Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா? : அப்துல்

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ‘மேதை’!

2007-ம் ஆண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், விற்பனைக்கு வெளியாகத் திட்டமிட்ட நாளுக்கு ஒரு மாதம்தான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், மேலாளர்கள் சிலரை தனது அலுவலகத்திற்குள் அழைத்தார். சில வாரங்களாக ஐ-போன் கருவியின் மாதிரியை தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்து சோதனை செய்து கொண்டிருந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது, அந்த மாதிரியை கோபத்துடன் எல்லோருக்கும் காட்டினார். அதன் பிளாஸ்டிக் திரையில் சிறு கோடுகளாக மெல்லிய கீறல்கள் தெரிந்தன.

தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து சாவிக் கொத்து ஒன்றை வெளியில் எடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘இந்த போனை மக்கள் தமது பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்கள். சாவிக் கொத்துகளையும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். கீறல் விழும்படியான ஒரு பொருளை நான் விற்க மாட்டேன்’ என்று கடுப்புடன் சொன்னார். கீறல் விழாத கண்ணாடி திரையை பயன்படுத்துவதுதான் ஒரே வழி. ‘கண்ணாடி திரை வேண்டும். ஆறு வாரங்களுக்குள் பக்காவாக வேண்டும்’.

இதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ். நுகர்வோர் ஐ-போனை சாவிகளுடன் சட்டைப் பையில் வைத்திருந்தால், அதன் திரையில் ஏற்படக் கூடிய கீறலைப் பற்றி கவலைப் படுவது போல ஒவ்வொரு நுணுக்கமான விபரத்திலும் கவனம் செலுத்துவதுதான் அவரது வெற்றியின் ரகசியமாக போற்றப்படுகிறது. “ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போன்றதில்லை. தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். அத்தகைய கலாச்சாரத்தை பயிற்றுவித்து வெற்றிக்கு வழிகாட்டிய உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து விற்கும் பொருட்களின் வடிவமைப்பில் புரட்சிகர மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்” என்று பலரும் பாரட்டத் தயங்குவதில்லை.

உலகின் நம்பர் 1 நிறுவனம் ஆப்பிள்

மேக்கின்டோஷ் வரிசை மேசைக் கணினிகள், ஐ-மேக் மடிக்கணினிகள், ஐ-பாட் பாட்டு கேட்கும் கருவி, ஐ-போன் செல்பேசி, ஐ-பேட் கையடக்கக் கணினி என்று கை வைத்த எல்லா துறைகளிலும் ஏற்கனவே இருந்த தயாரிப்புகளை பின் தள்ளி முடி சூடிக் கொண்டது ஆப்பிள் நிறுவனம். மற்ற நிறுவனங்களின் பொருட்களை விட ‘தரத்தில் உயர்ந்த’ ஆப்பிள் பொருட்களின் சந்தை விலை கணிசமாக அதிகம். வழக்கமான mp3 பிளேயர் 1,000 ரூபாய்க்குள் கிடைத்தால் ஆப்பிள் ஐ-பாட் 3,000 ரூபாய்க்கு விற்கும், மற்ற தயாரிப்பாளர்களின் ஸ்மார்ட் தொலைபேசி 15,000 ரூபாய்க்கு விற்றால் அதற்கு இணையான ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி 30,000 ரூபாய்க்கு விற்கப்படும்.

அவற்றை வாங்குவதற்கு இலட்சக்கணக்கான பயனர்கள் போட்டி போடுவார்கள். ஆப்பிளின் புதிய பொருட்கள் வெளியாகும் நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.

2011-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு எக்ஸான் மொபைல் என்ற எண்ணெய் (பெட்ரோல்) நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி உலகத்திலேயே முதலிடத்தை எட்டிப் பிடித்தது. மொத்த வருமானத்தின் அடிப்படையிலும், லாபத்தின் அடிப்படையிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் உலகின் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது ஆப்பிள். போட்டியாளர்களான கூகுள், மைக்ரோசாப்டு இரண்டு நிறுவனங்களின் வருமானத்தை ஒன்று சேர்த்தாலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிற்கின்றது ஆப்பிள்.

ஆப்பிள் சாம்ராஜ்யம் உற்பத்தி செய்யும் பொருட்களின் பளபளப்பு அவற்றை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் காணப்படுகிறதா? சிறு சிறு விபரங்களிலும் அக்கறை காட்டும் ஸ்டீவ் ஜாப்சிஸ் ஆப்பிள் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் தனது ஆளுமையை, ‘உயர் தரத்துக்கான’ தேடலை செலுத்தினாரா?

அமெரிக்காவின் தேவதை பிசாசு ஆனது!

1990களில் போட்டியாளர்களின் பொருட்களைப் போல் இல்லாமல் ‘ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவை’ என்று மார் தட்டிக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக நகர்த்தப்பட்டு விட்டது. குறிப்பாக, சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தி பணியை செய்து வருகிறது.

‘பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் வளரும் போது, அவற்றின் சொந்தக்காரர்களான முதலாளிகள் கோடீஸ்வரர்களாகும் போது, நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்’ என்ற தாரம மந்திரத்தில் இயங்கும் அமெரிக்காவிலேயே அந்தக் கோட்பாடு செல்லாமல் போய் விட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பங்குச் சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே போன கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரமும் பொது மக்களும் வீடுகளை இழந்து, வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். ‘அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. ஆகச் சிறந்த பொருளை உருவாக்கி சந்தைப்படுத்துவதுதான் எங்களது பணி’ என்கிறார்கள் ஆப்பிள் மேலாளர்கள்.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் உடைத்தெறிவதாக 1984-ல் விளம்பரம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று அது போன்ற பல பிக்பிரதர்களின் சங்கிலித் தொடர் உற்பத்தி முறையில்தான் பில்லியன் டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. (ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரிட்டிஷ் உளவுத் துறை கைக்கூலி எழுதிய ’1984′ நாவலில் உருவகிக்கப்பட்ட பிக்பிரதர்கள் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகின்றன).

ஆப்பிள் நிறுவன வெற்றியின் ஊற்றுக்கண்

ஆப்பிள் நிறுவனத்தின் தளுக்காக, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதரின் திறமையால் நமது கைகளுக்கு வந்து சேரவில்லை. சீன அரசாங்கத்தின் வரிச் சலுகைகள், சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களின் இரத்த வியர்வை, உலகெங்கும் பரந்து விரிந்து நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வல்லாதிக்க பொருளாதார கொள்கைகள் இவற்றின் கூட்டுச் சேர்க்கையின் விளைவுகள்தான் ஆப்பிள் பொருட்கள்.

மேலே சொன்ன ஐ-போன் திரை மாற்றம் முடிவு செய்யப்பட்டு, கண்ணாடித் திரைகளை வெட்டி அனுப்பும் தொழிற்சாலை அடையாளம் காணப்பட்டது. கண்ணாடி திரை வெட்டி கொடுக்கும் வேலைக்காக விண்ணப்பிருந்த சீன தொழிற்சாலைக்கு ஆப்பிள் மேலாளர் போன போது, வேலை கிடைத்தால் பயன்படுத்துவதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சீன அரசாங்கம் முதலீட்டுக்கு அளித்த மானியம் இந்த கண்ணாடி வெட்டும் தொழிற்சாலைக்கும் கிடைத்திருந்தது. தொழிற்சாலையின் கிடங்கில் ஆப்பிளுக்குத் தேவையான இலவச கண்ணாடி மாதிரிகள் குவிக்கப்பட்டிருந்தன. பொறியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பணி புரிய தயார் செய்யப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் ஊழியர்கள் வேலைக்கு வரும்படியாக தொழிற்சாலைக்குள்ளாகவே தங்கும் அறைகள் கட்டப்பட்டிருந்தன.

அந்த தொழிற்சாலைக்கு கண்ணாடி திரைகள் வெட்டும் வேலை கிடைத்தது. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஒரு நள்ளிரவில் ஆப்பிள் பொருட்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நகரத்துக்கு வந்து சேர்ந்தன. மேலாளர்கள் தொழிற்சாலையின் தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எழுப்பினார்கள். அவசர அவசரமாக தத்தமது சீருடைக்குள் நுழைத்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பிஸ்கட்டும், ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அரை மணி நேரத்துக்குள் அவர்கள் ஐ-போன்களை பொருத்தி உருவாக்கும் அசெம்பிளி லைனில் அணிவகுத்தார்கள். ஐ-போனில் கண்ணாடி திரைகளை பொருத்தும் 12 மணி நேர ஷிப்டு ஆரம்பித்தது.

96 மணி நேரத்துக்குள் நாளைக்கு 10,000 ஐ-போன்கள் உற்பத்தி ஆரம்பித்து விட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் ஆப்பிள் 10 லட்சம் ஐ-போன்களை விற்றது. 2011 இறுதி வரை பாக்ஸ்கான் 20 கோடிக்கும் அதிகமான ஐ-போன்களை உற்பத்தி செய்து அனுப்பியிருக்கிறது.

உடைக்கப்படும் சீனத் தொழிலாளர்களின் முதுகுகள்

1. தேவைக்கேற்ப வாரத்துக்கு 7 நாட்கள் கூட வேலை வாங்கப்படுகிறார்கள் பாக்ஸ்கான் தொழிலாளர்கள். ஒரு தொழிலாளர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 83 மணி நேரம் ஓவர் டைம் செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்துக்கு 36 மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளர் ஓவர் டைம் வேலை செய்யக் கூடாது என்ற விதி முறையை கண்டு கொள்ளாமல் தொழிலாளர்களை சக்கையாக பிழிந்து ஐ-போனுக்கு மெருகூட்டப்படுகிறது.

ஓவர் டைம் வேலை என்பதை தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையாக பலர் பார்க்கிறார்கள். நம் ஊரிலும் தொழிலாளர்களும் ஆர்வமாக ஓவர் டைம் கேட்டு வேலை செய்கிறார்கள். 8 மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல்தான் ஓவர் டைம் செய்து தமது உடல்நலத்தை அழித்துக் கொள்கிறார்கள் தொழிலாளர்கள். வேலையில் தேயும் தொழிலாளர்களின் உடம்பையும் மனதையும் புதுப்பித்து மறு உற்பத்திக்கு தயார் செய்யத் தேவையான கூலியை மட்டும் கொடுத்து உபரி மதிப்பை சுரண்டுவதுதான் முதலாளித்துவம் என்பது பாரம்பரிய வரையறை. மறு உற்பத்திக்குக் கூட போதாமல் தொழிலாளர்களின் வாழ்க்கையை பறித்துக் கொள்கின்றது இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

2. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது.

தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். நாளைக்கு 8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் நீண்ட போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி ஈட்டிய உரிமை. 8 மணி நேர ஷிப்டு, குறைந்த பட்ச ஊதியம், மனிதர்களுக்கு ஏற்ற பணிச் சூழல் என்ற அடிப்படை மனித உரிமைகள் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு நியாயமான பணி உரிமைகளை வழங்கினால் ஐ-போன் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்து விடும், அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுவதைக் கூடத் தாங்க முடியாத மெல்லிய மனம் படைத்த மனிதாபிமானியாகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

12 மணி நேர ஷிப்டுகள், ஓவர் டைம் வேலை என்று கணக்கு போட்டுப் பார்த்தால் தொழிலாளர்கள் பெரும்பான்மை நாட்களில் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. ஆப்பிள் லோகோவை ஐ-பேட் கருவியின் மீது பொறிக்கும் வேலை கைக்கருவியால் செய்யப்படுகிறது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். அந்த வேலையை மட்டுமே நாள் முழுவது செய்யும் பெண் தொழிலாளர், ஆப்பிள் ஐ-பேட் எப்படி இயங்குகிறது என்று இது வரை பார்த்ததில்லை.

