சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் போர் தின்று துப்பியவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல, ஒரு பகுதி மக்கள் கொள்ளும் அவஸ்தைகள் எதனையும் கண்டுகொள்ளாதவர்களாகவோ அல்லது புறக்கணிப்பவர்களாகவோதான் இன்னொரு பகுதி மக்கள் இருந்து வருகிறார்கள். நவீன் தத்துவங்களின் எல்லா மூலைமுடுக்குகளிலும் வாழ்வேற்படுத்தும் அவநம்பிக்கைகளும் அல்லது வாழ்வினை வேறுமாதிரியாக வாழ்ந்து பார்ப்பதற்கான வழிமுறைகளுமே தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இஸங்கள் பொய்த்துப்போன அல்லது அதற்கான அவசியமற்றுப் போன காலகட்டமிது, ஏனெனில் எந்த இஸங்களும் பொருளாதாரம் சார்ந்து நிகழும் அரசியல் நிகழ்வுகளை தடுத்தி நிறுத்திவிட இயலாது.
மேலோட்டமாக நாம் கவனிக்கிற அரசியல் நிகழ்வுகள் மாற்றங்கள் இவை எல்லாவற்றையும் கடந்து உண்மையில் ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது ஆங்காங்கேயிருக்கும் பெரு முதலாளிகள்தான். சற்று நம்பமுடியாததாகத் தோன்றும் இவ்விசயத்தின் அடிப்படையானது சர்வ நிச்சயமாக வியாபாரம் சார்ந்ததுதான் என்பதோடு இனி ஒவ்வொரு காலகட்டத்திற்குமான வியாபாரம் நோய்களாகவும் போர்களாகவும் வெவ்வேறு வகைகளில் பெருகுமென்பதனைத் தவிர்க்க முடியாது.
தமிழக அரசியல் சூழலையோ அல்லது ஒட்டுமொத்தமான இந்திய அரசியல் சூழலையோ விமர்சனம் செய்வதற்கும், வியாபாரத்தின் காரணமாய் மேற்கொள்ளப்படும் அதிகார மையங்களின் அத்துமீறல்கள் ஒடுக்குமுறைகள் இவற்றை சுட்டிக்காட்டவும் பக்கம்பக்கமாக தகவலறிக்கை சமர்ப்பிக்கவும் இந்திய மொழிகள் அவ்வளவிலும் டஜன் கணக்கில் அறிஞர்கள் இருக்கிறார்கள். இதில் எனக்கோ, உங்களுக்கோ எந்தப் பிரச்சனையும் இருக்க முடியாது. ஆனால் நம்மைச் சுற்றியிருக்கிற, இந்தியாவைச் சுற்றியிருக்கிற அத்தனை நாடுகளும் இங்கு நடக்கும் சிறு சிறு அரசியல் நிகழ்வுகளை கவனிக்கும் அளவிற்கு இங்கிருப்பவர்கள் வெளியிலிருக்கும் விசயங்களைக் கவனிப்பதில்லை. உண்மையில் நான் எழுத நினைத்த விசயத்திற்கு நேரடியாக இன்னும் வந்திருக்கவில்லைதான், தவிர்க்கவே முடியாமல் இதனையெல்லாம் சொல்லியாக வேண்டியுள்ளது.
இதையெல்லாம் தாண்டி என்னை ஆச்சர்யப்படுத்துவது போர் முடிந்த பிறகான தமிழர்களின் சூழலை, வாழ்வியல் ஆதாரங்களை ஸ்திரப்படுத்த வேண்டிய கட்டாயத்தினைக் குறித்து கண்டு கொள்ளாமலேயே இருப்பதுதான். ஒன்றிரண்டு பேர் இந்த விசயத்தினைக் குறித்து எழுதிக் கொண்டிருந்தாலும் இப்படி எழுதப்படுவதன் பின்னால் நமக்குப் பல்வேறு ஐயங்கள் ஏற்படுகின்றன. இதைத் தாண்டின வேறுமுக்கிய விசயங்களையும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் ஒரு பிம்பத்தினை உருவாக்க முயன்றால், அதனை விடவும் ஏமாற்றுவேலை எதுவுமில்லை. எத்தனைபேர் சமீபகாலமாய் திடீர் அரசியல் விமர்சகர்கள் கம் எழுத்தாளர்களானார்கள் என்பது உங்கள் அவ்வளவு பேருக்குமே தெரிந்ததுதான், உண்மையில் வெகு சிரத்தையோடு பல்வேறு விசயங்களில் இயங்குபவர்களாக இருந்திருந்தால் அவர்களின் செயல்பாடு என்னவென்று விளங்கியிருக்கும். ஆனால், அப்படியொன்றும் இவர்கள் பெரிதாகக் கிழித்துக் கொண்டிருக்கவில்லை.
