Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்டம்-ஆயுதப் போராட்டம் சாத்தியமானதா : சபா நாவலன்

தமிழீழ விடுதலைப் புலிகள் முனெடுத்த ஆயுதம் தாங்கிய இராணுவப் போராட்டம் தோல்வியடைந்ததை முன்வைத்து உலகம் முழுவதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் ஒரு பொது புத்தியாக ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்ற கருத்துக் கட்டமைக்கப்படுகின்றது. முன்னை நாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியில் ஆரம்பித்து பிரித்தானியாவில் புலிகளின் புலம்பெயர் பிரதிநிதியாகக் கருதப்பட்ட சுரேன் சுரேந்தர் வரைக்கும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் மந்திரம் போன்று “ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது” என்ற கருத்துக் கட்டமைக்கப்படுகின்றது.

சரவதேசம், மக்கள் போராட்டம் போன்றவற்றின் உள்ளர்த்தம் எவ்வாறு தவறாகப் புனையப்பட்டதோ அவ்வாறே ஆயுதப் போராட்டம் என்பதன் உள்ளர்தம் கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது.

80 களில் ஆரம்பித்து அமரிக்க ஐரோப்பிய உளவு நிறுவனங்களாலும், தெற்காசியாவில் இந்திய உளவு நிறுவனத்தாலும் ஆயுதப் போராட்டம் என்பது மக்களின் ஆதரவுடனான ஆயுதம் தாங்கிய கெரில்லா யுத்தம் அல்லது அரச படைகளுக்கு எதிரான தனிமைப்படுத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் என்ற கருத்து திட்டமிட்டு உருவமைக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டில் ஆரம்பித்து மக்கள் ஆதரவு பெற்ற புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட நிக்காரகுவா அரசிற்கு எதிராக ரொனால்ட் ரீகன் நிர்வகித்த அமரிக்க அரசு பயங்கரவாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்தது. கொன்ராஸ் கெரில்லாக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் மற்றும் பணபலத்தை அமரிக்க அரசு வழங்கியது.

அந்த வேளையில் அமரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கொன்ராஸ் என்று அழைக்கப்பட்ட கெரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தை மக்கள்-அரசிற்கு எதிராக வழி நடத்த ஆவணம் ஒன்றை வெளியிட்டது. கெரில்லா யுத்ததில் உளவியல் ரீதியான செயற்பாடுகள் (Psychological Operations in Guerrilla Warfare) என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணம் போரில் ஈடுபட்ட கொன்ராட்ஸ் கெரில்லாக் குழுக்களுகு வழங்கப்பட்டது.

கெரில்லாப் போராட்டத்தை மக்கள் ஆதரவு எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பதும் அரசைப் பலவீனப்படுத்துவது எவ்வாறு என்பதும் 90 பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத்தின் சாரம்சமாக அமைந்திருந்தது. புதிய தந்திரோபாயங்களும், யுத்த முறைகளும் மட்டுமல்ல எதிரிகளையும், சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டோரையும் கோரமாகக் கொலைசெய்யும் வழி முறைகளும் கூட அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படிருந்தது.

1984 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அமரிக்க உளவு நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணம் கெரில்லாப் போராட்ட வழி முறை ஊடான அழிவு அரசியலை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.

ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் அமரிக்க உளவு நிறுவனம் தமது ஐந்தாம் படைகளைப் பயிற்றுவித்த அந்த நிகழ்வு இரண்டு பிரதான பாடங்களை உலகிற்குக் கற்றுத் தந்தது.

முதலில் ஆயுதப் போராட்டம் எல்லாம் மக்கள் சார்ந்தவை அல்ல. இரண்டாவதாக அழிக்கப்பட கூடிய வகையில் ஆயுதப்போராட்ட்ங்களை உருவாக்கலாம்.

பின்னதாக பல்வேறு பரிணாமங்களில் பல்வேறு அரசியல் தளங்களில் இந்த ஆயுதப் போராட்டங்கள் உருவக்கப்பட்டன. அரச எதிர்ப்புக் குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்காகவும், மக்கள் போராட்டங்களின் இயல்பான வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும் உளவு நிறுவனங்கள் ஊடாக ஆயுதப் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன.

அரசுகளே தமக்கெதிரான ஆயுதக் குழுக்களை உருவாக்கி பின்னர் அழிவுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகளைக் கண்டிருக்கிறோம். இந்தியாவில் சீக்கியர்களின் அரசிற்கு எதிரான போராட்டத்தை அரசே வழி நடத்தியதைக் கண்டிருக்கிறோம். அல்பேனியர்களின் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிகழ்வைக் கண்டிருக்கிறோம்.உகண்டாவில் லோர்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்ற ஆயுதக் குழுவை சீ.ஐ.ஏ வழி நடத்துவதை உலகம் அறிந்து வைத்திருக்கிறது.

