போர்க்கள ஊடகவியாலாளர் மரி கொல்வின் சிரியாவிலுள்ள ஹொம்ஸ் பிரதேசத்தில் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகப் பரப்பில் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னி பெருநிலப் பரப்பிற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பும்போது, 16 ஏப்ரல் 2001 அன்று அரச படைகளின் கிரனேட் வீச்சில் அவர் ஒரு கண்ணை இழந்ததாகக் கூறப்பட்டது.
இறுதிப் போர் உச்ச கட்டத்தை அடைந்த வேளையில் வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் மரி கொல்வின் உரையாடிய செய்தி அவரால் உறுதிப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரு கண்ணை இழந்திருந்த நிலையிலும் வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்தி, உலகின் கண்களைத் திறந்த நேர்மையான ஊடகச் சமராடியாக இவர் பார்க்கப்பட்டார்.
படைகளால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள, சிரியாவின் ஹொம்ஸ் (HOMS) பிரதேசத்தில், இம் மாதத்தில் மட்டும் இதுவரை மசார் ரயாரா, ரமி அல் சயிட், ரமி ஒச்லிக் என்கிற சுதந்திர ஊடகவியலாளர்களும், பிரித்தானிய சண்டே ரைம்சை சேர்ந்த மரி கொல்வினும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை, 55 வயதான மரி கொல்வினின் கொலை, ஊடகவியலாளர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (CPJ) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 1992 இலிருந்து இதுவரை, 902 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இவ்வமைப்பின் இணையத்தளம் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துகிறது.
இதில் 34 சதவீதமானவர்கள், யுத்த வலய செய்தி சேகரிப்பின்போது கொல்லப்பட்டதாகவும், அதில் 7 சதவீதம் பெண்கள் என்றும் பகுப்பாய்வினூடாகச் சொல்லப்படுகிறது.
ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலில் 151 பேர் கொல்லப்பட்ட ஈராக் முதலிடத்திலும், 19 பேர் கொல்லப்பட்ட இலங்கை 13 ஆவது இடத்தையும் வகிக்கிறது.
இவை தவிர, காரணம் கண்டறியப்படாத வகையில், இலங்கையில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அச்சு ஊடக மையம் வெளியிட்ட தகவலில் 2012இல் மொத்தமாக 21 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எனச் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகை மற்றும் செய்தி வெளியீட்டாளர்களின் உலக அமைப்பானWAN-IFRA(WORLD ASSOCIATION OF NEWSPAPER & NEWS PUBLISHERS) தனது செய்தியில் குறிப்பிடும்போது, உலகளாவிய ரீதியில் 64 ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் 2011 இல் இறந்ததாகக் குறிப்பிடுவதோடு, இதில் அரைவாசிப் பேர் பாகிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் யெமனில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றது.
மிக ஆபத்தான அரபுலகில், மக்கள் எழுச்சிக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் அரசுகளின் வன்முறைகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட 24 ஊடகத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவை தவிர, தமது அதிகாரத்தை நிலை நிறுத்த, மக்கள் மீது படையினரை ஏவி விடும் அரசுகளின் நிஜமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் சிறையில் வாடுவதை நோக்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரத் தகவலில், உலகம் முழுவதும் 179 ஊடகவியலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதில் ஈரானில் 42 பேரும், எரித்திரியாவில் 28 பேரும் சீனாவில் 27 பேரும் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இந்நாடுகளிலிருந்து சரியான எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியாதென்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.
சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், கடந்த பத்து வருடங்களில் இது அதிகமானதென்று பார்க்கலாம்.
ஆகவே ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அதிகரித்துச் செல்லும் இவ்வேளையில் இலங்கையின் ஒற்றையாட்சி மையக் குவிமுக பரிமாணம் விரிவடைந்து, ஊடகப் பரப்பில் தனது வல்லாதிக்கத்தைச் செலுத்த முனைவதைக் காணலாம்.
