Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலக மக்களை மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் ஏகாதிபத்தியக் கருவியாகப் பண்பாடு : தோழர் இ. தம்பையா

(சர்வதேச ஏகாதிபத்திய விரோத கூட்டிணைப்புக் குழுவும் பங்ளாதேஷ் சோஷலிஸக் கட்சியும் இணைந்து 2011 நவெம்பர் 27-29இல் டாக்காவில் ஓழுங்குசெய்த மூன்றாவது சர்வதேச ஏகாதிபத்திய விரோத மாநாட்டில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் இ. தம்பையா வழங்கிய கட்டுரையின் தமிழாக்கம், ‘புதிய பூமி’யிலிருந்து நன்றியுடன் இங்கு மீளப்பிரசுரிக்கப்படுகிறது.)

ஏகாதிபத்திய உலகமயமாக்கல்


ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் அல்லது ஏகாதிபத்திய உலகமய மாக்கல் எனப்படுவது ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியின் விளைவான அதன் புதிய படிநிலையே என்பதும் அது எந்த வகையிலும் கார்ல் மாக்ஸின் விஞ்ஞானரீதியான கண்டடைவகளையோ ஏகாதிபத்தியத்திற் கான லெனினின் வரைவிலக்கணத்தையோ செல்லாமலாக்கவில்லை என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அம் மாபெரும் ஆசான்கள் கண்டடைந்தவற்றை அது உறுதிப்படுத்தியுள்ளது என வேண்டுமானாற் சொல்லலாம்.
ஏகாதிபத்தியம் மாக்சியர்கட்கு மட்டுமே பிரதான எதிரியல்ல. அனைத்து வகையான மேலாதிக்கங்களினின்றும் பாரபட்சங்களினின்றும் சுரண்டலினின்றும் விடுபட்டு வாழவிரும்புவதுடன் இயற்கையின் நல்லன அனைத்தையும் வரவுள்ள தலைமுறைகட்காகப் பேணிக் காக்க விரும்பும் எந்த மனிதப் பிறவிக்கும் ஏகாதிபத்தியம் பிரதான எதிரியே.

மாக்ஸியர்களின் விஞ்ஞானரீதியான கண்டடைவுகளையும் ஏகாதி பத்தியத்திற்கான வியாக்கியானங்களையும் நம்பகமற்றவையாக்கும் நோக்கங்கொண்ட விஷமத்தனமான முயற்சிகளையிட்டு வீணாக்கு வதற்கு நமக்கு நேரமில்லை. எனினும் இவ்வாறான விஷமங்களை அம்பலப்படுத்த வேண்டிய வேளைகள் உள்ளன. நம்மை எதிர் நோக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி தத்துவார்த்த மட்டத்திலும் நடைமுறை மட்டத்திலும் அதி முக்கியமானது. அதனை நடைமுறைப் படுத்துவதற்கு இயன்றளவு விசாலமான ஒரு வெகுசனத் தளம் தேவை. அது உலக மக்களின் ஒற்றுமையையும் இயன்றளவு விசாலமான பங்குபற்றலையும் இயலுமாக்க வல்ல புரட்சிகர உள்ளுணர்வுடன் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஏகாதிபத்தியமும் தேசிய முதலாளியமும்


ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒன்றுபடுத்தக் கூடிய சக்திகளைப் பற்றிய புறநிலை யதார்த்தங்களையும் பரந்துபட்ட கூட்டமைப்புக்களை கணிப்பிலெடுத்தாக வேண்டும். உதாரணமாக, மரபான கொலனியத் தின் கீழே தேசிய முதலாளியம் கொலனிய ஆட்சியிலிருந்து தேசங் களை விடுவிப்பதிற் பெரும் பங்களித்தது. எனினும் கொலனியத்துக்குப் பிந்திய யுகத்தில், நவகொலனியத்தினதும் ஏகாதிபத்திய உலகமய மாக்கலினதும் தோற்றத்தையொட்டித் தேசிய முதலாளி வர்க்கம் தனது ஏகாதிபத்திய விரோத ஆற்றலை இழந்து ஏகாதிபத்தியத்துக்குப் பணிந்து போய்விட்டது.

விரைவாகவே நவகொலனிய யுகமாக மாறிவிட்ட கொலனியத்துக் குப் பிந்திய யுகத்தில், கொலனிய எசமானர்களிடமிருந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசியவாத மேட்டுக்குடிகள், உள்ளுர், சர்வதேசப் பொருளாதாரச் சவால்கட்கு முகங்கொடுக்கையில்;, மக்களை மேலும் மேலும் ஒடுக்குவோராயினர். ஒடுக்குமுறையாளர்களான தேசியவாத மேட்டுக்குடிகள், காலப்போக்கில், தமது மக்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள, ஏகாதிபத்தியவாதிகளிடம் பாதுகாப்பை வேண்டி, ஏகாதிபத்தியச் நிகழ்ச்சிநிரலுக்குப் பொருந்துமாறு தேசங்களின் இறைமையைச் சரணடைவிக்க ஆயத்தமாகினர்.

தேசியவாத ஆட்சியாளர்களின் உலகளாவிய சரணடைவின் நடுவே, தேசியவாத மேட்டுக்குடிகளில் ஒரு பகுதியினர், ஏகாதிபத்தியவிரோதத் தன்மை இல்லாதோராயிருந்தும், தொடர்ந்தும் ஏகாதிபத்திய விரோதத் தோற்றங் காட்டி வந்தனர். ஏகாதிபத்தியம், இத்தகைய தேசியவாத ஆட்சியாளர்களது மக்கள் விரோத, சனநாயக விரோத, மனித உரிமை விரோதச் சான்றுப்பதிவுகளைத் தனக்குச் சாதகமாக்கி, அவர்களைக் களைபிடுங்குகிறது. தனிப்பட்ட ஒடுக்குமுறையாளர்களது முறியடிப்புடனோ அழித்தொழிப்புடனோ இக் களைபிடுங்கற் செயற்பாடு நிற்பதில்லை. அது தேசம் முழுவதையும் அதன் மக்களையும் ஏகாதி பத்தியத்தின் காலடிகளிள் கீழே கொண்டுவருமாறு தொடருகிறது.

இவ்வாறு, மரபான கொலனியத்தினதும் நவகொலனியம் வடிவம் பெற்ற கொலனியத்துக்குப் பிந்திய காலத்தினதும் போதிருந்ததைப் போலன்றி, ஏகாதிபத்திய உலகமயமாதலாகவும்; நவகொலனியமாவும் வடிவெடுத்துள்ள ஏகாதிபத்தித்துக்கு முகங்கொடுக்கையில், தேசங் களும் உலக மக்களும் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்கு கின்றனர்.

ஏகாதிபத்தியக் கருவியாகப் பண்பாடு


இத் தொடர்பில், பொருளாதாரத்தினதும் அரசியலினதும் அரசியற் பொருளாதாரத்தினதும் அரசியற் புவியியலினதும் தொலை ஆழம் வரை ஊடுருவுவதற்கும் அப்பால் தனக்கு எட்டக்கூடிய ஒவ்வொரு நாட்டினதும் பண்பாட்டையும் ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது.

பண்பாடென்பது ஆதிக்க வர்க்கங்கள் கட்டியெழுப்பிய மேற்கட்டு மானம் எனவும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஆதிக்க வர்க்கங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படுவதை உறுதிப்படுத்துமாறு அது முழுச் சமூக வாழ்வின் மீதும் மேலாதிக்கஞ் செய்கிறது எனவும் கார்ல் மாக்ஸ் விளக்கினார்.
முதலாளியத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் பண்பாட்டு ஆதிக்கத் தைப் பற்றி மாக்ஸிய ஆசான்கள் பலரும் விரிவாகப் பேசியுள்ளனர். உலகமயமாதல் மூலம் நாடுகளையும் வெகுசன அமைப்புக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் ஊடுருவுவதுடன் ஊடுருவிப் பரவும் பண்பாட்டுத் தொழில் துறைகள் மூலமும் ஏகாதிபத்தியம் மக்களின் மனங்கள் மீது மேலாதிக்கஞ் செய்கிறது என அண்மைய ஆய்வுகள் விவரமான ஆதாரங்களை வழங்கியுள்ளன.