பெரும்பாலான சந்தர்பங்களில் தாம் அழிக்கப்படுவதற்காகவே உருவாக்கபடுகிறோம் என்று தெரியாமலேயே உணர்வுபூர்வமான போராளிகள் பலியாகிப் போகின்றனர்.

தாம் உருவாக்கிய போராட்ட அமைப்புக்களை ஏக போக அரசுகள் அழித்த பின்னர், பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டது என மார்த்தட்டிக் கொள்கின்றன.

அழிவுகளை நடத்திமுடித்ததும் பயங்கரவாத அரசுகள் தமது உளவியல் யுத்ததை ஆரம்பிக்கின்றன. உளவியல் யுத்தம் பல முனைகளிலிருந்து ஆரம்பமாகிறது. முதலில் அழிவுகளையும் அவலங்களையும் வெறும் மனித உரிமைக் கோசங்களாக மாற்றியமைக்கிறது. பின்னதாக இந்த மனித உரிமை குறித்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற ஏகாதிபத்தியக் கூறுகள் தமது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகின்றன. இதன் ஊடாக அனைத்து ஊடகங்களையும் சமூகத்தின் பிரசார மையங்களையும் தம்மைச் சுற்றி இயங்க வைக்கின்றன.

இவ்வாறான இயக்கத்தை உருவாக்கி, குறித்த கால இடைவெளியில் ஆயுதப் போராட்டம் என்று அவர்கள் உருவாக்கிய கருத்தமைவு இப்போது அழிவுகளும் அவலங்களும் நிறைந்தவை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிடுகின்றன.

இந்த நிகழ்ச்சி நிரலை தன்னார்வ நிறுவனங்களும், நேரடியான ஏகாதிபத்தியக் கூறுகளும், அரச முகவர்களும், அழிவுகளோடு இணைந்து உருவாகும் புதிய அரசியல் முகவர்களும் நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர்.
சமூகத்தின் நிலைமைக்கு ஏற்ப நடைமுறைக்கு உட்படும் முறமை(process) மாறுபடுகின்றது.

80களின் பின்னர் உணர்வுபூர்வமான போராட்ட உணர்வுடைய இளைஞர்களின் ஈழப் போராட்டத்தை இந்தியா உட்பட உலகின் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து உளவு நிறுவனங்களும் உள்வாங்கிக் கொண்டன. பல சந்தர்பங்களில் இது அவர்களை அறியாமலேயே நடந்திருக்கின்றது. பின்னதாக தேவைக்கு ஏற்ப போராட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இறுதியாக முள்ளிவாய்க்காலில் முழுப் போராட்டமும் அழிக்கப்பட்டது.

அழிவின் பின்னதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் மனித உரிமைக் கோசத்தை முன்வைத்தன.

‘தமிழ் தேசிய வியாபார ஊடகங்கள்’ அமரிக்க ஐரோப்பிய அரசுகளினதும் இந்திய அரசினதும், தன்னார்வ நிறுவனங்களதும் முழுமையான நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவற்றைச் சுற்றிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இறுதியாக ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது அவலங்கள் நிறைந்தது. அழிவு மட்டுமே இறுதியானது என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஆயுதப் போராட்டத்தின் புரட்சிகர உள்ளர்த்தம் என்ன என்பது புதிய கேள்வியாக எமக்கு முன்னே எழுகின்றது.

திட்டமிட்டு அழிப்பதற்கு என்றே பயிற்றுவிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தை அதே முறையில் போராட்டக் குழுக்களோ அல்லது புரட்சிகர அமைப்புக்களோ பயிற்றுவிக்க முடியாது. அவ்வாறான பயிற்சி வெற்றிக்குப் பதிலாக அழிக்கப்படக் கூடிய இராணுவ அமைப்புக்களையே உருவாக்கும்.

இரண்டாம் உலகப் போரை வெற்றிக்கொள்வதற்குப் பிரதான காரணியாகக் அமரிக்க அரசால் கூறப்பட்ட டக்ளஸ் மக் ஆர்தர் என்ற இராணுவத் தளபதி உலகத்தி தலை சிறந்த இராணுவத் தளபதி என அமரிக்க அரசால் போற்றப்பட்டவர்.
அவர் உலகப் போரை முடித்துக்கொண்டு அமரிக்கா திரும்பிய போது அவரை வரவேற்பதற்கு அமரிக்க அமரிக்காவிம் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டிருந்தனர். அதே மக் ஆர்தர் கொரியாவிற்கு எதிராக அமரிக்கா நடத்திய யுத்ததில் தோற்றுபொன போது அமரிக்க அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னதாக அமரிக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது குடும்பத்தினரைத் தவிர யாரும் காத்திருக்கவில்லை.

தோல்வி குறித்து அவர் வழங்கிய நேர்காணலில் “நான் யுத்தக் கப்பல்களோடும், விமானங்களோடும், பாரிய இராணுவத் தளப்பாடங்களோடும் யுத்தம் புரியத் தயார். ஆனால் காட்டுமிராண்டிகளோடு யுத்தம் புரிய முடியாது” என்றார்.
காட்டுமிராண்டி யுத்தம் என அவர் குறிப்பிட்டது தான் மக்கள் யுத்தம்.

முதலில் தற்காப்பு மக்கள் யுத்தம் என்ற அரசியல் இராணுவ தந்திரோபாயம் சீனப் புரட்சியின் போதே உருவாக்கப்பட்டது.
அதற்கான அரசியல் தலைமை, அதன் உள்ளமைப்புக்கள், மக்கள் திரள் அமைப்புக்கள் போன்றனவும் முதலில் சீனப் புரட்சியுன் போதே முன்வைக்கப்பட்டது. மக்கள் யுத்தம் என்பதை அவர்கள் தற்காப்புக்கான மக்கள் யுத்தம் என்றே அழைத்தார்கள்.

இது உளவு நிறுவனங்களின் சிக்கலான கெரில்லா தந்திரோபாயம் போலன்றி மிக இலகுவான சமன்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிராக தமது வாழ்வாதாரத்திற்காக மக்கள் போராடுவார்கள். மக்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதும் அதனை வலுப்படுத்துவதும் கட்சியின் கடமை. மக்களின் போராட்டம் முன்னோக்கிச் செல்கின்ற போது, அரச படைகள் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும். அப்போது மக்களைப் பாதுகாப்பதற்கான ஆயுதப் போராட்டம் உருவாகும். அதனைக் கட்சி வழி நடத்தும். மக்களின் போராட்டம் பாதுகாக்கப்படும். மக்கள் மேலும் போராடுவார்கள். அரசு நிலைகுலைந்து மக்களின் அதிகாரம் உருவாகும்.

இங்கு ஆயுதப் போராட்டம் ஏன் தேவையான ஒன்று என்பதை மக்கள் சார்ந்த நோக்கிலிருந்து காணலாம். மக்கள் போராடுவதும், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும், அது ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக பரிணாமம் பெறுவதும் போராட்டம் ஒன்றின் இயல்பான வளார்ச்சிப்போக்காகும்.

இன்று ஈழத்தில் மக்கள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் பல்வேறு அரசியல் தளங்களில் நடைபெறுகின்றது. மக்கள் போராட்டத்தை இலங்கை அரசு ஒடுக்க முயல்கின்றது. மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களின் தற்காப்பு யுத்ததை முன்னெடுக்கவும் அதனை ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்கவும் இலங்கையில் அரசியல் தலைமை கிடையாது.

அவ்வாறான அரசியல் தலைமை ஒன்று தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிப் போக்காகும். அதனைத் தடைசெய்யும் ஏகாதிபத்திய அழிவு சக்திகளில் குரலே ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்று ஒலிக்கின்றது.

அதுவும் குறுகிய புலம்பெயர் தேசியவாதிகளின் தொண்டைக்குள் இருந்து போராடும் மக்களின் முகங்களில் காறி உமிழப்படுவதைக் காண்கிறோம். இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் திரள் அமைப்புகள் உருவாக வேண்டும். அவற்றின் உறுதிமிக்க போராட்டங்கள் மக்கள் யுத்தமாக பரிணாமம் பெறவேண்டும். அதற்கான சர்வதேச அரசியல் பொறிமுறையையும் ஆதரவையும் வளர்த்துக்கொள்வதற்கான பங்களிப்பை புலம்பெயர் மக்களும் இந்தியாவில் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் வழங்குவதற்கு நிறையவே இடைவெளிகள் உண்டு. ஐந்தம் படையாகச் செயற்படும் அழிவுசக்திகளை இனம் காண்பதும் போராடும் மக்கள் சார்ந்த அரசியல் உருவாக்கப்படுவதும் இன்று எமக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமை.

Exit mobile version