போராட்டத்தை தம் கையில் முழுமையாக எடுத்ததுக் கொண்ட புலிகளோ இந்தப் போராட்டம் யாருக்கு? இதன் பலாபலன்கள் யாரை அடைய வேண்டும் என்பது பற்றியெல்லாம் கருத்திற் கொண்டவர்களல்லர். சமூகத்தின் கடைநிலையில் உள்ளவனின் வாழ்வு குறித்த இலடசியங்கள் எதுவுமற்று பணபலத்திலும் ஆயுத பலத்திலும் பிரச்சார பலத்திலும் வரைமுறையற்ற அதிகாரத்தை தமது பக்கம் எடுத்துக் கொண்டதன் மூலமும் மக்களை மந்தைகளாக்கி இன்று முள்ளி வாய்க்காலினுள் இலட்சக்கணக்கானவர்களை அழித்து முடித்துள்ளதோடு எஞ்சியவர்களை நடைப் பிணங்களாக உலாவ விட்டுள்ளனர்.
இந்த நிலை ஏற்படப் போகின்றது என முன் கூட்டியே சொன்னவர்களை சரியான வழிமுறையில் போராட்டம் செல்ல வேண்டும் என இயங்கியவர்களை திட்மிட்டவர்களை அதற்கான கருத்து சுதந்திரம் வேண்டும் ;என போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். காணாமல் போகச் செய்தார்கள். சொந்த நாட்டை விட்டு வெளியேற செய்தார்கள். சிறை செய்து சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்தார்கள். மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் இத்தகைய செயல்கள் நிறைவேறிக் கொண்டு இருந்த வேளைகளில் இன்றைக்கு தம்மை ஊடகர்கள் என சொல்லிக் கொள்ளுகின்ற உள்ளுரிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் தமது எழுத்துக்களில் நிகழ்ச்சிகளில் அவை குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. மாறாக கூழுக்கும் பொற்காசுகளுக்கும் பொய்க் கவி பாடும் அந்நாள் கவிஞர்களைப் போல் எல்லா அநியாயங்களையும் நியாயப்படுத்தினார்கள். கொலைகளையும் அச்சுறுத்தல்களையும் ஊக்கப்படுத்தனார்கள்.
தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காய் செல்வி காணாமல் போனார்.
வரலாற்றை எழுத முயற்சித்ததற்காய் சபாலிங்கம் பிரான்சில் படுகொலையானார். சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பினர் மீதும்ளூ தம்மோடு ஒத்து வராதவர்கள், எதிர்த்து நின்றவர்கள் மீதும் கொடுமைகள் நிகழ்ந்த போதெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த எந்த ஊடகமும் எதிர்க் குரல் எழுப்பியதில்லை.
துணிந்து எழுதிய விரல் விட்டு எண்ணக் கூடிய ஊடகங்கள் தாக்குதலுக்குள்ளான போது சக ஊடகம் என்ற அளவில் கூட கருத்தெதுவும் தெரிவிப்பதில்லை. அதன் உச்ச நிலையாக பண பலமும் ஆள்பலமும் சமூகச் செல்வாக்கும் அற்ற சாமான்ய மக்கள் மேல் விடுதலை என்ற பெயரில் தூக்கப்பட்ட துப்பாக்கிகள் பாய்ந்தன. யுhழ்ப்பாணத்தில் சில ஆண்டுகள் முன் லீலாவதி என்ற ஏழைத் தாய் கசிப்பு காய்ச்சினார் விபச்சாரம் செய்தார் என சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘வீரம்’ செறிந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த ஒரு சமூகத்திலே லீலாவதிக்கு ஏன் இந்த நிலமை என பலம் வாய்ந்த எந்த ஊடகவியலாளனும் ஆய்வு செய்து எழுதவில்லை. வீட்டு வேலைக்கு அமர்த்ப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரிக்கு நடந்த கொடுமையை செய்தியாக கொண்டு வருவதற்கு கூட பின்னடித்தார்கள். லீலாவதியால் உயிர் தப்பி வாழ முடியவில்லை. கணேசலிங்கன் இன்றும் யாம்ப்பாணத்தில் பெரிய மனிதனாக வாழ முடிகிறது.