அழகியல் விழுமியங்கள் உட்பட மனிதரின் சாதாரணத் தேவை களை நிறைவாக்குமாறு, பரிமாறற் பெறுமதியின் இடையீடின்றிப் பகிரப்படும்; விழுமியங்களைப் பண்பாடு கட்டாயத்துக்குட்படாது உண்டாக்குகிறது என்பது பரவலாக ஏற்கப்பட்ட விடயமாகும். அழகிய லும் ஆய்வறிவுஞ் சார்ந்த விளைபொருளஎன்ற வகையில், கருத்தும் விழுமியங்களும் உற்பத்தியாகிப் பரப்பப்படும் தொடர்பாடல் சமூக நடைமுறைச் சாதனமாகவும் பண்பாடு கருதப்படுகிறது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கலில் பண்பாட்டின் இடம்


கொலனிய விரோத வடிவிலோ இனத்துவத் தேசியமாகவும் பேருலகப் பண்பாடாகவுமோ தேசியப் பண்பாடு தன்னைப் புலப்படுத்தலாம். திணிக்கப்பட்ட பண்பாடொன்றின் மூலமும் ஏகாதிபத்திய உலகமய மாக்கலுக்குச் சாதகமான முறையில் பண்பாட்டுப் பிரச்சனைகளை முன்வைப்பதன் மூலமும், தனது மேலாதிக்கத்தை நிறுவுமுகமாக, ஏகாதிபத்தியம் இப்போது பண்பாட்டை நுகர்பண்டமாக்கியுள்ளது. அத்துடன் சந்தைத் தேவைகளின் அடிப்படையில் குறைந்தபட்சப் பண்பாட்டு விழுமியங்கட்குப் பிரதியீடுகளை இடாத பட்சத்தில், அவற்றுடன் மேலதிகமானவற்றைச் சேர்த்துள்ளது.
இந் நிலைமைகளின் கீழ், உலகமயமாக்கற் பண்பாட்டின் அடிப் படை அம்சங்களை நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது.

1. நுகர்பண்டமாகப் பண்பாடு


பண்பாட்டு உற்பத்திகள் விற்பனைக்குரிய பண்டங்களாகச் சந்தைக் குக் கொண்டுவரப்படுகின்றன. அதன் மூலம் அவற்றின் உள்ளார்ந்த சமூக விழுமியங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

பண்பாட்டு உற்பத்திகளை விற்பனைக்குரிய பண்டங்களாக்குவதில் தேசிய, தேசங்கடந்த ஒத்துழைப்பு உள்ள போதிலும், பண்பாட்டு உற்பத்திகளையும் ஆக்கங்களையும் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஆய்வறிவுச் சொத்தாகப் பதிவு செய்யும்படி ஏகாதி பத்திய உலகமயமாக்கலின் பிரதான கருவிகளில் ஒன்றான உலக வர்த்தக ஸ்தாபனத்தின் மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது. அதன் பயனாகக், கிராமிய மக்களின் பண்பாடும் ஏகாதிபத்திய ஏகபோகத் தின் கீழ் வருகிறது.

2. வாழ்க்கைமுறையாக நுகர்வுப் பழக்கம்

அன்றாட வாழ்வு நுகர்வுப் பழக்கத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. மொத்த வருமானத்தையும் நுகர்வுப் பண்டங்கட்காகச் செலவிடத் துண்டுவதன் மூலமும் நுகர்வின் தேவைகளை நிறை வாக்க வருமானத்தை அதிகரிக்கும்படி வற்புறுத்தியும், சந்தை, நுகர் வைத் தீர்மானிக்கிறது. மக்களை நுகர்வுப் பழக்கத்துக்குள் தள்ளி விடுமுகமாகத், தொலைக்காட்சி, இணையத் தொடர்பாடல் வலைப் பின்னல் ஆகிய வடிவங்களிலான மின் ஊடகங்கள், அனைத்து இல்லங்களையும் ஊடுருவியுள்ளன. சந்தைச் சக்திகள் வீட்டுத் தேவைகளைப் பதப்படுத்துதுடன் நில்லாது, வாழும் வாழ்க்கையின் விழுமியங்களையும் நுகர்வின் கோலங்களையும் காதலும் பாலுற வும் போன்ற மனித வேட்கைகளையும் மாற்றியமைக்கின்றன.

