நூல் மதிப்புரை
நூல் – சயாம் மரண ரயில் (நாவல்)
ஆசிரியர் – சண்முகம்
பக்கம்: 304
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________
எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்
இன்றைய காலத்தில் ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ நாவல்.
பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. ‘சயாம் மரண ரயில்’ – எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.
– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை