Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உளநோயின் உச்ச கட்டத்தில் முதலாளித்துவம் : இராமியா

புவி வெப்ப உயர்வும், சுற்றுச் சூழல் கேடும் நாம் வாழும் பூமியில் உயரினங்கள் அனைத்தையும் அழித்து விடும் என்று அறிவியலாளர்கள் இப்புவியில் நிகழும் மாற்றங்களை ஆராய்ந்து, தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இச்சீரழிவைத் தடுத்து நிறுத்த, கரி வளி (carbon di oxide) உமிழ்வையும், பசுமை வீட்டு வளி (green house gas) உமிழ்வையும் வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே நிகழந்து விட்ட கேடுகளில் இருந்து மீள, மரம் வளர்த்தலையும் விவசாயத்தையும் மிகப் பெரும் அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அறிவிலாளர்களின் அறைகூவலை, முதலாளிகள் காது கொடுத்துக் கேட்கவே மறுக்கின்றனர். என்ன இருந்தாலும் அறிவியலாளர்கள் தங்களுக்குக் கீழ் பணி புரியும் ஊழியர்கள் தானே என்ற நினைப்பில் அலட்சியமாகவும், எங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எங்களுக்கு அறிவுரை சொல்வதா என்ற அதிகார மயக்கத்திலும், இப்பூவுலகை அழிவுப் பாதையில் மேலும் மேலும் விரைவாக இட்டுச் செல்கின்றனர்.

அறிவியலாளர்களின் எச்சரிக்கையைக் கணக்கில் கொண்டு, உலகின் மிகச் சிறந்த குடிமக்கள் (eminent citizens) அனைவரும், அரசியல்வாதிகளை உடனடியாக எதிர் நடவடிக்கைள் எடுத்து, புவியை அழிவுப் பாதையில் இருந்து திருப்பும்படி கோருகின்றனர். சாதாரணமான பாமர மக்களும் அவ்வாறே கோருகின்றனர். ஆனால் ‘பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம்’ என்று சத்தியம் செய்யும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும், முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் யாருடைய கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் அல்ல; அதைப் பற்றி விவாதம் செய்யவே மறுக்கின்றனர்.

இந்நிலையில், உலகில் வாழும் 120 கோடி மக்கள் பின்பற்றும் கத்தோலிக்கக் கிருத்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் 18.6.2015 அன்று, அரசியல்வாதிகள், முதலாளிகள், முதலாளித்துவ அறிஞர்கள் இப்பிரச்சினையில் காட்டும் அலட்சியப் போக்கைக் கடுமையாகச் சாடி உள்ளார்.

மனித குலம் இழைத்துள்ள பொறுப்பற்ற இக்கேடுகளுக்காக, நம் பூமித் தாய் உரக்க அழுது கொண்டு இருப்பதாகவும், இப்புவியில் உள்ள வளங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் துய்ப்பதற்கு என்றே கடவுள் அருளி உள்ள வரம் என்றும், அவற்றை மாசு படுத்திப் பயனற்றதாக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும், சுற்றுச் சூழல் கேட்டிற்கும் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுக்கும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதாகவும், இக்கேடுகளுகளை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் போப் ஆண்டவர் கூறி உள்ளார். புவியை இக்கேடான நிலைக்கு இட்டுச் சென்றுள்ள பணக்கார நாடுகள் இதற்குப் பொறுப்பேற்று, அதை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

அறியலாளர்கள், சிறந்த குடிமக்கள், பாமர மக்கள் என்று யார் சொல்வதையும் கேட்க மறுக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள், போப் ஆண்டவருக்கும் எதிர்மறை விடையையே அளித்து உள்ளனர். அவ்விடையும் தர்க்க நியாயங்களுக்குக் கட்டுப்படாத முரட்டுத்தனமான விடையாகவே இருக்கிறது.

அமெரிக்க நாட்டின் எதிர் வருகின்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜெப் புஷ் (Jeb Bush) தங்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் மதத் தலைவர்கள் தலையிட முடியாது என்று கூறி உள்ளார். அதாவது உழைக்கும் மக்களை விடுதலை உணர்வு பெறாமல் மயக்கத்தில் வைத்துக் கொள்வது தான் மதவாதிகளின் வேலை; சுரண்டல்வாதிகளுக்கு நல்லறிவுரை கூறுவது அல்ல என்ற முதலாளித்துவ மையக் கருத்தைத் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்.

ஒரு பொருளை / செய்தியை அதன் உண்மைத் தன்மையில் புரிந்து கொள்ள மறுக்கத் தொடங்குவது தான் உளவியல் நோயின் தொடக்கம் ஆகும். உலகின் விவரம் அறிந்த மக்கள் அனைவரும் இன்றைய பொருளாதார நடைமுறை தான், புவி வெப்ப உயர்வுக்கும், சுற்றுச் சூழல் கேட்டுக்கும் இட்டுச் சென்று கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கின்றனர். ஆனால் இந்த முதலாளித்துவவாதிகள் மட்டும் இதைப் புரிந்து கொள்ளவே மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றனர் என்றால் அவர்களுக்கு உளநோய் உச்ச கட்டத்திற்குப் போய் விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.

உளநோய் உச்ச கட்டத்தில் உள்ளவர்களின் வழிகாட்டுதலில் சமூகம் இயங்கிக் கொண்டு இருந்தால், இப்புவியின் அழிவுப் பயணத்தின் வேகம் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உளநோய் உச்ச கட்டத்தில் உள்ள முதலாளித்துவத்தை உடனடியாகக் காவு கொடுப்பது அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும்.

உளநோய் உச்ச கட்டத்தில் உள்ள முதலாளித்துவத்தைக் காவு கொடுத்த பின், அவ்விடத்தில் அரை குறை உளநோயாளிகள் ஆக்கிரமித்து விடாமல், உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே முன்னெடுக்கும் ஆரோக்கியமான உளவியல் தன்மை கொண்ட நிகரமை (சோஷலிச) முறையை அமர்த்த வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்

இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.6..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Exit mobile version