ஆப்பிள் தொழிலாளர் குடியிருப்பு
15 மணி நேர மனதை மரக்கடிக்கும் இத்தகைய இயந்திர வேலைக்குப் பிறகு இளைப்பாறி, தூங்கி, புத்துணர்ச்சி பெறுவதற்கு ஐ-வரிசை பொருட்களின் உற்பத்தி முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கும் தங்கும் அறைகள் எந்த தரத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம். ரயில் பெட்டிகளில் தூங்கும் வசதி போன்று மூன்றடுக்காக அமைந்த படுக்கையில் தூக்கம், படுக்கையை ஒட்டிய பெட்டியில் பொருட்களை பூட்டி வைத்துக் கொள்ளும் வசதி என்று சிறு அறைகளில் 8 பேர் வரையிலும் பெரிய அறைகளில்  20 பேர் வரையிலும் தங்குகிறார்கள் சீனத் தொழிலாளர்கள்.

போரும் சமாதானமும்

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளராக அண்டர் கவர் வேலை செய்யப் போய் தனது அனுபவங்களை சீனப் பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். ‘இது ஒரு தொழிற்சாலையின் கதை இல்லை, ஒரு தலைமுறை சீன இளைஞர்களின் சோகக் கதை’ என்கிறார் அந்த இளம் பத்திரிகையாளர்.

இத்தகைய மன அழுத்தங்களின் வெளிப்பாடாக பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 17 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் ஊழியர்களை பிடிக்க தொழிற்சாலை நிர்வாகம் பாதுகாப்பு வலைகளை பொருத்தியிருக்கிறது. தொழிலாளர் தற்கொலை பற்றிய விபரங்கள் சீன ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அமெரிக்க பத்திரிகைகளிலும் வெளியான பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 900 யுவானாக இருந்த தொழிலாளர்களின் மாதச் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,200 யுவான் ஆகியிருக்கிறது.

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இதில் பார்க்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்காக மொட்டை மாடிக்குள் போகும் பெண் தொழிலாளரின் வீடியோ பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருக்கிறது.

 


சாவியையும் ஐ-போனையும் சேர்த்து பையில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் நுகர்வோரின் மனதில் கூட கீறல்கள் விழுந்து விடக் கூடாது என்று நுண்ணறிவுடன் செயல்பட்ட ஸ்டீவ் ஜாப் தலைமையிலான ஆப்பிள் நிறுவனத்துக்கு 17 உயிர்கள் பலி போன பிறகுதான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்கும் கவனம் வந்திருக்கிறது. அதுவும், எதிர்மறை பிரபலத்தால் தமது பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் குறைந்து அதன் மூலம் தான் வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு வீழ்ந்து விடக் கூடாதே என்ற தவிப்பினால்தான் பிச்சைக் காசை தூக்கி எறிந்து தமது இமேஜை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சரி, லாப வெறி பிடித்த முதலாளித்துவ நிறுவனம்தான் தொழிலாளர்களை கவனிப்பதில்லை. தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கம் அமைக்கலாமே, தமது உரிமைகளுக்குப் போராடலாமே’ என்று நினைத்தால், பாக்ஸ்கான் நிறுவனம் சீன அதிகார வர்க்கத்துடன் வைத்துள்ள கள்ளக் கூட்டுறவின் மூலம் அப்படி எதிர்த்து குரல் எழுப்ப முயலும் தொழிலாளர்களுக்கு 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

அவரவர் பிரச்சனை அவரவருக்கு

இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் கவலை, ‘உபரியாக வங்கியில் உறங்கும் 98 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி) கையிருப்பை என்ன செய்வது?’ என்பதுதான்!

அடுத்த முறை பளபளப்பான ஆப்பிள் பொருட்களின் விளம்பரத்தைப் பார்க்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற தீர்க்க தரிசியின் வாழ்க்கையை வியக்கும் போது, ஆப்பிள் பொருட்களைத் தடவித் தடவி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வெள்ளுடை வேந்தர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கும் போது சிதைக்கப்பட்டு வரும் சீனத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் நமது மனதில் தோன்ற வேண்டும். அதுதான் ‘நமக்கு சோறு போடும்’ இன்றைய முதலாளித்துவ அமைப்புக்கு நாம் செலுத்தும் சரியான காணிக்கையாக இருக்க முடியும்.

________________________________________

நன்றி : வினவு

Exit mobile version