Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எகிப்தில் இராணுவச் சதிப் புரட்சி – அமரிக்காவின் அரசியல் சதி

பதினெட்டு நாட்களாக நடந்த மகத்தான எகிப்திய மக்கள் எழுச்சி எகிப்திய இராணுவ சதிப் புரட்சியால் திசை மாற்றப்பட்டுள்ளது. “ஹுஸ்னி முபாரக் அதிகாரத்திலிருந்து விலகிக்கொள்வதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி எகிப்தியப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது.

இதுவரை அதிகாரத்திலிருந்த ஹுஸ்னி முபாரக்கின் அதே இராணுவம் மறுபடி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் அரசியல் ஆய்வாளரான டியா ரஷ்வான்(Diaa Rashwan).
முன்னதாக ஈரானிய பாராளுமன்றப் பேச்சாளர் அலி லரிஜானி அமரிக்கா தனது அதிகாரத்தை மீளமைப்புச் செய்வதற்காக எகிப்தில் இராணுவ சதி ஒன்றை ஏற்படுத்துவதற்குத் திட்டமிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

தவிர கடந்த வியாளனன்று எகிப்திய எதிர்க்கட்சியான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி இராணுவச் சதியொன்று திட்டமிடப்படுவதாக எச்சரித்திருந்தது.

ஜனநாயகத்தைக் கோரி நிகழ்ந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மீண்டும் அதே அதிகாரத்தின் பிடியில் சிதைக்கப்பட்டுள்ளது.

18 நாட்கள் நடந்த போராட்டம் உச்சமடைந்த 7வது நாளிலிருந்தே இராணுவச் சதிக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

எகிப்தியப் பொலீஸ் படைகள் மக்கள் மீதான தாக்குதலை நடத்த இராணுவம் மக்களை அமைதிப்படுத்துவது போலவும் மக்கள் எழுச்சியின் பக்கம் சார்ந்திருப்பது போலவும் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதுவரை மத்திய கிழக்கில் அமரிக்காவின் அடிமையாகத் தொழிற்பட்ட ஹுஸ்னி முபாரக்கின் அரசியல் குறித்து பி.பி.சி, சி,என்.என் போன்ற ஊடகங்கள் பெருமை பேசிக்கொண்ட அதே வேளை முபாரக்கின் வெளியேற்றம் அரபுலகில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் அவசர அவசரமாக் வழங்கிய செவ்வியில் எகிப்தில் நம்பிக்கையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் ஜனநாயகத்தை மறுசீரமைக்க பிரித்தானியா இராணுவத்துடன் ஒத்துழைக்கும் என்றும் அறிவிக்கிறார்.

அதிகாரத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்திருக்கும் முன்னை நாள் எகிப்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஹுசைன் தந்தாவி அனைத்து ஊடகங்களிலும் கதாநாயகன் போலச் சித்தரிக்கபடுகிறார்.

ஒரு நாட்டின் அதிகாரம், அரசியலற்ற இராணுவத்தின் கறைபடிந்த கரங்களில் விழுந்துள்ள நிலையில் அமரிக்க அதிபர் ஒபாமா ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமா மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக தெரிவித்திருக்கிறார். தவிர, எகிப்திய மக்கள் விரும்பியவாறு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுமாறு “இராணுவத்திற்கு” அழைப்பு விடுத்திருக்கிறார்.

துனிசியப் எழுச்சியைவிட அதிக அளவிலான எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட எகிப்தியப் போராட்டம் மத்திய கிழக்கு வழங்களைச் சுரண்டும் அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை துயர்கொள்ளச் செய்திருந்தது. மக்கள் எழுச்சி உறுதியான தல்மையின் வழி நடத்தலில் நிகழ்ந்திராவிட்டாலும் ஹுஸ்னி முபாரக்கின் நண்பர்களான அமரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போக்கை ஆரம்ப நாளிலிருந்தெ கொண்டிருந்தது.

உலக ஜனநாயகத்தின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்தும் அமரிக்க அரசு ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்கைக் கொண்டிருந்த அடிப்படை வாதக் கட்சியை ஆதரித்தது வந்தது. மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்திருந்த அக்கட்சி போராட்டத்தின் தலைமையை வழி நடத்தவியாலாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன் பின்னதான அமரிக்க அரசின் அடுத்த நகர்வு தான் இராணுவச் சதிப்ப் புரட்சி என நம்பபப்படுகிறது.

மக்களின் தியாகங்களின் மீதும், அர்பணங்களின் மீதும் மக்களைச் சுரண்டும் ஆட்சியை அமரிக்க மீண்டும் நிறுவிக்கொண்டுள்ளது.
முபாரக்கை வெளியேற்றிய வெற்றியை அனுபவித்துக்கொண்டிருக்கும் எகிப்தியர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை விரைவில் முன்னெடுப்பார்கள். அமரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புரட்சியைக் காலம் தாழ்த்தலாம் நிறுத்த முடியாது.

Exit mobile version