Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழம் – இன்னொரு போராட்டத்தின் முன் – மக்கள் யுத்தம் : சபா நாவலன்

ஈழப்போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் முடிவு தெற்காசிய மக்களின் போரட்ட அரசியலுக்கான உரைகல். தெற்காசியப் போராட்ட இயக்கங்களிலிருந்து உலகம் முழுவதும் போராடும் மக்கள் உரசிப்பர்க்க வேண்டிய ஆயிரம் கோட்பாட்டு விவாதங்களுக்கு நடைமுறை உதாரணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. நம்பிக்கையற்ற இருளடைந்த பாதையில் எங்காவது ஒரு மூலையில் வெளிச்சத்தைத் தேடும் மனிதர்கள் பலருக்கு எதிர்காலத்தைத் திட்டமிட நூற்றுக்கணகான தரவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. எண்பதுகளின் பின்னர், திட்டமிட்ட ஏகாதிபத்தியங்களின் தலையீடு சாரிசாரியாக மக்களைக் கொன்றுகுவித்த இனப்படுகொலை வரை அழைத்துச் சென்றிருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் இனப்படுகொலை இணைந்து நடத்திமுடிக்க ஏகபோகங்கள் எல்லாம் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றன. உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் எல்லாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிர்க்க லட்சம் மக்கள் அழிக்கப்படு இரத்த ஆறு நந்திக்கடலைச் சிவப்பாக்கியது.

இதையெல்லாம் சட்டரீதியாக நடத்தி முடித்த ராஜபக்ச அரசு எந்தச் சலனமுமின்றி நெஞ்சை நிமிர்த்தி இலங்கை முழுவதையும் தனது பாசிசக் கரங்களால் பிழிந்து சுவைத்துக்கொண்டிருக்கிறது. சிங்கள பௌத்த இன அழிப்பு வட-கிழக்குத் தமிழர்கள் மீது மட்டுமல்ல, மலையக முஸ்லீம் தேசிய இனங்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த ஒடுக்கு முறை சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனையாகியுள்ளது.

அரை நூற்றண்டுகளாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் ஆடும் போர்க்குற்ற நாடகங்களைப் போன்று இன்று இலங்கைக்கு எதிராக கண்துடைப்பு நாடகங்களை நடத்தி வருகின்றன. எந்த முடிவை ஏகாதிபத்தியங்கள் முன்வைத்தாலும் அவையெல்லாம் இனச் சுத்திகரிப்பிற்கும், இன ஒடுக்கு முறைக்கும் தீர்வாகாது.

இந்த நிலையில், இனப்படுகொலை எமக்கு ஏகாதிபத்தியங்களையும், சந்தர்ப்ப வாதிகளையும், இந்திய ஆக்கிரமிப்பாளர்களையும், அரசியல் வியாபாரிகளையும் அறிமுகப்படுத்தியது. கடந்தகாலத் தவறுகள் இனிமேல் மீட்சி பெறக் கூடாது என்பதை மக்களுக்குக் கூறியது. கடந்தகாலத்திலிருந்து கற்றுக் கொள்பவர்கள் துரோகிகள் என்று அருவருப்பான அரசியலை முன்வைக்கும் வியாபாரிகளை இனம்காட்டியது.

போராட்டத்தின் பெயரால் வியாபாரம் நடத்தியவர்களை இனம்காட்டியது. மக்கள் போராட்டம் என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்ட கொள்ளைக் கூட்டத்தை வெளிச்சமிட்டது. இவை அனைத்துக்கும் மேலாக,போராடி மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தந்தது.

போராடி மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படை உண்மையைத் தெரிந்துகொண்டவர்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. வன்னியில் மக்கள் திரள் திரளாகக் கொன்று குவிக்கப்பட்ட போது உலகம் முழுவதும் பரந்திருக்கும் போராடும் ஜனநாயக முற்போக்களர்கள் போராடவில்லை என்பது ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் குறியீடாகக் கூட எதிர்ப்புக் குரல்கள் எழவில்லை என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது.?

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் முன்னெழும் இன்றைய எழுச்சிகளுக்கெல்லாம் அடிப்படையான வினாவக இது அமைந்திருபதைக் காணலாம். மக்கள் மிகக் குறிப்பான சந்தர்பங்களில் எதற்காகப் போராடவில்லை என்பதன் பின்னால் மறைந்திருக்கும் எதிர்காலம் குறித்த பல உண்மைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்புண்டு.

இவற்றின் அடிப்படைகள் மக்கள் போராட்டம் என்ன அது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ற வினாவை முன்வைக்கிறது. ஜென்ரல் ஜியோப் என்ற வியட்னாமிய்த் தளபதியின் நூல் மக்கள் போராட்டத்தின் உயர் வடிவம் குறித்துப் பேசியிருந்தாலும் இலங்கை போன்ற பாசிச சூழலில் மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு என்பது குறித்து நீண்ட விவாதங்கள் அவசியமாகின்றது.

மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைப்பதன் முதல் கட்டம் மக்களை புரட்சிகரக் கட்சி ஒருங்கிணைப்பதிலிருந்தே ஆரம்பமாகும். தோழர் சண்முகதாசன் ஆரம்ப காலங்களில் நடத்திய மக்கள் போராட்டங்கள் பல அனுபவங்களை விட்டுச் சென்றிருக்கிறது.

80களின் பின்னர் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் கோலோச்சிய 80களின் பிற்பகுதி வரைக்கும் யாழ்ப்பாணத்தில் பல மக்கள் போராட்ட்ங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் நடைபெற்றன.

ஆர்ப்ப்பாட்டமும் ஆரவாரமும், படம் காட்டல்களும் இன்றி மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளிலிருந்தே மக்கள் போராட்டம் கருப்பெறும். ஒன்று மேற்பட்டவர்களை எவ்வாறு அவர்களின் நலன்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பது என்பதே இதன் அடிப்படைப் பொறிமுறையாக அமைந்திருக்கும்.

மக்களின் நலன்கள் அவர்களின் வர்க சார்பில் வேறுபட்டிருக்கும், குறிப்பாக நாளந்த கூலி விவசாயிகளை எடுத்துக்கொண்டால், அவர்களின் நாளந்த தேவை ஏனைய ஆசிரியர் அல்லது மாணவர் சமூகத்தின் தேவைகளிலிருந்து மாறுபட்டிருக்கும்.

கூலி விவசாயிகள் தமது கூலி உயர்வு போன்ற வாழ்வாதரப் பிரச்சனைகளுக்காகப் நாளந்த வாழ்வில் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்தம் நடைபெறும் இவர்களின் போராட்டம் திட்டமிடப்படு அவர்கள் சார்ந்த சங்கங்கள் ஊடாக நிறுவனமயப்படுமானால் அவர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள்.

இந்த ஒன்றிணைவு கூலி விவசாயிகள் என்ற அடிப்படையில் இலங்கை போன்ற நாடுகளில் தெற்கு வரை விரிந்து செல்ல குறித்தளவில் வாய்ப்புள்ளது.

கூலி விவசாயிகளைப் போன்றே ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் என்ற குறிப்பான பிரச்சனைகளைக் கொண்ட வர்க்க அடுக்கினரும் அந்த ஒழுங்கிற்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

இவ்வாறான அமைப்புக்களே மக்களை ஒழுங்கமைக்கும். மக்களின் கைகளில் ஆயுதங்களை வழங்கும். ஆயுதங்கள் என்பது அவர்கள் ஒருங்கிணைத்திருக்கும் பலம். அவர்கள் தங்கள் வர்க்க நலன்களின் அடிப்படையிலேயே ஒழுங்கமைக்கப்படுகிறார்கள் என்பதால் உறுதியான பிணைப்பும் அவர்களிடையே காணப்படும்.

இவ்வாறு உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருங்கிணையும் போது அது மாபெரும் சக்தியாகத் தோற்றம் பெறும். தவிர, தமது அடிப்படை நலன்களிலிருந்தே அவர்கள் பலத்திலிருந்தே தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவதால் தமது எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு கூட அற்றுப் போகும்.

இவ்வாறான மக்கள் அமைப்புக்களே புரட்சியின் ஆதார சக்திகளாக உலகம் முழுவதும் காணப்பட்ட ஒரே காரணத்தினால் தான், ஏகாதிபத்தியங்களால் நிதி வழங்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி தங்களது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்டன. இதனூடாகப் போராட்டங்கள் உருவாகாமல் அவதானமாகப் பார்த்துக்கொண்டன.
மக்கள் ஒழுங்கமைப்படும் போது தேசிய இனம் ஒன்றில் காணப்படும் பெரும்பான்மையானவர்களான ஒடுக்கப்படும் மக்கள் மிகப் பெரும் பலம் மிக்க அமைப்பாக மேலெழுவார்கள். அவர்களைப் பிரதிநித்தித்துவம் செய்யும் கட்சி ஒன்றே போராட்டத்தின் முன்னணிப் படையாகச் செயற்படும். ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக அதன் அடுத்த நிலையை நோக்கி நகரும் போது வெற்றியை நோக்கி போராட்டம் நகர்ந்து செல்லும்.

முப்பது வருடங்களை இழந்த ஒடுக்கபடும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறு மக்களை ஒழுங்குபடுத்தும் வேலை முறை முன்வைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் பாதுகாப்பு வலையங்களை இலங்கை அரசு அமைக்க முற்பட்ட போது நடத்தப்பட்ட மிகப்பெரிய மாணவர் போராட்டம், தனியார் மருத்துவக் கல்விக்கு எதிரான போராட்டம் உட்பட இயக்கங்களின் மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களாக மேலெழுந்தன.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கு என்ன நடைபெற்றது. எவ்வாறு 80 களின் இறுதியில் அழிந்து போயின என்பது குறித்த அனுபவக் குறிப்புகளுடன்..

இன்னும் வரும்..

Exit mobile version