மக்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டு போராட்டங்கள் மீது மக்களுக்கு நீண்ட வெறுப்பை ஏற்படுத்துவதும் ஈழத்தில் மட்டுமன்றி உலகின் பல்வேறுநாடுகளில் இன்னமும்நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
கொங்கோ, சோமாலியா, சூடான் போன்ற ஆபிரிக்க நாடுகளில் தேசிய வெறியையும் மத அடிப்படை வாதத்தையும் உருவாகுவது அவற்றைத் தலைமை தாங்குவதும் ஏகாதிபத்தியங்களின் உளவுநிறுவனங்கள் தான்.
இவ்வ்வாறான இயக்கங்கள், அரசுகளையும் அவற்றின் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராடுவது போன்ற தோற்றத்தை வழங்கினாலும் இறுதியில் அவற்றைப் பலப்படுத்துகின்றன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முழுவதும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு வெற்றியை மட்டுமே விளைவாகக் கொடுத்தன. அந்த வெற்றிகளிலிருந்து கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்களும் அரசுகளும் புதிய எதிர்ப் புரட்சி அரசியல் வழிமுறை பலவற்றை முன்வைத்தன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெற்றிபெற்ற அத்தனை போராட்டங்களும் மக்கள் இயக்கங்களூடான ஆயுத எழுச்சிகளாக எழுந்தவை. மக்களை ஒழுங்கமைத்த்த முன்னணிப் படைகள் இறுதியில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டன.
மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்த வெற்றிகளிலிருந்து கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்களாலும் அரசுகளாலும் கையாளப்பட்டன.
அந்த வழிமுறைகள் அனைத்தினதும் சாராம்சத்தில் சில பொதுமைப்பாடுகளைக் காணலாம்.
1. மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான வெறுப்புணர்வைத் திட்டமிட்டு உருவாக்குதல்.
2. மக்களின் ஆதரவுத் தளத்தைத் தமதுபக்கம் ஈர்த்துக்கொள்ளல்.
இவை இரண்டோடும் கூடவே 70 களின் பின்னர் புதிய எதிர்ப்புரட்சி திட்டமும் உருவாக்கப்பட்டது. அரசுகளுக்கு எதிரான, அவற்றைப் பலவீனப்படுத்தும் போராட்டங்களை இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலாக மாற்றுதல் என்பதே மூன்றாவது முக்கிய எதிர்ப்புரட்சித் திட்டம்.
சாமூவேல் ஹன்டிங்டன் என்ற ஏகபோகங்களின் அடியாளான புத்திசீவி முன்வைத்த மிகப்பிரபலமான கருத்தாக்கமான நாகரீகங்களின் மோதல் என்ற நூல் புதிய எதிர்புரட்சிக்கு தத்துவார்த்த அடித்தளத்தை வழங்குகிறது. எவ்வாறு வேறுபட்ட இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல்கள் உருவாகலாம் என்று அந்த நூல் கற்பிக்கிறது.
தனது எதிரியைத் தானே வளர்த்தலும் இறுதியில் அழித்தலும் என்ற வழிமுறையின் உலகளாவிய உதாரணமாக ஒசாமா பின்லாடனைக் காணலாம். இலங்கையின் உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய அனைத்து இயக்கங்களையும் காணலாம்.
இந்த இரண்டிலுமே பெரும்பான்மையினரின் ஆதரவை அரசுகள் தக்கவைத்துக்கொண்டன. ஒசாமா பின்லாடன் ஊடாக உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய அமரிக்கநாடுகளில் இஸ்லாமியநாடுகளை ஆக்கிரமிப்பதற்கான பெரும்பான்மை ஆதரவை அந்த அரசுகளும் அதிகார வர்க்கமும் பெற்றுக்கொண்டன.அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரபுநாடுகளின் போராட்டம் இஸ்லாமியர்களின் மதவாதப் போராட்டமாகச் சித்தரிக்கப்படது.மறுபுறத்தில் இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத அடிப்படை வாதம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.இதற்கு ஒப்பான சூழலையே இலங்கையிலும் காண்கிறோம்.
சீக்கியர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தனது எல்லைக்குள்ளேயே ஒடுக்கிய வரலாறு இந்திய ஆவணங்களில் இன்னமும் செத்துக்க்கிடக்கிறது. பிந்தரன் வாலேயின் குழு இந்திய ஆயுதப்படைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஆயுதம் வழங்கியதே இந்திய அரசுதான். இறுதியில் சீக்கியர்களின் போராட்டம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.
இதன் பிரதியீடு செய்யபட்ட மறுவடிவமே ஈழப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு. 80 களின் ஆரம்பத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணப்பட்ட போராட்ட சூழலும் அதன் வெற்றிக்கான வாய்புகளும் இன்றைக்கு இல்லை. முப்பது வருடங்களாக இந்தியாவாலும், ஏகாதிபத்தியங்களாலும் அழிப்பதற்கு என்றே வளர்க்கப்பட்ட போராட்டங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை இன்னமும் முப்பது வருடங்களுக்கு மேலாகப் பின்னோக்கிக் கொண்டு சென்றிருக்கிறது.
ஏகாதிபத்தியங்களின் இந்த அழிவுத் திட்டம் குறித்துப் பேசிய அனைவரும் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அகதிகளாக்கப்பட்டிருகிறார்கள்.
இன்று இந்த ஏகபோகங்கள் இலங்கை அரசிற்கு எதிரிகளற்ற வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அவை இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை நீண்டு செல்கின்றன.
83 ஆம் ஆண்டு இந்திய அரசு இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கு முன்பதான காலப்பகுதியில், மக்கள் இயக்கங்களும், அரசியல் உரையாடல்களும், தலைமக்கான முன்னணி சக்திகளின் உருவாக்கமும் காணப்பட்டன.
இந்த சூழலில் ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கான திட்டம் இந்திய அரசால் உருவாக்கப்படுகின்றது. சந்திரகாசன் செல்வநாயகம் என்ற இந்திய உளவாளி ஊடாக இயக்கங்கள் அணுகப்படுகின்றன. நான்கு பிரதான இயக்கங்கள் தெரிவாகின்றன. TELO, LTTE, EPRLF, EROS ஆகிய இயக்கங்கள் ஆயுதப்பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவாகின்றன. இவற்றுள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவான பயிற்சியும் ஈரோஸ் இற்கு குறைந்த அளவான பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
இந்த நான்கு இயகங்களையும் புளட் என்ற ஐந்தாவது இயக்கத்தையும் கையாள்வதனூடாக் இந்திய அரசு மூன்று பிரதான அழிவுகளை மேற்கொண்டது.
1. மோதல்களை உருவாக்கி மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்தல்.
2. இந்தியாவிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராகப் போராட முனைந்தவர்களையும் அவர்களின் அழிவு அரசியல் திட்டத்தை வெளிக்கொண்டுவர முனைந்தவர்களையும் அழித்தது.
3. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாக உருமாற்றி சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பேரினவாதத்திற்குப் பெற்றுக்கொடுத்தது.
குறிப்பாக, இன்றுவரை சிங்கள மக்களை மிகப்பெரிய அளவில் அழித்ததாகக் கருதப்படும் அனுராதபுர தாக்குதலை இந்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே புலிகள் மேற்கொண்டார்கள். இலங்கை அரசிற்கு எதிரான இராணுவத்தைக் கட்டியெழுப்புவதையே தனது ஒரே அரசியல் வழிமுறையாகக் கருதிய விடுதலைப் புலிகள் 1985 இல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டார்கள். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மீசை அல்லது சூரி என்பவரால் தலமை தாங்கப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னர் இந்திய அரசு பெருமளவிலான ஆயுதங்களை வழங்குவதாக விடுதலைப் புலிகளுக்கு உறுதியளித்திருந்தது.
இத் தாக்குதல் நடைபெறும் வரைக்கும், சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் வேர்விட ஆரம்பித்திருந்தன. இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. பல சிங்கள இளைஞர்கல் ஈழப்போராட்ட இயக்கங்களில் முழு நேரப் போராளிகளாக இணைந்துகொண்டனர்.
சிங்கள மக்களைக் குண்டுவைத்து அழிக்கும் கலாச்சரத்தை உருவாக்கிவைத்தது ஈரோஸ் இயக்கமே. இவற்றின் பின்னர் பேரினவாதம் முன்னெப்போது இல்லாத அளவிற்கு தொலைதூரக் கிராமங்கள் வரை சென்று ஆழ வேரூன்றிக்கொண்டது.
இன்னும் வரும்..