பூர்வீக ஆதரவுகள் ஏது மற்ற அவளை கட்டிக் கொண்டவன் அவளை அறுத்து விட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு ஓடிப் போனானாம்.அவள் இரண்டு பிள்ளைகளோடு 600 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். வீடு என்று சொல்வதை விட கொஞ்சம் பெரிய டாய்லெட் என்று வேண்டுமானால் சொல்லலாம் அப்படியான இல்லத்தில்தான் அவளவு வாசம்.
சமீபத்தில் அஞ்சலையின் இளைய புதல்வன் கழிப்பறையில் சிறு உடைசலை ஏற்படுத்தி விட்டான். சேதம் சின்னதுதான் ஆனால் அதை சரி செய்வது அவளவு எளிதல்ல, கொத்தனாரிடம் கேட்டதற்கு பீங்கான் கோப்பையான மலக் கோப்பை வாங்க வேண்டும் என்றான். “என்னிடம் இவளவுதாண்ணே இருக்கு.இதுக்குமேல காசு கேக்காதீங்கண்ண” என்று எண்ணூறு ரூபாயை கொத்தனாரிடம் கொடுத்து அந்த வேலையை முடித்த மறு நாள். வீட்டு ஓனர் அந்த வீட்டை காலி செய்யச் சொல்லி விட்டான். அவள் இன்னொரு வீட்டை தகுந்த வாடகைக்குத் தேடி பிடித்துக் கொண்டாள். இப்போது முன்னர் இருந்த வீட்டை விட நூறு ரூபாயை அஞ்சலை அதிகமாக செலவிட வேண்டியிருக்கிறது.
ஒரு வீட்டில் ஒரு மணி நேரம்,. இரு நூறு ரூபாயில் தொடங்கி முன்னூறு ரூபாய் வரை ஊதியம். ஜட்டி,பிரா, சேலை,ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், போர்வை, அங்கி என எல்லாவற்றையும் துவைத்தால் ஒரு நாளைக்கு பத்து ரூபாய் அளவுக்கு கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக நாற்பது ரூபாய் அதில்தான் அவளும் அவளது பிள்ளைகளும் சாப்பிட வேண்டும், ஒரு நாளை வேலைக்குச் செல்லாவிட்டால் கூட பல மாடி வீடுகளில் சம்பளத்தை பிடித்துக் கொள்வார்கள். அவர்கள் வீட்டு உரிமையாளர்கள் ஆதலால் அவர்களைப் பகைத்துக் கொள்ள முடியாது காரணம் ஒரு முதலாளியின் வீட்டில் குடியிருக்கும் வாடகைக் குடித்தனக்காரர்களை கட்டுப்படுத்தும் உரிமை முதலாளிக்கு இருப்பதால் முதலாளியைப் பகைத்தால் அங்கு குடியிருப்போரையும் பகைக்கும் நிலை வரலாம் என்பதால்.
பெருநகரத்தின் நவீன கொத்தடிமைத்தனமாக இந்த வீட்டு வேலைக்காரிகள் வாழ்ந்தாக வேண்டியநிலை. முப்பதோ நாற்பதோ இந்த வாருமானத்தில்தான் இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவும், மூன்று பேரின் உணவும், வாடகையும், அதுதான் அவளது வாழ்வாக இருந்தது. சில நேரங்களில் ரேஷன் கடையில் கிடைக்கும் ஒரு ரூபாய் அரிசியை வாங்கி மாவுக் கடைகளில் மூன்று ரூபாய்க்கு விற்பாள். மண்ணெண்ணெய், சீனி, பாமாயில் என எதையும் தனக்காக எடுக்காமல் விற்று விடுவாள். காய்கரிக்கடையில் இரண்டு கத்தரிக்காயும், சேனைக்கிழங்கையும் வாங்கி ஒரு குழம்பு அதுதான் பெரும்பாலான நாட்கள் அவளது உணடு.கோவைக்காய் கூட இம்மாதிரியான் ஏழைகளின் காய்கரிதான். மற்றபடி தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், வெண்டை இதெல்லாம் இந்த அஞ்சலைகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
இம்மாதிரியான சூழலில்தான் இவ்வருட பண்டிகையும் வந்தது. எப்பாடு பட்டாகிலும் அவள் மூத்தவனுக்கும் இளையவளுக்கும் புதுத்துணி எடுத்து விடுவாள். சில பலகாரங்களைச் செய்து விடுவாள். என்ன பொருள் எங்கே கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் என்பது அஞ்சலைக்குத் தெரியும். பிள்ளைகள் கூட பெரிய ஆசைகளோடு வளர்கிறவர்களல்ல பக்கத்துத் தெருவில் சிதறும் வண்ணங்களை ரசித்து திருப்தியடைவதும். எரிந்து போகாத வெடிகளைச் சேமித்து அதன் மருந்தை மொத்தமாக எரியூட்டுவதிலுமே பல தீபாவளிகள் கழிந்து விடுகிறது இளையமகனுக்கு. அஞ்சலை இந்த வருடம் நூறு ரூபாய்க்கு வெடி வாங்கிக் கொடுக்க ஆவல் கொண்டாள்.
பத்துவருடமாக பட்டப்ப முதலியார் வீட்டிலும் அஞ்சலை துணி துவைக்கிறாலள். பட்டப்பனுடைய மட்டுமல்லாமல் அவனுடைய கிழட்டு அப்பனின் கோவணத்தையும் சேர்த்துத் துவைக்க வேண்டும். பட்டப்பன் ஒவ்வொரு மாதமும் கூலி கொடுக்கும் போது ஏதோ தான் அஞ்சலைக்கு இரு நூறு ரூபாய்கள் இலவசமாக கொடுப்பது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விட்டே அந்தப் பணத்தை அவளிடம் நீட்டுவான்.ஆனால் பட்டபனின் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். சம்பவம் நடந்த வீட்டில் மட்டும் ஆறு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இது போக அண்ணாநகரில் படப்பனுக்கு இன்னொரு அப்பார்ட்மெண்ட் இருக்கிறது. அதில் நான்கு வீடுகள் இருக்கிறதாம். அந்தக் காலத்திலேயே சென்னையின் பாரம்பரீய பண்ணைகளாம் இவர்கள். ஆனால் இந்த பட்டப்பனின் வாழ்வைப் போலல்ல துணி துவைப்பது. எஜமானிகளே துணி துவைப்பது எவளவு கஷ்டம் தெரியுமா? ஊரவைத்து, சட்டை நன்றாக காலர் அழுக்கு போக தேய்த்து துவைக்க வேண்டும்,போர்வை என்றால் சோப் போட்டு அடித்து துவைக்க வேண்டும், அதுவே ஜீன்ஸ் என்றால் உள்பக்கமாக துவைத்து எடுக்க வேண்டும். எஜமானிகளின் விருப்பங்களை இந்தக் கூலி ஆள் நிறைவேற்ற வேண்டும் அல்லவா?
பட்டப்ப முதலியாரிடம் அக்டோபர் மாதம் முதலாம் தியதி கேட்டே விட்டாள் அஞ்சலை ’’மொதலாளி நம்ம வீட்டுல பத்து வருஷமா துணி துவைக்கிறேன். இரு ரூபாய் இப்போ பத்தல்ல. ஒரு ஐம்பது ரூபாய் இந்த மாசம் சேர்த்துக் கொடுங்க முதலாளி” என்றாள் அஞ்சலை.பட்டப்பன் கூலி உயர்வு கேட்ட அஞசலையை எதிர்கொள்ள முடியவில்லை. கரப்பான் பூச்சி தன் முகத்துக்கு நேரே வந்து பேசுவதாக நினைத்தான். பட்டப்பனின் மனைவி வந்து என்ன நீ அவருகிட்டே கூலி எல்லாம் கூட்டி கேக்குற நீ வரவேண்டாம் பத்தாம் தியதி வந்து நீ வேலை செஞ்ச கூலியை வாங்கிக்க, அவள் எதுவும் பேச வில்லை. ஊற வைத்த துணியை துவைத்து விட்டு வந்து விட்டாள்.மறு நாள் போன போது. பட்டப்பனின் வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்கள் அஞ்சலையை வேண்டாம் “நிண்ணுக்கோ“ என்றார்கள்.அந்தாளு வேண்டாம்கிறான். என்று காரணமும் சொன்னார்கள். அஞ்சலை இன்னும் நான்கு புதிய எஜமானிகளைத் தேடியாக வேண்டும். அதற்குள் பத்தாம் தியதி வந்திருந்தது. அவளது பழைய சம்பளத்தை பட்டப்பன் கொடுப்பதாகச் சொன்னது அன்றுதான்.
சமீபத்தில் நான் எழுத்தாளார் பாமாவை சந்திக்க உத்திரமேரூர் சென்றிருந்தேன். நான் பெரிதும் மதிக்கும் தமிழக எழுத்தாளர் அவர். ஒரு எளிய வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிறார். அவரது வாழ்வு, கல்விப்பணி, எழுத்து சமூகம், என பல விஷயங்கள் பற்றி அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒடுக்கப்பட்ட சமூகங்கள், சுரண்டல் சமூக அமைப்பில் மக்கள் மொழியை பதிவு செய்யும் போது, அது பொதுத் தமிழைச் சிதைக்கிறது என்று கவலைப்படுகிற தமிழார்வலர்கள் குறித்துப் பேசினோம்.
தேசீயவாத ஒழுக்கக் கோட்பாட்டிலிருந்து இச்சிந்தனை வந்திருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் உறையாடலில் இயல்பாக கலந்திருக்கும் வார்த்தைகள் அவர்களின் சமூக வெளிப்பாடு என்றெல்லாம் பேசினோம். நான் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆதிக்க சாதிக்காரன் ஒருவன் ஒடுக்கப்பட்ட பெண்களை “தேவடியாமாரு “ என்பான் நான் அதை அப்படியே எழுதி கட்டுரை கேட்டவருக்கு கொடுத்தேன். அவரோ அந்தச் சொல்லை ஒழுக்கம் கருதி எடுத்து விட்டார். என்று சொன்ன போது பாமா சொன்னார். ஆமாம் அது எனக்கும் நடந்தது. என்றார்.
நான் “கிசும்புக்காரன்” என்றொரு கதை எழுதியதாகச் சொன்னார்.அதில் பண்ணையில் வீட்டில் வேலைபார்க்கும் தலித் கூலித்தொழிலாளிக்கு வேலை நேரம் முடிந்த பிறகும் கூலியைக் கொடுத்து அனுப்பாமல் பண்ணை அவரை வேலை வாங்கிக் கொண்டே இருப்பனாம். வீட்டு வேலை, வளவு வேலைகளை அவன் சொல்லிக் கொண்டே இருப்பனாம். கூலிக்கான ஏக்கம் எவளவு பெரிய நெருப்பு இல்லையா? அவனது பிள்ளைகள் அவனது வருகைக்காக காத்திருக்குமல்லவா? அவன் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆண்டையிடம் போய் கூலிக்காக நிற்கிறான். பண்ணையோ ’’ அப்புறம் என்ன வேலை கிடக்கு? என்று தொழிலாளியை பார்த்துக் கேட்டபோது௪.. தொழிலாளி பண்ணையைப் பார்த்துச் சொன்னார் “உம் பொண்டாட்டிய கூட்டிக் கிட்டு வா ரெண்டு பேரும் சேர்ந்து மாறி மாறி பண்ணலாம்“என்றானாம். பொதுவாக திருமணமாகாத இளைஞனை உச்சபட்ச கோபத்தை வெளிப்படுத்த அவனது அம்மாவை உறவு கொள்ள அழைத்தால் போதுமானது.
பண்ணை திருமணமானவன் அதனால் இங்கே மனைவி. இந்தக் கேள்வியை அவன் எதிர்கொள்கிற அந்தத் தருணமே அவனுக்கான தண்டனை. பட்டப்பன் செய்த வேலைக்கு கூலி கொடுப்பதாகச் சொன்ன பத்தாம் தியதி வந்தது.இன்றும் அவன் செய்த வேலைக்கு கூலி கொடுப்பதாக இல்லை. ஆனால் அஞ்சலையிடம் கூலிக்கான கோபம் இருந்தாலும் வார்த்தைகள். பாட்டப்பன்களுக்கு கரப்பான்பூச்சிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன..