83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர்.
அதில் உயிர் தப்பிய சிலர் இன்று அமைச்சர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
மறுபடியும் அதே மாதத்தில், வவுனியா சிறையில் அதிகாரிகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்குமிடையே மோதல் உருவாகியுள்ளது.
விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைப்பது, சர்வதேச நீதி நியமங்களுக்கு முரணானது என்பது குறித்து மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியும், பயங்கரவாதத் தடை சட்டத்தைக் காட்டி, தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது அரசு.
ஒரு நாட்டின் இறைமை என்பது மக்களுக்கானது என்பதை ஏற்றுக்கொண்டால், மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் சட்டங்களும் அரசியலமைப்பும் சகல மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
சட்டங்களும் அதன் விதிமுறைகளும் பெரும்பான்மை இன மக்களின் அபிலாஷைகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தால், நாட்டில் அமைதியும் சாந்தியும் சமாதானமும் எப்படி உருவாகும்?
ஒரு நாட்டைப் பொறுத்தவரை எண்ணிக்கையில் சிறுபான்மையாகவும், ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியான நிலப் பரப்பைக் கொண்ட பிரதேசத்தில் அச் சிறுபான்மையினர், பெரும்பான்மையாக வாழும் போது, அச் சமூகத்தினரை தேசிய இனம் என்று வரையறுக்க முடியாத அரசிலயமைப்பு, எவ்வாறு அம் மக்களின் பிறப்புரிமையான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியும்?
இங்குதான் இன முரண் நிலை தோற்றம் பெறுகிறது.
இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்து வாழ்க்கை நீரோட்டத்தில் கலக்க விடுவதாகக் கூறும் அரசு, நீண்ட காலமாக விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் இன்னமும் நீதிமன்றில் நிறுத்தவில்லை.
இனவாத அரசியலின் இருப்பிற்கு இத்தகைய சிறையடைப்புக்கள் தேவைப்படுகிறதோ தெரியவில்லை.
அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணா நோன்பு இருப்பதும், பின்னர் அரசியல்வாதிகள் கோப்பி கொடுத்து அதை நிறுத்துவதுமாக தொடர் கதையாகும் நிகழ்வுகளின் புதியதோர் அத்தியாயம் வவுனியா சிறையில் எழுதப்பட்டது. சிறை அதிகாரிகளை தமிழ் அரசியல் கைதிகள் பணயக் கைதிகளாக சிறை பிடித்ததாகவும் அவர்களை மீட்க படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அரசு தரப்பு கூறுகிறது.
அது மட்டுமல்லாது, தமது மீட்பு தாக்குதலை நியாயப்படுத்த கைதிகளைப் புலிகளென்று குற்றஞ் சுமத்துகிறது.
அங்கிருந்த 122 கைதிகளை உடனே அனுராதபுர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்து 10 மணித்தியாலங்களிற்குப் பின்னர் 22 பேரை மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலமாகக் காயமடைந்த நிலையில் உள்ளவர்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் குழுவினர் வைத்தியசாலையில் பார்வையிட்டுள்ளனர்.
மகர சிறைச்சாலையிலிருந்து இராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் வவுனியா நெலுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட 28 வயதுடைய கணேசன் நிமலரூபன் என்கிற இளைஞர் சாவடைந்துள்ளார்.
இவர் பலத்த தாக்குதலின் விளைவாக கொல்லப்பட்டுள்ளார் என்று மனோ கணேசனும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவிக்கும் அதேவேளை, இருதய நோய் காரணமாகவே நிமலரூபன் இறந்தாரென அரச தரப்பு கூறுகிறது.
இருதய நோயால் பாதிப்புற்ற ஒரு கைதியை, சிறையில் தடுத்து வைக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்கிற அடிப்படை மனித உரிமை கோட்பாடு கூட இத்தகைய அரச தரப்பு நியாயவாதிகளுக்கு தெரியவில்லைப் போலுள்ளது.
அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி என்று கூறுவதன் ஊடாக அக்கொலையை நியாயப்படுத்தும் போக்கு பெருந் தேசிய இனவாதத்தின் மாறாத வன்மத்தையே வெளிப்படுத்துகிறது.
அதேவேளை அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் நிமல்கா பெர்னாண்டோ போன்ற மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளோடு உரையாடியுள்ளனர்.
நல்லிணக்கச் செயற்பாடுகள் பாதிக் கிணற்றைத் தாண்டி விட்டதென சர்வதேசத்தை இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிக்கும் அதேவேளை, இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அனைத்துலக ஆவர்த்தன மீளாய்வு (UPR} கூட்டத்திலும் மனித உரிமைச் சங்கங்களால் கைதிகள் விடுதலை தொடர்பாக காட்டமாக அறிக்கைகள் முன் வைக்கப்படுமென எதிர்பார்க்கலாம்.
இவை தவிர கொல்லப்பட்ட கணேசன் நிமலரூபனின் உடலத்தை அவரின் வாழ்விடமான வவுனியாவிற்கு கொண்டு செல்வதை, காவல் துறையின் வேண்டுகோளிற்கு இணங்க, நீதிமன்றம் தடை செய்துள்ள விவகாரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவரது உடலம் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கு பதற்ற நிலை உருவாகி, தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமென பெருந்தேசிய காவல்துறை கூறுகிறதாம்.
நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களில் “எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்கிற முழக்கம் எழுப்பப்படுவதை பரவலாகக் காணலாம்.
இருப்பினும் பிள்ளைகளை புதைக்க எமது நிலம் வேண்டும் என்று போராடும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள் போலுள்ளது.
சொந்த மண்ணில் புதைப்பதற்கு உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் செல்வது தேசிய நல்லிணக்கமானது இன்னமும் இலங்கையில் சாத்தியமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்கள், புதைப்பதற்கு நிலம் தேடும் அவல நிலையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கிறது.
தென்னாபிரிக்க அனுபவங்களைப் பற்றி நாம் பேசலாம்.
ஆனால் சொந்தமாகத் தயாரித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே நடைமுறைப்படுத்தப் பின்னடிக்கும் அரசு, தென்னாபிரிக்கப் படிப்பினைகளை பரிசீலிக்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனமாகும்.
நெருக்கடி நிலையைக் கையாளும் நிறுவனங்கள் (Crisis Groups) அடிப்படை ஜனநாயகத்தை நிலைநாட்டினால் அல்லது நல்லாட்சியை ஏற்படுத்தினால், தேசிய இன முரண்பாட்டின் பக்கங்கள் குறைவடைந்து, நல்லிணக்கம் உருவாக வழிசமைக்குமென அறிவுரை கூறலாம்.
ஆனால் இதற்கு எதிர்மாறாக, இராணுவ நிறுவன மயப்படும் ஆட்சிக் கட்டமைப்பு விரிந்து செல்வதை இவர்களால் தடுத்து நிறு த்த முடியுமாவென்று தெரியவில்லை.