திய சார்பானவர்களும் அடுத்து நிகழப்போகும் மோசமான நிகழ்வுகளை கண்டு பயந்தனர்.பிரிட்டன் பிரதமரான அந்தோணி ஏடன் நாசரை “நைல் பிரதேசத்தின் ஹிட்லர்” என வர்ணித்தார். நாசர் இதை அறிந்தே இருந்தார். பிரிட்டன் தன் துப்பாக்கி இராஜதந்திரத்தை செயல்படுத்தும் எனவும், அதற்காக இஸ்ரேலையும் பயன்படுத்தும் எனவும் அறிந்திருந்தார். இதற்காக அவர் இஸ்ரேலிய பிரதமரான மோசே சாரத்திற்கு கடிதம் எழுதினார். அதில் ” இந்த விவகாரத்திற்கு வெளியே இருக்கும் படியும், இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம்” எனவும் குறிப்பிட்டிருந்தார். மோசே சாரத் கொஞ்சம் அனுதாப உணர்வு கொண்டவர் தான். ஆனால் அதிபரான பென்குரியன் இரத்த வாடையை உட்கொண்டவர். அதனால் நாசரின் இந்த கடிதத்தை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை.
இதன் தொடர்ச்சியில் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் பிரிட்டன், பிரான்சு, இஸ்ரேல் ஆகியவை எகிப்தின் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தன. 1956 அக்டோபர் 29 ல் இஸ்ரேலிய படைகள் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதி மீது தாக்குதல் நடத்தின. அதற்கு இருநாட்கள் கழித்து ஆங்கில -பிரெஞ்சு படைகளின் கூட்டமைப்பு சூயஸ் கால்வாய் மீது இறங்கியது. வல்லாதிக்க அரசுகளின் இந்த ஆக்கிரமிப்பு செயல்பாட்டை பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் எகிப்திய படைகள் பலவீனப்பட்டன. இந்நிலையில் எகிப்துக்கு உதவும் பொருட்டு சோவியத் யூனியன் எகிப்திலிருந்து படைகளை பின்வாங்கும் படி இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதற்கு அடுத்த நாள் இந்த நாடுகள் தங்களின் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டன. பின்னர் அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்கோவர் மூன்று நாடுகளின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்தார். நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பை மன்னிக்க மாட்டோம் என்றார். இதன் பிறகு பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகியவை செய்த் துறைமுகத்திலிருந்து தங்களின் படைகளை வாபஸ் பெற்றன. இதுவே முதல் எண்ணெய் போர் என வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. நாசரை பொறுத்தவரை அவர் சண்டையில் தோற்றிருக்கலாம். ஆனால் போரில் ஒரு வகையில் வெற்றிப்பெற்று விட்டார். காரணம் போர் முடிந்த பிறகு எகிப்தின் எல்லா வங்கிகளும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தேசியமயமாயின. போலந்து பொருளாதார நிபுணரான ஆஸ்கர் லேஞ் போர் நடக்கும் இரு வருடங்களுக்கு முன்பு எகிப்துக்கு பயணம் செய்து திட்டமிடப்பட்ட பொருளாதார திட்டங்கள் எகிப்தை விரைவில் வளப்படுத்தும் என்றார். இதனை சுவீகரித்துக்கொண்ட நாசர் அதனடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். இதன் நகர்வில் எகிப்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகான எண்ணெய் போர் குவைத் மீதான் ஈராக்கின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 1991ல் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுப்படைகள் ஈராக்கை தாக்கிய போது ஏற்பட்டது.
1970 க்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கெதிரான எண்ணெய் வள நாடுகளின் புரட்சி காரணமாக தெற்கு மற்றும் வடக்கு பூகோள பிரதேசங்களின் புதிய உலக ஒழுங்கு ஏற்பட்டது. அங்கு தனிநபர் வருமான வீதம் அதிகரித்தது. புள்ளி விபரங்களின் படி 1960 மற்றும் 1980 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் தனிநபர் வருமான வீதம் 73 சதவீதம் அதிகரித்தது. ஆப்ரிக்காவின் தனிநபர் வருமான வீதம் 34 சதவீதம் அதிகரித்தது.எண்பதுகளுக்கு பிறகு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா இடையே எண்ணெய் வள பகிர்தல் தொடர்பான இரகசிய உடன்பாட்டிற்கு பிறகு அமெரிக்கா அந்நாடுகளின் தன் இராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. இதன் விளைவாக 1980 க்கும் 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் வருமான வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்தது.அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் வளர்ச்சி 23 சதவீதமாக சரிவடைந்து பெரும்பாலான நாடுகள் பட்டினி நிலைமைக்கு தள்ளப்பட்டன. சவூதியுடனான ஒப்பந்தம் அதன் டாலர்களை அதன் இடத்திற்கே மீண்டும் திரும்ப செய்தது.
ஆக 1956 எகிப்து மீதான போர், 1967 அரபு-இஸ்ரேல் போர், 1991 ஈராக் போர், கொலம்பியா போர், வியட்நாம் போர், ஆப்கான் போர் எல்லாமே இனி பௌதீக இருப்பு பெட்ரோலை வைத்தே தீர்மானிக்கப்படும் என்பதை உலகுக்கு அறிவித்தது. இயற்கை வளங்கள் மீதான மனிதனின் போராட்டம் என்பது 16 நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்திற்கு பிறகே ஏற்பட்டது. அன்று முதல் இன்றுவரை முடிவற்ற தொலைக்காட்சி தொடர் மாதிரி எண்ணெய் மீதான இந்த முரண்பாடு நிகழ்ந்து கொண்டிருந்தது. இதை குறித்து ஆராய்ந்த கீழைச்சிந்தனையாளர்களில் தாரிக் அலி மிக முக்கியமானவராக இருக்கிறார். இதைப்பற்றியே அவரின் எழுத்துக்களே எண்ணெய் விவகாரம் சார்ந்து இன்றும் கோடிடப்படுபவையாக இருக்கின்றன.