ஐ.நா. தீர்மானத்துக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தமது அதிருப்தியைக் காட்டும் நோக்கத்தோடு “கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது, அதன் கதிர்வீச்சு இலங்கைக்குப் பாதிப்பை உண்டாக்கும்” என்றார் இலங்கை அமைச்சர். ஈழத் தமிழர்களிடம் தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதியும், ஈழ ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்தவுடன், “முதலில் உங்கள் நாட்டிலுள்ள காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசுங்கள்” என்கிறார் இன்னுமொரு சிங்கள அமைச்சர். ஆனாலும் இந்திய அரசு இவை பற்றி வாய்திறக்கவில்லை.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நிலையை அறிய கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்தது. இப்போது ராஜபக்சே கும்பல் இந்தியாவை ஆத்திரமூட்டி அலட்சியப்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 16 முதல் ஆறுநாள் சுற்றுப்பயணமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறது. ஐ.நா. தீர்மானத்தின்படி இலங்கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காகவும், பொருளாதார வர்த்த ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவுமே இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காக, ராஜபக்சே அரசு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேருமாறு வலியுறுத்துவதும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கமாக இருந்தது.
மற்றபடி, ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது. ஆனால் முகாம்களிலுள்ள தமிழர்களைச் சந்தித்து, போருக்குப் பிந்தைய மறுநிர்மாணப் பணிகளை இக்குழு பார்வையிட்டு ஏதோ ராஜபக்சே கும்பலின் மீது இந்தியா நடவடிக்கை எடுக்கப் போவதைப் போல தமிழக ஊடகங்கள் கதை பரப்பின.
ஈழத் தமிழின அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தபோது அன்றைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலானோர் இலங்கைக்குச் சென்ற போதெல்லாம், ஏதோ போர் நிறுத்தத்துக்காகத்தான் செல்கிறார்கள் என்று தமிழக ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பிரமையூட்டிதைப் போலவே இப்போதும் நடந்துள்ளது.
ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள முகாம்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதித்த ராஜபக்சே அரசு, இந்திய எம்.பி.க்கள் குழுவை குளுகுளு அறைகளில் உட்கார வைத்து, தடபுடல் விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ளது. இன்னமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், முள்வேலி முகாம்களில் 6,000 பேர்கள்தான் இருக்கிறார்கள், அவர்களும் வரும் ஜூன் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியதை அப்படியே இந்தியக் குழுவினர் கொழும்புவில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். ‘எங்கள் நாட்டின் தேசியத் தந்தையாகிய காந்தி சிலையை ஏன் உடைத்தாய்’ என்று கூட இந்தக் குழு கேட்கவில்லை.
குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசி வைரமாலையைப் பரிசாகப் பெற்று வந்துள்ளார். “ஈழத்து எம்.ஜி.ஆர்.” என்று ஈழத் துரோகி டக்ளசைப் பாராட்டியிருக்கிறார், காங்கிரசு எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன். நிவாரணப் பணிகள் முன்னேற்றகரமாக உள்ளது, ஈழத் தமிழ் மக்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை, தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெற ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என்று பேட்டியளிக்கிறார், போலி கம்யூனிஸ்டு எம்.பி.யான டி.கே. ரங்கராஜன். ஆனால் ராஜபக்சேவோ, எங்கள் நாட்டின் ராணுவத்தை எங்கள் நாட்டிலுள்ள பகுதிகளில் நிறுத்தாமல் வேறு எங்கு நிறுத்த முடியும் என்று மறுநாளே பேட்டியளிக்கிறார். தனி ஈழம் கேட்பவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் கோத்தபய.
இதுவொருபுறமிருக்க, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மையமான கேள்வி. ஈழத் தமிழின அழிப்புப் போரை நாங்கள் மட்டும் தனித்து நடத்தவில்லை; இந்திய அரசின் வழிகாட்டுதலுடன் அதன் துணையுடன்தான் நடத்தினோம் என்று ராஜபக்சே கும்பல் உலக அரங்கில் அம்பலப்படுத்திவிடும் என்ற அச்சத்தால்தான், இலங்கை எட்டி உதைத்தாலும் இந்திய அரசு அனுசரித்துப் போவதாக ஒருபிரிவு தமிழினவாதிகள் காரணம் காட்டுகின்றனர்.
இதுதான் காரணமெனில், காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசு என்று இலங்கை அமைச்சர் சாடுவதைக் கேட்டுக் கொண்டு மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமின்றி, இந்துத்துவ பா.ஜ.க.வும் மவுனம் சாதிக்கிறதே அது, ஏன்? இலங்கையுடன் இந்தியா அனுசரித்துப் போவது மட்டுமல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான போர்களை நடத்தி, இந்திய தேசியத்தை பாக். எதிர்ப்பின் மீது கட்டிய இந்திய ஆட்சியாளர்கள், இப்போது பாகிஸ்தானுடன் பொருளாதாரவர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டுள்ளதோடு மின்சாரமும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஏன் இப்படி பாகிஸ்தானுடன் இந்தியா இணக்கமாக நடந்து கொள்கிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம்.
இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையிலிருந்துதான், அம்முதலாளிகளின் நலன்களிலிருந்துதான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களையும், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இப்பிராந்தியத்தை அம்முதலாளிகளுக்காக வளைத்துப் போடுவதையும்தான் இந்திய அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய முதலாளிகளின் பல்லாயிரம் கோடி மூதலீடுகளையும் ஆதிக்கத்தையும் பாதுகாக்கவும் விரிவாக்கவும் இந்த அடிப்படைகளிலிருந்துதான், இலங்கை மற்றும் பாக்.குடன் இணக்கமாகவும், விட்டுக் கொடுத்தும் இந்தியா நடந்து கொள்கிறது. இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ராஜபக்சே கும்பல் தனது இனவெறி பாசிசத்துக்கு நியாயம் தேடிக் கொள்கிறது. மக்களை இனவெறி தேசியவெறியில் ஆழ்த்தி உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவும் முயற்சிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களையும், தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காகவே நேற்று ஈழத் தமிழினஅழிப்புப் போரை வழிநடத்தியதையும், இன்று இலங்கை காறி உமிழ்ந்தாலும் வளைந்து கொடுத்துப் போவதையும் அம்பலப்படுத்தி, இந்திய அரசை எதிர்த்துப் போராடி முடமாக்குவதுதான் முக்கிய கடமையாகும். அதை விடுத்து, சுண்டைக்காய் நாடு நம்மை அலட்சியப்படுத்துவதாகவும், தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களும் இனவாதிகளும் சூடேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
_________________________________________
__________________________________________