3. வாழ்க்கைமுறையாகத் தனிமனிதவாதம்


பண்பாட்டின் மீது பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமுகமாக, மனித வாழ்வின் நுண்ணளவிலான மனித விழுமியங்களை ஏகாதி பத்தியம் சிதைக்கிறது. உலகமயமாக்கலின் கீழ், வசதி படைத்த வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையையும் சிந்தனைப் போக்குக் களையும் முறையானவையாகத் தோன்றச்செய்து, அதன் மூலம் கூட்டுணர்வையும் பகிரப்படும் பொதுநலன்களையும் பலவீனப் படுத்தித் தனிமனிதவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.
இடதுசாரி ஆய்வறிவாளர்கள் பலர் தனிமனிதவாதச் சமூக நடை முறைகட்குப் பலியாகி, முதலாளிய ஆய்வறிவாளர்களாகியுள்ளனர். தன்னார்வச் சமூகப் பணிகளாக இருந்தவையெல்லாம், குறிப்பாக ஆய்வறிவாளர்களிடையே, தனிப்பட்ட லாபத்தையும் தனிமனிதவாதத் தையும் ஊக்குவிக்கும் என்.ஜி.ஓ. வேலைத்திட்டங்களாகியுள்ளன

தனிமனிதவாதம் மக்களையும் தேசங்களையும் உழைப்பாளிகளை யும் ஒற்றுமையீனப்படுத்துகிறது. கூட்டு நலனுக்கு மாறாக நிலை நிறுத்தப்படும் போது, அது சமுகத்தை ஒட்டிணைவற்ற தனிமனிதர் களின் திரளாக்கி அதன் மூலம் சமுக அநீதிக்கு எதிரான தடைக ளுக்குக் குழிபறிக்கிறது.

4. ஏகாதிபத்தியத்தி;ன் கீழான நிறுவனமாகத் தேச அரசு

கொலனி ஆட்சியினின்று விடுபட்டதையடுத்து, உலகமயமாக்கல் வேகம்பெறும் வரை, தேச அரசுகள் முற்போக்காகவும் சுயாதீனமாக வும் இருந்தன. இன்று பெரும்பாலான தேச அரசுகள் தாம் பிழைத் திருப்பதற்கு ஏகாதிபத்தியத்தில் தங்கியிருக்கின்றன.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் எனும் வகிபாகத்தை ஏகாதிபத்தியம்; தேச அரசுக்கு விதித்துள்ளது. அதன்முலம் இறைமை, ஒருமைப்பாடு, சுதந்திரம் என்பன பற்றிய தேசியவாத உரிமை கோரல்கள் பொருளற்றுப் போயுள்ளன. அதே வேளை, ஏகாதிபத்தியத்தை ஏற்கக்கூடிய ‘புதிய’ அரசியல் சிந்தனைகள் தேசியவாத நிகழ்ச்சிநிரலுக்குள் சேர்க்கப்படுகின்றன

5. ஏகாதிபத்தியத்தி;ன் ஆயுதமாக மனித உரிமைகள்


ஐ.நா. சபையினூடாகபும் அதன் முகவர் அமைப்புக்களினூடாகவும் உள்நாட்டு, சர்வதேச அரசியல் என்.ஜி.ஓக்களினூடாகவும் மனித உரிமைகளைப் பரப்புவதாகக் கூறிக்கொண்டே, நவகொலனிகளி லுள்ள சர்வாதிகாரத் தேச அரசுகளையும் விட அதிகமாக ஏகாதி பத்தியமே மனித உரிமைகளையும் மனித உரிமைச் சட்டங்களை யும் அப்பட்டமாக மீறுகிறது.

மனித உரிமைகட்கான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் மனித உரிமைப் பிரச்சனைகளை வெறும் ஆய்வுகளாக முடக்கி மனித உரிமைப் போராட்டங்களை வழக்காடலுக்கும் அழுத்தங்களைச் செலுத்துவதற்கும் மட்டுப்படுத்துகிறது.