விலைவாசியேற்றத்திற்கு எதிராக மக்கள் போராடும் செய்திகளைச் சிறியதாக்கி, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எதிரான செய்திகளை முதன்மைப்படுத்தும் போக்கினை உணரக்கூடியதாகவிருக்கிறது.
இலங்கை அரசினைத் தண்டிக்க சர்வதேசம் முனைப்புக் காட்டுவதாகவும், குறிப்பாக அமெரிக்க அரசு அதில் தீவிரமாகச் செயற்படுவதாகவும் பூதாகாரமாக்கப்படுகிறது.
ஆகவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் 27 ஆம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக அரசு அறிவித்த செய்தி, விலைவாசி உயர்வால் திணறும் மக்களின் தன்னியல்பான எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பும உத்திபோல் தோன்றுகிறது.
அரசிற்கெதிராகப் போராடும் மக்களை ஏகாதிபத்தியத்தியங்களின் நிகழ்ச்சி நிரலிற்குத் துணை போகும் தேசிய எதிர்ப்பாளர்களென்றும் சித்தரிக்க முற்படுவார்கள்.
தற்போது, முள்ளிவாய்க்காலில் போரை முன்னின்று நடாத்திய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகிறது என்கிற பரப்புரையை முன்னிறுத்துவதில் தென்னிலங்கை ஊடகங்கள் அதிக கரிசனை கொள்வதைக் கவனிக்க வேண்டும்.
50 வருடங்களிற்குப் பின்னர் கிடைத்த ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைக்கான விசேட மதியுரைக் குழுவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிநிதித்துவத்தை இழக்கப் போகிறோமென்கிற கவலையும் இலங்கைக்கு இருக்கிறது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில், சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதனைக் கருத்தில் கொள்ளாது, அவருக்கு பல சலுகைகளை வழங்கி அவரை ஆசுவாசப்படுத்த முனைகிறது இலங்கை அரசு என்கிற செய்தியும் தென்னிலங்கை ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஐ.நா. விற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி, பாலித கோகண்ணவிற்கு கிடைக்காத ஆடம்பர வாழ்க்கை, உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு கிட்டியிருப்பதாக அவை தெரிவிக்கின்றன.
ஒரு இலட்சம் பெறுமதியான பி.எம்.டபிள்யூ. காரும், மாதமொன்றிற்கு வாடகையாக 11,500 டொலர் செலுத்தப்படும் வீடும் அண்மையில் சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திண்டாடும் மக்களுக்கு இச் செய்திகள் பரவலாகச் சென்றடையாமல் தடுக்கப்படுவது சோகமானது.
அதேவேளை, ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்து, பரந்துபட்ட மக்கள்மீது பெருஞ் சுமையை திணிக்க ஆரம்பித்துள்ளதைக் காணலாம்.
அத்தோடு நாட்டின் இறக்குமதி, பொருண்மிய அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதென நியாயப்படுத்தும் அரச, பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் தேயிலை ஏற்றுமதியில் பின்னடைவைச் சந்திக்கப்போவதை கொழும்பு தேயிலை ஏலம் விடும் நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.
கடந்த 6 மாத காலமாக ஈரானுக்கு தேயிலை விற்ற பணமான 25 மில்லியன் டொலர்களைப் பெற முடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு.
இங்கு தேயிலையின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை ஈரான் கொள்வனவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஈரான் நெருக்கடி மட்டுமல்லாது, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் எழுந்துள்ள கடன் நெருக்கடிகள், தேயிலையின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளெனச் சுட்டிக் காடடுகிறார் இலங்கை தேயிலை வர்த்தகர்கள் சம்மேளனத் தலைவர் ஜெயந்த கெரகல.
வழமையாக, நாட்டின் 95 சதவீதமான தேயிலை உற்பத்தி கொழும்பு ஏலத்தினூடாகவே சந்தைப்படுத்தப்படுகிறது.