இந்த முரண்பாட்டை எந்த ஊடகவியலாளனும் ஆய்வு செய்து பதிவுகளாகவோ வெளிச்சமாகவோ கொண்டு வர நினைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த லீலாவதிக்கும் யோகேஸ்வரிக்கும் நீதியைக் காட்ட முடியாத ஊடகங்கள் அதே ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து என்னவோ செய்யப் போவதாக புலம் பெயர் தேசங்களில் முழங்கத் தொடங்கியுள்ளன.
மிகப் போலியானதும் மோசடியானதுமான மக்களின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் கருத்துக்களை பரப்பியபடி மக்களின் போராட்டத்தை அழித்தொழிக்கும் வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்து முடித்தன. இன்னும் செய்து வருகின்றன. அடிப்படை மனித நேயமற்றவர்களும், ஏமாற்று பேர்வழிகளும், சந்தர்ப்பவாதிகளும், வியாபாரிகளும், கூலிக்கு மாரடிப்பவர்களும் ஊடகத் துறையில் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
வெளிச்சம் உட்பட எந்தவொரு அரசியல்சார் நிகழ்சியும் தமிழ் மக்களுக்கு உருப்படியான கருத்தை வழங்கியதில்லை. மக்கள் இந்த போராட்டத்திற்கு வழங்கும் ஆதரவின் பெயரால் எப்படியாவது உச்சபட்ச அதிகாரத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காக நாடு கடந்த அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை ,உலகத் தமிழர் அமைப்பு, ஒபாமாவிற்கான (?!) தமிழர் அமைப்பு என ஏகப்பட்ட தாபனங்களை அமைத்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் இருப்பிற்கு சிறு ஆபத்து நேருவதைக் கண்டாலே எந்த எல்லைக்கும் சென்று செயற்படக் கூடிய இவர்களுக்கு தினேஸ் போன்றவர்களை தள்ளிவிடுவது சிரமமான விடயமல்ல. இதே நிலை இவர்களின் பிடியில் உள்ள ஊடகத்தினர் எவருக்கும் நடக்கக் கூடியது. இந்தக் கும்பல்களின் பிடியில் உள்ள ஊடகவியலாளர் தினேசிற்கு நடந்திருப்பதை இட்டு மூச்சுக் கூட விடமாட்டார்கள்.
ஆயிரமாயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களை கொடுத்தும் எண்ணற்ற ஆயுதங்கள் பாவனையில் இருந்தும் அளவிடற்கரிய சொத்துக்களை இழந்தும் அகதியாக உலகமெல்லாம் அலைந்தும் விபரிக்க முடியாத துயரங்களை அனுபவித்தும் வெல்ல முடியாமல் முள்ளிவாய்காலில் தமக்கான விடுதலைப் போராட்டம் சாம்பலாகிப் போனதை தமிழ் மக்கள் தமது கண்களில் தரிசித்துள்ள நிலையில்ளூ பலமாய் பிரச்சாரப்படுத்தப்பட்ட சூரிய தேவன் மண்கவ்வி விட்ட பின் நாடுகடந்த அரசாங்கத்தினர் மக்கள் சரியான அரசியல் கருத்து நோக்கி சிந்திக்கத் தலைப்படுவதை தடுக்கும் உபாயமாக பிரார்தனைக் கூட்டஙகள் நடத்துவதை வேலைத்திட்டமாக அறிவிக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய உட்பட்ட பேரினவாதிகளை மக்கள் புரிந்து கொண்டு வெறுப்பில் உள்ளனரோ அதேயளவு உள்ளிருந்து எம்மைக் கருவறுக்கும் இந்த ஊடகங்கள் குறித்தும் ஊடகவியலாளர் குறித்தும் அவர்கள் எமக்கு என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தும் தேடித் தேடி அறிந்து புரிந்து கொள்ளாதவரை ‘ வடம் பிடித்து கரம் கொடுத்து கலைப் (?) பயணம் நடத்திடுவோம்’ என ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.