புலம்பெயர் வாழ்வென்பது நீங்களோ நானோ வெறும் எழுத்தில் புரியவைத்திட முடிகிற விசயமில்லைதான், ஆனால் வெகு நெருக்கமாய் நம் உறவுகள் ஒவ்வொருவரையும் பார்க்கிற அல்லது பழகுகிறதில் எவ்வளவோ வேதனைகளையும் வலிகளையும் நம்மால் உணர முடிகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அவர்கள் அவசரமாக ஒரு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்து, அகதிகள் முகாம்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய வசதிகள் குறித்தும் விவாதித்து இறுதியில் உடனடியாக 12 கோடி ரூபாய் நலப்பணிகளுக்கு ஒட்துக்குவதாக செய்தி வந்திருந்தது.
முதல்வரின் இந்த திடீர் அக்கறையும் அதன் பிறகான நடவடிக்கைகளும் எந்த விதத்திலும் ஆச்சர்யப்படுத்தவில்லை. இது மாதிரியான திடீர்நடவடிக்கைகளில் இந்திய அரசியலில் இல்லை உலக அரசியலில்கூட இவருக்கு இணையான திறமைசாலியை பார்க்க முடியாது. இருந்து விட்டுப்போகட்டும். இங்கு இருக்கிற நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களையும் சேர்த்து சற்றேரக்குறைய ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அவ்வளவு பேருக்குமான நலப்பணிகளை செய்வதென்பது கொஞ்சம் எந்த விதத்தில் சாத்தியமெனத் தெரியவில்லை. தீவிரவாதியொருவனை பராமரிப்பதற்கான ஒரு வருட செலவு மட்டும் முப்பது கோடிரூபாய்களை இந்திய அரசினால் தாராளப்படுத்த முடிகிறது. பெருந்துயர் கண்ட மக்களுக்கு காலங்காலமாக ஓர வஞ்சனைதான். திபத்திலிருந்து இங்கு வந்திருப்பவர்களுக்கான முகம்களோடு தமிழர்களுக்கான முகாம்களை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. வசதிகளிலும்சரி, அவர்களுக்கான சுதந்திரத்திலும் சரி.
தமிழகத்திற்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வருதலென்பது இன்று நேற்று நடக்கிற விசயமல்ல, இவ்வளௌ வருடத்தில் இங்கு வந்திருப்பவர்களின் வாழ்வு என்ன மாதிரியானதாய் மாறியிருக்கிறது எனப்பார்த்தால் பெரிய அளவில் அவர்களை நிம்மதியுறச் செய்யும் எந்த மாற்றங்களும் நிகழ்ந்திடவில்லை. சாதாரணமாக வெளியாட்கள் முகாமிற்கு போய் வருவதில்கூட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. க்யூ பிராஞ்ச் காரர்கள் மற்ற வேலைகளில் கவனங் கொள்கிறார்களோ இல்லையோ இதில் மிகக் கவனமாக இருப்பதுடன் முகாமிற்கு செல்பவர் அவருடன் தொடர்புடையவர்கள் என அவ்வளவு பேரையும் தீவிரவாதிகளாகத்தான் பார்க்கிறார்கள். இதனை சற்று தீவிரமாகக் கவனித்தால் பின்னாலிருக்கும் பல்வேறான பிரச்சனைகளையும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தனிமனிதச் சுதந்திரங்களையும் ஏராளமாக நாம் அடையாளப்படுத்த முடியும்.
அடிக்கடி எனக்குத் தொடர்பிலிருக்கிற முகாம்களென எனது ஊருக்கு அருகாமையிலிருக்கும் கூத்தியார் குண்டு முகாமையும், சிவகாசிக்கு அருகிலிருக்கிற ஆனைக்கூட்டம் முகாமையும் சொல்ல முடியும். பள்ளியில் உடன் படித்த நண்பர்களில் நிறையபேர் முகாமைச் சேர்ந்தவர்களாக இருந்ததும் பிற்பாடு தொழிற்பேட்டையில் வேலைக்கு வருகையில் உடன் வேலை பார்த்தவர்களிலும் இவர்களே மிகுந்திருந்ததால் நெருக்கமாகவே அவர்களுடன் வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்வதுண்டு இப்பொழுது வரையிலும். மற்றபடி, இஸங்கள் தெரிந்து கொண்டு எந்த வெளிநாட்டு தத்துவஞானி புலம்பெயர்வாழ்வைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்கிற அறிவுப்புலமையான உறவில்லை எனக்கும் அவர்களுக்குமானது.
பொதுவான அரசியலில் பெரும் விவாதங்களை நாம் கொள்ளும் சாதிய, வர்க்க வர்ணசிரம கோட்பாடுகளில் எப்பொழுதாவது புலம்பெயர் மனிதர்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? { நானில்லை. இஸங்களின் விவாதங்களில் அவநம்பிக்கையே இப்பொழுது மிஞ்சுகிறது } திட்டமிட்டேதான் இதுமாதிரியான விவாதங்களில் தொடர்ந்து அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. முக்கிய அரசியல் விவாதங்களின் போது அவர்களின் இடம் மறுக்கப்படுதலென்பது நிச்சயமாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதொன்று. சரி, இப்பொழுது தீவிரமாக பேச முனைந்திருக்கும் இரட்டைக் குடியுரிமை என்கிற விசயம் அடிப்படையில் என்ன மாதிரியான விவாதங்களை நமக்குள் கொண்டு வரவேண்டியிருக்கிறது.
புலம்பெயர் மக்கள் பெரும்பாலனவர்களைப் பொறுத்த வரையிலும் இங்கிருக்கும் குறைந்த பட்ச இருப்பு போதுமானது என்கிற நிம்மதி. நான் இங்கு என குறிப்பாக உணர்த்தியதில் இந்தியாவைத் தவிர்த்து எந்த தேசத்தை வேண்டுமானாலும் நீங்கள் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி வெளியேறுகிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அடுத்த தலைமுறை அதற்கடுத்த தலைமுறைகளென வெவ்வேறு தேசங்களில் நிரந்தர வாழ்வினை தேர்ந்தெடுத்துக் கொண்டால் இலங்கை மண்ணின் தமிழன் இறுதியில் எத்தனை பேராக மிஞ்சியிருக்கும்? கொஞ்ச நஞ்ச வலுகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்திலேயே தமிழர்களின் மீதான சிங்களப் பெரும்பான்மையர்களின் வன்முறையானது மிகக்கொடூரமாக இருக்கிறது. இந்த சதவிகிதம் குறைகிற நாட்களில் தமிழனுக்கான நிலம், உரிமைகள் அங்கு எந்தளவிற்கு மிஞ்சியிருக்கும் என்பதை சிறிது நிதானித்து யோசியுங்கள். புலம்பெயர் வாழ்வு நமக்களிக்கும் நிம்மதி உண்மையில் முழுமையான தீர்வுதானா? இவ்வளவு பெரிய இனவொழிப்பின் போது பெரும்பாலான தமிழ் சமூகம் ஏன் மெளனம் கொண்டிருக்க வேண்டும்? இந்த கேள்வியின் பிண்ணனியில்தான் சமீபமாய் எழும் இரட்டைக் குடியுரிமைக் குரலும் அடங்கியிருக்கிறது.
இன்னொரு புறம் இலங்கையின் பெரும்பாலான நிலங்களும் பன்னாட்டு முதலாளிகளிடம் விற்கப்பட்டுக் கொண்டிருக்க தமிழனுக்கான நிலமென எதுவுமில்லை, இன்னும் சில நாட்களிலேயே பாலஸ்தீனமாகவோ அல்லது நாடிழந்த சிறு இனப்பான்மையினரின் தேசமாகவோ இலங்கைத் தமிழரின் வாழ்வு மாறிப்போகுமென்பது தவிர்க்கவே முடியாத விசயமாகிவிடும். ஒற்றை தேசியவாத சிங்கள சமூகத்தின் மத்தியில் நிலமின்றியோ, அதிகாரமின்றியோ இருத்தலென்பதனை விடவும் கொடுமையான விசயம் எதுவுமில்லை. இந்திய சூழலில் இரட்டைக் குடியுரிமை பெரும்பாலும் பெரு முதலாளிகளின் நலனுக்கான ஒன்றாகவே வைக்கப்பட்டிருக்கிறது. சந்தைகளிலிருந்து மறைக்கப்படும் அல்லது அரசாங்கத்தின் பொதுப்பார்வைக்கு கொண்டு செல்லப்படாத பெரும் மூலதனங்களை பன்னாடுகளில் பதுக்குவதற்கான துருப்புச்சீட்டாக இது இருப்பதால், எந்த பொருளாதார நிலையிலும் அவர்கள் பார்த்து சொல்ல
அப்படியிருக்க இப்பொழுது மேம்போக்காக அல்லது வழக்கமாக சொல்லப்படும் மலிவான தேர்தல் அரசியலுக்காக அரசியல்வாதிகள் போடும் கபட நாடகம்தான் இவையனைத்தும். வெறுமனே சொத்து சேர்ப்பதான அல்லது சேமிப்பை அதிகரிப்பதற்கான சிறு விளையாட்டாக இன்று அரசியலை பார்ப்பதில்லை. பெரும் சந்தைகளின் முன்னால் பணம் என்பதன் அடையாளம் மாறிக்கொண்டிருப்பதால் முந்தைய லட்சியவாத, அ-லட்சியவாத என எந்த வகை அரசியல்வாதியாயினும் முதலாளிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
கல்வி நிறுவணங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் இவர்கள் கடைநிலை ஊழியர்களாகவே பார்கப்படுவதனையும் சரியான சுதந்திரங்களை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்கிற வகையிலும் இத்திட்டத்தை துளியளவும் மறுக்காமல் நான் ஆமோதிக்கிறேன். ஆனால், வலிய ஓர் பெரும் சமூகத்தின் மக்களை சிறியதொரு கோட்டிற்குள் வைத்துப் பார்க்கும் அபத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தாண்டி சிறு சிறு மாறுதல்களை எவ்வளவோ வகைகளில் அவர்களுக்கு செய்ய முடியும். கல்வியில் மேற்படிப்புகள் வேலையில் அவர்களுக்குமான இடங்களென திறமையின் அடிப்படையில் கொண்டுவர முடிகிற பட்சத்தில் சாத்தியமான பலன்களை நிச்சயம் கண்டடைய முடியும் என்றுதான் தோன்றுகிறது.
ஏனெனில் முன்பாகவே இங்கு வந்தபின் தொழில் சார்ந்து ஏற்படுகிற நட்புகள் பிற்பாடு திருமணத்தில் முடிந்து நிறையபேர் கலந்து வாழ்கிறார்கள். மக்களிலுமே ஒரு சாரர் இவர்களின் மீது மிகுதியான அன்பினையும். சிலர் சம்பந்தமே இல்லாமல் வெறுப்பினையும் வெளிப்படுத்துகிறார்கள். ( இவர்கள் வெறுப்பதற்கு பெரிய சாதிய மயிறு வேறு யாரும் இல்லை என்கிற மிதப்பினைத் தவிர ஒரு காரணமும் இருக்கப்போவதில்லை. ) இப்படி திருமணம் செய்து கொள்பவர்களில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலவருடங்களில் சந்தேகமே இல்லாமல் இச்சதவிகிதம் அதிகரிக்கத்தான் போகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் வெறும் கோரிக்கையாக மட்டுமே எழுந்திருக்கிற இவ்விசயம் நடைமுறைக்கு வரும்போது யாதார்த்ததில் கொள்ளும் சிக்கல்கள் இன்னும் வெவ்வேறான பார்வைகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். இருப்பினும் ஒரேயொரு விசயத்தினை மட்டும் தான் மறுபடியும் அல்லது இறுதியாக சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதுதான் தந்தையர் தேசமென பொய்யானதொன்றை காட்டும் எதிர்காலத்தினைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?…..