எங்கே ஏகாதிபத்தியம் எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டோ நாடுகள் மீது படையெடுத்தோ ‘ஆட்சி மாற்றத்துக்கான’ அடிப்படையாக மனித உரிமைகளைப் பயன்படுத்துகிறதோ, அங்கே மனித உரிமைப் பிரச்சனைகள், தவிர்க்கவியலாது, முதலாளிய நலன்கள் சார்ந்தவையாகி விடுகின்றன. ஏகாதிபத்திய நலன்கட்குப் பொருத்த மான ‘ஆட்சி மாற்றத்துக்கு’ வாய்ப்பான உள்நாட்டு அரசியற் சூழலை உருவாக்குவதில் என்.ஜி.ஓக்கள் பங்காற்றுகின்றன.

6. ‘பண்பாட்டு அதிர்ச்சிகளும்’ ‘பண்பாட்டுத் தொடர்பாக்குவோரும்’

உலகமயமாக்கலின் கீழான ‘பண்பாட்டு அதிர்ச்சிகளும்’ ‘பண்பாட் டுத் தொடர்பாக்குவோரும்’ என்ற கருத்துக்கள், முற்போக்குப் பண் பாட்டுப் பரிமாறலையோ முற்போக்குப் பண்பாட்டுக்குப் பழக்கப் படலையோ பற்றிய கலந்துரையாடல்களின் போது எவரதும் மனதில் இருப்பன போன்றவையல்ல.
தவிர்க்க இயலாத தலைவிதியென ஏகாதிபத்திய உலகமய மாக்கலை மக்கள் ஏற்குமாறு அவர்களுடைய மனங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்காகப், பண்பாட்டின் வாழும் விழுமியங் களை இல்லாதொழித்து அவற்றினிடத்தில் பெருவணிக நிறுவனத் துக்குரிய அல்லது சந்தைப் பண்பாட்டுக்குரிய விழுமியங்களைக் கொண்டுவர முனையும் ‘பண்பாட்டு அதிர்ச்சிகளையும்’ ‘பண்பாட்டுத் தொடர்பாக்கலையுமே’ பண்பாட்டு உலகமயமாக்கலின் வேலைத் திட்டம் கொண்டுள்ளது.

பண்பாட்டு அதிர்ச்சிகள் என்பன ‘காதலர் தினத்தைச்’ சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்துவதையும் சமபாலுறவினரின் உரிமைகளை அழிவான வழிகளில் ஊக்குவிப்பதையும் உள்ளடக்கும். போர், சித்திரவதை, கோரக் கொலை ஆகிய குரூரமான வன்செயல்களை, இயல்பானவையாக இல்லாத இடத்து, நியாயப்படுத்தக்கூடியவை யாக ஏற்க மக்களைத் தயார்ப்படுத்துமாறு, வலுவான பிரசாரத்தின் மூலம் அவை போற்றற்குரியனவாக அல்லது பொழுதுபோக்காக மாற்றப்படுகின்றன.

முதலாளிய ஆய்வறிவாளர்கட்கும் அப்பால், பின்னவீனத்துவப் பிரசாரகர்கள், அறிந்தோ நல்ல ஊதியம் தரும் செய்பணிகளிற் பங்குபற்றுவதன் மூலமோ, ஏகாதிபத்தியத்தின் தொடர்பாக்குவோராகப் பணியாற்றுகின்றனர். நடைமுறையிலுள்ள விழுமியங்கள் அனைத்தையும் மறுப்பதன் பயனாக, ஏகாதிபத்திய உலகமய மாக்கலின் பண்பாட்டு நிழ்ச்சிநிரலுக்கு நெருக்கமானோராகப் பின் னவீனத்துவவாதிகள் அமைகிறார்கள். எனவே, பின்னவீனத்துவ வாதிகள் மறைமுகமாகவோ நேரடியாகவோ உலகமயமாக்கற் பண்பாட்டை ஊக்குவிப்போராகின்றனர்.

பண்பாட்டு உலகமயமாக்கல் மானுடத்தின் சுதந்திரத்துக்குப் பகை யானதும் கவனிக்க வேண்டியனவுமான மேலும் பல்வேறு அம்சங் களைக் கொண்டது. இப்போதைய நோக்கல், உலகமயமாக்கற் பண்பாடு கொண்டுள்ள மிரட்டல்கட்கும் அவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவைகட்கும் உரிய கவனத்தைச் ஈர்த்துள்ளது எனக் கொள்ளலாம்.

நன்றி : செம்பதாகை

Exit mobile version