Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழ விடுதலைக்கான செயற்திட்டத்தின் ஜனநாயக முன்நிபந்தனை : சபா நாவலன்

பரந்துபட்ட மக்களின் பலத்தைவிட அவர்களின் தலைமை பலம்பெறும் போதே அதிகரம் ஊற்றெடுக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தேசிய அரசுகள் உருவான வரலாற்றுக் கட்டத்திலேயே புதிய அதிகார அமைப்புக்கள் உருவாகின்றன. பதினாறாம் நூற்றாண்டின் பின்னய பகுதியில் ஏற்பட்ட முதலாளித்துவ அமைப்பின் உருவாக்கம் அதற்கு அவசியமான அதிகார அமைப்பையும் உருவாக்கிக் கொள்கிறது.

இவ்வமைப்பு மக்களுக்கும் அதன் தலைமைக்கும் இடையேயான உறவை சமரச அடிப்படையில் பேணிக்கொள்வதற்காக ஜனநாயக முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. அவ்வாறு அறிமுகமாகும் ஐரோப்பிய ஜனநாயக அதிகாரத்தின் பலம் பெரும்பான்மை மக்களைவிட அதிகமானதாகக் காணப்பட்டாலும் மக்களுக்குக் குறித்தளவான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.சுதந்திரம் என்பது அதன் உள்ளர்த்தில் அதிகாரத்தைப் பலப்படுத்தும் சுதந்திரமாகவே அமைந்திருந்தது.

வாங்குதல், விற்றல், வேலைக்கு ஆட்களைத் திரட்டுதல், பணச் சுற்றை இலகுபடுத்தல் போன்ற சமூக இயக்கத்திற்கு அவசியமாகவிருந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னிறுத்தி உருவான ஜனநாயகம், அரசை உருவாக்குதல், அரசின் நடைமுறைகளில் பங்கெடுத்தல் போன்ற பல்வேறு தேவைகள் கருதி விரிவுபடுத்தப்பட்டது.
ஆக, பெரும்பான்மையான மக்க

ளுக்கும் சிறுபான்மையான ஆளும் வர்க்கத்திற்கும் இடையேயான சமூகச் சமரசம் (social compromise) ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தச் சமூகச் சமரசம் என்பது அனைத்துத் தளத்திலும் ஆளும் வர்க்கத்தைப் பலப்படுத்தும் அடக்குமுறையாகவே அமைந்திருந்தது. அவ்வேளையில் அரசிற்கு எதிரான போராட்டங்களும் மக்களின் உரிமை கோரும் எதிர்ப்பியக்கங்களும், தொழிற்சங்கப் போராட்டங்களும் எழுந்தபோது அரசு தனது ஜனநாயகப் பரப்பையும் அதன் உள்ளடக்கத்தையும் மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இவ்வாறான நீண்ட வரலாற்றைக் கொண்ட ஐரோப்பிய ஜனநாயக முறை மக்களுடனான தனது சமரசத்தை மேலும் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை தோற்றமெடுத்த வேளையில் குடியேற்ற நாடுகளை இணைத்து ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியது.

இலங்கை இந்தியா போன்ற குடியேற்ற நாடுகளில் அந்த நாடுகளை அடக்கியாள்வதற்கான அதிகார அமைப்பு முறை ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கேற்ற ஜனநாயக முறையும் உருவானது. அவ்வாறு ஒட்டவைக்கப்பட்டு உருவான ஜனநாயகம் ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டதிலிருந்து மாறுபட்டிருந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையானதாக அமைந்திருந்தது. அந்நாடுகளில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் அன்னியப் பொருளாதரத்திற்குச் சேவையாற்றும் ஒரே நோக்கத்தையே கொண்டிருந்தது.

மூன்றாமுலக நாடுகளில் உருவாக்கப்பட்ட ஒட்டு ஜனநாயகம் (Patch Democracy) என்பது பல்வேறு நிலப்பிரபுத்துவ உற்பத்திக் கூறுகளையும் அதற்குரித்தான சிந்தனை முறையையும் முன்பிருந்த வகயிலேயே பேணிக்கொண்டது.

மேற்கின் பொருளாதார அமைப்பு நெருக்கடிக்குள்ளான காலப்பகுதியில் உருவான நவதாராளவாதமும் அதன் உச்ச பட்ச வடிவமான உலக மயமாதலும் ஒட்டு ஜனநாயகத்தில் ஏற்படுத்திய புதிய மாற்றங்கள் நீண்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டுமாயினும், பொதுவாக அதிகரித்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தொகையை எதிர்கொள்ளும் நோக்கோடு புதிய அடக்குமுறை வடிவங்களை மூன்றாமுலக நாடுகளில் உருவாக்கியுள்ளது.

ஈழத்தில் பயங்கரவாத அழிப்பின் பெயரில் கொல்லப்பட்ட மக்களும், இந்தியாவில் பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலை யுத்தமும், மியான்மாரில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மீதான அரசின் யுத்தமும் புதிய சர்வாதிகார அமைப்பிற்கான சில சாட்சியங்கள் மட்டுமே.

இவ்வாறான ஏகபோக சர்வாதிகார அமைப்பிற்கு எதிராக ஜனநாயகத்தை மறுசீரமைப்பதும், மக்களை ஒருங்கிணைப்பதும் இன்றைய அரசியல் தேவையாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையிலிருந்து மட்டும்தான் மக்கள்யுத்தத்தின் ஆரம்பம் அமையலாம்.

ஆக, இன்றைய சூழலில் மக்களின் பலத்தைவிட (pp)பலமடங்கு அதிகமான அரச அதிகாரத்தின் (ps)பலம் உருவாகியுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் மக்களின் பலம் என்பது அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சார்ந்தவர்களின் பலம் என்பது முற்றாக அற்றுப்போகின்ற பூஜ்ய நிலையை அடைந்துள்ளது.

ஆக, புரட்சிக்கும் போராட்டத்திற்குமான முன்நிபந்தனை மக்கள் பலத்தை அதிகரித்தலாகும். அதற்கான அடிப்படை மக்கள் அமைப்புக்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இவற்றை புரட்சி இயக்கங்கள் புரிந்துகொண்டதிலும் அதிகமாக உலக மயமாதலின் பயனை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளும் அதன் பங்காளர்களும் புரிந்து கொண்டுள்ளனர். உலகமயமதலின் பின்னணியில் முகிழ்த்தவை தான் தன்னார்வ நிறுவனங்கள்.

மக்களை தமது எல்லைக்குள்ளேயே ஒருங்கிணைத்து தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயெ வைத்துக் கொள்வதற்கான நோக்கிலேயே தன்னார்வ நிறுவனங்கள்(NGOs) குடிமைச் சமூகங்களை (civil societies) உருவக்கிக் கொள்கின்றன. குடிமைச் சமூகங்கள் என்பன அடிப்படையில் மக்கள் திரள் அமைப்புக்களே. ஆயினும் தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கும் இவ்வமைப்புக்களின் நோக்கங்களோ ஆபத்தானவை. அவை உருவாக்கும் வெகுஜன அமைப்புக்கள் அரசின் எதேச்சதிகாரத்திறாகப் போராடுவதைத் தடுப்பதற்காக சிறிய பொருளாதார உதவிகளை மக்களுக்கும், பெருந்தொகைப் பணத்தை அவற்றை உருவாக்கும் மனிதாபினாம்மிக்க முன்னணி சக்திகளுக்கும் வழங்குகின்றன.

இதனால் புரட்சிகரக் கட்சியிலும் , போராட்ட இயகங்களிலும் இணைந்து கொள்ளவேண்டிய முன்னணி உறுப்பினர்கள் பெரும்பணச் செலவில் தன்னார்வ நிறுவனங்களை நோக்கி உள்வாங்கப்படும் அதேவேளை மக்கள் போராடாமல் தடுக்கப்படுகிறார்கள்.

ஆக, மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதன் பின்புலத்தில் போராட்ட அல்லது புரட்சிகர அமைப்புக்கள் செயற்பட வேண்டும் எனபது வெளிப்படையான ஒன்று.

இலங்கையில் நிலவும் ஏகபோக சர்வாதிகாரச் சூழலில் வெளிப்படையான கட்சி மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பது முற்றாகச் சாத்தியமற்ற சூழலே காணப்படுகிறது. இது தலைமறைவுக் கட்சியின் உருவாக்கத்திற்கான அவசியத்தை உணர்த்திநிற்கிறது. அதன் அமைப்பு, செயற்பாடுகள் குறித்து இலங்கைச் சூழலிலிருந்தே விவாதங்களும், ஆய்வுகளும், செயற்பாடுகளும் அமையலாம்.

மக்கள் அமைப்புக்கள் என்பது பொதுவாக இரண்டு பிரதான வகைகளில் அமையலாம் முதலில் நிர்வாக அமைப்புக்களாகவும் இரண்டாவதாக வர்க்க நலன்களைக் கொண்ட அமைப்புக்களாகவும் வகுக்கப்படலாம்.

தொழிலாளர் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணர்வர் அமைப்புக்கள், கூலி விவசாய சங்கங்கள் போன்ற இன்னொரன்ன வர்க்க அமைப்புக்கள் ஏற்கனவே வெற்றிகண்ட போராட்டங்களின் ஆதார சக்திகளாக அமைந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கள் கூலி உயர்வுக்கான போராட்டங்கள், நில உரிமைக்கான போராட்டங்கள் போன்ற சீர்திருத்தப் போராட்டங்கள் வழியாக தமக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

நிர்வாக அலகுகள் மக்கள் மத்தியில் இணைப்பை ஏற்படுத்தும் மற்றொரு வடிவமாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் நிர்வாகச் சீர்குலைவுகள், சமூகப் பிரச்சனைகளைக் கையாள்தல் போன்றவற்றின் அடிப்படையில் இவ்வாறான நிர்வாக அமைப்புக்கள் ஊக்குவிக்கப்படலாம்.

ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளை மிரட்டுகின்ற பகுதிகளில் இவ்வாறான நிர்வாக அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொள்ள ஊக்கிவிக்கப்படலாம்.

இவற்றிற்கெல்லாம் பின்புலத்தில் உறுதியான அரசியல் தலைமை செயற்பட வேண்டும். இவ்வாறான அரசியல் தலைமை என்பது சிக்கலான அமைப்பு வடிவங்கள் கொண்டதாக அமைந்திருப்பது தவிர்க்க முடியாத புறச் சூழலே இலங்கையில் நிலவுகிறது.

((குறிப்பு: இந்த மக்கள் மற்றும் அரசிற்கான பலப்பரீட்சைக்கான மாறி (Variant) , (ps/pp) என்பதால் பொதுவாகக் குறிக்கப்படும் இங்கு (pp) என்பது பூஜ்ஜியத்தை நோக்கிச் செல்லும் போது இந்த மாறியால் தரப்படும் அரச அதிகாரத்தின் பகுதி என்பது முடிவிலி நிலையை நோக்கிச் செல்லும்.)

(இன்னும்வரும்..)

இன்றைய இலங்கைச் சூழலிலை ஜனநாயக மயப்படுத்தல் குறித்தும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் சுக்கமான கருத்துக்களாகவே இவை முன்வைக்கப்படுகின்றன. இவை விவாதங்களூடாக வளர்த்தெடுக்கப்பட்டால் எதிர்கால மக்கள் சார் அரசியலுக்கு மிகப் பெரும் பங்காற்ற வாய்ப்புண்டு.

Exit mobile version