Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.பி.ஆர்.எல்.எப்(பத்மநாபா) இன் தமிழ் தேசியக் கூடமைப்பிற்கு எதிரான அரசியல் : சுதர்சன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாதிகளின் கூட்டமைப்பு என்பதில் சமூக உணர்வுள்ள எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. தமது சொந்த நலனையும் பாராளுமன்றத்தில் ஆசனங்களையும் தக்கவைத்துகொள்ளவும் “பிசாசுகளோடும்” கூட்டுச் சேர்ந்துகொள்ள இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இவர்கள் செயல் பூர்வமாக நிரூபணம் செய்துள்ளனர்.

இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட இந்தியாவிடமும் அதனை ஊக்குவித்த அமரிக்காவிடமும் “தமிழ்த் தேசியத்தின்” தலைவிதியை ஒப்படைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவம் கிடப்பது புதிரல்ல.

மக்கள் மத்தியில் காணப்படும் பேரும் தேசிய வாத்திற்கு எதிரான தேசிய உணர்வைப் பயன்படுத்தி வாக்குச் சேகரித்துக் கொள்வதே தேசியக் கூட்டமைப்பின் அரசியல் “தந்திரோபாயம்”. இதனால், இவர்கள் மானசீகமாக விரும்பாவிட்டாலும் இலங்கை அரசிற்கு எதிராக அவ்வப்போது அறிக்கைவிடுவதும், அரசியல் மேடைகளில் உரக்கப் பேசுவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

இதன் மறுபக்கத்தில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியலை தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்காவிட்டால், நேர்மையாக இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் சக்திகள் தேசியப் போராட்டத்தைத் தலைமை தாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இலங்கை அரசிற்கும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு எல்லை வரைக்கும் தேவையானதாகவே காணப்படுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் இலங்கை அரசு உணர்ந்துள்ளது. இந்தத் தேவைக்காக சில இலங்கை அரச துணைக்குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகம் இன்று பரவலாகக் காணப்படுகின்றது.

புலிகள் இலங்கையில் உயிர்வாழ்ந்த காலகட்டத்தில் பெருந்தொகையான அரச பணக் கொடுப்பனவு, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன. வன்னியில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதும் இக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. இதன் பின்னான காலப்பகுதியில் புலிகள் அமைப்பைச் சார்ந்த, அதன் முன்னை நாள் உறுப்பினர்களை உதிரித் துணைக் குழுக்களாகவும், ஈ.பி.டி.பி ஐ நிரந்தரத் துணைக் குழுவாகவும் இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. தேவை ஏற்படும் போது இவர்களிடையேயும் கூட மோதலை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்த இலங்கை அரசு தனது இராணுவத் தந்திரோபாயங்களை வகுத்திருப்பது அறியப்படாத ஒன்றல்ல.

அரச பணக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதும் தனது பணத்தேவைக்காக புதிய வியாபார அரசியலை நாடவேண்டிய தேவை இத் துணைக் குழுக்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வோரு குழுக்களும் ஒவ்வோரு வழிமுறைகளை வகுத்துக்கொண்டன. இங்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வழிமுறை குறித்து ஆராய்வதே நோக்கம் என்பதால் மற்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல, தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும்.
அமெரிக்காவில் பேசுகிறோம். இங்கிலாந்தில் பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளுரில் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.” என்று ஈ.பி.ஆர்.எல்.எப்(பத்மநாபா) அணியின் செயலாளர் சிறீதரன் அல்லது சுகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த தனது கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

முற்றிலும் உண்மையான அரசியல் உள்ளர்த்தம் கொண்ட அழகான வார்த்தைகள். ஆனால் இந்த வார்த்தைகளின் பின்னணியில் இலங்கை அரசிற்கு குறைந்தபட்ட அழுத்தங்களையாவது வழங்கும் “அறிக்கை அரசியலாவது” முன்னெடுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்பது யதார்த்தம்.

வன்னியில் கொத்துகொத்தாக மக்கள் கொல்லப்பட்டப்பபோது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணிக்கு இப்போது நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை ஏற்பட்டிருப்பது வேடிக்கைமிகுந்தது. அழிக்கப்பட்டு அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குப் போடுகிறார்கள் என்பதன் பின்னால் உள்ள உண்மையைக் கூடத் தெரிந்துகொள்ள மாட்டோம் என அடம்பிடிக்கும் இவர்களின் அரசியல் வியாபார வலைக்குள் யாரும் சிக்கிவிடக்கூடாது.

இந்திய அரசின் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலான மிகப் பெரும் அடியாள் வரதராசப்பெருமாள் பின்புலத்தில் நின்று இயக்கும் இலங்கை அரச துணைக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது கூட்டமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இங்கிருந்தே உருவாகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எப் புலிகளால் அழிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் வரலாறு அழிவு அரசியல் வரலாறாகிவிட்டது.

கூட்டமைப்பு அரசியலிலிருந்து நீக்கப்பட்டால் புதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் இயக்கம் எழுச்சிகொள்ளும் என்ற உண்மை ஒருபுறத்திலிருக்க இதன் மறுபுறத்தில் இந்த அரசியலை பிற்போக்கான அரச துணைக்குழுக்கள் முன்னெடுத்தல் அபாயகரமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை அரசிற்கு எதிரான அரசியலைப் புரிந்துகொள்ளும் அதே வேளை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version