கடந்த வருடம் முதல் எட்டு மாதங்களில், 220.9 மில்லியன் கிலோ கிராம் தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெருந்தோட்டப் பயிர் செய்கையின் வரலாற்றை நோக்கினால்,1824இல் முதன் முதலாக சீனாவிலிருந்து தேயிலைச் செடியை கொண்டு வந்தார்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள். இதில் இலங்கையின் தேயிலை உற்பத்தி துறை முன்னோடியாக ஜேம்ஸ் ரெயிலர் என்கிற பிரித்தானியர் குறிப்பிடப்படுகின்றார்.
சீனாவிலிருந்து தேயிலையும், அப்பயிர் செய்கையில் ஈடுபடுத்துவதற்கு தமிழகத் தமிழர்களும் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டு மலையகத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
அதேவேளை தேயிலை ஏற்றுமதியில் ஏற்படப் போகும் வீழ்ச்சியானது. தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய விளிம்பு நிலை வாழ்வினை மேலும் மோசமடையச் செய்யப் போகிறது என்பது தான் மிக முக்கிய விவகாரமாகும்.
1927 இல் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களாவிருந்த தேயிலை உற்பத்தி, 2000 ஆம் ஆண்டு மூன்று இலட்சமாக அதிகரித்தாலும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மூன்று மடங்காக உயரவில்லை என்கிற உண்மையை, கடந்த 73 வருட கால வரலாறு உணர்த்துகிறது.
யுத்தம் செய்வதற்கும், ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், அரச உயர் மட்டத்தினர் வெளிநாடுகளுக்கு கூட்டாகப் பயணம் செய்வதற்கும் செலவிடப்பட்ட பணத்தில், எத்தனை சதவீதம் இம் மக்களின் வாழ்வாதார உயர்விற்கு பயன்படுத்தப்பட்டது?
அதேவேளை, உலகச் சந்தையில் நிலவும் கடும் போட்டியினால் தேயிலையின் விலை வீழ்ச்சியை சாட்டாக வைத்து, தோட்டத் தொழிலாளிகளின் தினக் கூலியைக் குறைக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புமுண்டு.
இந்த வருடம் தமது தேயிலை உற்பத்தியை ஒரு பில்லியன் கிலோ கிராமாக உயர்த்துவோமென பெருமிதப் பிரகடனங்களை விடுக்கும் இந்திய தேயிலை உற்பத்தியாளர்சபை, தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறது என்கிற பரப்புரையில் ஈடுபடுவதைக் காணலாம்.
இவை தவிர ஈரானிற்கான நிதிப் பரிமாற்றத்தில் சிக்கல்கள் எழுவதால், ரஷ்யாவிற்கான 80 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க இந்தியா திட்டமிடுகிறது.
இந்தியா மட்டுமல்லாது, வருடமொன்றிற்கு 1.3 பில்லியன் டொலர்களை தேயிலை ஏற்றுமதியினூடாகப் பெறும் ஆபிரிக்க நாடுகளும் இலங்கையோடு போட்டி போட முன்வருவதை கவனிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்வடைந்துள்ளதென பெருமைப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, 1000 பில்லியன் ரூபாய் தேசிய வருமானத்தில் 550 பில்லியன் ரூபாய் எரிபொருள்களுக்கு அரசு செலவிடுகிறதென சோகமாகக் கூறிய விடயத்தைப் பார்த்தால், தேயிலை ஏற்றுமதியில் ஏற்படப் போகும் வீழ்ச்சி, நாட்டின் திறைசேரியை அனைத்துலக நாணய நிதியத்திடம் அடகு வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆகவே மலையகத்தில் சிவில் சமூக அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென மனோ கணேசன் விடுத்த செய்தி, கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாக அமைவதைக் காணலாம்.
ஏனெனில் மலையக சமூகம் சந்திக்கப் போகும் பாரிய வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் பொருளாதார பின்னடைவு உணர்த்துகிறது.